"என்னமா ராஜி கண்ணு, இப்படி பேசுறே, பாட்டி சாகுற வரைக்கும் உனக்கும் என் பையன் ரவிக்கும் கல்யாணம் முடிக்கனும்னு ஆசைப்பட்டுடே இருந்தாங்களேம்மா"
"பாட்டி அந்தக்காலத்து ஆளு, அப்படித்தான் சொந்தத்துல கல்யாணம் பண்ணனும்னு ஆசை படுவாங்க, scientific ஆ இப்படி சொந்தத்துல கட்டிக்கிறதெல்லாம் நல்லதில்ல, பொறக்குற குழந்தைக்கு குறைகள் இருக்க வாய்ப்பு நிறைய இருக்காம், தெரிஞ்சுக்கோங்க மாமா"
"என்னடி இது, மாமான்னு ஒரு மரியாதை கூட இல்லாம எதிர்த்து எதிர்த்து பேசுறே. என் அண்ணன் பையன் ரவிக்கு என்னடி குறைச்சல், அவனை கட்டிக்க மாட்டேன்னு அடம் பிடிக்கிறே"
"ஆமாம்மா, உன் அண்ணன் பையனுக்கு எதுவுமே குறைச்சல் கிடையாது, எல்லாமே ஜாஸ்தி..........திமிரு ஜாஸ்தி, கோபம் ஜாஸ்தி, தலைக்கணம் ஜாஸ்தி, உயரம் ஜாஸ்தி"
"பாருங்கண்ண உங்க முன்னாடியே ரவியை எப்படி பேசுறான்னு, எல்லாம் இவ அப்பா கொடுக்கிற செல்லம்"
"விடும்மா மரகதம், சின்ன புள்ள வெகுளியா பேசுது. எல்லாம் கல்யாணம் ஆகி எங்கவீட்டுக்கு வந்துட்டா சரியாகிடும்"
"என்ன மாமா, விளையாடுறீங்களா? நான் இங்கே கல்யாணம் வேணாம்னு கத்திட்டு இருக்கிறேன், நீங்க என்னடான்னா உங்க வீட்டுக்கு கல்யாணம் பண்ணிட்டு வந்தா சரியாகிடும்ன்றீங்க. கேட்டுக்கோங்க மாமா, நான் மட்டும் உங்க பையனை கட்டிக்கிட்டேன்னு வைங்க, உங்களுக்கு சோறு போடாமா மூலையில உக்கார வைச்சு கஞ்சிதான் ஊத்துவேன்"
"அடிப்பாவி, எங்கண்ணனுக்கு கஞ்சிதான் ஊத்துவேன்னு என் முன்னாலேயே சொல்றே, உனக்கு வர வர வாய் கொழுப்பு ஜாஸ்தியாகிடுச்சுடி"
"குழந்தையை திட்டாதேமா மரகதம், மாமான்ற உரிமையோட பேசுறா, நிச்சயத்துக்கு நல்ல நாள் பார்க்கனும், மாப்பிள்ளைக்கிட்ட கேட்டு சொல்லு மரகதம்"
" மாமா உங்களுக்கு எத்தனை தடவ சொன்னாலும் புரியாதா? நான் இவ்வளவு சொல்லியும் நிச்சயத்துக்கு நாள் குறின்னு உங்க தங்கச்சிக்கு மந்திரம் ஓதுறீங்க! ' என் பையன் கம்பியூட்டர் இஞ்சினியர்'ன்னு பெருசா பீத்திப்பாங்களே அத்தை, அவங்களையே கம்பியூட்டர் இஞ்சினியர் பொண்ணா, கொஞ்சம் உயரமான பொண்ணா பார்க்க சொல்லுங்க உங்க பையனுக்கு, நான் எல்லாம் வெரும் பிகாம் தான், குட்டச்சி குட்டச்சின்னு என்னை கிண்டல் அடிப்பான் உங்க பையன், ஸோ அவனுக்கு 'நெட்டச்சி'யா ஒரு பொண்ணை பாருங்க, என்னை ஆள விடுங்க மாமா"
பட படவென ராஜி பொரிந்துத் தள்ளிக்கொண்டிருக்க, ராஜியின் அப்பா வீட்டிற்குள் வந்தார்.
அனைவரும் எதுவுமே நடவாதது போல் கப்சிப்பென்று அமைதலானார்கள்.
சிறிது நேரம் பேசியிருந்து விட்டு மாமா ஆலந்துரையில் உள்ள தன் வீட்டிற்கு புறப்பட்டார். புறப்படும் முன் சமயலறையில் தன் தஙகையிடம் ராஜி-ரவி திருமண ஏற்பாடு பற்றி பேசிவிட்டு சென்றார்.
மாமா கணேசன் ஆடிட்டராக இருந்தவர், தன் அப்பா அம்மாவின் மறைவுக்கு பின் , 4 வருஷத்திற்கு முன் தன் வேலையை ராஜினாமா செய்துவிட்டு, கோவையை அடுத்த ஆலந்துரையில் பண்ணை வீட்டிலேயே செட்டிலாகி, விவசாய நிலன்களை கவனித்துக் கொள்கிறார்.
தன் ஒரே தங்கை மரகதத்தின் மூத்த மகள் ராஜியை தன் மகன் ரவிக்கு மணமுடிக்க வேண்டுமென மனம் நிறைய ஆசை கணேசனுக்கு.
'இந்த ராஜி பொண்ணு இப்படி அடம் பிடிக்கிறாளே, எப்படி சம்மதிக்க வைக்க போறா என் தங்கச்சி, மாப்பிள்ளை என்ன பதில் சொல்லுவாரோ? என சிந்தனையுடன் தன் வீட்டிற்குள் நுழைந்தவர், வாசலில் இருந்த Nike Shoe வை பார்த்ததும் தன் மகன் ரவி Bangalore லிருந்து வந்திருக்கிறான் என்பதை அறிந்துக்கொண்டார்.
'இவன் அடுத்த சனி-ஞாயிறு தானே ஊருக்கு வரேன்னு சொன்னான், இந்த வாரமே வந்திருக்கான், என்னவா இருக்கும்?' யோசனையுடன் உள் நுழைய இருந்தவரின் காதில் , உள்ளே அவர் மனைவி கல்யாணியும், மகனும் உரத்த சத்தமாய் பேசுவது காதில் விழுந்தது.
"ஏன்மா அப்பாவுக்கு வேற வேளையே இல்லியா, பொண்ணு கொடு , பொண்ணு கொடுன்னு எதுக்கு அந்த வீட்டுக்கு போய் நிக்கிறாரு"
"அதானடா, நான் சொன்ன எங்கே கேட்கிறார், சீக்கிரம் கல்யாணத்தை நிச்சயம் பண்ணனும், அவ ஃபைனல் எக்ஸாம் முடிஞ்சதும்னு ஒத்தக் காலுல நிக்கிறாரு, அதான் ஃபோனை போட்டு இந்த வாரமே உன்னை இங்க வரவைச்சேன்"
"அவ படிச்சு முடிச்சா என்ன , முடிக்காட்டி எனகென்ன, அந்த வாயாடியை எவன் கட்டிப்பான். என் தலையில கட்டிவிட பாக்குறார் அப்பா"
"அப்பா வந்ததும், கட் அண்ட் ரைட்டா சொல்லிடு ரவி. அவ வேற ஆளு பார்க்க வெள்ளையும் சொள்ளையுமா அழகா இருக்கிறாளேன்னு உன் மனசுலயும் முறைப்பொண்ணு அவ மேல ஒரு ஆசை இருக்குமோன்னு பயந்துட்டே இருந்தேன்டா. அந்த திமிரு பிடிச்சவளை மட்டும் நீ கட்டிக்கிடா என்னை அண்ட விடமாட்டா, வந்துப்பார்னு வரிஞ்சுக்கட்டிகிட்டு நிப்பா"
"ஆமாம்மா, நம்ம ருக்மணி கல்யாணத்துக்கு அவகுடும்பம் ஊருக்கு வந்திருந்தபோ, அவளும் அவ தங்கச்சியும் சேர்ந்து என்னா அலிச்சாட்டியம் பண்ணினாங்க தெரியுமா. நம்ம வரதனை உண்டு இல்லைன்னு பண்ணிடாளுங்க , ராட்சஸிங்க!"
"ஆமாம்டா, இவரு தங்கச்சி பெத்த இரண்டு பொண்ணும் அடங்காபிடறிங்கடா, அதுலயும் இந்த இரண்டாவதுகாரி அட்டகாசம் தாங்கலின்னு அவ அப்பா ஹாஸ்டல சேர்த்துட்டாராம்டா"
"இவளுங்களை எல்லாம் ஹாஸ்டல்ல சேர்க்க கூடாதும்மா, ஜெயில்ல போடனும், அப்பாவுக்கு தான் அவரோட தங்கச்சி பொண்ணுங்க மேல எப்பவுமே ஒரு தனி பாசம், திருந்தவே மாட்டாருமா"
"கரெக்ட்டுடா அவரு மனசு ஃபுல்லா இப்ப உனக்கும் ராஜிக்கும் கல்யாணம் பண்றதை பத்திதான் அடிச்சுக்குதுடா"
"பாட்டி திதிக்கு இரண்டு வருஷத்துக்கு முன்னாடி நம்ம வீட்டுக்கு வந்திருந்தபோ, ராட்சஸி சூடா காப்பிய ஈளிச்சுக்கிட்டு என் கைல கொடுத்து போட்டு, நல்ல செமத்தியா ஒரு அரை வாங்கி கட்டிகிட்டா. அது இன்னமும் அவளுக்கு நல்லா ஞாபகம் இருக்கும். ரோஷக்காரி, கோபத்துல சொன்ன மாதிரியே அதுக்கப்புறம் அத்தை நம்ம வீட்டுக்கு வந்தாலும் இவ வரமாட்டா பார்த்தியாம்மா"
"அப்படியே ரோஷத்தோட இருந்துட்டு போட்டும்டா"
"ஆமாம்மா"
தாயும் மகனும் பேசிக்கொண்டிருக்க கணேசன் ஹாலுக்குள் நுழைந்தார்.
"என்னப்பா ரவி எப்ப வந்த?"
"இப்ப.......இப்பதான்பா"
"அடுத்த சனி-ஞாயிறு தான் வருவேன்னு சொன்ன"
"ஆ.......ஆமாம்.....அம்மாவை பார்க்கனும் போல இருந்தது, அதான்........"
"சரிப்பா, சாப்பிட்டியா?"
"இல்ல.......இனிமேதான்"
"சரி, கல்யாணி இனிப்பா ஏதும் கொண்டுவாம்மா, நல்ல செய்தி சொல்லனும்"
"என்ன.........என்னங்க செய்தி"
"என் தங்கச்சி மக ராஜிக்கும் நம்ம ரவிக்கும் நிச்சயத்துக்கு நாள் குறிச்சேட்டேம்மா"
"ராஜி....அவ...ஒத்துக்கிட்டாளா"
"கல்யாணம்னு சொன்னதும் வெகுளி பொண்ணுக்கு அவ்ளோ வெட்கம், மாமா மாமான்னு என்னை ரொம்ப நல்லா கவனிச்சுக்கிட்டா இப்போவே"
அம்மாவும் மகனும் அதிர்ச்சியில் விழித்தனர்.
"அப்பா......."
"என்னப்பா ரவி"
"அப்பா.....எனக்கு இந்த கல்யாணத்துல இஷடம் இல்ல"
"என்னப்பா சொல்ற.....ஏன்?"
"இஷ்டம் இல்ல.......வேண்டாம், அவ்ளவுதான்"
"அதான் ஏன்னு கேட்குறேன்பா ரவி"
"நான்......நான் Banglore ல ஒரு பொண்ணை விரும்புறேன்பா"
'அடப்பாவி ராஜியை கட்டிக்க மாட்டேன்னு அப்பாகிட்ட சொல்லுன்னு வீட்டுக்கு வரவழைச்சா, 'யரையோ' காதலிக்கிறேன்னு குண்டு தூக்கி போடுறியே' என ரவியின் அம்மா குழப்பத்துடன் மகனை நோக்கினாள்.
"ரவி......என்ன.......சொல்ற....."
நெஞ்சை பிடித்துக்கொண்டு கணேஷன் சோஃபாவில் சாய்ந்து, தன் நிலை மறந்தார்.
மூர்ச்சையடைந்து விழுந்த அப்பாவை கைத்தாங்களாக பிடித்து,
"அப்பா........அப்பா.......என்னாச்சுப்பா.....கண்ணைத்திறங்கபா" என ரவி கதற,
என்னங்க...........என்னங்க" என்று கல்யாணி அரற்ற.......
[தொடரும்]
மாமாவின் மனசுல - பகுதி 2