June 30, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 1

" என்னங்க உங்க பையன் ' கிக் பாஸிங்' ஆரம்பிச்சுட்டான், இனிமே நான் தூங்கினாப்ல தான்!
என் தூக்கத்தை திருடுறதுல உங்களுக்கு போட்டியா இப்போ உங்க பையன், என் வயித்துக்குள்ள இருக்கிறப்போவே இப்படி ஆட்டம் போடுறானே....வெளியில வந்ததும் என்னை ஒருவழி பண்ணிடுவான் போலிருக்குங்க"

ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில் படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின் மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.

சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்ட கார்த்திக் மறுபக்கமாக திரும்பி படுத்துக்கொண்டான்.

வழக்கமாக தன் மடிமீது தலை வைத்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் உரையாடுவதும், கொஞ்சுவதுமாக சில்மிஷம் செய்யும் கார்த்திக் இன்று இப்படி நடந்துக்கொண்டது நந்தினிக்கு வியப்பாகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்....

"என்னடா செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??" என கேட்டுக்கொண்டே தன் பக்கமாக கார்த்திக்கை திருப்ப முயன்று தோற்றாள் நந்தினி.

திருமணமான இந்த மூன்று வருடத்தில் ஒருநாள் கூட இப்படி அவன் முகம் திருப்பியது கிடையாது.

'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??

குழம்பிப்போன நந்தினிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ஆனாலும் கணவனிடம் தன் அழுமூஞ்சியை காட்டி அந்த அழகிய இரவை வீணாக்க விரும்பவில்லை நந்தினி.

"ஏங்க உடம்பு சரியில்லையா???.........ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா????"

"இல்ல...."

"பின்ன ஏங்க ஒருமாதிரி இருக்கிறீங்க? ஹைதிரபாத்க்கு போய்ட்டு நாலு நாள் கழிச்சு இன்னிக்கு காலையில வந்ததிலிருந்து நீங்க சரியாவே இல்ல, அத்தை முன்னாடி வைச்சு கேட்க வேணாம், ஆஃபீஸ் போய்ட்டு வந்ததும் கேட்டுக்கலாம்னு இருந்தேன்..........இப்போ சொல்லுடா கார்த்தி........என்னடா கண்ணா உனக்கு ஆச்சு?"

மற்றவர்களுக்கு முன்பும், மாமியாருக்கு முன்பும் மட்டும்தான் 'ஏங்க......வாங்க....போங்க' அப்படினு கார்த்திக்கு மரியாதை எல்லாம்,
தனிமை நேரத்தில் 'கார்த்தி' என பேர் சொல்ல்வதும்,
நெருக்கமான தருணத்தில் 'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும் நந்தினியின் பழக்கம்.கார்த்திக்கிடமிருந்து பதில் ஏதும் வராததால் கொஞ்சம் கோபமும் வந்தது நந்தினிக்கு இப்போது,

"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன்டா திருடா"

"ஒன்னுமில்லைன்னு சொல்றேன் இல்ல..........சீக்கிரம் தூங்கு, நாளிக்கு காலையில உன் கைனக்காலிஜிஸ்ட் கிட்ட போகனும்"

'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக் இன்று எந்த சலனமும் இல்லாததிருந்தது நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது!!

"போன வாரம் தானே நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போனோம்..........அடுத்த விசிட் க்கு இன்னும் இரண்டு வாரம் இருக்குதே , இப்போ எதுகுங்க டாக்டர் பார்க்கனும்??"

"பார்க்கனும்னா பார்க்கனும் அவ்ளோதான்............சும்மா தொண தொணக்காம தூங்கு"

கார்த்திக்கின் சுரீரென்ற பதிலில் தெரிந்த எரிச்சல் நந்தினிக்கு புதிய பயத்தை அளித்தாலும், ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சனை போலிருக்கு, நாமும் ஏதாவது கேள்வி கேட்டு கஷ்டபடுத்த வேண்டாம் என நினைத்தவளாய், தனக்குள் வளரும் சிசுவின் அசைவுகளின் ஸ்பரிசத்தில் லயித்தவளாய் , மறுபுறம் திரும்பி படுத்து உறங்கிப்போனாள்.


சிறிது நேரத்தில் நேராக திரும்பிப் படுத்த கார்த்திக், தன் தேவதை அருகில் உறங்கும் அழகை ஒரு கணம் ரசித்தவன்.........மனதின் இறுக்கம் அதிகமாக, மேலே விட்டத்தை வெறித்துப் பார்த்தான்.
மின் விசிறி சுழல........கார்த்திக்கின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.
பொறுப்புடன் படித்து முடித்து நல்ல ஒரு பதவியில் வேலையில் அமர்ந்து, உழைப்பால் முன்னேறி, கைநிறைய சம்பாதிக்கும் 27 வயது இளைஞனுக்கே உரிய மனநிறைவும், கர்வமும் கொடுக்கும் மிடுக்குடன் கலையான முகத்துடன், பெரும்பாலான பெண்கள் விரும்பும் உயரமும், handsome ஆன உடல் தோற்றமும், காந்த பார்வையும் என அத்தனை அம்சங்களுடன் இருக்கும் கார்த்திக்,

ஏனோ பெண்களிடம் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது கிடையாது.
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த தனக்கு தந்தையும் தாயுமாய் இருந்து வளர்த்த தன் அம்மாவிடம் தனக்குள்ள பாசத்தை பறித்து விடுவாளோ தன்னுடன் வாழ்வை பகிர்ந்துக்கொள்ளும் பெண் என்ற ஒருவித பயமே கார்த்திக்கை பெண்களிடமிருந்து தன்னை தனிமைபடுத்திக்கொள்ள செய்தது.

அதனாலேயே தன்னுடன் வேலை செய்யும் பெண்களிடம் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட அதிகம் பேசாமல் தனக்கென ஒரு வேலியமைத்துக் கட்டுப்பாட்டுடன் இருந்தான் கார்த்திக்.
இதனால் அவன் வேலை செய்யும் அந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் மத்தியில் ஒரு வெறுப்பும்,
சில சமயங்களில் கடுமையுடன் பதிலளிக்கும் இவன் தன்மை ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சமயத்தில் தான் நந்தினி இவனது குழுவில் ' trainee' ஆக சேர்ந்தாள்.

நந்தினி திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பெண். +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து , வீட்டிலும் மற்றும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் இருந்து வந்த எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியில் கணனிதுறையில் பட்டப்படிப்பு முடித்து, இறுதி ஆண்டு ' campus interview' வில், கூட்டத்தோடு கூட்டமாக கார்த்திக் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களில் ஒருத்தி.

இன்று கார்த்திக்கிடம் trainee ஆக பணியில் சேர்ந்திருந்தாள்.

நகர்புறத்து நவநாகரீக பெண்களின் நுனிநாக்கு ஆங்கிலமும்,
சிறிது அலட்டலும்,
சகஜமாக ஆண்களுடன் நட்புடனும் தைரியத்துடனும் பேசும்
பெண்களையே பார்த்து பழகியிருந்த கார்த்திக்கிற்கு......


மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்,
அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும்,
பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக தெரிந்தாள் நந்தினி!!!

தன் மனம் அவள்மேல் ஈர்க்கப்படுவதையும், அலைபாயுவதையும் தடுப்பதாக நினைத்துக்கொண்டு, தேவையின்றி அவளிடம் வேலை நேரங்களில் கடுகடுப்புடன் கடுமையாக நடந்துக்கொண்டான் கார்த்திக்.

வெளித்தோற்றத்தில் அமைதியான நந்தினி, வேலையில் புத்திசாலியும் சுட்டியுமாக இருந்தது இன்னும் வெகுவாக கார்த்திக்கை கவர்ந்தது.

Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள விருப்பத்தை நந்தினியிடம் கூறிவிட முடிவு செய்தான் கார்த்திக்,

தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........

[தொடரும்]

பகுதி - 2

பகுதி - 3

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6

June 19, 2008

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......

குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.
இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......

எப்படி நடந்து கொள்ளவேண்டும்??

பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.

*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

*உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

*சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

*ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.

*உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.

* உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
'நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்திலேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க!' என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.

* பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படுத்தித் தரும்!.

*தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்களுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.

* ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது 'நன்றி' என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.

*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில் , ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

*எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா , விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகெளரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.
அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதுவே நிலைக்கும்!!!

June 11, 2008

கண் பேசும் வார்த்தை புரிவதில்லை....

[படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக]

சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் தன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் கீதா.

கைப்பையைத் திறந்து புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு படிக்க வசதியாக அமர்ந்துக்கொண்டாள்.
அந்த 8 மணிநேர ரயில் போக்குவரத்திற்கு இப்போது அவளுக்குத் துணையாகியிருக்கிறது இந்த புத்தகம்.

எதிரில் ஜன்னலோரம் இருந்தவர் மீது சரிவாய்

ஒரு பார்வை..... பார்த்தாள் கீதா.


அட......பாரேன் அவரும் இவ்வளவு நேரமா என்னையே தான் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்..

ம்கூம்....'இந்த ஆம்பிளைகளே இப்படிதான்'என்று மனதில் திட்டி முதுகை மட்டும்பக்கவாட்டில் திருப்பி மீண்டும் கண்களை புத்தகத்தின் எழுத்துகளில் பதித்தாள்...

ஆனால்....மனதோ எதிரே இருந்தவர் மீது திசைதிரும்பியது.


ம்......இப்போது நைஸா பார்ப்போம்...அவர் எங்கே பார்க்கிறார் என்று என கீதாவின் மனது பேசிக்கொண்டது.

அடச்சீ.......இன்னும் என்ன இப்படி விழுங்குற மாதிரி...ஒரு பார்வை பார்க்கிறாரே,இந்த கூட்டத்தில இடம் மாறிக்கூட இருக்கமுடியாதே.....என தவித்தாள் கீதா.

மறுமுறை கீதா பார்த்தபோது,மெதுவாய் ஒரு புன்முறுவல்...எதிரே இருந்த அவனிடமிருந்து!

அந்த சிரிப்பில் குறும்பு கொப்பளித்ததை கீதா கவனிக்க தவறவில்லை.


கீதா மாதிரி அழகு பெண்ணை யார் தான் பார்க்காமல் போவார்கள்!!
பார்த்ததும் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொள்ளும் அப்படி ஒரு அழகு.. கீதா!!


இதில் இவன் இப்படி பார்ப்பதில் தப்பேயில்லை.

அவளை கண்களால் ஜாடை காட்டி "என்ன" என்றான்..

கண் ஜாடையில் அவன் அப்படி கேட்டதும், கோபத்தின் உச்சத்திற்கே போனாள் கீதா,அவளும் கண்களில் நெருப்பை கொட்டி எரித்துப்பார்த்தாள்.


இப்போது அவன் உதட்டில் மீண்டும் ஒரு வசீகரமான கேலி புன்னகை.

பெரிய 'புன்னகை மன்னனு' நினைப்புதான்' என மனதிற்குள் திட்டிதீர்த்தாள் கீதா.


அப்போது ரயில் ஏதோ ஒரு நிறுத்ததில் நிற்க..அவசரமாய் கீதாவின் அருகில் இருந்தவர் இறங்கினார்.. ...


அடடா '

அந்தக்குயிலின் பக்கத்தில் இடம் ஒன்று காலி..
என் மனமும் அதையே நாடி...

என அவன் மனம் பாடியது!!


"பக்கத்தில் வரட்டுமா" என்று...மீண்டும் கண்களில் கெஞ்சும் பார்வை வீசினான்.

ஐயோ! அடபாவி பார்வையாலே இப்படி கேட்கிறானே.........என்று....தன் கையிலிருந்த புத்தகத்தினால் தன் தலையில் அடித்துக்கொண்டாள்....கீதா!

அதன் பின் சில மணி நேரம் புத்தகத்திலேயே மூழ்கி போனாள் கீதா, அவனை கண்டுக்கொள்ளவுமில்லை.

மீண்டும் தீடிரென அவன் நினைவு வரவே,மெதுவாக எட்டிப்பார்ததாள்...ஆள் அசதியான தூக்கத்தில் இருந்தான்.

அப்பாடா.....நானும் நிம்மதியா தூங்கலாம், என நினைத்தவளாய் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிப்போனாள் கீதா..


தீடிரென் மக்களின் பேச்சுத் சத்தங்கள் காதை ஊடுறுவ..மெல்லக் கண்களை திறந்து பார்த்தாள்...


எங்கே இவர்...எதிரேயிலிருந்வரைக் காணவில்லையே...? எங்கே போயிருப்பார்....????


ம்.....ம்..ரெயில் நிறுத்தத்தில் நிற்பதால் ஏதும் வாங்கபோயிருப்பார் போலும்.. என நினைத்துக்கொண்டாள் கீதா.

மனது அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள்.

ம்..........வரவேயில்லை அவன்....விசல் சத்தத்துடன் ரெயில் புறப்பட்டது.

அவளின் மனதோ வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிச்சென்று வாசலின் பக்கத்தில் கைபிடியை பிடித்தபடி கீதா..

காற்றில் அவள் கூந்தல் கலைய ,
மனமோ தவிக்க....
அவரைத்தேடி கண்கள் வலை வீச....


எங்கும் தென்படவில்லை அவன்....

அழுதாள்..கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் .....!!


கீதாவின் பின்னால் ஒருவர்....."கண் தேடுதே .....செல்லமே உன்னைக் கண்தேடுதே" என்று பாடியபடி கட்டிப்பிடித்தார்.
"என்னங்க..நீங்க....இப்படி பண்ணிட்டீங்க......நீங்க மட்டும் இப்ப வரல்லைன்னா......நான் குதிச்சிருப்பேன்."
விசும்பலுடன் அவன் தோளில் சாய்ந்தாள் கீதா.


அடடா என் மனைவி கோபத்திலும் குழந்தை மாதிரித்தான்......என கீதாவின் உச்சி முகர்ந்தவன்,

"எவ்வளவு சமாதனப்படுத்தியும் கேட்காம, வீட்டில் போட்ட சண்டையால இவ்வளவு நேரம் மூஞ்சு தூக்கி வைச்சிட்டிருந்தா எப்படிடா செல்லம், கண்ணால எவ்வளவு கெஞ்சல் கோரிக்கை வைச்சேன், நீ தான் முறுக்கிக்கிட்டே இருந்த, அதான்.......என் செல்ல பொண்டாட்டிக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்"


"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆளை பாரு.....எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா, ஸாரிங்க......ரொம்ப கோபப்பட்டுடேன்,உங்க கிட்ட பேசாம மூஞ்சி தூக்கி வைச்சுக்கிட்டு.....கஷ்டபடுத்திட்டேன் உங்களை,........... ப்ளீஸ் மன்னிச்சிடுங்க" என கொஞ்சலுடன் கீதா சிணுங்க."எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" என்ற அவனது கரம் அவளை வளைத்துக்கொண்டது அவன் பிடிக்குள்!!.
கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !


குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !


உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !


உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !


எனைப்பார்க்கும் போது உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !


கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !


என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!


நம் ஆசைகளை நிறைவேற்றுவது
யார் கடமை !

ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்
உன்னிடம் என்பது தானே உண்மை !!

June 03, 2008

நாத்தனாருக்கு ....நமஸ்காரம்!!

தாரணி: என்னமா கண்ணு.......கல்யாணப் பொண்ணு, டல் அடிக்கிற, என்னா மேட்டரு??

ராஹினி: என்னமோ தெரில......பயமா இருக்கு கல்யாண வாழ்க்கையை நினைச்சா.

தாரணி:இந்த கவலை உன்னைக் கட்டிக்கப்போறவருக்கு வரவேண்டியது...........உனக்கு ஏன்??

ராஹினி: ஒய் என்ன கொழுப்பா, நானே நொந்து போய் இருக்கிறேன், சும்மா நீ வேற வெறுப்பேத்தாதே.

தாரணி: என்ன பயம்..........எதுக்கு பயம்.......யார் மேல பயம்......ஒவ்வொன்னா சொல்லு:)))

ராஹினி:எனக்கு..........அவரோட..........அக்கா, தங்கச்சிங்க எல்லாம் நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு.

தாரணி:அட.......மாமியார் பயம் எல்லாம் போய் இப்போ நாத்தனார் பயமா?

ராஹினி: அதான் மாமியார்க்கு எப்படி மஸ்கா போடனும்னு 'பதிவு' எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணிக்கிட்டோம்ல..........நாத்தனார் மேட்டருக்கு தான் என்ன பண்றதுன்னு தெரில...


தாரணி: டோண்ட் வொரி ....நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ. உன் நாத்தனார் உன் கணவரோட அக்காவா?? தங்கையா ன்றது பொறுத்து தான் நீ எப்படி சமாளிக்கனும்னு சொல்லித்தர முடியும்.

ராஹினி: நீ எல்லா ரக நாத்தனாருக்கும் சொல்லுமா தாயே.........நான் நோட் பண்ணிக்கிறேன்.
தாரணி: ஒகே ஃபைன், முதல் ரகம்.........வீட்டுக்காரரோட அக்கா...............அதுவும் வயது அதிக வித்தியாசம் உள்ள பெரிய அக்கா, இவங்க ஒரு இரண்டாவது மாமியார்னே சொல்லலாம். இவங்களுக்கு தன் தம்பி தனக்கும் ஒரு குழந்தை மாதிரி அப்படின்ற நினைப்புலயே இருப்பாங்க.
தன் தம்பிக்கு கல்யாணம் ஆனாலும் தன் உரிமை + ஆதிக்கத்தை அவ்வளவு ஈஸியா விட்டுத் தரமாட்டாங்க, உன் மாமியார் குடும்பத்துலயும் அவங்களுக்குன்னு ஒரு தனி மரியாதை வேற இருக்கும்.
ஸோ மெது மெதுவா தான் அவங்களோட பாசப்பிடியிலிருந்து உன் வீட்டுக்காரரை உன் பக்கம் திருப்ப முடியும்.

ராஹினி: என்னடி இப்படி பயமுறுத்துற.........


தாரணி: அட அதெல்லாம் சமாளிச்சிடலாம் இவங்களை, கவலைப்படாதே,
தன் தம்பிக்கு எப்போ பொண்ணு பார்க்கனும், எந்த ஊர்ல பொண்ணு பார்க்கனும், எப்படி பட்ட பொண்ணு பார்க்கனும் அப்படின்ற எல்லா விஷயமும் இவங்க எடுத்த முடிவாதான் பெரும்பாலும் இருக்கும்.
ஸோ இவங்களை ரொம்ப ரொம்ப பதமா பக்குவமா டீல் பண்ணனும்.
அப்போ அப்போ இவங்ககிட்ட ஆலோசனை, அறிவுரை எல்லாம் கேட்டு ஆக்ட் விடு, அவங்களுக்கு நீ கொடுக்கிற முக்கியத்துவம் தான் அவங்களை உன்கிட்ட மோதாம இருக்க வைக்கும், புரிஞ்சதோ???

ராஹினி: ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு............சரி அடுத்த வகை நாத்தனார் பத்தி சொல்லு.

தாரணி: ஒகே அடுத்த ரகம்.......கணவரைவிட ஒரு இரண்டு அல்லது மூன்று வயது பெரிய அக்காவா இருந்தா..........இவங்க உன் திருமணத்திற்கு கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் தன் தம்பிகூட ' அடி பிடி' சண்டை போட்டு ரொம்ப க்ளோஸ் ஆன சகோதரி + சினேகிதியா இருந்திருப்பாங்க.
இவங்க கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு மருமகளா போயிருந்தாலும் தன் பிறந்த வீட்ல இன்னும் ரொம்ப அதிகாரம் பண்ணிட்டு திரிவாங்க, ஸோ..........கொஞ்சம் ஆரம்பத்திலேயே நீ ஒழுங்கா கவனிச்சுக்கிட்டா ஈஸியா சமாளிச்சுடலாம்.
இவங்க கிட்ட ஃப்ரண்ட்லியாவும் எளிதில் நெருங்க முடியாது, டக்னு கட் பண்ணியும் விட முடியாது, நைஸ் நைஸாதான் இவங்ககிட்ட பிரச்சனைவராம பார்த்துகனும்.


ராஹினி: அப்போ........இந்த கொஞ்ச வயசு வித்தியாசித்தில இருக்கிற நாத்தனார் தான் ரொம்ப டேஞ்சரா???

தாரணி: இரு இரு.........இதைவிட டேஞ்சர் பார்ட்டி இருக்கு, இது உன் வீட்டுக்காரரோட தங்கை.......இதுலயும் இரண்டை வகை தங்கச்சி ரகம் இருக்கு,
1.கல்யாணம் ஆன தங்கை
2.கல்யாணமாகத வீட்டில் இருக்கும் கல்லூரி/பள்ளி யில் படிக்கும் தங்கை.
இந்த கேடகரி நாத்தனார் ஓரளவுக்கு உன் வயதை ஒத்த பெண்ணா இருப்பாங்க. நிறைய ஈகோ மோதல் வரும்.
அண்ணனின் செல்லம் , பாசம் எல்லாம் மொத்தமா கிடைச்சிட்டிருந்த இந்த தங்கச்சிக்கு அவ்வளவு ஈஸில எல்லாத்தையும் விட்டுதர முடியாது.
அதுவும் கல்யாண ஆகின தங்கைனா கொஞ்சம் ஒகே, எப்பவாச்சும் தான் நீ அவங்களை மீட் பண்ணுவே, ஆனா உன் மாமியார் வீட்டுலயே இருக்கிற தங்கச்சி நாத்தனார்ஸ் தான் கொஞ்சம் கஷ்டம் சமாளிக்க.ராஹினி: ஹேய்.........எப்படி சமாளிக்கிறதுன்னும் சொல்லிடு ப்ளீஸ்:))
தாரணி: தன் அம்மாகிட்ட.........அதான் உன் மாமியார்கிட்ட போட்டு கொடுத்து மாட்டி விடுறதெல்லாம் இந்த ரக நாத்தனார்ஸ் தான் , நேர்ல மோதினா குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு இருக்கும்னு இப்படி அட்டாக் பண்ணுவாங்க.
இந்த அட்டாக் உன் வீட்டுக்காரர் வரைக்கும் கூட வரும், ஸோ இந்த ' பாச மலர்' அட்டாச்மெண்ட் ல நீ ரொம்ப உஷாரா இருக்கனும்.
தங்கச்சி நாத்தனார்கிட்ட நேசக்கரம், நட்பு கரம் நீட்டுறதுதான் நல்லது.
நீ உன் மருமகள் கெத்தைவிட்டு ரொம்ப இறங்கி வர முடியலினாலும், ஒரளவுக்கு ஒரு புரிதல் அந்த தங்கச்சி பொண்ணுகிட்ட வைச்சுக்கிறது சிறந்தது.
அவங்க ரசனை, பழக்க வழக்கம் எல்லாம் கணவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு அந்த நாத்தனார் ரூட்லயே போய் கைக்குள்ள போட்டு வைச்சுக்கனும்.


'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.


ராஹினி: ஹே............ஒரு நிமிஷம் இரு............இதே டயலாக்கை நீ மார்தட்டி நான் கேட்டிருக்கிறேனே.........அப்போ உன் அண்ணி உன்கிட்ட பயன்படுத்தின டெக்னிக்கைதான் என்கிட்ட க்ளாஸ் எடுக்கிறியா நீ???

தாரணி: அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும், அதைவிட்டுட்டு......இப்படி எல்லாம் பப்ளிக்கா கேட்கபிடாது, சொல்லிட்டேன்!!!!