September 30, 2008

மாமனாருக்கு மரியாதை....!!!



அப்பா-மகன் உறவுக்கு நடுவில் ஒரு விதமான இடைவெளி அந்த மகன் டீன் ஏஜ் பருவம் அடையும் போது ஏற்படுவது சகஜம்.
தன் தேவைகளை அம்மாவின் மூலமாகவே அப்பாவிடம் தெரிவிக்க ஆரம்பிப்பான் பையன் அந்த பருவத்தில், நாளடைவில் இந்த இடைவெளி அதிகமாகி, பேசிக்கொள்ளும் வார்த்தைகளும் அளவுடன் அமைந்துபோகும்.

அப்பாவின் மேல் மரியாதையும் பாசமும் இருந்தாலும் , 'சற்று' தள்ளியிருந்து உறவுகாக்கும் இந்த பையன், தனக்கு திருமணமாகும் போது, தன் மாமனாரோடு எப்படி பழகுவான்???

புது 'மாப்பிள்ளை' அந்தஸ்து , கவுரவம் எல்லாம் வேறு அவனுக்கு ஒரு புது கெத்து கொடுத்திருக்கும்போது, தகப்பன் வயதிலிருக்கும் தன் மாமனார் கொடுக்கும் மரியாதையை எப்படி கையாள வேண்டும்??

இதோ சில டிப்ஸ்.......

* தன் மகன் வயதில் இருக்கும் உங்களுக்கு உங்கள் மாமனார் தரும் மரியாதையை ஏற்றுக்கொள்வதோடு மட்டுமில்லாமல், திருப்பி செலுத்த தவற வேண்டாம்.

*உங்கள் மாமனாரோடு தொடர்ச்சியாக 5 நிமிடத்திற்கு மேல் பேச பொதுவானவை ஏதும் இல்லை என யோசிக்கிறீர்களா???......உங்கள் மனைவியிடம், அவளின் அப்பாவின் ரசனை, விருப்பு , வெறுப்புகள் பற்றி கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.
அந்த வயதில் பெரும்பாலும் அரசியல், நாட்டு நடப்பு பற்றி பேச விரும்புவர்.

*எப்படி உங்கள் தாயாருடன் உங்கள் மனைவி ஒத்துப் போய் பேசி பழகுவது உங்களுக்கு ஒரு சந்தோஷத்தை, மன்நிறைவை கொடுக்குமோ,அதேபோன்ற எதிர்பார்ப்பு உங்கள் மனைவியின் மனதில்............... உங்களுக்கும் தன் தகப்பனுக்கு நடுவில் நல்லுறவு இருக்க வேண்டுமென இருக்குமில்லையா??......இதை நினைவில் கொண்டு உங்கள் மாமனாரோடு பழகுங்கள்!!

*உங்கள் மனைவியை பற்றி ஏதும் புகார் தெரிவிக்க விரும்பினால், அதனை உங்கள் மனைவியின் தாயாரிடம் கூறுவது மேல்.
தன் மகளை பற்றி தன்னிடமே தன் மருமகன் குறை கூறினால், அதை தாங்கிக்கொள்வதும், கையாளுவதும் எந்த தகப்பனுக்கும் கஷ்டமான காரியம்.
[உங்களால் சரி செய்துக்கொள்ள முடியாத பட்சத்தில் மட்டுமே புகார் துறை வரைக்கும் செல்வது சிறந்தது.......திருமண பந்தத்திற்கு உகந்ததும் கூட]

*நீங்கள் மாமனார் வீட்டிற்கு போகும்போதெல்லாம் கிடைக்கும் மாப்பிள்ளை கவனிப்பை பயன்படுத்தி 'ஒவரு' பந்தா பண்ணாதீங்க.
உங்களுக்கும் உங்கள் மனைவிக்கும் மனமுவந்து உங்கள் மாமனார் கொடுக்கும் வெகுமதிகளை ஏற்றுக்கொள்ளுங்கள்,
இளப்பமாக எண்ணி ஏற்க மறுப்பது,
அதிகமாக எதிர்பார்த்து டிமாண்ட்
செய்வதையும் தவிருங்கள்.

*எந்த தகப்பனுக்கும் செல்ல மகளை தன் மருமகன் நன்றாக கவனித்துக்கொள்கிறாரா?? என அறிந்துக்கொள்ள ஒரு ஆர்வமும் ஆசையும் இருக்கும், அதனால்.....
மாமனாருக்கு முன் உங்கள் மனைவியிடம் நெருக்கமாக நடந்துக்கொள்ளாவிட்டாலும்,

"என்னமா சாப்பாடு ரெடியா?"

"மாமாவுக்கு காஃபி கொண்டுவாமா"

"நீ சாப்பிட்டியாமா?"

இப்படி பேச்சில் 'மா' போட்டு உங்கள் மனைவியிடம் மாமனாருக்கு முன் பேசிப்பாருங்களேன்...

பெத்தவரின் மனம் குளிர்ந்து போகும்!!!

பொத்தி பொத்தி வளர்த்த மகளை
பத்திரமாக பார்த்துக் கொள்வாரா மாப்பிள்ளை...
என ஏங்கும் ஒரு தகப்பனுக்கு
தயக்கமின்றி அத்தருணத்தை
தருவதில் தவறொன்றுமில்லையே???

September 09, 2008

தேடி வந்த காதல்......!!!

அலுவலக விஷயமாக Noida சென்றுவிட்டு அன்று தன் பெங்களூர் அலுவலகம் திரும்பிய ரமேஷ், வேலைகளை தொடங்கும் முன் வழக்கம்போல் தன் அலுவலக இமெயில்களை ஒவ்வொன்றாக படிக்க ஆரம்பித்தான்,

இவன் ப்ராஜக்ட் லீடாக பணிபுரியும் குழுவிற்கு புதிதாக 'Verification Engineer' பதவிக்கு ஒர் பெண் பணியில் சேர்ந்திருப்பதாகவும், சிறிது நேரத்தில் தனது அலுவல்கள் பற்றிய விபரங்களை அறிந்துக் கொள்ள அவனை சந்திப்பாள் என்ற அறிவிப்பு ப்ராஜக்ட் மனேஜரிடமிருந்த வந்திருந்தது.

அவன் மெயிலில் குறிப்பிடப்பட்டிருந்த பெண்ணின் பெயரை மனதில் கொள்ளாமலே மேலோட்டமாக மெயிலை படித்திருந்தான்.
அவனது 26 வயதிற்கே உரிய ஆர்வ கோளாரில் பெண்ணின் பெயரை பார்ப்பதற்காக ஈ-மெயிலை மறுமுறை படிக்க தொடங்க..........அதே வேளையில் ,


"எஸ்கூஸ் மீ" என்று அவன் பின்னாலிருந்து மெல்லிசை போன்ற குரல் கேட்டு திரும்பியவன், ஒரு கணம் அதிர்ச்சியில் உறைந்தான்.

அவளும் அவனை அங்கு எதிர்பார்க்கவில்லை என்பதை அவளது கண்களில் சிறிது கணம் தோன்றிய ஆச்சரிய பார்வை உணர்த்தியது.
அதனை மறைத்தவளாய் தன்னை அறிமுகப்படுத்த துவங்கினாள்,

"ஐ அம் சந்தியா, ஐ ஹேவ் ஜாயிண்ட் அஸ் அ வெரிஃபிக்கேஷன் இஞ்சினியர் இன் யுவர் டீம்"

"யெஸ் ஐ டு நோ..........வெல்கம் டூ அவர் டீம்........சந்........சந்தியா"

"தேங்கியூ"

பின் தனது வேலைக்கான பொறுப்புகள் பற்றின விபரங்களை ரமேஷிடம் மிக மிக இயல்பான தொனியில் கேட்டுத் தெரிந்துக் கொண்டாள்.

கல்லூரி படிப்பை முடித்து இத்தனை வருடங்கள் களித்து தனது டீமில் ஒருத்தியாக சந்தியாவை சந்தித்த அதிர்விலிருந்து மீளமுடியாமல் ரமேஷ் சற்று திணறிப்போனான்.

தனக்கு தேவையான விளக்கங்களை பெற்றுக் கொண்டவள் ரமேஷிற்கு நன்றி கூறிவிட்டு அவனது அறையை விட்டு வெளியேறுகையில்...

"சந்தியா......."

"........"

" உங்க........உன் .......கிட்ட.....கொஞ்சம் பேசனும்"

என்னவென்பது போல் அவனைப் பார்த்தாள் சந்தியா,

"உன்னை..........இங்க......நான் எதிர்பார்க்கவேயில்லை சந்தியா"

"நானும் தான்...."

"ஸோ.....ஸாரி ......சந்தியா.."

"எதுக்கு?.."

"நீ.........அன்னிக்கு.......காலேஜ்ல.......என்கிட்ட...."

இதற்குமேல் பேச வேண்டாம் என்பது போல் தன் கையை உயர்த்தி சைகை காட்டிவிட்டு, பேச ஆரம்பித்தாள் சந்தியா.....


"ரமேஷ், நான் உங்களை விரும்பினதை உங்க கிட்ட வெளிப்படுத்த எனக்கு எவ்வளவு உரிமை இருந்ததோ அதே அளவு உரிமை அதனை ஏற்றுக்கொள்ளாமல் இருக்கிறதுக்கு உங்களுக்கும் இருக்கு. ஒருத்தரை விரும்புறதும் விரும்பாததும் தனிப்பட்ட இஷடம். நான் உங்களை விரும்பினேன்ற ஒரே காரணத்துக்காக நீங்களும் என்னை காதலிக்கனும்னு அவசியம் இல்லையே......."

"இருந்தாலும்...........ஐ.......அம்......ஸோ......"

"ரமேஷ் ப்ளீஸ்.........டோண்ட் ஆஸ்க் எனிமோர் ஸாரி அண்ட் எம்பிராஸ் மீ"

"........."

" நான் பழசெல்லாம் மறந்தாச்சு........நீங்களும் மறந்திடுங்க,,,,ப்ளீஸ்"

தங்குதடையின்றி தெளிவாக பேசிவிட்டு தன் அறையை விட்டு வெளியேறிய சந்தியாவை வியப்புடன் பார்த்தான் ரமேஷ்.

கல்லூரியில் தனக்கு இரண்டு வருடம் ஜூனியராக படித்த சந்தியாவா இவள்?

இரண்டு வார்த்தை சேர்ந்தார்போல் பேசுவதற்கே மிகவும் யோசிக்கும் சந்தியா..........இத்தனை வெளிப்படையாக தன் மனதில் உள்ளதை பேசுகிறாள், வியந்தான் ரமேஷ்!!

கல்லூரியில் ரமேஷின் வகுப்பில் படித்த சரவணனின் தூரத்து உறவுக்கார பெண்தான் சந்தியா.அதே கல்லூரியில் முதல் வருடப் படிப்பில் சந்தியா சேர்ந்த போது அவளது அப்பா சரவணனிடம்,

"தம்பி நம்ம சந்தியாவ இதே காலேஜ்லதான் ஹாஸ்டல சேர்த்திருக்கிறோம்பா.........புள்ளைய பத்திரமா பார்த்துக்க"

என்று ஒரு அப்பாவிற்கே உரித்தான கவலையான அக்கறையுடன் அவனிடம் கூறினார்.
பக்கத்தில் கும்பலாக நின்றுக் கொண்டிருந்த சரவணின் நண்பர்களையும் ஓரக்கண்ணால் மிரண்டு போய் பார்த்தபடியே தான் பேசினார்.

'நம்ம பொண்ணை இந்த பயலுக கிண்டலும் கேலியும் செய்வானுங்களோ' அப்படின்ற பயமும் அவரது பார்வையில்.

"நீங்க பயப்படாம ஊருக்கு போங்க சித்தப்பா, அவளை நான் பாத்துக்கிறேன்........" என்று அவருக்கு தைரியம் சொல்லி அனுப்பினான் சரவணன்.

அதன்பின் சரவணனிடம் ஏதாவது உதவி கேட்டு சந்தியா வருவதும், உடனிருக்கும் ரமேஷிடமும் நட்பான அறிமுகத்துடன் பேசவும் சந்தர்ப்பங்கள் அமைந்தன. சரவணன் இல்லையென்றால் ரமேஷிடமே தன்க்கு தேவையான உதவிகளை கேட்கும் அளவிற்கு அவர்கள் நட்பு வளர்ந்தது.

தன் நண்பனின் உறவுக்காரபெண், ஹாஸ்டலில் வேற இருக்கிறா என்ற அக்கறையில் ரமேஷும் உதவிகளை செய்தான்.
ரமேஷ் நூறு வார்த்தை பேசினால், பதிலுக்கு ஒரு வார்த்தை பேசவே சந்தியா மிகவும் தடுமாறுவாள்.

இந்நிலையில் ரமேஷ் இறுதியாண்டு இறுதி தேர்விற்கு முந்தின நாள், சந்தியா தன் காதலை கவிதையாக எழுதி ரமேஷிடம் கொடுத்தாள்.


ரமேஷ்...
உன் மேல் காதல் வந்தும்
அதைச் சொல்லாமல் மறைத்திருந்தேன்
உன்னிடம் சொல்வதற்கு ஏனோ முடியவில்லை
பெண்மையின் நாணம் என்னை வென்றது

என்னுள் தீபமாக நீ நின்று
சுடர் விட்டு எரிகின்றாய்
நீ எரிய நான் திரியாகி
காதல் தீயில் என்னை எரிக்கின்றேன்

என்னைத் தென்றல் தீண்டினாலும்
உன் நினைவால் சிலிர்க்கின்றேன்
என்னை வெப்பம் தீண்டினாலும்
உன் அருகாமையை உணர்கின்றேன்

என் கண்கள் காணும் காட்சி எல்லாம்
நீயே ஆகி விட்டாய்
நான் பேசும் வார்த்தை எல்லாம்
உன் பெயரையே சொன்னது

என்னையறியாமல் என் கண்கள்
நீ வரும் வழி பார்த்துத் தேடியது
என் கால்களோ வெட்கத்தால்
தரையில் கோலம் போட்டது

இத்தனை ஆசை உன்மேல் இருந்தும்
ஏனோ சொல்லத் தெரியவில்லை
என்றாவது என்னை நீ அறிவாய்
என்றே இந்நாள்வரை காத்திருந்தேன்.....

உனக்காகவே நான் வாழ்கின்றேன்!!

அமைதியும் சாந்தமுமாக வலம் வரும் சந்தியாவின் இதயத்தையும் காதல் தட்டியிருந்தது ரமேஷின் உருவில்!

இதனை சற்றும் எதிர்பாராத ரமேஷ் , தன் மனதில் அவள் மேல் அவ்விதமான எந்த எண்ணமும் இல்லை எனவும், இப்படி பட்ட எண்ணங்கள் கல்லூரி கால வயதில் சகஜம், அதையெல்லாம் விட்டுவிட்டு படிப்பில் கவனம் செலுத்துமாறும் அறிவுரை கூறினான்.



கண்களில் ஏமாற்றமும், கவலையும் கலந்த ஓர் அவமான உணர்விலும் கலங்கிய கண்களுடனும் சந்தியா வேகமாக அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதுவே அவன் சந்தியாவை கடைசியாக சந்தித்தது.
சரவணன் மேற்படிப்பிற்காக அமெரிக்கா சென்றுவிட, ரமேஷ் பெங்களூரில் மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் சேர்ந்துவிட, இருவருக்குமான தொடர்பும் மெது மெதுவாக குறைந்திருந்தது.
ரமேஷ் சந்தியாவை பற்றிய எதுவுமே சரவணனிடம் விசாரிக்கவில்லை இத்தனை வருடங்களில்.

அவன் சந்தியாவை பற்றி கேட்காததிற்கும், அவளது காதலை மறுத்ததிற்கும் காரணம் இருந்தது.........அப்போது
அவன் மனதில் குடியிருந்த எதிர்வீட்டு தேவதை 'மேனகா' தான் அது!!

மேனகா ரமேஷ் வீட்டின் எதிரில் குடியிருக்கும் அழகு பதுமை.
சிறுவயதிலிருந்தே இரு குடும்பத்திற்கும் நல்ல பழக்கம்,
பதின்ம வயது காதல் ரமேஷை தாக்கியது 'மேனகா'வின் உருவில்.....


மனதில் மேனகா மீது காதல் இருந்தும், ரமேஷ் அதனை அவளிடம் வெளிப்படுத்தவேயில்லை,
தானும் அவளும் படித்து முடித்து நல்ல நிலைக்கு வந்தபின் இருவீட்டாரிடமும் பேசி அவளை திருமணம் செய்ய வேண்டும் என்ற திட்டத்தில் ஒருதலையாக அவளை காதலித்துக் கொண்டிருந்தான்.
மேனகாவின் பாசமும் அன்பும் அவனுக்கு சிறுவயதிலிருந்தே நிறைவாக கிடைத்ததால், தன் காதலை தனிப்பட வெளிப்படுத்தி காதலித்து தங்கள் படிப்பு காலத்தை விரயமாக்க வேண்டாம் எனக் கருதி அவன் மனதிலேயே தன் காதலை பத்திரப்படுத்தியிருந்தான்.

விதி வலியது..........இரண்டு வருடங்களுக்கு முன் மேனகா தன் கல்லூரி படிப்பை முடிக்கும் தருவாயில் , தன்னுடன் படிக்கும் தன் காதலனிடம் தன்னை சேர்த்து வைக்க ரமேஷின் உதவியையே அவள் நாடியபோதுதான் ரமேஷ் தன்க்குள் சுக்கு நூறாக உடைந்து போனான்.

மேனகாவின் பாசமும், பரிவான பேச்சும் இவனுக்கு காதலாக தோன்றியிருக்கிறது, ஆனால் அவளுக்கோ அது நட்பாக மட்டுமே இத்தனை வருடங்கள் இருந்திருக்கிறது.

மனதிற்குள் கோட்டை கட்டி, சிம்மாசனத்தில் அமர்த்தி , பூஜித்த தேவதை தன்னையும், தன் காதலையும் உணராமலே போனதால் அவள் மீது கோபமும் ஆத்திரமும் முட்டிக் கொண்டு வந்தது ரமேஷிற்கு.

மேனகா தன் காதலனுடன் திருமணமாகி வெளிநாடு சென்று இரண்டு வருடங்களாகியும் அந்த கோபமும் ஏமாற்றமும் இன்னும் அழியாத ரணமாக அடி மனதில் இருக்கத்தான் செய்தது ரமேஷிற்கு.

இன்று சந்தியாவின் இந்த பக்குவமான பேச்சு ரமேஷை சிந்திக்க வைத்தது.

சாயந்திரம் அலுவலகம் முடிந்து தன் வீட்டிற்கு தனது காரில் ரமேஷ் திரும்பிய போது, அலுவலகத்திற்கு அருகிலிருந்த பஸ் ஸ்டாப்பில் நின்றுக்கொண்டிருந்த சந்தியாவை பார்த்ததும் தன் காரை ஓரமாக நிறுத்திவிட்டு அவளிடம் சென்றான்.

" சந்தியா.........எங்கே போகனும்.......வா நான் ட்ராப் பண்றேன் என் கார்ல"

" நோ......நோ தேங்க்ஸ்"

"எங்கே போகனும்னு மட்டும் சொல்லு.........போற வழில நானே ட்ராப் பண்ணிடுறேன்.....ப்ளீஸ்"

"ப்ரவாயில்லை.........நான் பஸ்லயே போய்க்கிறேன்"


"ஓ.......இன்னும் என் மேல கோபம் குறையலையோ"

"ஹலோ.........எனக்கு யாருமேலயும் கோபம் எல்லாம் ஒன்னுமில்ல"

" அப்போ என் .......கார்ல வா.......நான் ஓத்துக்கிறேன் உனக்கு கோபமில்லைன்னு"

"அய்யோ ரமேஷ்........இப்போ எதுக்கு பஸ் ஸ்டாப்ல வந்து வம்பு பண்றீங்க"

" நீ பேசாம அப்போவே கார்ல வந்து உட்கார்ந்திருந்தா யாரு வம்பு பண்ண போறா "

" சரி..........சரி.......வந்து தொலைக்கிறேன்"

என்று வேகமாக அவனது காரை நோக்கி நடந்தாள்.

காரின் பின் இருக்கைக்கான கதவை சந்தியா திறக்கவும்......

"ஹலோ.....மேடம்..........நான் என்ன உங்களுக்கு கார் ட்ரைவரா? முன்னாடி வந்து ஏறுங்க....."

"எனக்கு அப்படி யாரு கூடவும் கார்ல முன்னாடி கூட உட்கார்ந்து போய் பழக்கமில்லை.........மோர் ஓவர் இட்ஸ் ரிசர்வ்ட் ஃபார் சம் ஒன் ஸ்பெஷல் டு யூ"

"சம் ஓன் ஸ்பெஷலா.......ஹும்.......சரி சரி.......முதல்ல கார்ல பின்னாடியே ஏறும்மா தாயே"

சந்தியாவை எங்கே இறக்கிவிடவேண்டுமென அவளிடம் கேட்காமலே காரை மிதமான வேகத்தில் செலுத்தினான்.

மேனகா ரமேஷின் மனதில் ஏற்படுத்தியிருந்த நிராகரிப்பின் வலி, ஏமாற்றம்..............
அதன்பின் சந்தியாவை ஏதேச்சையாக அலுவலகத்தில் இன்று காலையில் சந்தித்தபோது, அவளது அன்பை உதறித்தள்ளி காயப்படுத்தி விட்டோமோ என்ற குற்ற உணர்வு எல்லாம்.....மெது மெதுவாக விலக ஆரம்பித்திருந்தது ரமேஷிற்கு.


டிராஃபிக் சிக்னலில் கார் நிற்கையில் தன் முன்பிருந்த கண்ணாடியில் பின்னிருக்கையிலிருந்த சந்தியாவை பார்த்தான் ரமேஷ்.


அடக்கப்பட்ட வெளிச்சத்தில் கைகெட்டும் தூரத்தில் அவளைப் பார்த்தபோது ரமேஷ் தன்னுள் ஏதோ புரள்வதை கவனித்தான்.
எழுதி திருத்தங்கள் செய்து கச்சிதமாக்கப்பட்ட ஓவியம் போன்ற முகம்.
உதடுகள் முழுவதும் மூடிவிடாமல் ஒரு சின்ன திறப்பு வெகு வசீகரமாயிருந்தது.

இத்தனை வருடங்கள் கழித்து சந்தித்தப்பின்பும், என் மேல் எத்தனை நம்பிக்கை இருந்தால்........எங்கு செல்கிறோம் என்று கூட கேட்காமல் ஜன்னல் வழியாக தன் முகத்தில் மோதும் காற்றை ரசித்தபடி, நெற்றி கூந்தலை நளினமாக காதில் சொருகியப்படி வேடிக்கை பார்த்துக்கொண்டுவருவாள்??

காரை காஃபி ஷாப் முன் நிறுத்தினான் ரமேஷ்.

" ஏன்.........ஏ.......ன்...........இங்கே நிறுத்தினீங்க?.........நான் எல்லாம்......."

"நான் எல்லாம் யாரு கூடவும் காஃபிஷாப் க்கு தனியா போகமாட்டேன்...........நான் சுடிதார் போட்ட சங்ககால தமிழ்பெண்.....அப்படின்னு லெக்சர் கொடுக்க போறே......அந்த லெக்சரை காஃபி குடிச்சுட்டே பேசலாமே.......ப்ளீஸ்"

ப்ளீஸ் சொல்லும்போது........... 'ஸ்ஸ்ஸ்' ஸில் ஒரு அழுத்தம் கொடுத்து கெஞ்சும் பார்வை பார்த்தான்....ரமேஷ்!!


"எனக்கு ஒன்னும் ப்ரச்சனை இல்ல உங்க கூட காஃபி குடிக்க.........நீங்க உங்க வீட்டமனிக்கிட்ட அடி வாங்காம இருந்தா சரி..........."

"ஹா......ஹா.......ஹா"

"என்ன இளிப்பு......??"

"எனக்கு கல்யாணம் ஆகிடுச்சா இல்லியான்னு போட்டு பாக்குறியாக்கும்??.........சரி வா........காஃபி குடிச்சுட்டே அது பத்தி பேசலாம்"

கல்லூரியில் சரவணனுடன் கேண்டினுக்கு வந்தால், சந்தியா முட்டை பஃப் ஆர்டர் பண்ணுவாள்.....அது அவளது ஃபேவெரைட் ஐடம்!
ஸோ.....ரமேஷ் காஃபியுடன் முட்டை பஃப்யும் ஆர்டர் செய்தான்.

"ஹும்........என்ன கேட்ட.........வீட்டம்மணியா??'

"ஆமா.........மிஸஸ் மேனகா ரமேஷ்குமார் பத்தி கேட்டேன்......"

இவளுக்கு எப்படி மேனகா மேட்டர் தெரியும் என்று......அதிர்ச்சியுடன்.....புருவம் உயர்த்தி அவளை கூர்ந்து பார்த்தான்.

சிறிது நேர மெளனத்திற்கு பிறகு சந்தியாவே பேச தொடங்கினாள்.....

" காலேஜ்ல அன்னிக்கு..........உங்க கிட்ட......பேசிட்டு நான் ஹாஸ்டலுக்கு போற வழியில சரவணன் அண்ணாவை பார்த்தேன்........என் கண்ணு ஏன் சிவந்திருக்கு, ஏன் அழுதேன்னு அண்ணா துளைச்சு துளைச்சு கேட்டான்.......ஸோ அவன்கிட்ட சொன்னேன்....."

"..........."

" அப்போதான்......நீங்க உங்க பக்கத்துவீட்டு பொண்ணு மேனகாவை ரொம்ப டீப்பா லவ் பண்றீங்கன்னு அண்ணா சொன்னான்........"

"..........."

"சரவணன் அண்ணா கிட்ட அப்புறமா உங்களை பத்தி நான் எதுவுமே கேட்டதில்லை.......அண்ணாவும் எதுவும் சொன்னதில்லை........"


"ஹும்.........."


" நான் ரொம்ப ஃபீல் பண்ணினேன்.......இதெல்லாம் தெரியாம உங்க மேல...........ஸாரி"


"ஹே சந்தியா........ஒய் டு யு ஆஸ்க் மீ ஸாரி.........டோண்ட் ஃபீல் ஸாரி சந்தியா."

நீண்ட பெருமூச்சிற்கு பின் ரமேஷ் பேச தொடங்கினான்,

"நான் லவ் பண்ணினது காலேஜ்ல என் க்ளோஸ் ஃப்ரெண்ட்ஸுக்கு தெரியும்............ஆனா...........அந்த லவ் ஒருதலைகாதல் மட்டுமில்ல.......ஏற்றுக்கொள்ளபடாத காதலும்னு யாருக்கும் தெரியாது.........."

"ர....மே......ஷ்......"

"ம்ம்.........ஷி காட் மேரிட் ........."

"ஸோ ஸாரி டு ஹியர் திஸ்......ரமேஷ்"

"லீவ் இட் .......பாஸ்ட் இஸ் பாஸ்ட்......."

சிறிது நேரம் எதுவுமே பேசாமல் இருவரும் காஃபி அருந்தினர்.

"சரி......நான் போட்டு எல்லாம் பார்க்கல...........உன் டீடெய்ல்ஸ் கம்பெனி எம்ப்ளாயி டேடா பேஸில் பார்த்தேன்........ஸ்டில்....மிஸ்.சந்தியா..........ஏன் இன்னும்.........நீ.......கல்யாணம்.........."

"ஹலோ.......நான் உங்களையே நினைச்சுட்டு இன்னும் உருகிட்டு இருக்கிறேன், அதான் இன்னும் கல்யாணம் பண்ணிக்கிலைன்னு பொய் எல்லாம் சொல்ல மாட்டேன்...............வீட்ல மாப்பிள்ளை பார்த்துட்டுதான் இருக்காங்க.........ஆனா எந்த ஜாதகமும் பொருந்தி வரல, என் ஜாதகத்துல தான் ஏதோ ப்ராப்ளம்னு என் அம்மா ஒரே புலம்பல்.........ஜாதகத்தை மாத்தி எழுதி ரீ-ட்ரை பண்ணுங்கம்மா ன்னு சொல்லியிருக்கிறேன் "
என்று படபடவென்று பேசிவிட்டு சிரித்தாள் குழந்தையாய்...........!!

அவளது சிரிப்பை ரசித்தபடி கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தான் ரமேஷ்........

"ஹலோ........சார்..........என்ன அப்படி பார்க்கிறீங்க......??"

பதில் சொல்லாமல் பார்த்துக்கொண்டே இருந்தான் ரமேஷ்......

"ஐயா சாமி........நான் பேசுறது காதுல விழுதா........ஹலோ......."
அவன் கண்களுக்கு முன் விரல் சொடுக்கி சிரித்தாள் சந்தியா!!

தன் இருக்கையில் நிமிர்ந்து உட்கார்ந்த ரமேஷ்.........அவள் கண்களை ஊடுறுவும் ஒரு பார்வையுடன்...........

"அப்பிளிக்கேஷன்.........உன்கிட்ட கொடுக்கனுமா..........உன் அப்பாகிட்ட கொடுக்கனுமா........"

"எ..........என்ன......??."

"என் ஜாதகத்தை உன் கிட்ட கொடுக்கனுமா........உங்க வீட்ல கொடுக்கனுமான்னு கேட்டேன்.........."

குடித்துக்கொண்டிருந்த காஃபி புரை ஏறியது சந்தியாவிற்கு,

மிரண்ட விழிகளில்......இன்ப அதிர்ச்சி!!

"சந்தியா நான் உன்னை காதலிக்கிறேன்னு டயலாக் எல்லாம் விட மாட்டேன்.......உன் காதலை காலம் தாழ்த்தி ஏத்துக்கிறேன்.......உனக்கு இப்பவும் என்னை பிடிச்சிருந்தா, உன்னை கல்யாணம் பண்ணிக்க ஆசைபடுறேன்"

"............"

" நாம நேசிக்கிறவங்களைவிட........நம்மளை நேசிக்கிறவங்க கூடத்தான் வாழ்க்கை இனிக்கும்........."

"......."

" வில் யூ மேரி மீ.......சந்தியா?"

"..........."

"என்ன சந்தியா........பதிலேதும் சொல்லாம அமைதியா இருக்கிற??"

"ம்ம்......"

"ம்ம் னா??........"

கரெக்ட்டாக அப்போ பார்த்து வெயிட்டர் பில் கொண்டுவர, பில் பே பண்ணிவிட்டு ரமேஷ் பார்க்கையில்.........சந்தியா அவனது கார் நோக்கி சென்று கொண்டிருப்பது தெரிந்தது.
தன் கையிலிருந்த ரிமோட் கீ யினால்.......காரை அன்லாக் செய்துவிட்டு.......வேகமாக சந்தியாவை பின் தொடர்ந்தான்.

காருக்கு அருகில் இருவரும் சென்றதும், தவிப்புடன் ரமேஷ் அவளை நோக்க.........

சந்தியா கண்சிமிட்டிவிட்டு காரின் முன் கதவை திறந்தாள்......!!

"சந்தியா..........."

"இனிமே இந்த இடத்தை நான் யாருக்கும் விட்டு தர மாட்டேன்"

சந்தோஷத்தில் ரமேஷிற்கு வார்த்தைகள் வரவில்லை........அங்கு வார்த்தைகளுக்கு அவசியமுமில்லையே!!

ரமேஷ் காரின் ட்ரைவர் இருக்கையில் ஏறினான், அவள் பக்கத்து இருக்கையில் அமர்ந்தாள்.
அமர்ந்தபோது அவன் தோளில் அவள் தோள் இடித்தது.........
கியரைப் பொருத்தியபோது அவன் கை அவள் முழங்காலில் தொட்டு மீண்டது.......

திடீர் ஸ்பரிசத்தில் உடல் சிலிர்க்க.........இனிதே அவர்கள் 'வாழ்க்கை' பயணம் தொடங்கியது!!!!!!!!

முற்றும்.

September 01, 2008

மனைவி மார்க் போட்டால்.......???




ஆங்கிலத்தில படித்த ஒரு article யை மையமாக வைத்து எழுதப்பட்ட பதிவு........


செப்டம்பர் 11 ஆம் தேதி திருமண பந்ததில் அடி எடுத்து வைக்கும் நண்பர் அருண்குமார் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று பல்லாண்டு பல்லாண்டு மகிழ்வுடன் வாழ வாழ்த்துக்களுடன்........!!!



ஸ்கூல், காலேஜ் எக்ஸாம்னாலே, நல்லா பரீட்சை எழுதி பாஸ் ஆகனுமேன்னு ஒரு பயம் இருக்கும்......:(

அதைவிட கஷ்டமான ஒரு தேர்வு இருக்கு..........அது என்னன்னு தெரியுமா??? டே டு டே லைஃப்ல உங்க ஒவ்வொரு செயலுக்கும், அசைவுக்கும் உங்க மனைவி போடும் மார்க்!!!

மனைவி மார்க் போடுவாங்களா?????

மார்க் போட்டா..........எவ்வளவு போடுவாங்க, எதுக்கெல்லாம் போடுவாங்க, எப்படி போடுவாங்க, தெரிஞ்சுக்கனுமா??

தொடர்ந்து பதிவை படிங்க...!!

நீங்க திருமணமான ஆணாக இருந்தால், உங்க மனைவி உங்களுக்கு மார்க் போட்டா நீங்க பாஸா? ஃபெயிலா ன்னு தெரிஞ்சுக்கலாம்!

நீங்க திருமணமாகாத ஆணாக இருந்தால், எதிர்காலத்தில் உங்கள் மனைவியிடம் நூத்துக்கு நூறு மதிப்பெண்கள் வாங்க தேவையான ரகசியம் அறிந்துக்கொள்ளலாம்!!

இதோ சில சாம்பிள்......



1. ராத்திரி நல்லா தூங்கிட்டு இருக்கும்போது "ஏங்க வெளியிலே ஏதோ சத்தம் கேட்குதுங்க" அப்படின்னு சொல்றார் மனைவி....

அ. உடனே நீங்க தைரியமா கதவை திறந்து வெளியே போய்ப் பார்த்துவிட்டு, ஒன்றுமில்லை என்று வந்து படுக்கிறீர்கள் [ மார்க் - 0, 'ஏன் மார்க் பூஜ்ஜியம்னு முழிக்கிறீங்களா??.........காரணம் அப்படி வெளியே போய் பார்த்துட்டு வரவேண்டியது உங்க கடமை, அதுக்கெல்லாம் மார்க் கிடையாது']

. "அங்கே ஏதோ அசையுற மாதிரி இருக்குதே.......ஹே யாரது.....எவன்டா அது......." அப்படின்னு சவுண்டு விட்டுட்டு வந்து படுக்கிறீங்க [ மார்க்: 10]

.சவுண்டு விட்டதோடு நிறுத்தாம, கைல ஒரு தடியெடுத்துட்டுப் போய் தரையில ரெண்டு தட்டு தட்டி சீன் போட நீங்க நினைக்க, நீங்க தடியால் போட்ட போடு உங்கள் மனைவிக்கு பிரியமான பூந்தொட்டி, செல்ல பூனைகுட்டி இப்படி எதின் மீதாவது பட்டால்......[மார்க் : -5 'மைனஸ் 5 நோட் பண்ணிக்கோங்க']



2.உங்க வைஃப்க்கு பர்த்டே கொண்டாட.....

. இரவு ஒரு நல்ல ஹோட்டலுக்கு.......[அவங்களோட ஃபேவெரேட் ரெஸ்டாரண்டுக்கு] டின்னர் சாப்பிட அழைச்சுட்டுப்போறீங்க [ மார்க்: 0 ' ஹலோ என்ன முழிக்கிறீங்க.....இதுவும் உங்க கடமைங்கோ, ஸோ நோ மார்க்குங்கோ!']

. டின்னர் முடிஞ்சதும், சர்ப்ரைஸா மனைவிக்கு ஒரு சூப்பர் கிஃப்ட் வாங்கி கொடுக்கிறீங்க [மார்க்:10]

இ: அவங்க பிறந்தநாளை கொண்டாட டின்னருக்கு கூட்டிட்டு போய்ட்டு.......நீங்க பியர் அருந்திட்டு, ஆட்டம் பாட்டம்னு நடு ராத்திரிவரைக்கும் கொட்டம் அடிக்கிறீங்க......அங்கே வந்திருக்கும் மற்றவர்களுடன் [ மார்க் : -100 'மைனஸ் நூறு']



3.உங்கள் உடலமைப்பு எப்படி????

அ. தொப்பை போட்டிருக்கிறீர்கள் [மார்க்: -50 'மைனஸ் ஐம்பது']

. தொப்பை வயிறாக இருந்தாலும், அதை குறைக்க தவறாமல் உடற்பயிற்சி பண்றீங்க [மார்க்: 0 ' அட......தேகப் பயிற்சி பண்றது உங்க கடமைங்க, ஸோ மார்க் ஸீரோ தானுங்க']

இ. தொந்தி பற்றிய கவலையே இல்லாமல், அசால்ட்டா ' என்னைப்பார் ! என் தொப்பையை பார்!! என்று ஜீன்ஸ் பேன்ட்டும், டைட் டீ-ஷர்ட்டும் போட்டுக்கிறீங்க.[மார்க்: -100 ' மைனஸ் நூறு' ]

ஈ. எனக்கு மட்டுமா தொப்பை இருக்கு? உனக்கு தான் என்னைவிட பெரிய தொப்பை இருக்கு , ஹி ஹி ஹி !! என்று கிண்டல் பண்ணுகிறீர்கள்.[மார்க்: -1000 'மைனஸ் ஆயிரம்']



4. உங்க மனைவி தனக்கு பிடிச்ச ஸ்வீட் வாங்கிட்டு வர சொல்றாங்க....

அ. நல்லபுள்ளையா போய் உடனே வாங்கிட்டு வந்துடுறீங்க [ மார்க்:0 ' இப்படி சமர்த்தா வாங்கிட்டு வரவேண்டியது உங்க கடமை ராசா, ஸோ நோ மார்க் ' ]

. உங்க மனைவி ஸ்வீட் வாங்க ஈவினிங் வெயில் தாள போய்ட்டுவாங்கன்னு சொல்லியும்.........அந்த அயிட்டத்தைக் கடும் வெயிலில் போய் வாங்கிட்டு வருகிறீர்கள்[ மார்க் : 10 ]

இ. மனைவிக்கு ஸ்வீட் மட்டும் வாங்காமல், கூடவே உங்களுக்கு பிடிச்ச பக்கோடா மிக்சர்ன்னு சில அயிட்டமும் சேர்த்து வாங்கிட்டு வர்ரீங்க [ மார்க்: - 5 ' என்ன முறைக்கிறீங்க?ஐந்து மார்க்தாங்க மைனஸ்.......இப்படி முறைச்சீங்கன்னா இன்னும் ஜாஸ்தி மார்க் மைனஸ் ஆகும், கவனம்']



5. " ஏங்க நான் ரொம்ப குண்டா தெரியறேனாங்க?" என்று கேட்கிறார் உங்கள் மனைவி....

அ. அதற்கு நீங்க ரியாக்ஷனே கொடுக்காம, காது கேட்காதது போல் நடிக்கிறீங்க....பதில் சொல்லாம தவிர்க்கிறீர்கள் [ மார்க்: -10 ' பின்ன இப்படி நைஸா நழுவினா?? மைனஸ் மார்க்தான்!!]

ஆ."ஆமாம்...கொஞ்சம்....இல்ல.........இல்லடா........ரொம்ப இல்ல, கொஞ்சமாதான்.......ஆனாலும் அழகாதான்மா இருக்க" ஆமாம் ன்னு ஆரம்பிச்சுட்டு அதுக்கப்புறம் நீங்க என்ன சொல்லி சமாளிச்சாலும், எவ்வளவு சப்பைக்கட்டு கட்டினாலும்......[மார்க் : -25 ' மைனஸ் 25']

இ. அப்பாவி முகத்துடன் "தூரத்துல இருந்து பார்த்தாவா??...........இல்ல பக்கத்துலயா??" என நக்கலடிக்கிறீர்கள்.[மார்க்: -100 ' இந்த நக்கலுக்கெல்லாம் மைனஸ் மார்க் தானுங்க!!']



6. ஒரு பிரச்னை பற்றி சீரியஸா உங்க மனைவி உங்க கிட்ட வந்து பேசுறார். அதற்கு நீங்கள்…

அ. அவர் பேசி முடிக்கும்வரை வெகு உன்னிப்பாகக் கேட்பது போன்ற பாவத்தை உங்கள் முகத்தில் மெயிண்டேன் பண்றீங்க[மார்க்: 0 ' இதுதாங்க நீங்க செய்தே ஆகவேண்டிய முக்கிய கடமை , அதுக்கெல்லாம் மார்க் போட முடியாது']


ஆ. உங்க மனைவி பேசி முடிக்க ஒரு மணி நேரம் ஆனாலும்.......குறுக்கே பேசாமல், எதிர்த்து பேசாமல், அமைதியாகக் கேட்டுக் கொண்டு இருக்கிறீங்க.[மார்க்: +100 ' இப்போ தெரிஞ்சிடுச்சா.........எப்படி நூறு மார்க் வாங்கனும்னு!!']


இ. உங்க மனைவி பேசி முடிப்பதற்குள் நீங்க அப்படியே தூங்கிட்டீங்கன்னு பேச்சின் முடிவில் தெரிஞ்சுக்கிறாங்க[ மார்க்: -1000 ' மைனஸ் ஆயிரம் ஏன்னு பார்க்கிறீங்களா??.............பின்ன எவ்வளவு 'தில்' இருந்தா, பேசிட்டு இருக்கும்போது பேச்சை கவனிக்காம இப்படி தூங்கி வழிவீங்க??]


மனைவியரின் மார்க் போடும் இரகசியம் புரிஞ்சுடுச்சா? பாஸாக வாழ்த்துக்கள்!!!


[இந்த பதிவை படித்துவிட்டு,
மனைவியை மார்கே போடவிடாமல் எப்படி சதி பண்ணுவது?? என்று தன் அனுபவபூர்வமான ஆலோசனைகளை பதிவாக எழுதியுள்ளார் நண்பர் விஜய் - இங்கே]