October 01, 2009

என் பொம்முக்குட்டி அம்முவுக்கு...... கல்யாணம் !!!

காலையிலிருந்தே ஏதோ ஒருவித மன இறுக்கம், தேவை இல்லாமல் அடிக்கடி கோபம் வந்தது, அலுவல் நேரம் முழுவதும் என்னை தொத்திக்கொண்ட படபடப்பிற்கான காரணம் உணராமலே மாலை வீடு வந்து சேர்ந்தேன்,

வீட்டு வாசலில் குழந்தையுடன் காத்திருந்த என் மனைவி,


"என்னங்க இன்னுமா அதையே நினைச்சுட்டு இருக்கிறீங்க?" என்றாள்.

அட! நான் ஏன் இப்படி இருக்கிறேன்னு எனக்கே புரியலை, இவ எதை சொல்றா???


அவளுக்கு பதலளிக்கமால்,

என்னிடம் தாவி வந்த குழந்தையை முத்தமிட்டு, அள்ளிக்கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன்.

என் கனத்த அமைதியை பொருட்படுத்தாமல் , கேள்வி கேட்டு துளைக்காமல் காஃபியுடேன் வந்தாள் மனைவி.
வீட்டில் என் அம்மாவும் தங்கையும் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார்கள் என்று குழந்தை கூற அறிந்துகொண்டேன் ,

சிறிது நேர அமைத்திக்கு பின், என் மனைவி பேச்சை ஆரம்பித்தாள்,


"இதுக்கு போய் இவ்வளவு அப்சட் ஆகலாமா??.......சொன்னது யாரு உங்க செல்ல தங்கச்சி தானே??, அதுவும் அவ ஏதும் தப்பா சொல்லிடலியே, பின்ன எதுக்கு உங்களை நீங்களே குழப்பிகிறீங்க??" என்றாள் என் மனைவி,


"ஹும்...."


"இவ்வளவு நாளும் எது செய்தாலும், உங்க கிட்ட கேட்டு கேட்டு செய்தா, இப்போ அவளை கட்டிக்க போறவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு சொல்றா.........அதுல என்ன உங்களுக்கு அவ்ளோ இகோ???"


"இகோ இல்லமா.........இனிமே அவளுக்கு நான் இரண்டாம் பட்சம் தானே, அதை தான் என்னால தாங்கிக்க முடியல"

" ஹையோ ஹையோ .....என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி பேசுறீங்க, நீங்க தானே கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ ன்னு வற்புறுத்தி , நீங்களே மாப்பிள்ளையும் பார்த்து உங்க தங்கை கல்யாணத்தை ஏற்பாடு பண்றீங்க.......இப்போ அவ ஒரு வார்த்தை எதார்த்தமா சொல்லிட்டா, கல்யாண ஏற்பாடு எதுவா இருந்தாலும், அவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுடலாம் அண்ணா ன்னு, அதுக்கு ஏங்க உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது உங்க தங்கச்சி மேல????"


"ச்சே ச்சே.........அவ மேல எனக்கு எப்பவுமே கோபம் வராது.........ஆனா லேசா மனசு வருத்தமா இருக்கு, இவ்ளோ நாள் அவளுக்கு எல்லாமே நான்தான்னு பெருமிதமும் கர்வமும் இருந்துச்சு, அதெல்லாம் பங்கு போட்டுக்க இனொருத்தர்கு அவ வாழ்கையில இடம் வந்துடுச்சேன்னு நினைக்கிறப்போ......."

"விட்டு கொடுக்க முடியல ............அப்படிதானே???"

"ஹும்..."


"அபியும் நானும் படத்துல வர்ற பிரகாஷ் ராஜ் மாதிரியே ஆகிட்டு வர்றீங்க நீங்க...."


"..........."

"அவராச்சும் மகள் விரும்பிய மாப்பிள்ளை மேல பொறாமை பட்டார், நீங்க........நீங்களே மாப்பிள்ளையும் பார்த்துட்டு, கல்யாணம் கட்டிக்கோன்னு அவளையும் போட்டு பாடா படுத்திட்டு, இப்போ இப்படி பொலம்பறது நல்லாவே இல்லீங்க........"


பதில் ஏதும் சொல்லாமால் அவ்விடம் விட்டு நகர்ந்து, பால்கனிக்கு சென்றேன்.......என் மனைவி சொல்வது மிகவும் சரியே என என் உள் மனம் உறுத்தியது.

கல்யாணம் பண்ணிக்கோன்னு அவளை நச்சரித்து நான் தானே,
நான் பார்க்கிற மாப்பிள்ளை அவளுக்கும் பிடிச்சு போய்டாதான்னு ஆசை பட்டவனும் நான் தானே...........பின் ஏன் இப்போ அவளை விட்டுதர இயலவில்லை எனக்கு, ஹும்ம்.....

இதுக்குதான் பெத்த பொண்ணா இருந்தாலும் சரி, கூட பிறந்த தங்கச்சி, அக்காவா இருந்தாலும் சரி.......பாசமே வைக்க கூடாது, கல்யாணம் கட்டிக்கொடுக்கிறபோ எவ்ளோ மன உளைச்சல் வருது.........கட்டிக்கொடுக்கனுமேன்னு கடமை உணர்வு ஒரு பக்கம் ,விட்டு கொடுக்க முடியாம தடுமாற்றம் மறு பக்கம் , பிரிவின் வலி ஒரு புறம்.... ஹும்.

தளர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார எத்தனித்த போது தான் கவனித்தேன்.......என் தங்கையின் ஐபாட் அந்த இருக்கையில் இருப்பதை, என் தங்கை சற்று நேரத்திற்கு முன்பு வரை வழக்கம் போல் பால்கனியில் அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்திருக்கிறாள் என புரிந்துக்கொண்டேன் . இப்போதெல்லாம் அடிக்கடி தனியா பால்கனியில பாட்டு கேட்டுட்டு தனிமையாவே இருக்கிறாளே , அது ஏன்........??

கவனமாக அவளது ஐபாடை எடுத்து அருகில் இருந்த ஸ்டூலில் வைக்கும் போது தான் என் கண்ணில் பட்டது அதன் அடியில் இருந்த வாழ்த்து அட்டை....

Happy Birthday my beloved Brother!!

என்று எழுதிருந்த ஓர் அழகான வாழ்த்து அட்டை,

ஹும்........அடுத்த வாரம் வர இருக்கும் எனது பிறந்த நாளிற்கு இப்போதே வாழ்த்து அட்டை வாங்கி விட்டாள் போலும், அவள் கொடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று ஐபாடிற்கு அருகில் வைக்கையில், அதினுள்ளிருந்து ஒரு துண்டு காகிதம் விழுந்தது........

அதில் பொறிக்கப்பட்டிருந்த வரிகள்............

அண்ணனுக்காக.........!!

அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...

சிறு பெண்ணாக இருக்கையில்
பட்டு பாவாடை சர சரக்க
"அண்ணா பூ வைச்சு விடுண்ணா"
என்று மல்லி சரம் நீட்டினால்,
"முடி கொஞ்சம் கலைந்திருக்கே ...?" என்று
என் தலை வாரி
பூச்சுட்டுவான் என் அண்ணா !!

பக்கத்து
வீட்டு காயத்ரி
சைக்கிள் ஓட்டுவதை

ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்

பழகிக் கொடுத்தான்!


மழை ஓய்ந்த பின்

மரக்கிளையினை உலுப்பி

எனைத் தெப்பமாய் நனைத்து...

நான் மயிர்க் கூச்செறிந்து

சிணுங்கி நிற்கும்
அழகை ரசிப்பதில்
அலாதிப் பிரியம் அவனுக்கு!


என்
எச்சில் கையால் - அவனுக்கும்
தின்பண்டம் ஊட்டினால்

சுவைத்து சிரிப்பான்!

கல்லூரியில் படிக்கும் போதும்

கணக்குப் பாடம்
சொல்லித்தர கேட்பேன்,
எப்படிச் சொன்னாலும்

இந்த 'மர மண்டைக்கு' ஏராதாம்
என்று
குட்டு வைப்பான் ....!
நான் அழுது முடிக்கும் வரையில்

என் தலை

அவன் தோழில் சாய்த்துக்கொள்வான்!


அவனுக்கு கல்யாணமான பின்பு

அண்ணியோடு அவன்..

அண்ணன் எனக்கு
அன்னியனாகி
போனது அன்றுதான்.

நானில்லை..

இனி உன் வாழ்வில்
என்று
என்னை நானே விலக்கிக் கொள்ள...
'

உன் அண்ணா'
உனக்கு
அன்று போல்தான் என்றென்றும் என
என் கை பிடித்து

அவன் கையோடு எனை சேர்த்தபோது,

தலை சாய்ந்தேன்.....

அண்ணியின்
தோழில்!!

அண்ணன் என் நண்பன்

அண்ணன் என் எல்லாம்

அப்பாவின் காலத்திற்குப்பின்
அண்ணன்
எனக்கு அப்பாவானான்....!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!


வரிகளை படித்து முடிக்கையில் ,
நெஞ்சில் மீண்டும் அதே பெருமிதமும்,
என் தங்கையின் திருமணத்திற்கு பின்பும்
அவள் நெஞ்சில்
நான் எப்போதுமே......
'உசத்தி கண்ணா...உசத்தி'
என்ற பெருமையும் துளிர்விட,
கண்ணில் பூத்த நீர் துளிகளை
தடுக்காமல் வழியவிட்டேன்!!!