பகுதி - 2
பகுதி - 3
பகுதி - 4
ஹாஸ்பிட்டல் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிந்துக்கொள்ள தங்கள் அறைக்கு வந்த கார்த்திக், அங்கு.....
அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!
அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!
கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னைகைத்தது!
நந்தினியின் கிறங்கடிக்கும் அழகில் தன்னை ஒரு கணம் மறந்து ரசித்துப்பார்த்தான் கார்த்திக்.
"ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!"
தன் செவ்விதழ் சுளித்து, குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள் நந்தினி.
கார்த்திக் தன் ரசிப்பை மறைத்துவிட்டு, அவள் முகம் பார்க்கும் தெம்பில்லாமல்,
"டைம் ஆச்சு.......வா.....ஹாஸ்பிட்டல் போலாம்" என்று கூறிவிட்டு
அவள் பதிலுக்கு காத்திராமல் காரில் போய் உட்கார்ந்துக்கொண்டான்.
காரில் இருவரும் ஹஸ்பிடல் செல்லும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.
மருத்துவ பரிசோதனையில் கார்த்திக் பயந்த மாதிரி 'எந்தவித' பாதிப்பும் நந்தினிக்கோ, வயிற்றிலுள்ள குழந்தைக்கோ ஏற்படவில்லை. இதனை அறிந்து மனதிற்கு ஒரு வித திருப்தியாக இருந்தாலும், தான் இல்லாமல் நந்தினி எப்படி குழந்தையுடன் வாழ்வை தொடர்வாள் என்று நினைக்கையில் ' திக்' கென்று இருந்தது கார்த்திக்கிற்கு.
இவனது மன ஓட்டங்களை உணராத நந்தினி, நாளுக்கு நாள் சோர்வடைந்து வரும் கார்த்திக்கிடம்,
"என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....."
"....."
" நீங்க ஜிம்முக்கு போயே 1 மாசம் ஆச்சு.........எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, அப்புறம்........கல்யாணம் ஆனதும்......'mission accomplished' அப்படினு ......exercise யே பண்ணாம 'தொப்பையும்' 'தொந்தியுமா'.......சோம்பேறி ஆகிட வேண்டியது"
"....."
"என்னங்க இது.....நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன்.........ஒரு வார்த்தை பதில் பேசுறீங்களா???........எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரியே ஒரு லுக்கு..........ஏங்க இப்படி இருக்கிறீங்க"
"இப்ப உனக்கு என்ன வேணும்..........'muscled body' ஆ ..........நானா??"
"ச்சீ.........ஏங்க இப்படி....... தப்பா அர்த்தம் பண்ணிக்கிறீங்க"
வார்த்தைகள் உடைந்தன நந்தினிக்கு.
கார்த்திக்கா இப்படி பேசுவது.......என்ற அதிர்ச்சி அவளுக்கு.
"என்னமா நந்தினி..........எதுக்கு கத்துறான் கார்த்தி".என்று கேட்டுக்கொண்டே நந்தினியின் மாமியார் அங்கு வர,
"ஒன்னு....மில்ல.....அத்தை" என்று சமாளித்தாள் நந்தினி.
கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.
நந்தினி தன்னிடம் மறைத்தாலும், தன் மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.
மகனிடம் தனிமையில் அறியுரை கூறிக்கொண்டுதானிருந்தாள். ஆனால் கார்த்திக்கின் போக்கில் எந்த ஒரு மாற்றமுமில்லை, மாறாக நாளுக்கு நாள் விட்டத்தியான பார்வையும், சோர்வான நடையுமாக கார்த்திக்கின் உடலும் மனமும் தளர்ந்துக்கொண்டே போனது.
அம்மாவின் அன்பும் அக்கறையும் கலந்த அறிவுரைகள் ஒருபுறம்.........அன்பு மனைவியின் கள்ளமில்லா குழந்தை முகம் ஒருபுறமென கார்த்திக்கை மேலும் மனபலவீனமடைய செய்தது.
சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..
உனக்கு செய்த
முதல் துரோகம்
என் முடிவையும்
தேடிக் கொடுத்திருக்கிறது...
உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!
தன் மறைவிற்கு பின் நந்தினியும் தன் தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.
எல்லா விதத்திலும் அவளை தயார் படுத்தும் நோக்குடன் அவன் செயல்பட்டது, நந்தினிக்கு ஏன் என்று புரியவில்லை.
"இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"
"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"
"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"
"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"
வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது.
அவளது கண்ணீருக்கு முன் கார்த்திக் என்றுமே ஒரு கோழைதான், அவளது கண்ணீரை தாங்கும் சக்தி அவனுக்கோ........அவன் காதலுக்கோ இல்லை!!!
"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"
சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.
கண்ணீர் திரையாக கண்களை மறைக்க........கார்த்திக் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.
தன்னை விட்டு கார்த்திக் விலகி விலகி போவதின் அர்த்தம் உணர முடியாமல், அந்த நிராகரிப்பின் வலியை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் நந்தினி தவித்தாள்.
என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...
கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள்..........சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.
'முதல் பிரசவம் எங்கள் வீட்டில்தான்' என நந்தினியின் பெற்றோரும் உறவினரும் அவளுக்கு சிறப்பாக வளைகாப்பு செய்து ஊருக்கு அழைத்துச்சென்றனர்.
ஊருக்குச் சென்றபின்பும், தனியாக இருக்கும் தன் மாமியாருக்கும், ஃபோனில் பேசும்போதும் கடுகடுப்பாக பேசும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி ஃபோன் செய்தாள் நந்தினி.
"அத்தை சாப்பிட்டீங்களா??"
"அத்தை.......ஒரு ஸ்ட்ராங் காஃபி குடிக்கலாமா"
"அத்தை கோயிலுக்கு போலாமா??".......
இப்படி வார்த்தைக்கு முன்னூறு அத்தை போட்டு பாசமுடன் வலம் வந்த மருமகள் இல்லாமல், முகம் கொடுத்து கூட பேசாத மகனுடன் இருப்பது கார்த்திக்கின் அம்மாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதனால் சம்மந்தார் வீட்டில் 'டேரா' என்று ஊரும் உறவும் சிரித்தாலும் ப்ரவாயில்லை என்று மருமகளைக் காண சென்றுவிட்டார் காத்திக்கின் அம்மா.
அப்பா இல்லாமல் வளர்ந்த கர்த்திக், இதுவரை 1 வாரத்திற்கு மேல் தன் அம்மாவை பிரிந்திருந்ததில்லை, இந்த முறை அம்மாவின் பிரிவும்.......மனைவியின் பிரிவும் சேர்ந்து அவனை தனிமை சிறையில் தள்ளியது.
மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...
ஆனாலும்..........தன் அம்மாவிற்கும் நந்தினிக்கும் இடையிலான இந்த பாசப்பிணைப்பு மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.
தனிமையுணர்வில் ....தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கார்த்திக், ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டான்.
கண்விழித்த போது, தலையில் கட்டுடன் தான் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருப்பதை உணர்ந்தான். கார்த்திக் கண்விழித்ததை டாக்டரிடம் நர்ஸ் தெரிவிக்க, டாக்டர் அவனது அறைக்குள் வந்தார்,
"ஹலோ மிஸ்டர் கார்த்திக்.."
"எனக்கு........என்னாச்சு.....டாக்டர்"
"பைக் கார் மேல மோதி நீங்க கீழே விழுந்ததில், தலையில் அடிப்பட்டிருந்தது.........தையல் போட்டிருக்கிறேன்.....இரண்டு நாள்ல சரியாகிடும், உங்க பர்ஸ்ல இருந்த உங்க நண்பர் ஒருவரின் விசிட்டிங் கார்ட் மூலம் அவரை மட்டும் தான் தொடர்பு கொள்ள முடிந்தது.......வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணனுமா??"
"என்னை........எதுக்கு.......டாக்டர் காப்பாத்தினீங்க........"
"என்ன சொல்றீங்க மிஸ்டர் கார்த்திக்......உங்களை காப்பாத்த வேண்டியது எங்க டுயுட்டி......ஆர் யு ஒகே??"
கார்த்திக்கின் கண்களில் நீரைக்கண்டதும், டாக்டர் திகைப்புடன்,
"மிஸ்டர் கார்த்திக்.........உங்களுக்கு லேசாகத்தான் அடிபட்டிருக்கு, பயப்படும்படியா பெரிய காயம் எதுவுமில்லை.......ஏன் நீங்க இப்போ எமோஷனல் ஆகிறீங்க"
டாக்டரிடம் தன் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டின் விபரங்களை கார்த்திக் கூற, அவரோ......."உங்கள் இரத்தம் நாங்கள் பரிசோதித்த போது எந்தவித HIV அறிகுறியும் இல்லை' என்றும், இன்னொருமுறை வேண்டுமானால் பரிசோதனை செய்துவிடலாம் என மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.
அதே சமயத்தில் கார்த்திக்கை பார்ப்பதற்கு , விசிட்டிங் கார்ட் மூலம் டாக்டர் தொடர்பு கொண்டிருந்த கார்த்திக்குடன் வேலைப் பார்க்கும் ஹரி அறைக்குள் வர, கார்த்திக் தன் குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவனிடம் பேசினான்.
ஹரி தாழ்ந்த குரலில் , கார்த்திக்கிடம்.....
"ஸாரி கார்த்திக்.......டாக்டர் ஃபோன் பண்ணின உடனே என்னால வரமுடியல"
"ப்ரவாயில்லை ஹரி"
"ஒரே சமயத்தில்..........இரண்டு பேரைப்பற்றிய அதிர்ச்சியான செய்தி...அதுவும் இரண்டு பேரின் பெயரும் ஒரே பேர்.....அரண்டுப்போய்டேன் கார்த்திக்"
"என்ன சொல்ற.....ஹரி???"
"கார்த்திக்.......I am not sure......if it is the good time to convey this news to you......நம்ம டீம் கார்த்திக் இறந்துட்டான்"
"யா......ரு......கார்த்திக் குமாரா"
"அவனே தான்..,.....பார்ட்டி அனிமெல்"
"என்ன சொல்ற......ஹரி.....எப்படி??"
ஹரி தன் குரலை மிகவும் தாழ்த்தி......
"எய்ட்ஸ்...ரீசண்டாதான் கண்டுபிடிச்சிருக்காங்க.....அதுக்குள்ள....."
"......."
"பின்ன அவன் பண்ணின லீலைக்கெல்லாம்........சே....ஆளே போய்ட்டான்.......அவனைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது"
"....."
"உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருக்குனு ஃபோன் வந்து சில நிமிஷத்துல இந்த தகவலும் வந்தது......அதான் நான் இங்க வர்ரதுக்கு லேட்......ஸாரி கார்த்திக்"
அதற்கு மேல் ஹரி பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை!
கார்த்திக்கின் நெற்றியில் 'பொட்'டென தட்டினார் போன்ற உணர்வு, ஹைதிராபாத்தில் இரத்தம் கொடுக்க முன் வந்தவர்களில் அவன் குழுவில் இருந்த அந்த கார்த்திக் குமாரும் ஒருவன், இப்போது விளங்கியது கார்த்திக்கிற்கு..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.
உடனே கண்முன், தன் கடுமையான பேச்சினாலும், கசப்பான வார்த்தைகளாலும் காயப்படுத்தி, ரணப்படுத்திய நந்தினியின் அழுது சிவந்த முகம் தோன்றியது.
"ஹரி......ப்ளீஸ்......எனக்கு சென்னை-தூத்துக்குடி ஃப்ளைட்டுக்கு உடனே ஒரு டிக்கட் புக் பண்ணித்தர முடியுமா??"
"இந்த நிலைமையில்.........எப்படி.....கார்த்திக்"
நண்பன் மருத்துவர் என்று யார் தடுத்தும் கேளாமல் , தலையில் கட்டுடன்...........கார்த்திக் நந்தினையை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அவளுக்கு ஃபோன் கூட பண்ணாமல் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் தரையிறங்கினான்.
விபத்தில் காயப்பட்டபோது தன் செல்ஃபோன் சிதறிப்போனது அப்போது தான் நினைவிற்கும் வந்தது.
நந்தினியை உடனே பார்த்தே ஆக வேண்டும்........செய்த தப்பை சொல்லி........மன்னிப்பு கேட்டு......அவள் மடியில் முகம் புதைத்து கதற வேண்டும் என்று மட்டுமே மனசு துடித்தது!!
தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் நந்தினியின் ஊருக்குச் சென்றான்.
நந்தினியின் வீடு இருக்கும் தெருவில் , அவர்களது வீடுதான் சற்று பெரிதான வீடு, தெருமுனையில் கார் திரும்பியது ஒரு குலுக்கலுடன் கார் நின்றது, டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்ய கீழே இறங்க எத்தனிக்க.......
"பக்கத்துல தான் வீடு........நானே போய்கிறேன்.....இந்தாப்பா பணம்" என்று டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்துவிடுகிறேன் வெயிட் பண்ணுங்க சார் என்று கூறியும் கேளாமல், அவன் கையில் பணத்தை தினித்துவிட்டு, நந்தினியின் வீடு நோக்கி நடந்தான்.
சற்று தொலைவிலேயே......நந்தினியின் வீட்டின் முன் கூட்டமாக ஆட்களிருப்பது தெரிந்தது.
இந்நேரத்தில்........ஏன் இத்தனை கூட்டம் அவள் வீட்டுமுன்...
வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.
வீட்டின் முகப்பில் நின்ற அவளது உறவுக்கார ஆண்கள், ஊர் காரர்கள் அனைவரின் முகத்திலும் ......சோகம் நிரம்பிருப்பதைக் கண்டதும்......கார்த்திக்கின் படபடப்பு அதிகரித்தது.
இவனைக் கண்டதும் அனைவரும் இவனை.....இரக்க பார்வை பார்த்தார்களே தவிர, யாரும் விபரம் எதுவும் கூறவில்லை.
நந்தினியின் சித்தப்பா கார்த்திக்கை கண்டதும், இவனது கரங்களை பதற்றத்துடன் பற்றிக்கொண்டு....
"மாப்பிள........மாப்ள......எங்கே போய்ட்டீங்க....உங்களுக்கு தகவல் சொல்ல எத்தனை தடவ.....நாங்க ஃபோன் பண்ணினோம்........"
"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.
"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"
கண் இருண்டது கார்த்திக்கிற்கு....
[தொடரும்]
பகுதி- 6