November 23, 2008

உயிரே!....உறவாக வா??? - 3

உயிரே!....உறவாக வா??? - 1


உயிரே!....உறவாக வா??? - 2


கண்ணீர் மல்க ஆம்புலன்ஸில் பானுமதியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்ற இளமாறன், பானு கண் விழித்ததும் அருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் சொல்வத்ற்குள் பானு மீண்டும் மயக்கமானாள்.

விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சேர்ந்தபோது அங்கு டாக்டரின் முடிவு அதிர்ச்சியளித்தது.

ஆழமாக வெட்டப்பட்டிருந்த பானுவின் வலது கரம் முழங்கைக்கு கீழாக முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதுடன், உடனடியாக பானு ஆபிரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.

சொந்த ஊருக்கு சென்றிருந்த தன் பெற்றோருக்கு ஃபோன் மூலம் தகவல் கூறினான் ரமேஷ்.

ஆபிரேஷன் தியேட்டருக்கு வெளியில் கனமான மனதுடன் நண்பர்கள் இருவரும் நிற்கையில் , இளா ரமேஷிடம்....

" ரமேஷ்........நானும்.....பானுவும்....."

எனக்கு எல்லாம் புரிந்தது என்பதுபோல் கண்களால் பதிலளித்து விட்டு, இளாவின் தோளில் தோழமையுடன் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.

மயக்கம் தெளிந்து கண் விழித்த பானுவிற்கு , தன் தாயாரின் விசும்பல் மிக அருகில் கேட்டது.

"பொம்பள புள்ள இப்படி கதை எழுதாட்டி என்ன......இப்ப கையை ஒடைச்சுட்டு போய்ட்டானே படுபாவி.......இனிமே இவளை வைச்சுட்டு......."

அம்மாவின் புலம்பல் கேட்டதும் தன் வலது கரத்தை தேடினாள் பானு..........அழுகை பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு.

தன் வலது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதை காண பொறுக்காமல் தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் தலையை ஆதரவாக ஒரு கரம் தடவியது.
கண்திறந்து பார்த்தாள் பானு.......ஊமையாய் தனக்குள்ளே அழுதபடி பாசமுள்ள அப்பா!!!

"அ....ப்......பா" என்ற பானுவின் குரல் உடைந்து போயிருந்தது.

அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....

சட்டென்று அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்து வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...

தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!

பானுவை தான் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து தன் பெற்றோரை வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கேன்டினிற்கு உணவருந்த அனுப்பி வைத்தான் ரமேஷ்.

அவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும், ரமேஷ் பானுவின் அருகில் குனிந்து.......

"இளா வெளியில வெயிட் பண்றான்........உள்ளே அனுப்புறேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்

"அண்ணா.........!"

"எனக்கு எல்லாம் தெரியும்மா......." கண் சிமிட்டினான் ரமேஷ்.

அவன் வெளியேற கதவின் அருகில் செல்ல, பானு.....

"அண்ணா......"

"என்னமா?.......?"

"அவரை......நான் பார்க்க விரும்பலண்ணா"

"என்ன.......என்னடா சொல்ற?????"

"ஆமாம்ணா.......அவரை இனிமே என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடு"

"உணர்ச்சிவசப்படாதே பானுமா........அவன் உன்மேல...."

"தெரியும்ணா.......அதுனாலத்தான் சொல்றேன்.....ஒரு கை இல்லாத இந்த பானு அவருக்கு வேணாம்ணா.....போகச்சொல்லிடுண்ணா......"
விசும்பலுடன் வார்த்தைகள் வெளிவந்தன பானுவிடமிருந்து.

ரமேஷ் தன் கைகளினால் அறையின் கதவை சிறிது திறந்தபடி பானுவிடம் பேசிக்கொண்டிருந்ததால் , அறையின் வெளியில் இருந்த இளா, பானு தன் அண்ணனிடம் கூறியது அனைத்தையும் கேட்டான்.

விழியோரம் துளிர்த்த கண்ணீரை தன் விரலால் சுண்டி விட்டபடி அவ்விடம் விட்டு அவன் நகர......ரமேஷ் அவனை நிறுத்தினான்.


"மனதளவில் உடைந்து, குழம்பி போயிருக்கிற இந்நேரத்தில் பானுவிடம் எது பேசினாலும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்த போறதில்லை, மாறாக அவளது இறுக்கம் தான் அதிகரிக்கும்.........சுயபட்சாதபத்தில் இருந்து அவள் வெளிவற சிலகாலம் ஆகும் இப்போ அவளுக்கு தேவை மன அமைதி , எவ்வளவு நாள் ஆனாலும் அவளுக்காக நான் காத்திட்டிருப்பேன் ரமேஷ்." நா தழுதழுத்தது இளாவிற்கு.





நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
உன்பக்கமிருந்து உன்னை
வேதனை படுத்துவதை விட
உன்னை பிரிந்து நான் வேதனையடைந்தாலும்
பரவாயில்லை என்று உன்னை
சிறிது பிரிகிறேன் கண்ணே…

என் செல்லமே..
கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்...

போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!



பானுவின் உடல்நிலை தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பாணுமதி ....கெட்டிகாரப் பெண், கோபமும் அன்பும் சற்றென்று வரும்.
'அவளது பெயருக்கு தகுந்தபடி.........
பாணு என்றால் சூரியன், சூரியனைப் போலக் கோபச் சூடு;
மதி என்றால் நிலவு, நிலவைப்போல குளிர்ச்சியான அன்பு;

ஆனால் இன்றோ......யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தாள்.
கண்களில் எப்போதும் ஒருவித மிரட்சி.

தன் அறையின் பால்கனியில் அமர்ந்து நீல வானத்தையே பார்த்துக்கொண்டு இருந்தாள் பானு. நட்சத்திரங்களின் சிமிட்டலையோ, நிலவின் ஒளி வீச்சையோ இப்போது அவளால் ரசிக்க முடியவில்லை. அவளது பீரிட்ட சோகம் அவள் கண்களில் நீரை பொழிந்தது.
இளாவின் நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது.....

இளாவை சந்தித்த நாட்களும், காதலை வெளிப்படுத்திய வேளையும் பானுவிற்கு கண்முன் காட்சியாய் விரிந்தது.......!!!

பானு தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை கிடைத்து அண்ணாவுடனே தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அவளது பெற்றோரும் சென்னைக்கே குடிபெயர்ந்தனர்.

தன் அண்ணாவின் நண்பனாக இளா பானுமதிக்கு அறிமுகம் ஆனான். அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கவிதை என்று எந்த தலைப்பில் பேசினாலும், ஈடு கொடுத்து சுவாரஸ்யமாக பேசும் பானுவின் பேச்சு, அவள் முகத்துல் இருந்த ஒரு விதமானக் குழந்தைத்தனம்...என அனைத்தும் இளாவை கொள்ளையிட்டது.

ஒரு நாள் மாலையில், இளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கையில், இளா பானுவிடம்......




"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"

"இருக்கு......ஆட்டோல நான் வீட்டுக்கு வந்து இறங்கினப்போ, ஆட்டோக்காரருக்கு கொடுக்க சில்லறை இல்லாம தேடிட்டு இருந்தேன் , அப்போ என் அண்ணாவை பார்க்க வீட்டுக்கு வந்த நீங்க சில்லறை கொடுத்தீங்க............... அதை நான் இன்னும் திருப்பிக் கொடுக்கவே இல்லை.......ஹி ஹி ஹி"

"ஹும். ....!"

"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஓடிட்டுச்ச இல்ல??"

"உனக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?"

"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கீங்க?"

"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ஃப்யூஷன்லே இருக்கேன்!"

"என்ன கன்ஃப்யூஷன்"

"எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"

"உன்கிட்டே தான்"

"என்கிட்டவா??........சரி சொல்லுங்க"

"சொன்னா நீ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியா?"

"பரவாயில்லை. சொல்லுங்க.........நான், தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"

"ப்ராமிஸ்........."

"காட் ப்ராமிஸ்"

"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"

" ............................."

"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"

" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"



"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"

தனது பேச்சு.... அவளுக்கு கோபத்தை வரவழைக்கிறது என்பதை அவளது முகசிவப்பும்.. மூக்கு விடைப்பும்.. இதழின் நடுக்கமும், வேக மூச்சில் ஏறி இறங்கிய நெஞ்சும் உணர்த்தியதும்,

"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"

" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"

"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??"என்றபடி........


கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!

அந்த முதல் முத்தத்தை இப்போது நினைக்கையிலும் உடல் சிலிர்த்தது பானுவிற்கு!


என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது!



துணிச்சலுடன் திகில் தொடர் எழுதிய 'மதிமாறன்' அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்தார்.

இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. இளமாறன் தான் இதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டான் என்பதை பின்னொரு நாளில் அவளது அம்மா சொல்ல அறிந்துக்கொண்டாள் பானு.

நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........

[தொடரும்]


உயிரே!......உறவாக வா??? - 4

November 17, 2008

உயிரே!......உறவாக வா??? - 2

உயிரே!......உறவாக வா??? - 1

"யார் ......நீங்க" என்று பானு கேட்கவும்,

அவ்வுருவம் இன்னும் ஒரு அடி எடுத்து வைத்து அவளை நெருங்கியது.

"நீ...ங்க.........யாரு?.....உங்களுக்கு என்ன வேணும்?" என்று கேட்டபடி அவ்விருட்டில் அவனது முகம் தேடினாள் பானு.

" எழுத்தாளர் மதிமாறன்.....இருக்காரா? .....நான் அவரைப் பார்க்கனும்" என்றான் கணீர் என்ற குரலில்.


அதற்குள் எழுத்தாளர் மதிமாறன் அட்ரஸ் இந்தாளுக்கு எப்படி கிடைச்சது? என்று வியந்தவளாய்....

"என்ன.......விஷயமா அவரைப் பார்க்கனும்?"

" இது அவரு வீடுதானே.......நான் அவரோட ரசிகன், அவரை பார்க்கனும்" மீண்டும் கரகரப்புடன் குரல் தெரித்தது அவனிடமிருந்து.

"அது.....நான் தான்" என்றாள் பானு அடிக்குரலில்.

"நீ..........நீயா???????'

"ஆமாம்"

"எழுத்தாளர் மதிமாறன் ஒரு பொம்பளையா?????" அவனது குரலில் தெரிந்த இளக்காரம் அவளை சுதாரிக்கச் செய்தது.


"எதுவானாலும்.......காலையில் வந்து என்னை பாருங்க சார்" என்றவளாய் வாசல் கதவை மூட எத்தனிக்க, அவனது வலுமையான கரம் கதவை முட்டி திறந்துக் கொண்டு அவன் வீட்டிற்குள் வந்தான்.

"ஹலோ......எதுவானாலும் காலையில் வாங்கன்னு சொன்னேன்ல.........முதல்ல வெளியில போங்க சார்" என்றாள் ஆக்ரோஷமாக.

" அட நிறுத்துடி.......மதிமாறன்ற பேர்ல விறுவிறுப்பா என்னைய வைச்சு தொடர்கதை எழுதினது ஒரு பொட்டச்சிங்கிற அதிர்ச்சியே எனக்கு இன்னும் போகல........அதுக்குள்ள என்னமோ பெருசா கத்துற?.......இன்னும் உன்கிட்ட தீர்த்துக்க வேண்டிய கணக்கு எவ்வளவோ இருக்கு....உன் நாவலை பப்ளீஷ் பண்ணின பப்ளீஷரை மிரட்டி உன் அட்ரஸ் வாங்கினப்போ கூட அவன் நீ ஒரு பொம்பளை ....அதுவும் கொஞ்ச வயசு பொண்ணுன்னு சொல்லாம மறைச்சுட்டானே?"

கோபக்கணைகளுடன் அவனிடமிருந்து ஒருமையில் வார்த்தைகள் வந்து விழுந்தன.

'அடப்பாவமே!!! அண்ணனோட கேஸ் ஹிஸ்ட்ரி ஃபைலில் இருந்து தகவல் எடுத்து, கற்பனை கலந்து நான் எழுதிய தொடர்கதையின் வில்லனா இவன்??????
அப்போ..........அப்போ.......இவன் தான் போலீஸ் தீவிரமா தேடிட்டு இருக்கிற கஜேந்திரனா??
'

'இப்போ இவனிடமிருந்து எப்படி தப்பிக்கிறது?', என்று யோசித்தவளாய், தன் குரலை தாழ்த்தி.........

"நீங்க .......என்ன சொல்றீங்கன்னு எனக்கு புரியல....." என்றாள் பவ்யமாக.

'மனசுக்குள் , "கடவுளே, கடவுளே!! என் அண்ணா இப்போ டியூட்டி முடிஞ்சு போலீஸ் ஸ்டேஷனிலிருந்து வீட்டுக்கு வந்திடனும்' என்று படபடப்புடன் வேண்டிக்கொண்டாள் பானு.

அவளது பவ்யமான பேச்செல்லாம் அவனிடம் எடுபடுவதாக தெரியவில்லை........மாறாக.....

"உனக்கு புரியாதுடி......புரியாது.......புரியாமத்தான என்னைய பத்தி உன் தொடர் கதைல புட்டு புட்டு வைச்சு என் கூட்டாளிங்க எல்லாரையும் போலீஸ் கண்டுபிடிக்க துப்பு கொடுத்த நீ"

"அச்சோ........அது முழுக்க முழுக்க என் கற்பனை கதை சார்........நம்புங்க"

" கற்பனைன்னு என்கிட்டவே புளுகிறியா??.........சொல்லுடி எப்படி என்னை பத்தின விபரங்கள் எல்லாம் உனக்குத் தெரியும்?..........ம்ம் சொல்லுடி....." என்று அவளை நெருங்கி வந்து அவளது கழுத்தில் கை வைத்து அழுத்தினான்.

"ப்ளீஸ்..........ப்.....ளீஸ்.........என்னை.....ஒன்னும் பண்ணிடாதீங்க......."

"அடச்சீ........நீ நினைக்கிற மாதிரி எதுவும் உன்னை பண்ணமாட்டேன்.....மதிமாறன் ஒரு பொட்டச்சின்னு தெரியாமலே .......அந்தாளுக்கு என்ன தண்டனை கொடுக்கனும்னு வந்தேனோ.......அதேதான் உனக்கும்"

அது என்ன தண்டனை என்று அவள் சிந்தித்த அதே நொடியில்..........அவளது கரத்தை அழுத்தியிருந்த அவனது வலது கரம் பிடி தளர்ந்து, அவனது சட்டையின் பின்னாலிருந்து ஒரு நீண்ட கத்தியை உருவியது.
மெழுகுவர்த்தியின் ஒளியில் கத்தி மின்னியது,
பானுமதியின் கண்கள் அதிர்ச்சியில் உறைந்தது,
அடுத்த கணம்.........அவளது வலது கரத்தை அழுத்தி பிடித்த அவன்,

" இந்தக் கை தானே என்னை பற்றி தொடர் கதை எழுதி போலீஸ்க்கு என்னை வெளிச்சம் போட்டு காண்பிச்சது.........இனிமே.........இந்த கை கதையே எழுத கூடாது......"

மறுவிநாடி, அந்த கத்தி பானுவின் வலது கையினை ரத்தம் தெறிக்க வெட்டியது!!!!!!

பீறிட்ட ரத்தமும், வலியும்.........எதிர்பாரா தாக்குதலும் பானுமதியை நிலை கொலையச் செய்ய,
"அம்ம்ம்மா........." என்ற அலறலுடன் மயங்கி கிழே சரிந்தாள்.

' வந்த காரியம் முடிந்தது, மின் இணைப்பு மீண்டும் வரும்முன், அங்கிருந்து உடனே வெளியேற வேண்டும் ' என்ற பரபரப்புடன் வெளியேறிய கஜேந்திரன், மாடிபடிகளில் வேகமாக திரும்புகையில் எதிரில் மாடிபடி ஏறிவந்த பானுவின் அண்ணன் இன்ஸ்பெக்டர் ரமேஷ் மீது எதிர்பாராவிதமாக மோதிவிட,

தங்கையின் "அம்மா' என்ற அலறலை ஜீப்பிலிருந்து வீட்டின் முன் இறங்கும்போது கேட்டதினால், இருட்டில் ஏதாவது பூச்சு பார்த்து பயந்திருப்பாள் பானு என்று கலக்கத்துடன் மாடிபடிகளில் ஏறிய ரமேஷ், தன் மீது மோதிய உருவம் யார் என்று கூர்ந்து கவனிக்க,
அந்நேரம் வீட்டின் முன் வந்து நின்ற இளமாறனின் கார் வெளிச்சத்தில் அவ்வுருவத்தின் முகம் தெளிவாக தெரிந்தது, ரமேஷிற்கு.

நொடியில் போலீஸ் மூளை சுதாரித்தது, தன் மீது மோதியவன் யாரென்று அடையாளம் கண்டுகொண்டவன், கஜேந்திரன் மீது சட்டென்று பாய்ந்து அவனை பிடிக்க ரமேஷ் எத்தனிக்க,
வெளிச்சத்தில், ரமேஷின் காக்கிச்சட்டையை கண்ட கஜேந்திரன், மாடிபடிகளிலிருந்து தாவி கீழே குதிக்க முயற்சித்தான்,
அதே கணம் ரமேஷ் அவன் மீது பாய்ந்து அவனை அமுக்க,
மின் இணைப்பு அந்நேரம் உயிர் பெற்றது.

தன் பிடியிருலிருந்து தப்பி ஓட முயன்ற கஜேந்திரனின் முழங்காலை குறிப்பார்த்து தன் கைத்துப்பாக்கியினால் ரமேஷ் சுட்டுவிட, கஜேந்திரன் சுருண்டு விழுந்தான். கீழே விழுந்தவனை இருகப்பற்றி, தன் கரங்களை முறுக்கி ரமேஷ் விட்ட குத்தில், கஜேந்திரன் நிலைகொலைந்தான்.

பானுமதி தனக்கு அன்பளிப்பாக கொடுத்த 'மதிமாறனின்' முதல் நாவலை பார்க்கும் ஆவலில், அவளை அவளது வீட்டில் இறக்கிவிட்டு விட்டு தன் வீட்டிற்கு போகும் வழியில் தன் காரை ஒரமாக நிறுத்தி , அன்பளிப்பை பார்த்த இளமாறனுக்கு, அன்பளிப்பிற்குள் இன்ப அதிர்ச்சியாக........

தன் பெயரான இளமாறனில் உள்ள 'மாறனை'யும் அவளது பெயரில் உள்ள 'மதி'யையும் இணைத்து மதிமாறன் என்ற புனைப்பெயரில் தொடர் கதை எழுதியதும், இப்போது நாவல் எழுதியதும் , தன் அன்பு காதலி பானுமதி தான் என்றும் அறிந்து மட்டில்லா மகிழ்ச்சி அடைந்த இளமாறன்,

உடனே த்ன் காரை திருப்பிக்கொண்டு பானுமதியின் வீட்டிற்கு வந்திருந்தான்.......

வந்த இடத்தில் அவன் கண்முன், ரமேஷ் ஒருவனை துப்பாக்கியால் சுடுவதும்........உடனே தன் டிபார்ட்மெண்டுக்கு ஃபோன் செய்ததையும், அதிர்ச்சியுடன் கண்கொட்டாமல் பார்த்தபடி நின்றான் இளமாறன்.

சில நிமிடங்களுக்கு முன் 'அம்மா' என்று அலறிய தஙகையின் நினைவும், மாடியிலுள்ள தன் வீட்டிலிருந்து கஜேந்திரன் இறங்கி வந்ததும் ரமேஷிற்கு பளிச்சிட........தன் நண்பன் இளமாறன் கையில் ஒரு புத்தகத்துடன் இந்நேரத்தில் வீட்டிற்கு எதற்கு வந்திருக்கிறான் என்றெல்லாம் யோசிக்க அவகாசமில்லாமல்,

"பானு.....பானு" என்று அலறியபடி ரமேஷ் மாடிபடிகளில் வேகமாக ஏறினான்.
இளமாறனும் அவனை பின் தொடர்ந்தான்.

வீட்டினுள் நுழைந்த இருவரும், அதிர்ச்சியில் உறைந்தனர்........

"பானு......பானுமா...........என் செல்லமே" என்ற கதறலுடன் ரத்த வெள்ளத்தில் மயங்கி கிடந்த பானுவை தன் மடிமீது போட்டு இளமாறன் அழுகையுடன் அரற்றினான்.

சீண்டிப்பார்ப்பதில்
குழந்தையாய் விளையாடி
கள்ளமற்ற சிரிப்பில்
உள்ளம் களவாடி
என்னுள் பூத்திருந்த செல்லமே
நான் விரும்பும் கதா
நீதானென அறிந்தகணம்
அள்ளிக்கொஞ்சிட
ஓடிவந்தேன்
உன்னை இப்படிக்காணவா

தேடிவந்தேன்...


திகைப்பிலிருந்தாலும், உடனே ஆம்புலன்ஸ்க்கு ஃபோன் செய்த ரமேஷின் கடைக்கண் பார்வையில்......

தன் நண்பன் இளா..........தன் தங்கை பானுமதியின் வெட்டப்பட்ட கைகளை பார்த்து கதறுவதை கவனித்தான்.

அவர்களுக்கு நடுவில் கலந்தோடும் ஆழமான காதல் ரமேஷிற்கு திட்டமாக புரிந்தது!!

இரண்டே நிமிடத்தில் ரமேஷை வீட்டில் இறக்கிவிட்டு சென்றிருந்த போலீஸ் ஜீப் வீட்டின் முன் வந்து நிற்க, கான்ஸ்டபிள் இருவர் கஜேந்திரனை ஜீப்பில் ஏற்றினார்கள்.

சிறிது நேரத்தில் ஆம்புலன்ஸ் வந்துவிட, பானுமதியை ஆஸ்பத்திரிக்கு அதில் கொண்டு சென்றனர்.

கண்களில் நீர் மல்க இளமாறன் பானுமதியின் படுக்கைக்கு அருகில் ஆம்புலன்ஸில் அமர்ந்தபடி செல்கையில்...........மயக்கத்திலிருந்த பானு கண்திறந்து ......அவனிடம் ஏதோ சொல்ல முனைந்தாள்.......அப்போது....

[தொடரும்]

உயிரெ!.....உறவாக வா?? - 3

உயிரே!....உறவாக வா?? - 4

November 10, 2008

உயிரே!......உறவாக வா??? - 1

'ஆறு மணிக்கு புக் ஃபேர் போகனும், சீக்கிரம் காஃபி ஷாப் வந்திடு, அங்கிருந்து இரண்டு பேரும் சேர்ந்து புக் ஃபேர் போலாம்' என்று தன் காதல் தேவதை பானுவிற்க்கு ஃபோனில் கட்டளையிட்டுவிட்டு அவளுக்காக காஃபி ஷாப்பில் காத்திருந்தான் இளா.

அவள் வர தாமதிக்கும் ஒவ்வொரு நிமிடமும், பொறுமையிழந்தவனாய் தனது பற்களுக்கும் நகத்திற்கும் போர் தொடுத்தான்.

"ஹாய்" என்று கையசைத்துக் கொண்டே அவள் வர...........தூரத்தில் அவள் வருவதைப்
பார்த்த நொடியே அவனது கோபப்புயல் வலுவிழந்து கரையைக் கடந்தது.



அவனது தேவதை அவனை நெருங்கினாள்....!!!

என்ன அபாரமான அழகு! புதிதாய் பூத்த ரோஜாவைப்போல!!
தலையை பின்னுக்கு தள்ளி அவள் சிரித்தபோது..
அவனுக்குள் பூகம்பங்கள் வெடித்தன;
பெரிய கட்டான கண்கள்,
சற்றே அண்ணாந்த அழகமைப்பான நாசி,
கதகதப்பான உதடுகள்........!!

"ஸாரிங்க.......கொஞ்சம் லேட்டாயிடுச்சு........ஒரே டிராஃபிக்.........ரொம்ப ஸாரி"

"........."

"ம்ம்.........கோபமா???" கெஞ்சலுடன் அவள் அவனது முகத்தருகே குனிந்து காதில் சினுங்க,

காஃபி ஷாப் பொது இடம் என்பதையும் மறந்து, அவளது கன்னத்தில் 'இச்' சென்று முத்தம் பதித்தான்.

உன்னை பார்த்த களைப்பில்
ஒய்வெடுக்க விரும்புகிறது கண்கள்
உழைக்க விரும்புகிறது உதடுகள்..

முத்தத்தை முடித்து வைக்க
பிரம்மன் வைத்தான்
உன் உதட்டில்
ஒரு மச்சம்!!


எதிர்பாரா முத்தத்தில் அவளது மூக்கு நுனி, காது மடல் எல்லாம் சிவந்தது.

செல்ல சிணுங்களுடன் அவனுக்கு எதிரில் இருந்த இருக்கையில் அமர்ந்தாள்.


ஆறடிக்கு குறையாத உயரமும் அதற்கேற்ற கட்டான உடலும் முகத்தில் படிப்பின் தீட்சண்யமும்.. அலை அலையாய் படர்ந்த கேசமும்.. அளவான மீசையுமாய் … .. கூரிய கண்களுடன் உதட்டில் வளைந்த சிரிப்புடன் தன்னை பார்த்தவனை ஒரு கணம் நன்றாக உற்று பார்த்தாள் பானு.
தன் அண்ணனின் நண்பன், தன் வருங்கால கணவன் இளாவின் குறும்பு பார்வையை அதற்கு மேல் சந்திக்க இயலாதவளாய் பார்வையை தாழ்த்திக்கொண்டாள்.

அவளது வெட்கி சிவந்த முகத்தைப் பார்த்தபோது, அவனது காத்திருப்பின் அவஸ்தை காணாமலேயே போனது!!

நீ தாமதமாய் வந்தால் கூட
என்னால் கோபப்பட முடியவில்லை...
திட்டுவதைபோல நடிக்கத்தான் முடிகிறது...
அப்போது தானே என்னை விதம்
விதமாக கொஞ்சி சமாதனப்படுத்துவாய்...


சிறிது நேர மெளனமான இம்சைக்குப் பின், அவளே பேச்சை ஆரம்பித்தாள். அன்றைய நாள் இருவருக்கும் எப்படி சென்றது என்று பேசி இயல்பு நிலைக்கு வந்து, காஃபி அருந்திய பின்பு , புக்ஃபேர் போகலாம் என அவசரப்படுத்தினான்.

"டைம் ஆச்சு ....ஆல்ரெடி நீ வந்தது லேட்.....வா புக்ஃபேர் போலாம்"

"கண்டிப்பா போய்தான் ஆகனுமா??.............டயர்டா இருக்குது..........இன்னொருநாள் போலாமே......ப்ளீஸ்"

"என்ன விளையாடுறியா????..........புக் ஃபேர் ஒப்பன் பண்ணின இன்னிக்கே ஏன் நான் போக ஆசைப்படுறேன்னு ஃபோன்ல சொன்னதை மறந்துட்டியா??"

"ஆங்........மறக்கல,மறக்கல...........அந்த எழுத்தாளர் மதிமாறனோட முதல் நாவல் இந்த புக்ஃபேர்ல பப்ளிஷ் ஆகுது.........அதுக்காகத்தானே?"

"தெரிதில்ல.......அப்புறம் என்ன........சரி வா போகலாம்"
என்று கூறிக்கொண்டே தன் இருக்கையிலிருந்து எழுந்திருக்க முற்பட்டான்.

"நாளைக்கு போனா அந்த நாவல் கிடைக்காதா??.......இன்னும் 3 நாள் புக் ஃபேர் இருக்குதே.......ஸோ நாளைக்கு போகலாம் ..ப்ளீஸ்"

" என்னை டென்ஷன் ஆக்காதே சொல்லிட்டேன்.........எனக்கு மதிமாறனோட எழுத்து எவ்வளவு பிடிக்கும்னு உனக்கு நல்லாவே தெரியும், உனக்கு எப்பவுமே அவரோட எழுத்துனா பிடிக்கிறதே இல்ல, அதான் இப்ப......வேணும்னே நாளைக்கு போலாம், அப்புறமா போலாம்னு வம்பு பண்றே"

"ஹே..........கூல் டவுண்பா.......அந்த ஆளு பெரிய எழுத்தாராம் , அவர் எழுத்து மேல இவருக்கு ஒரே கிரேஸாம்.............முதநாவல் பப்ளிஷ் பண்ணினதும் உடனே வாங்கிடனுமாம்........ரொம்பதான் குதிக்கிறாரு"

"மறுபடியும் என் கோபத்தை கிளறாதே.....இன்னொரு தடவை அவரோட எழுத்து பத்தி கிண்டலா பேசாதே, அவர் வாரபத்திரிக்கைல எழுதின தொடர்கதையை நீ படிச்சுப் பார்த்திருக்கனும், .........என்னா ஒரு த்ரில், திருப்பம்.......சான்ஸே இல்ல, பெரிய டிடக்டிவா இருக்க வேண்டியவரு அவரு தெரிஞ்சுக்கோ"

"ஆமா நானும் தான் படிச்சேன் அந்தாள் எழுதின தொடர் கதை,கொள்ளைக்கார கும்பலோட சூழ்ச்சி, தந்திரம், கொலை எல்லாம் வெளிப்படையா எழுதிருந்தார் வன்முறையோட.........அது உங்களுக்கு த்ரில்லா??? அந்த கொலைக்காரனோட சூட்சமம் எல்லாம் எப்படி அப்படியே நேர்ல பார்த்த மாதிரி எழுதுறார்........கற்பனை கதை மாதிரியே தோணல, இந்தாளே ஒரு கொள்ளைக் கூட்ட தலைவனா இருந்திருபபாராயிருக்கும்,அதான் இப்படி பரபரப்பு ஏற்படுத்துற மாதிரி தொடர்கதை எழுதுறார்"

" உனக்கு அவரோட எழுத்து பிடிக்கலைன்ன கம்முனு இரு .....இப்படி விமர்சனம் பண்ணாதே அவரோட எழுத்தை, எவ்வளவு பெரிய புத்திசாலியா இருக்கனும் அவரு இப்படி ஒரு விறுவிறுப்பான தொடரை எழுத..........நீ ஒரு மக்கு, டீவி சீரியல் பார்த்துட்டு , மூக்கு சீந்தி அழுகுற சாதாரன தமிழ் பொண்ணு, ஞானசூன்யம் நீ.........உனக்கெங்கே புரியும் இதெல்லாம்....."

"இப்ப எதுக்கு என்னை ஞானசூன்யம்னு சொல்றீங்க?? என்னை விட உங்களுக்கு அந்த மதிமாறன் பெருசா போய்ட்டாரா??"

கண்கசக்கினாள் பானு.......அவனுக்கு கஷ்டமாக போனது...கெஞ்சி கொஞ்சி சமாதனப்படுத்தினான்.

சமாதானமானவளாக....குறும்பு பார்வை பார்த்தாள் பானு!!


விளையாட்டுக்கு கூட
உன் மேல் கோபப்பட
விடுவதாயில்லை

உன் விளையாட்டுத்தனம்!



"நானும் சும்மாதான் சீண்டி பார்த்தேன் உங்களை.......எனக்கு மதிமாறனோட எழுத்தில் அதிக ஈடுபாடு இல்லினாலும் உங்களுக்கு பிடிக்கும்னு ...புக் ஃபேர் போய், அவரோட நாவல் வாங்கிட்டுத்தான் இங்கே வந்தேன்........அதான் நான் வர்ரதுக்கு லேட்"

என்று கிஃப்ட் ராப் செய்யப்பட்ட நாவலை அவனிடம் கண்சிமிட்டியபடியே கொடுத்தாள்.

ஆச்சரியத்தில் விழித்தான்...!!!

"தாங்க்ஸ்டா........செல்லம்" என கூவிக்கொண்டே அவளிடமிருந்து கிஃப்ட்டை வாங்கி ஆசையாக பிரிக்கப்போனான்.

" நோ.......நோ......." என்று கீச்சிட்டாள் அவள்.

அவன் பதறிப்போய் அவளை நோக்க...

"பொறுமை சார்.........இந்த கிஃப்ட்டை இப்போ பிரிக்க கூடாது நீங்க. உங்களுக்கு பிடிச்ச நாவல் மட்டும் இந்த கிஃப்ட் பேக்கில் இல்ல.........அதுகூடவே இன்னொரு கிஃப்ட்டும் நான் வைச்சிருக்கிறேன்.........ஸோ இரண்டு கிஃப்ட்டையும் நீங்க வீட்ல போய்தான் பார்க்கனும்"


" ப்ளீஸ்....ப்ளீஸ்டா கண்ணம்மா............இப்பவே..........ஓபன் பண்றேன்டா" என அவன் கெஞ்சி கூத்தாடியும் அவள் சம்மதிக்கவில்லை.

நாவலை பார்க்கும் ஆவலில் அவன் உடனே வீட்டிற்கு போகலாம் என துரிதப்படுத்தினான்.

இருவரும் அவனது காரில் சென்றனர்.

அவளது வீட்டின் முன் காரை நிறுத்தவும் அந்த பகுதியில் மின் இணைப்பு துண்டித்தது.

"என்னடா கரெண்ட் போய்டுச்சு......கீழ் போர்ஷனில் வீட்டு ஓனர்ஸும் இல்ல, உங்க அப்பா அம்மாவும் ஊருக்குப் போயிருக்காங்கன்னு சொன்ன.......எப்படி நீ தனியா......"

"அதெல்லாம் ஒன்னும் ப்ரச்சனை இல்லை.........நாங்களெல்லாம் இருட்டை பார்த்து பயப்படுற பரம்பரையா??...போலீஸ்காரன் தங்கச்சியாக்கும் நான்"

" இருந்தாலும்..........ராத்திரி...........தனியா............ஒரு வயசுப் பொண்ணு........அதுவும் அழகான பொண்ணு.........தனியா வீட்ல.......நான் வேணா துணைக்கு...."

"அய்யே.......ஆசைய பாரு! ஒன்னும் வேணாம், அதெல்லாம் நாங்க பயப்படாம இருந்துப்போம். என் அண்ணாவும் டியூட்டி முடிஞ்சு வர்ர நேரம் தான்.......ஸோ நோ ப்ராப்ளம், நீங்க புறப்படுங்க"

"ஹும்......சரிடா.......டேக் கேர்...குட் நைட்!!!"

உன்னை நாளையும்
சந்திக்கலாம்
என்ற சந்தோஷத்தைவிட
இன்றும்
பிரிவதே கொடியதடி.....


தனது மொபைல்லிருந்த டார்ச் வெளிச்சத்தில் மாடிப்படி ஏறி தன் வீட்டிற்குள் அவள் செல்வதை பார்த்தபின் , அவனும் காரில் தன் வீடு நோக்கி புறப்பட்டான்.

வீட்டினுள் வந்தவள் எமர்ஜென்ஸி லைட்டை ஆன் செய்தாள்.....அதிலும் சார்ஜ் போதுமான அளவு இல்லாததால் மெழுகுவர்த்தியும் ஏற்றினாள், முகம் கழுவி விட்டு முன் அறைக்கு வந்தாள்.

தங்கள் காதலை தன் அண்ணனிடம் சொல்லிவிட இளா எவ்வளவோ வற்புறுத்தியும், பானு விஷயத்தை அண்ணனிடம் சொல்ல அருமையான சந்தர்ப்பம் தேடி கொண்டிருந்தாள். தன் நண்பனின் தங்கையையே காதலித்துக் கொண்டு, அதனை நண்பனிடம் மறைக்க ஏனோ இளாவிற்கு விருப்பமில்லை.
இன்று இளாவிற்கு சர்ப்ரைஸ் கிஃப்ட் கொடுத்த மாதிரி அண்ணாவிற்கும் காதல் விஷயத்தை இன்னிக்கு சொல்லிடனும், அம்மா அப்பா ஊரில் இல்லாத இந்த நேரத்தில் அண்ணனிடம் பக்குவமா விஷ்யத்தை சொல்றது நல்லது , என்று மனதிற்குள் நினைத்தவளாய் சோஃபாவில் தலை சாய்த்தாள் பானு.

சிறிது நேரத்தில் வீட்டின் கதவு தட்டப்பட்டது.

'பாவி!!! சஸ்பென்ஸ் தாங்காம........பாதி வழியிலேயே காரை ஓரங்கட்டிட்டு நான் கொடுத்த கிஃப்ட் பேக்கை ஓபன் பண்ணியிருப்பாங்க.......அதான் உடனே யூ டர்ன் போட்டு வந்திருப்பாங்க,
அச்சோ, .......என் ஸ்பெஷல் கிஃப்ட் பார்த்து .என்ன கலாட்டா பண்ண போறாங்களோ?
எப்படி சமாளிக்கப் போறேனோ தெரிலீயே!!
வெட்கம் பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு,
ரத்த நாளங்கள் துடித்தன!!

அவள் கதவினருகே செல்வதற்குள் மீண்டும் கதவு படபடப்புடன் தட்டப்பட்டது.

"ஒரு வேளை அண்ணா டியூட்டி முடிஞ்சு வந்துட்டாரோ.......இருட்டிலே தன் கிட்ட இருக்கிற வீட்டு சாவி எடுத்து திறக்க சோம்பல் பட்டு கதவு தட்டுறார் போலிருக்கு, என் நினைத்துக்கொண்டே கதவை திறந்தாள்.

அங்கு இருட்டில்..........அவள் இதுவரை கண்டிராத ஒரு உருவம்!
இருட்டில் அந்த கம்பீரமான கட்டுமஸ்தான உருவத்தோற்றம் திகிலை ஏற்படுத்தியது அவளுக்கு.



"யா......யாரது" என்றாள் தைரியத்தை வரவழைத்துக்கொண்டு.

பதலளிக்காமல் அவ்வுருவம் இரண்டடி எடுத்து வைத்து ,
அவளை நெருங்கியது!!

"யா........ர்.......நீங்......." என்று அவள் முடிப்பதற்குள்.......!!

[தொடரும்]

உயிரே!...உறவாக வா?? - 2


உயிரே!....உறவாக வா?? - 3


உயிரெ!....உறவாக வா??? - 4