August 15, 2010

கன்னுகுட்டி காதல்!

எங்கோ ஆட்டோ சத்தம் கேட்டு கண் விழித்தேன். தலை விண்ணென்று வலித்தது. இரவு லேட்டாக தூங்கியதின் விளைவு. தலையை லேசாக திருப்பி, நைட் ஸ்டாண்டில் இருந்த செல்ஃபோனை எடுத்து மணி பார்த்தேன், காலை மணி 5.00.
தலையணையை கட்டிலில் நேராக சாய்த்து அதில் தலை வைத்தபடி எழுந்து அமர்ந்தேன். அருகில் படுத்திருக்கும் வருண்.....அன்றைய குறும்பு காதலன் ,இன்றைய என் ஆசை கணவன் தூக்கத்தில் புரண்டு படுத்தார்.

தூங்கும் போது கூட, மீசையின் கீழ் அதே குறும்பு புன்னகை......'கனவில் ஜொள்ளு விட்டுகிட்டு இருப்பாரா இருக்கும், இல்லீனா தூங்கும்போது கூடவா உதடு சிரிச்சுட்டே இருக்கும்', மனம் பொறுமினாலும்.........என்னை மயக்கி கட்டி போடும் அந்த வசீகர புன்னகையிலிருந்து என் பார்வையை விளக்க மனமில்லை.
வைத்தகண் வாங்காமல் அவரையே கூர்ந்து பார்த்துக்கொண்டிருந்தேன்.

நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா?? நாளையிலிருந்து காலையில் நான் எழுகையில் இந்த மந்திரப்புன்னகையை ரசிக்க முடியாதா? இருவரும் பரஸ்பரம் பேசி, சேர்ந்து எடுத்த முடிவுதானே..........பின் ஏன் பிரிவை நினைத்து மனம் இரகசியமாய் உள்ளுக்குள் அழுகிறது.

மீண்டும் புரண்டு படுக்கிறார் வருண்........நான் அவரையே பார்த்துக்கொண்டிருக்கிறதை கவனித்திருப்பாரோ?விழித்திருந்தும் , தூங்குவதாய் பாவனை செய்வதில்தான் இவர் கில்லாடி ஆச்சே, நான் யோசனையில் திரும்பிய போது அரைக்கண் திறந்து பார்த்தாலும் பார்த்திருப்பார்.

சில மாதங்களுக்கு முன்பு வரை.......எங்களது முன் இரவில்,


நான் தூங்கும் அழகை ரசித்து,
எனக்கு முத்தம் கொடுக்கலாம்
என அவர் காத்திருக்க...
அவர் முத்தம் கொடுக்கும்
அழகை ரசித்துவிட்டு
தூங்கலாமென நான் காத்திருக்க.....
எங்கள் இருவருக்காகவும்
காதல் உறங்காமல் காத்திருக்கும்!!!


இப்போது மீண்டும் அவரது தூக்கத்திலும் சிரிக்கும் கள்ள சிரிப்பை ரசிக்க என் கண்கள் தானாக அவர் பக்கம் சென்றது,
அவர் புரண்டு படுத்ததில், போர்வை சற்று உயர்ந்து, பாதி முகத்தை மூடியிருக்கிறது.........விலக்கி விடலாமா??
விழித்துக்கொண்டால்??

முன்பாக இருந்தால்........போர்வையை சரி செய்ததோடு என் விரல்களும் நின்றிருக்காது, விழித்துக்கொண்ட அவரும் சும்மா இருந்திருக்க மாட்டார், ஆனால்.......இப்போது இருவருக்கும் நடுவில்தான் வேலி அமைத்து நாட்களாகிவிட்டதே.
மெதுவாக......போர்வையை சரிசெய்து விட்டேன், விரல் படாமல்...........என் விரலையே என்னால் கட்டுபடுத்த முடியாமல் போய்விடுமோ என்ற பதட்டம் இருக்கத்தான் செய்தது.

இப்போ ........இப்போ கூட அதே சிரிப்பு அவர் உதட்டில். தூங்கும் குழந்தையை இரசிக்க கூடாதுன்னு அம்மா அடிக்கடி சொல்லுவாங்க, இவரும் என் குழந்தைதானே......என் முதல் குழந்தை.

இந்த குழந்தையை பிரியத்தான் வேணுமா, என்ன இது.......முடிவு பண்ணின பிறகு இப்படி ஒரு தடுமாற்றம் எனக்குள்.
உன் குறும்பு புன்னகையை
உதிர்க்கும் உதடுகள்
என் கண்களை மட்டுமா
சிறை செய்தது?

என்னையும் சேர்த்தல்லவா
கட்டி போட்டிருக்கிறது...


எத்தனை முறை
இதே உதடுகள்
என் உதடுகளை பிரதி எடுத்திருக்கும்??
எடுத்த பிரதிகளை
எங்கே பத்திரப்படுத்தியிருக்கிறாய்?


அடடே, கவிஞரின் கன்னுகுட்டிக்கும் கவிதை எழுத வருதே!

ஹும்......அவர் என்னை செல்லமா 'கன்னுகுட்டி' னு தான் கூப்பிடுவார்.

இன்று இந்த கன்னுகுட்டி கட்டியணைக்கும் தொலைவில் இருக்கிறார்....நாளை???
மீண்டும் நெஞ்சு வலித்தது பிரிவை நினைத்து, முடிவெடுத்தது .......முடிவெடுத்ததாகவே இருக்கட்டும். ஆனாலும் மனதில் முள்ளாய் குத்துகிறது ஒரு கேள்வி......நிச்சயம் இவரை பிரியத்தான் வேண்டுமா??

இன்றாவது அவருக்கு பெட் காஃபி கொடுக்கலாமா?
பெட் காஃபி கொடுத்து எத்தனை மாதமாகிறது........இப்போது என்னால் முடியுமா??

பெட் காஃபி என்றதும்தான் நினைவிற்கு வருகிறது,
எங்களுக்கு திருமணமான புதிதில்.......பெட் காஃபியுடன் நான் அருகில் வந்திருப்பது தெரிந்தும், அரைக்கண்ணில் என்னை ரசித்தபடி, தூங்குவதுபோல் பாவனை செய்வார், அது தெரிந்தும்........தெரியாதது போல் நானும் அவர் முழிப்பதற்காக காத்திருப்பது போல் பாவனை செய்துக்கொண்டு அமர்ந்திருப்பேன்.

சில தெரிந்த பொய்களிலும், விரும்பி ஏமாறுவதிலும் தானே இருக்கிறது வாழ்கையின் சுவாரசியமே .

பெட் காஃபியோடு நிறுத்த மாட்டார்......சரியான காஃபி வண்டி அவர்,
குளித்து முடித்து வந்ததும் அடுத்த காஃபி ரெடியா இருக்கனும் அவருக்கு.

அன்றும் அதுபோல் அவர் குளித்து முடித்து, ஷவர் நிறுத்தும் சத்தம் கேட்டதும், கிட்சனில் காஃபி ரெடி பண்ணிக்கொண்டிருந்தேன். எனக்கு தெரியாது என நினைத்து.......பூனை மாதிரி நைஸாக சத்தம் வராமல் மெதுவாக அடி வைத்து கிட்ச்சனுக்குள் நடந்து வந்தார், சன்னமாக எதையோ பாடிய படி அடுப்பில் பால் வைத்துக் கொண்டிருந்த நான்...."என்ன வேணும் இப்போ உங்களுக்கு ?" திரும்பாமலேயே கேட்டேன் .

"ச்ச்ச.......எப்படிடி கண்டுபிடிக்கிற ஒவ்வொரு தடவையும்"

"நான் தான் ஹாலுக்கு காஃபி எடுத்துட்டு வரேன்னு சொல்லியிருந்தேன்ல......இப்போ எதுக்கு கிட்ச்சனுக்குள்ள வந்தீங்க"

"உனக்கு ஹெல்ப பண்ணலாமேன்னு...."

"நெஜமாவே ஹெல்ப் பண்ண தான் வந்தீங்களா " இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு திரும்பினேன்.

உதட்டைச் சுளித்து புன்னகைத்தார் வருண் . கண்களில் அத்துனை குறும்பு .....நான் ரசிக்கும் குறும்பு:))

" நம்பமாட்டியா ....நம்புடி குட்டிமா........ நேத்து உனக்கு நான் வைச்சு விட்ட மருதானி மேல சத்தியமா" இன்னும் ஒரு அடி முன்னேறி என் கைகளை பிடித்து சத்தியம் பண்ணும் சாக்கில் நெருங்கினார்.

"வேணாம்.......... நல்ல பிள்ளையா ஹால்ல போய் உட்காருங்க . நான் காப்பி எடுத்துட்டு வரேன் " ஒரு அடி பின்னால் சென்றேன் .

சமையல் மேடை இடித்தது .

"ம்ம்.... சத்தியம் பண்ணாம கிட்சனை விட்டு நான் போறதா இல்ல " சமையல் மேடையில் இரண்டு கைகளையும் ஊன்றி என்னை சிறை பிடித்தார் .

"எங்கே சத்தியம் பண்ணட்டும்........... "

"ஹ்ம்ம்......... " சவுண்ட் ஸ்பீக்கரை முழுங்கின மாதிரி சத்தமாக பேசும் என் சத்தத்தின் டெசிபல்கள் அநியாயத்திற்குக் குறைந்திருந்தன .


"என்ன ஹும்ம்.........எங்கே சத்தியம் பண்ணட்டும்னு கேட்டேன்"

"காப்பி.........வேணாமா?"

"வேணாம்......"

"டீ...??"

"நீ........"


எனக்கே எனக்கு சொந்தமான வருணின் நறுமணத்துடன் அவர் போட்டு குளித்திருந்த சோப்பின் மணமும் சேர்ந்து கிளர்ச்சி ஊட்டியது . மூச்சுக் காற்று உதட்டைச் சுட்டது . கண்களை மூடிக் கொண்டேன்.

இப்பொழுதும் கண்களை அழுந்த மூடிக்கொண்டிருக்கிறேன்......இமைகளின் இருக்கத்தையும் தாண்டி, வெளிவந்த நீர் துளிகள், என் கண்மையின் துணைகொண்டு கன்னத்தில்.... வரைபடம் வரைந்து, உதடுகளை தொட்டு உவர்த்தபோது, விழி திறந்தேன்,

இப்போதும் அதே மெளன புன்னகையுடன் அவர் ஆழ்ந்த உறக்கத்தில், என் அருகில்.......


இப்படி திகட்ட திகட்ட
காதலை அள்ளிதராமல்

தவணை முறையில் தந்திருக்க கூடாதா?

பிரிகையில் இத்துனை பாதிப்பு இருந்திருக்காதே,

மொத்தமாக நீ 'புகட்டிய' காதலே
இன்று நம்மை பிரிக்கிறது பார்:(


கட்டாயம் பிரியத்தான் வேண்டுமா??


இனிமேலும் இப்படியே உட்கார்ந்திருந்தால், நானே என் முடிவை மாற்றினால் மாற்றி விடுவேன், மேலும்.......அவர் கண்விழித்துவிட்டால், கலங்கின என் கண்களும்,கண்களை தாண்டி கனனத்தில் இழுகியிருக்கும் கண்மையும், நெற்றி பொட்டில் பூர்த்திருக்கும் வேர்வையும்...........என் உள்ளுணர்வை அவருக்கு வெளிச்சம் போட்டு காட்டி கொடுத்துவிடும். தண்ணீரிலேயே தடம் பார்க்கும் திருடன் இவர்:))

எடுத்த முடிவில் மாற்றம் வேண்டாம் என்ற முடிவுடன், படுக்கையிலிருந்து எழுந்துக்கொள்ள என் ஒருகையை படுக்கையில் ஊன்றியபடி மெதுவாக நான் கீழ் இருங்குகையில்.........என் கையை அழுந்த பிடித்தது அவரது வலது கரம்.

மெதுவாக திரும்பினேன்.......

என் கரத்தை விடுவிக்க நான் முயல..........அவரது பிடியின் இறுக்கம் அதிகரித்தது,

அட! இதென்ன வம்பா போச்சு, நான் தான் தடுமாறுறேன்னா....இவருமா??

மேலும் அவர் வலு கரம் அழுத்த......

"அச்சோ......என்னங்க இது.......நேத்து வளைகாப்புல போட்ட கண்ணாடி வளையல் உடைஞ்சுட போகுது, கையை விடுங்க........."

"........." குறும்பனின் புன்னகை மட்டும் பதிலாக வந்தது.

"அய்யோ........பிரசவம் ஆகுற வரைக்கும் வளையல் உடைய கூடாதுங்க, ப்ளீஸ் விடுங்க..........."

பிடியை தளர்த்தியபடி அவர்,

"விட முடியலடி செல்லம்............"

அப்பாவி குழந்தையைபோல் முகத்தை வைத்துக்கொண்டு அவர் கேட்கையில், நெஞ்சம் விம்மிக்கொண்டு வந்தது.......

"என்னாலயும் முடியலீங்க............"

அவர் நெஞ்சில் இப்போது என் காதணி தடம் பதித்துக்கொண்டிருந்தது,

"அப்போ.........போகாதே........என்னைவிட்டுட்டு......"

"முதல் பிரசவம் அம்மா வீட்லன்னு எல்லாரும் பேசிதானே முடிவு பண்ணினோம்..........இப்போ..........எப்படி...."

"'கன்னுகுட்டி....... உன்னை நான் பாத்துக்கிறேன்டி......"

"ஒரு குழந்தையை அம்போன்னு விட்டுட்டு......இன்னொரு குழந்தையை பெத்துக்க அம்மா வீட்டுக்கு போய்தான் ஆகனுமான்னு எனக்கும் தடுமாற்றமா இருக்குதுபா"

இப்போது, என் 'முதல் குழந்தை' என் நெஞ்சோடு.........சேர்த்தணைத்துக்கொண்டேன்,
மற்றொரு குழந்தை 'எனக்குள்' நடை பயின்றபடி உதைத்து காண்பித்தது தன் இருப்பை,
பெண்மையின் லயிப்பில், பரவச நிலையில் நான்:))


உன் சிரிப்பில்
மயங்கி காதலித்தது
உனக்காக மட்டுமல்ல....
உன்னைப் போலவே
'புன்னகை' மன்னனாய்...
ஒரு மகன் வேண்டும்
என்பதற்காவும்தான்...!!


"போகமாட்டேன்......உங்களை விட்டு எங்கேயும் போகமாட்டேன்" உணர்ச்சிவசத்துடன் என் குரல் கிசுகிசுத்தது அவர் செவிகளில்.

அணைப்பின் இருக்கும் அதிகரிக்க..........
சில மணிதுளிகள் மெளனமாக அணைப்பில் கழிந்தது,
மெல்ல தலைநிமிர்ந்த அவரது பார்வையில்.......
நான் அவருக்கே அவருக்கு மட்டும் சொந்தம் என்ற கர்வம் தலைதூக்கி நின்றது.

March 20, 2010

கீதாஞ்சலி!!

ஆகாஷ்.........என் வாழ்வில் வந்த வேளை... ஒர் அழகிய கனாக்காலம்.

அப்போ நான் பன்னிராண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன், எங்கள் எதிர் வீட்டை சொந்தமாக வாங்கி குடியேறினார்கள் ஆகாஷின் குடும்பம். ஆகாஷின் அப்பா ஒரு ரிட்டையர்ட் ஹெட்மாஸ்டர், அம்மா இல்லத்தரசி, அக்கா.....எங்கள் காலனியில் உள்ள மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் டீச்சர்.

கணக்கு ஏறாத மரமண்டை எனக்கு , என் அப்பாவின் கோரிக்கையினால் ஆகாஷின் அப்பா கணக்கு டியூஷன் மாஸ்டர் ஆனார்.

ஆகாஷிற்கும் அவரது அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம், எப்போதும் அப்பாவுக்கு மகனுக்கும் வாய் தகராரு தான். பின்ன........தமிழ்நாட்டுல உள்ள எந்த இஞ்சினியரிங் காலேஜிலும் இடம் கிடைக்காம இருந்த தன் ஒரே மகனுக்கு, தன் தகுதிக்கும் மீறி நிறைய பணம் கட்டி பெங்களூர்ல இஞ்சினியரிங் படிக்க வைச்சா, பையன் நாலு வருஷம் ஜாலியா காலேஜ் & ஹாஸ்டல் லைஃப் எஞ்சாய் பண்ணிட்டு, 10 அரியர்ஸோட வீட்ல வந்து செட்டில் ஆனா, எந்த அப்பாக்கு தான் கோபம் வராது.


அவங்க வீட்ல டியுஷனுக்கு போற நேரத்தில, அப்படி அப்பா -மகன் சண்டை நடந்தா, செம கொண்டாட்டமா இருக்கும் எனக்கு, ரசிச்சு வேடிக்கை பார்ப்பேன்.

ஒருநாள் டியூஷன் போயிருந்தபோ, என்னோட நோட் தீர்ந்துபோச்சுதுன்னு, அங்கே டேபிள் மேல இருந்த நோட்டை எடுத்துக்கொடுத்தார் டியுஷன் மாஸ்டர். டியூஷன் முடிஞ்சதும், வீட்டுக்கு வந்து, அந்த நோட்டில் நான் எழுதியிருந்த கணக்குகளை என் நோட்டில் காபி செய்ய எடுத்த போதுதான் கவனித்தேன், அந்த நோட்டில் முதல் சில பக்கங்களில் ஆகாஷ் கவிதைகள் எழுதியிருந்ததை.

அப்பாகிட்ட தினமும்........மக்கு, மரமண்டைன்னு டோஸ் வாங்கிற பையனுக்குள்ள இப்படி ஒரு திறமை ஓளிஞ்சிட்டிருக்கா???
நோட்டிலிருந்த கவிதை எல்லாம் படிச்சு முடிச்சுட்டு, என்னால..........ஆகாஷை பாராட்டாமா இருக்க முடியல.
இதுவரை ஒருநாள் கூட என்கிட்ட ஆகாஷ் பேசினதில்ல..........ஏன் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை .
அப்பா மேல உள்ள பயமா இருக்கலாம், இல்ல........கண்கொத்தி பாம்பாட்டும் நான் டியூஷனுக்கு போனாலே தன் தம்பியையும் என்னையும் கவனிக்கும் அக்கா மேல உள்ள எச்சரிக்கை உணர்வா கூட இருக்கலாம்.

எப்படியும் பாராட்டியே தீரவேண்டும்னு முடிவோட, என்னையும் மீறி என் கால்கள் எதிர் வீட்டில் போய் நின்றது. நல்லவேளை நான் சென்ற நேரம் ஆகாஷின் அக்கா வீட்டில் இல்லை, அம்மாவிடம் ஆகாஷ் எங்கே என விசாரித்து, அவரது அனுமதியுடன்......மொட்டை மாடியில் உலாத்தி கொண்டிருந்த ஆகாஷை சந்திக்க சென்றேன்.

என்னை கண்டதும் கையிலிருந்த சிகரெட்டை அவசரமாக அணைத்துவிட்டு,

"அப்பா.............கீழே இருப்பார்........." என்றார்.

"நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்......."

".............."


என் கையிலிருந்த நோட் புக்கை காட்டினேன்.ஆச்சரியம் கலந்த கோபப்பார்வை இப்போது ஆகாஷின் கண்களில்.


"இதெல்லாம் நீங்க எழுதின கவிதையா? படிச்சுப் பார்த்துட்டு பிரமிச்சு போய்ட்டேன், நான் பொதுவா சிறுகதை, நாவல், கவிதை எல்லாம் ஆர்வமாப் படிக்க மாட்டேன், ......உங்க கவிதைகள் என்னை ரொம்ப பாதிச்சது, தீவரவாதிகளால் அநியாயமாய் கொலை செய்யபட்ட தன் கணவனை நினைச்சு ஒரு மனைவி எழுதுற மாதிரி எழுதியிருக்கிறீங்களே ஒரு கவிதை...........அந்த கவிதையின் பாதிப்பு இப்போ கூட என் மனசுல அப்படியே இருக்கு"

பற்ற வைத்த ஐயாயிரம் வாலா பட்டாசு சரமாக நான் நிறுத்தாமல் பேசிக்கொண்டே சென்றதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ஆகாஷ்.

"நிறைய கவிதைகள் எழுதுவீங்களா??"

"எப்பவாவது என் மனசை அழுத்தமா பாதிக்கிற மாதிரி விஷயங்கள் நடந்தா கவிதை எழுதுவேன்"

"பத்திரிக்கைகளுக்கு எல்லாம் உங்க கவிதையை அனுப்பிருக்கிறீங்களா?..........உங்க கவிதை வெளி வந்திருக்கா?"

"இல்ல........அனுப்பினதில்ல"

"ஏன் அனுப்பக் கூடாது......?"

"எனக்கு பிரபலாமாகனும்னு ஆசை எல்லாம் இல்ல........என் திருப்திக்காக தான் கவிதை எழுதுறேன்"

"சரி......சரி.........நீங்க பிரபலமாக வேணாம்.......ஆனா உங்க கவிதை நிறைய பேரைப் போய்ச் சேர சான்ஸ் இருக்குதே.......என்னை பாதிச்ச மாதிரி எத்தனையோ பேரை இந்த கவிதை பாதிக்கலாமில்லையா?"

"இப்படி சீரியஸான கவிதை எல்லாம் அனுப்பிச்சாலும்.........பப்ளிஷ் பண்ண மாட்டாங்க, காதல் கவிதை, காதல் தோல்வி, பெண்ணை வர்ணிச்சு எழுதின கவிதை, இப்படி பட்ட துக்கடா கவிதை கவிதைகளைத்தான் போடுவாங்க"

"காதல் கவிதையும் கவிதைதானே ..........அது ஒருவித அழகு, இது இன்னொரு விதம், அதுக்காக காதல் கவிதைகளை எல்லாம் இப்படி துக்கடா கவிதைன்னு சொல்ல கூடாது"

"இப்போ என் கவிதையை பாராட்ட வந்தியா.........இல்ல காதல் கவிதைக்கு சப்போர்ட் பண்ணி ஆர்கியூ பண்ண வந்தியா?"

டக்கென்று ஆகாஷ்க்கு கோபம் வந்தது, என் முகம் சுருங்கி போச்சி..........அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.

இரண்டு வாரம் கழித்து, ஒரு நாள் காலங்காத்தால எங்க வீட்டுக்கு வந்தார் ஆகாஷ், அதுவே முதல் முறையாக அவர் எங்கள் வீட்டிற்கு வருவது.

ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா அவரை வரவேற்றார்...

"வாங்க..........வாங்க தம்பி, நல்லா இருக்கிறீங்களா? உங்க கவிதை பத்திரிக்கைல வெளி வந்திருக்குன்னு இப்பத்தான் பாப்பா காண்பிச்சா.........ரொம்ப நல்லா இருக்கு தம்பி கவிதை, தொடர்ந்து கவிதை எழுதுங்க"

".............."

"வாங்க.........உட்காருங்க.........காஃபி எடுத்துட்டு வரேன்" - இது என் அம்மா.

"உங்க பொண்ண கொஞ்சம் கூப்பிடுறீங்களா?" ஆகாஷ் கோபமான குரலுடன் இப்படி சொன்னதும், அம்மாவும் அப்பாவும் விழித்தனர்.

அப்பா என்னை கூப்பிடும் முன், நானே மெதுவாக ஹாலுக்கு சென்றேன்.........அம்மாவின் பின்னால் நின்றபடி, ஆகாஷை பார்த்து சிரிப்பதா வேண்டாம என்று நான் நிற்க,ஆகாஷ் என்னருகில் நேராக வந்தார்.......

"எதுக்கு இந்த திருட்டுத்தனம்........என்னோட அனுமதி இல்லாம எதுக்கு என் கவிதைய பத்திரிக்கைக்கு அனுப்பின"

"அது வந்து.......கவிதை ரொம்ப நல்லாயிருந்துச்சு.....அதான்...."

"அதனால நீயே என் பேரை போட்டு கவிதைய பத்திரிக்கைக்கு அனுப்பிருவியா......"

என் அப்பாக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, என்னை பார்த்து முறைத்தவர், ஆகாஷிடம்.....

"ஸாரி தம்பி.......ஏதோ விளையாட்டு தனத்துல அப்படி பண்ணிட்டா.......இனிமே அப்படி பண்ணமாட்டா"

என் அப்பா அம்மாவிற்கு முன்பாகவே என்னை திட்டியும்விட்டு.....ஒரு முறைப்பும் முறைச்சுட்டு போனார்.

அவர் போனதும் செம டோஸ் என் அம்மா அப்பாவிடமிருந்து, நான் எதையும் சட்டை பண்ணவில்லை........நேராக என் அறைக்கு சென்றேன்,

'உன் கவிதையை தான உன் பேரு போட்டு அனுப்ப கூடாதுன்னு சொன்ன.....இனிமேல் பார், நானே கவிதை எழுதி, உன் பேர் போட்டு பத்திரிக்கைக்கு அனுப்புவேன், உன்னோட பேர்ல கவிதை எழுதுறது யார்ன்னு தெரியாம நீ திண்டாடனும்.....'

கோபத்தில்.........வானம், நட்சத்திரம், மலர்கள் ன்னு பல தலைப்புல கவிதை எழுத ஆரம்பிச்சேன், ஆகாஷின் கவிதைகளை படித்ததின் பாதிப்பா, இல்லை எனக்குள்ளும் ஒரு கவிதிறமை இருந்ததா என்று தெரியவில்லை......நான் எழுதி அனுப்பிய கவிதை அனைத்துமே, பத்திரிக்கை வாசகர்களிடம் ஆகாஷிற்கு பேர் வாங்கி கொடுத்தது.

நான் தான் அவர் பேரில் கவிதை எழுதி அனுப்புகிறேன் என தெரிந்தும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடித்துக்கொண்டிருந்தார் ஆகாஷ், ஆனால் அவர் பார்வையில் முன்பிருந்த கோபம் குறைந்திருந்தது.
மெது மெதுவாக எங்கள் கண்கள் கவி பேசிக்கொள்ள ஆரம்பித்தன, மெளனமாக இருவரும் அதனை அனுமதித்தோம்.

என்னைக் கண்டதும் ஆகாஷின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை நான் கவனிக்க தவறவில்லை.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் காதலை கூறுவதா என்ற தயக்கம் அவருக்கு இருந்திருக்கலாம்,அல்லது.....
படித்து முடித்தும் இன்னும் வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறோமே என்ற சுயவிரக்கம் கூட காரணமாக இருந்திருக்கலாம்.
இருவருமே தத்தம் எல்லைக் கோடுகளை விட்டு வெளியே வந்து உள் மனக் காதலை வெளிப்படுத்த தயாராய் இல்லை.
ஏதோ ஒன்று எங்களை கட்டி போட்டிருந்தது.

மெது மெதுவாக என் கவிதைகளில் காதல் வாசம் வீச ஆரம்பித்தது, வழமைபோல் வாசகர்களிடம் அபார வரவேற்பு அக்கவிதைகளுக்கு.

ஒருநாள் பத்திரிக்கையில் நான் அனுப்பியிராத ஒரு காதல் கவிதை, அதுவும் ஒரு பெண்ணிடம் உருக்கமாக காதலை வெளிப்படுத்தும் ஒரு கவிதை ஆகாஷின் பெயரில் வெளிவந்திருந்தது.
கவிதையை பார்த்து அதிர்ந்து போனேன்........இந்த கவிதை நான் அனுப்பவில்லை என்றால் , அனுப்பியது யார்???

இப்போ, பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு ஆகாஷின் வீட்டிற்கு செல்கிறேன்......

----------*--------------*----------

டைரியை படித்துக்கொண்டிருந்த ஆகாஷின் நினைவலைகள் பத்து வருடங்களுக்கு பின்னாக சென்றது.....


கையில் பத்திரிக்கையுடன் விழிகள் படபடக்க கீதாஞ்சலி என் வீட்டு மாடியை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள்,
மனதிற்குள் அதனை ரசித்தபடியே ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டேன்...


"இது.....இந்த கவிதை........நீங்க.....எழுதினதா??" என்றாள். அவளுடைய உச்சரிப்பில் இருந்த அழகு, அவள் முன்னுச்சியில் வந்து படிந்த முடியை நகம் வளர்த்த ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டுக்கொண்ட தன்மை, ஐயோ..ஐயோ...எப்படி சில பெண்களுக்கு மட்டும் இந்த நளினம் வந்து சேருது???, கண் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்


"ஹலோ ....உங்களைத்தான் கேட்கிறேன்?" என்றாள்

"கவிதைக்கு கீழே என்ன பேரு போட்டிருக்கு......."

"ஆ.........ஆகாஷ்னு போட்டிருக்கு....."

"அப்போ ஆகாஷ் எழுதினதுதானே??........அப்புறம் என்ன டவுட் உனக்கு?"

என் கண்களை கூர்ந்து நோக்கினாள், அதில் தெரிந்த குறும்பினை கண்டு பிடித்துவிட்டாள் ....கள்ளி!

வெட்கத்தில் அவள் முகம் குங்குமமென சிவந்தது,

உதடுகள் வார்த்தைகளோடு போராடி பேச இயலாமல் துடித்தது!


"கவிதைக்கு பதில்......வருமா?" அடிக்குரலில் நான் கேட்டதும்.......


இன்னும் அதிகம் சிவப்பு பூசிக்கொண்டது அவள் முகம்,

மாடி படிகளுகருகில் சென்றவள், நின்று திரும்பி....


"அடுத்த வாரம் பத்திரிக்கையில் பதில் வரும்....." என்று மெதுவாக சொல்லிவிட்டு,


கடகடவென மாடி படிகளில் இறங்க தொடங்க, அடுத்த நொடி அவள் பாவாடையில் கால் தடுக்கி, படிகளில் உருண்டு சென்றாள்,

"கீது........." என்று அலறியபடி நானும் வேகமாக படிகளில் தாவி தாவி இறங்க, நான் அவளை பிடிப்பதற்குள், மாடி படியின் முடிவில் இருந்த கூர்மையான கைப்பிடி அவள் நெற்றையை பதம் பார்த்து ரத்தம் ஆறாக ஓடியது.


அடுத்த இரண்டு தினங்கள், கீதாஞ்சலி சுயநினைவில்லாமல் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள்,
இந்த இரண்டு நாள் போராட்டத்தில், என் அழுகையும் கதறலும் எங்கள் காதலை எங்கள் இரு குடும்பத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது.

மூண்றாம் நாள் சுயநினைவு வந்ததும், அவள் என்னை காண விரும்புவதாக கூற, அவள் இருந்த ICU க்குள் சென்றேன்.

அவள் உதடுகள் உலர்ந்திருந்தன,அவளால் பேச இயலவில்லை,மெளனமாக புன்னகைத்தாள்.....என் கண்ணீரை கண்டதும், அழாதே என்பது போல் கண்ணசைத்தாள்,

அவளருகில் சென்று அவள் கரத்தை என் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தினேன்......

என் முதல் ஸ்பரிசமா.....
இல்லை அவள் உடல்நிலை காரணமா ,
எதுவென்று தெரியவில்லை, அவள் உடல் சிலிர்த்தது......


சன்னமான குரலில் பேச தொடங்கினாள்......

"அம்மாகிட்ட என் டைரி கேட்டேன்......டேபிள்ல இருக்கு....எடுங்க ஆகாஷ்"

அவள் கூறிய டைரியை எடுத்தேன்,

"இது.....இது உங்களுக்கு......."


"ஹும்...."


"இனிமேலும் உங்க கவிதையில நான் இருக்கனும்.....ஆகாஷ்"

"உனக்கொன்னும் ஆகாதுடி செல்லம்.....நீ எப்பவும் என்கூட தான் இருப்ப"

மெல்ல புன்னகைத்தாள் கீதா........அதுவே அவளது அஞ்சலிக்கான கடைசி புன்னகை!

உலகமே இருண்டு போனது எனக்கு,
என்னிலையை மறந்து பலநாள் என் அறைக்குள் முடங்கி கிடந்தேன்.சூராவெளியாய் என் வாழ்க்கையில் வந்தவள்,
என் கவிதையின் முதல் ரசிகை,
என்னை பிரபலமாக்கிய முதல் வாசகி,
என் கவிதைக்குள் வந்துவிட்டு
என் வாழக்கையை விட்டு மட்டும் ஏன் சென்றாள்????

விடைகாணா கேள்வியுடன் ஆகாஷின் வாழ்க்கை தொடர்ந்தது.


ஆகாஷ், கடந்த பத்து வருடமாக தினமும் குறைந்தது மூன்று முறையாவது இந்த டைரியை படிப்பதும், பின் கண்ணீருடன் பழைய நினைவுகளில் மூழ்குவதும் வழக்கம்.

மனைவி வரும் அரவம் கேட்டு , கண்களை துடைத்துக்கொண்டான் ஆகாஷ்.

"என்னங்க.....உங்க கவிதை புக் பப்ளிஷ் பண்ணின பப்ளீஷரும் மேனேஜரும் உங்களுக்கு அவங்க பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருக்கிறது விஷயமா பேச வந்திருக்காங்க"

"ஹும்........இதோ வரேன் கீதா"

டைரியை வைத்துவிட்டு, முகத்தினை சுத்தம் செய்து விட்டு, ஹாலுக்கு சென்றான் ஆகாஷ்.

வந்திருப்பவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு அவன் சோஃபாவில் அமர்ந்ததும், அவனது ஐந்து வயது மகள் ,

"அப்பா........" என்று கத்திக்கொண்டே அவன் மடியில் வந்தமர்ந்தாள்.

"அஞ்சலி உள்ளே போய் விளையாடுமா.....அப்பா இவங்க கிட்ட பேசிட்டு இப்ப வந்துடுறேன்"

குழந்தை உள்ளே சென்றதும், பப்ளீஷர் ஆகாஷிடம்.....

"சார் உங்க மனைவி கீதாவின் பேரையும், உங்க பொண்ணு அஞ்சலி பேரையும் சேர்த்து வைச்சு 'கீதாஞ்சலி'ன்ற புனை பெயர்ல நீங்க கவிதை எழுதுறது இந்த பாராட்டு விழால தான் சார் நிறைய பேருக்கு தெரியப்போகுது, கீதாஙஞ்சலி ன்றது ஒரு பொண்ணுன்னே நிறைய பேர் நினைச்சுட்டு இருக்கிறாங்க சார்" சொல்லிவிட்டு சிரித்தார் பப்ளீஷர்.

மனதிற்குள் எழுந்த சோகம் நெஞ்சை பிசைய, கண்களில் தெறிக்க இருந்த துளிகளை ஆகாஷின் கண்ணீர் கடல் வழக்கம்போல் உள்வாங்கி கொண்டது.

November 01, 2009

இதழால் 'கவி' எழுது...........!!


யார் யாரோ
என் கவிதையை
பாராட்டிய போதெல்லாம்
சும்மாதான் இருந்தது மனசு
நீ பாராட்டாய் தந்த
முதல் முத்தம் பெறும் வரை!பிடிவாதம் உனக்கு மட்டுமல்ல
உன் முத்தத்திற்கும் தான்
பார் எத்தனை
மெதுவாக உன் உதடுகள்
என்னைவிட்டு
விலகுகிறது!உனக்காக
ஏதாவது எழுத
ஆரம்பித்தால் மட்டுமே
கவிதை வரைகிறது பேனா...
காதல் 'மை' நிரம்பினால் தானே
கவிதை பிறப்பிக்கும்
என் பேனாவும்!!
உனக்கொன்று தெரியுமா..?
நான் கவிதை எழுதுவது
என் வீட்டிலுள்ளவர்களுக்கு
புதுமை...
ஆனால் நான்
உனக்கே உனக்கான கவிதை
என்பதில்தான்
எனக்கு 'நிரம்ப' பெருமை!!உன்னை எதுவும் கேட்காமலே
உன் கவிதைகளை விரும்ப ஆரம்பித்தேன்
எனை எதுவும் கேட்காமலே
நீ என்னையே விரும்புகிறாய்
என்பதை சற்றேனும்
உணராமல்!!!
உனக்காய் எழுதிய
கவிதைகளை
உன் நெஞ்சில்
இதழால் அச்சடிக்கப் போகிறேன்
'முத்த'புத்தகம் வெளியிட
நீ தயாரா???உனக்காக எழுதிய
கவிதை எனத்தெரிந்தும்
"எனக்கா??' என
கேட்டு புன்னைக்கும்
உன் சிரிப்பிற்கு முன்
என் கோபம் செயலிழந்து
போகின்றதடா போக்கிரி!
முதன்முறையாக
மிக அருகாமையில் நீ...!
இயங்க இயலவில்லை
என் இதயத்திற்கு,
திணறித்தான் போனேனடா...
என்னை உன் இதழ்கள்
இயக்கும்வரை!!!

October 01, 2009

என் பொம்முக்குட்டி அம்முவுக்கு...... கல்யாணம் !!!

காலையிலிருந்தே ஏதோ ஒருவித மன இறுக்கம், தேவை இல்லாமல் அடிக்கடி கோபம் வந்தது, அலுவல் நேரம் முழுவதும் என்னை தொத்திக்கொண்ட படபடப்பிற்கான காரணம் உணராமலே மாலை வீடு வந்து சேர்ந்தேன்,

வீட்டு வாசலில் குழந்தையுடன் காத்திருந்த என் மனைவி,


"என்னங்க இன்னுமா அதையே நினைச்சுட்டு இருக்கிறீங்க?" என்றாள்.

அட! நான் ஏன் இப்படி இருக்கிறேன்னு எனக்கே புரியலை, இவ எதை சொல்றா???


அவளுக்கு பதலளிக்கமால்,

என்னிடம் தாவி வந்த குழந்தையை முத்தமிட்டு, அள்ளிக்கொண்டு, வீட்டினுள் நுழைந்தேன்.

என் கனத்த அமைதியை பொருட்படுத்தாமல் , கேள்வி கேட்டு துளைக்காமல் காஃபியுடேன் வந்தாள் மனைவி.
வீட்டில் என் அம்மாவும் தங்கையும் இல்லை, வெளியில் சென்றிருக்கிறார்கள் என்று குழந்தை கூற அறிந்துகொண்டேன் ,

சிறிது நேர அமைத்திக்கு பின், என் மனைவி பேச்சை ஆரம்பித்தாள்,


"இதுக்கு போய் இவ்வளவு அப்சட் ஆகலாமா??.......சொன்னது யாரு உங்க செல்ல தங்கச்சி தானே??, அதுவும் அவ ஏதும் தப்பா சொல்லிடலியே, பின்ன எதுக்கு உங்களை நீங்களே குழப்பிகிறீங்க??" என்றாள் என் மனைவி,


"ஹும்...."


"இவ்வளவு நாளும் எது செய்தாலும், உங்க கிட்ட கேட்டு கேட்டு செய்தா, இப்போ அவளை கட்டிக்க போறவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுக்கலாம்னு சொல்றா.........அதுல என்ன உங்களுக்கு அவ்ளோ இகோ???"


"இகோ இல்லமா.........இனிமே அவளுக்கு நான் இரண்டாம் பட்சம் தானே, அதை தான் என்னால தாங்கிக்க முடியல"

" ஹையோ ஹையோ .....என்னங்க இது சின்ன குழந்தை மாதிரி பேசுறீங்க, நீங்க தானே கல்யாணம் பண்ணிக்கோ பண்ணிக்கோ ன்னு வற்புறுத்தி , நீங்களே மாப்பிள்ளையும் பார்த்து உங்க தங்கை கல்யாணத்தை ஏற்பாடு பண்றீங்க.......இப்போ அவ ஒரு வார்த்தை எதார்த்தமா சொல்லிட்டா, கல்யாண ஏற்பாடு எதுவா இருந்தாலும், அவர் கிட்டவும் ஒரு வார்த்தை கேட்டுடலாம் அண்ணா ன்னு, அதுக்கு ஏங்க உங்களுக்கு இவ்ளோ கோபம் வருது உங்க தங்கச்சி மேல????"


"ச்சே ச்சே.........அவ மேல எனக்கு எப்பவுமே கோபம் வராது.........ஆனா லேசா மனசு வருத்தமா இருக்கு, இவ்ளோ நாள் அவளுக்கு எல்லாமே நான்தான்னு பெருமிதமும் கர்வமும் இருந்துச்சு, அதெல்லாம் பங்கு போட்டுக்க இனொருத்தர்கு அவ வாழ்கையில இடம் வந்துடுச்சேன்னு நினைக்கிறப்போ......."

"விட்டு கொடுக்க முடியல ............அப்படிதானே???"

"ஹும்..."


"அபியும் நானும் படத்துல வர்ற பிரகாஷ் ராஜ் மாதிரியே ஆகிட்டு வர்றீங்க நீங்க...."


"..........."

"அவராச்சும் மகள் விரும்பிய மாப்பிள்ளை மேல பொறாமை பட்டார், நீங்க........நீங்களே மாப்பிள்ளையும் பார்த்துட்டு, கல்யாணம் கட்டிக்கோன்னு அவளையும் போட்டு பாடா படுத்திட்டு, இப்போ இப்படி பொலம்பறது நல்லாவே இல்லீங்க........"


பதில் ஏதும் சொல்லாமால் அவ்விடம் விட்டு நகர்ந்து, பால்கனிக்கு சென்றேன்.......என் மனைவி சொல்வது மிகவும் சரியே என என் உள் மனம் உறுத்தியது.

கல்யாணம் பண்ணிக்கோன்னு அவளை நச்சரித்து நான் தானே,
நான் பார்க்கிற மாப்பிள்ளை அவளுக்கும் பிடிச்சு போய்டாதான்னு ஆசை பட்டவனும் நான் தானே...........பின் ஏன் இப்போ அவளை விட்டுதர இயலவில்லை எனக்கு, ஹும்ம்.....

இதுக்குதான் பெத்த பொண்ணா இருந்தாலும் சரி, கூட பிறந்த தங்கச்சி, அக்காவா இருந்தாலும் சரி.......பாசமே வைக்க கூடாது, கல்யாணம் கட்டிக்கொடுக்கிறபோ எவ்ளோ மன உளைச்சல் வருது.........கட்டிக்கொடுக்கனுமேன்னு கடமை உணர்வு ஒரு பக்கம் ,விட்டு கொடுக்க முடியாம தடுமாற்றம் மறு பக்கம் , பிரிவின் வலி ஒரு புறம்.... ஹும்.

தளர்வுடன் அங்கிருந்த நாற்காலியில் உட்கார எத்தனித்த போது தான் கவனித்தேன்.......என் தங்கையின் ஐபாட் அந்த இருக்கையில் இருப்பதை, என் தங்கை சற்று நேரத்திற்கு முன்பு வரை வழக்கம் போல் பால்கனியில் அமர்ந்து பாட்டு கேட்டு கொண்டிருந்திருக்கிறாள் என புரிந்துக்கொண்டேன் . இப்போதெல்லாம் அடிக்கடி தனியா பால்கனியில பாட்டு கேட்டுட்டு தனிமையாவே இருக்கிறாளே , அது ஏன்........??

கவனமாக அவளது ஐபாடை எடுத்து அருகில் இருந்த ஸ்டூலில் வைக்கும் போது தான் என் கண்ணில் பட்டது அதன் அடியில் இருந்த வாழ்த்து அட்டை....

Happy Birthday my beloved Brother!!

என்று எழுதிருந்த ஓர் அழகான வாழ்த்து அட்டை,

ஹும்........அடுத்த வாரம் வர இருக்கும் எனது பிறந்த நாளிற்கு இப்போதே வாழ்த்து அட்டை வாங்கி விட்டாள் போலும், அவள் கொடுக்கும்போது பார்த்துக்கொள்ளலாம் என்று ஐபாடிற்கு அருகில் வைக்கையில், அதினுள்ளிருந்து ஒரு துண்டு காகிதம் விழுந்தது........

அதில் பொறிக்கப்பட்டிருந்த வரிகள்............

அண்ணனுக்காக.........!!

அண்ணன் எனக்கு எல்லாமாயிருந்தான்...

சிறு பெண்ணாக இருக்கையில்
பட்டு பாவாடை சர சரக்க
"அண்ணா பூ வைச்சு விடுண்ணா"
என்று மல்லி சரம் நீட்டினால்,
"முடி கொஞ்சம் கலைந்திருக்கே ...?" என்று
என் தலை வாரி
பூச்சுட்டுவான் என் அண்ணா !!

பக்கத்து
வீட்டு காயத்ரி
சைக்கிள் ஓட்டுவதை

ஏக்கத்தோடு பார்த்த எனக்கும்

பழகிக் கொடுத்தான்!


மழை ஓய்ந்த பின்

மரக்கிளையினை உலுப்பி

எனைத் தெப்பமாய் நனைத்து...

நான் மயிர்க் கூச்செறிந்து

சிணுங்கி நிற்கும்
அழகை ரசிப்பதில்
அலாதிப் பிரியம் அவனுக்கு!


என்
எச்சில் கையால் - அவனுக்கும்
தின்பண்டம் ஊட்டினால்

சுவைத்து சிரிப்பான்!

கல்லூரியில் படிக்கும் போதும்

கணக்குப் பாடம்
சொல்லித்தர கேட்பேன்,
எப்படிச் சொன்னாலும்

இந்த 'மர மண்டைக்கு' ஏராதாம்
என்று
குட்டு வைப்பான் ....!
நான் அழுது முடிக்கும் வரையில்

என் தலை

அவன் தோழில் சாய்த்துக்கொள்வான்!


அவனுக்கு கல்யாணமான பின்பு

அண்ணியோடு அவன்..

அண்ணன் எனக்கு
அன்னியனாகி
போனது அன்றுதான்.

நானில்லை..

இனி உன் வாழ்வில்
என்று
என்னை நானே விலக்கிக் கொள்ள...
'

உன் அண்ணா'
உனக்கு
அன்று போல்தான் என்றென்றும் என
என் கை பிடித்து

அவன் கையோடு எனை சேர்த்தபோது,

தலை சாய்ந்தேன்.....

அண்ணியின்
தோழில்!!

அண்ணன் என் நண்பன்

அண்ணன் என் எல்லாம்

அப்பாவின் காலத்திற்குப்பின்
அண்ணன்
எனக்கு அப்பாவானான்....!!!

இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் அண்ணா!!


வரிகளை படித்து முடிக்கையில் ,
நெஞ்சில் மீண்டும் அதே பெருமிதமும்,
என் தங்கையின் திருமணத்திற்கு பின்பும்
அவள் நெஞ்சில்
நான் எப்போதுமே......
'உசத்தி கண்ணா...உசத்தி'
என்ற பெருமையும் துளிர்விட,
கண்ணில் பூத்த நீர் துளிகளை
தடுக்காமல் வழியவிட்டேன்!!!

May 20, 2009

உன்னிடத்தில்.....சரணடைந்தேன்!! - 5

பகுதி - 1 பகுதி - 2 பகுதி - 3 பகுதி - 4

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்கின் உள் மனதில் ஏதோ உறுத்தியது. இவனை சும்மா விடக்கூடாது என்று முடிவெடுத்துக்கொண்டான்.

மறுநாள் காலை தீபா ட்யூட்டியில் இருக்கும்போது கார்த்திக்கிடமிருந்து ஃபோன் வந்தது. மிகவும் முக்கியமான விஷயம், அதனால் உடனடியாக தன்னை தனது வீட்டில் வந்து சந்திக்கும்படி அவன் கூறியதும், அரைநாள் லீவிற்கு சொல்லிவிட்டு அவனை சந்திக்க சென்றாள் தீபா.

கார்த்திக்கின் வீட்டிற்கு சென்றதும்,ஹாலில் இருந்த கார்த்திக்கின் அம்மா தீபாவிடம்,

"வாம்மா தீபா.....நல்லாயிருக்கிறீயா..........ரொம்ப நாளா வீட்டு பக்கமே வரலியேமா"

"நல்லாயிருக்கிறேன்மா..........நீங்க நல்லாயிருக்கிறீங்களா?.......ஒரு வாரம் மெடிக்கல் கேம்ப்க்கு போயிருந்தேன், அதான் உங்களை வந்து பார்க்க முடியல........கார்த்திக்...இருக்...கா.."

"ஆங்.........கார்த்திக் முன்னாடி ஆஃபீஸ் ரூம்ல உனக்காக தான் வெயிட் பண்ணிட்டு இருக்கான், போய் பாருமா.......பேசிட்டு இருங்க நான் காஃபி எடுத்துட்டு வரேன்"

"சரிமா....."

கார்த்திக்கின் அறை கதவினை தட்டிவிட்டு, அனுமதி பெற்று உள்ளே சென்றாள் தீபா,

"வாங்க டாக்டர் மேடம்..........எப்படி இருக்கிறீங்க?"

"ம்ம் நல்லாயிருக்கிறேன்.......சரி எதுக்கு வர சொன்ன கார்த்திக்"

"சொல்றேன் ......சொல்றேன், முதல்ல உட்காரு இந்த சேர்ல"

" ம்........ஒகே....சரி இப்போ சொல்லு......என்ன விஷயம்?"

"நீ நேத்து பெயில்ல ஒருத்தனை கூட்டிட்டு போனியே ...அதான் அந்த சரஸ்வதியோட புருஷன்...முத்து...அவன் செத்துட்டான்"

"வாட்............முத்து செத்துட்டாரா???"

"என்ன தீபா ரொம்ப அதிர்ச்சியா இருக்க........இன்னொன்னு சொல்றேன் கேளு........அவன் சாவு சாதாரண சாவு இல்ல........கொலை....."

"கொ.......கொலையா..........."


"ஆமா.........சரஸ்வதியோட புருஷனை யாரோ கொலை செய்துட்டாங்க........போலீஸ் இன்வஸ்டிகேஷன் நடந்திட்டிருக்கு"

"யாருன்னு கண்டுபிடிச்சுட்டாங்களா??......"

"இன்னும் இல்ல.............ஆனா சில ஆதாரங்கள் போலீஸ் கையில கிடைச்சிருக்கு, அதை வைச்சு கண்டிப்பா குற்றவாளி யாருன்னு சீக்கிரம் கண்டு பிடிச்சிடும் எங்க டிபார்ட்மெண்ட்"

"................"

" இந்த கொலை விஷயமா...........உன்கிட்ட சில கேள்விகள் கேட்க வேண்டியிருக்கு........"

"எ......என்கிட்ட என்ன கேட்கனும்?"

"இந்த கொலைக்கும் உனக்கும் சம்பந்தம் இருக்கும்னு ..........நாங்க சந்தேகப்படுறோம்"

"புல்ஷிட்..........என்ன உளர்ற கார்த்திக்"

"ஏன் டென்ஷன் ஆகுற தீபா.............சந்தேகம்னு தானே சொன்னேன்.........இன்னும் இன்வெஸ்டிகேஷன் கேள்விகளே கேட்க ஆரம்பிக்கல அதுக்குள்ள டென்ஷன் ஆனா எப்படி?? கூல் டவுன் டாக்ட்டர் மேடம்"


"சந்தேகம் உன் டிபார்ட்மெண்டுக்கு இல்ல..........உனக்குதான் என் மேல சந்தேகம்.........நீ பொய் கேஸ் போட்டு முத்துவை உள்ள தள்ளினபோ, சரஸ்வதிக்காக நான் அவரை பெயில்ல எடுத்தது உனக்கு பிடிக்கல, என் மேல கோபம் உனக்கு, அதான் இப்படியெல்லாம் பேசுற"

"என்ன தீபா..........ரொம்ப சமார்த்தியமா பேசுறதா நினைப்பா??...............உன் மேல சந்தேகம் மட்டுமில்ல ........நீ தான் கொலை பண்ணினன்றதுக்கு என்கிட்ட ஆதாரமே இருக்கு"

".................."

தன் மேஜைக்கு அடியில் இருந்து ஒரு சிறு பாக்கெட்டை எடுத்து பிரித்து காண்பித்தவன்.........

"இது........என்னன்னு தெரியுதா டாக்டர்........."

"அ......து...........இது......ஸ்ரிஞ்ச்"

"நீ விஷ ஊசி போட பயன்படுத்தின ஸ்ரிஞ்ச்.............."

"கா.......கார்த்திக்........."

தன் இருக்கையில் இருந்து எழுந்து, எதிரில் அமர்ந்திருந்த தீபாவின் இருக்கையின் அருகில் வந்து நின்றான் கார்த்திக், தீபா மெதுவாக எழுந்து நின்று , தன் நெற்றி பொட்டில் பூர்த்திருந்த வேர்வை துளிகளை துடைத்துக்கொண்டாள்.

" ஏன்..........ஏன் தீபா இப்படி பண்ணின...........நீ பண்ணியிருக்கிறது எவ்வளவு பெரிய தப்பான முட்டாள்தனம்னு உனக்கு தெரியுமா??"

"கார்த்தி.........நான்.........."

"உன் மருத்துவ தொழிலுக்கு மிக மிக அவசியமான பொறுமையும், மனிதாபிமானமும் எங்க போச்சு தீபா............."

"கார்த்தி........சரஸ்வதிக்கு அவன் பண்ணின கொடுமையெல்லாம் பார்த்துட்டு என்னால சும்மா இருக்க முடியல"

"அதான் நான் போலீஸ் கவனிப்பு கவனிச்சுக்கிறேன்னு சொன்னேனே........அப்புறம் என்ன???"

"ஹும்.......ரெண்டு நாள் ஸ்டேஷன்ல வைச்சு முட்டிக்கு முட்டி தட்டினா இந்த மாதிரி ஆழுங்க திருந்திடுவாங்கன்னு நினைக்கிறியா??............நோ நாட் அட் ஆல் கார்த்தி"

"டோன்ட் பி எமோஷ்னல் தீபா...............இப்படி தப்பு பண்ற ஒவ்வொருத்தனையா கொலை பண்ணிட்டு இருக்க போறீயா??..........."

"கார்த்தி..........நான்........கோபத்துல...........அப்படி ஒரு காரியம்........."

அதற்கு மேல் வார்த்தைகள் வராமல் திக்கியது,
தொண்டை அடைத்தது,
அவளது இதயதுடிப்பு நொண்டி அடித்தபடி இருக்க,
பயத்தில் ஒருவித நடுக்கம் உடலெங்கும் பரவியது தீபாவிற்கு!!

"கார்த்திக்.........."

"ம்ம்....."

"நீ........நீ ......இந்த ஆதாரத்தை வைச்சு என்னை அரெஸ்ட் பண்ண போறீயா??"

"ஆமா.........கைது பண்ணத்தான் போறேன்......"

"கா......ர்த்.......திக்"

"கைதி பண்ணி..............ஆயுள் தண்டனை கொடுக்க போறேன்..........திருமதி தீபா கார்த்திக் குமாரா"

சிறு குறும்பு புன்னகையோட தீபாவிற்கு இன்னும் நெருக்கமாக வந்த கார்த்திக்,

"என்ன டாக்டரம்மா..........ரொம்ப பயந்துட்டீங்களோ??.........ஹா ஹா........விஷ ஊசி போடுற அளவுக்கு தைரியம் இருக்கு, அப்புறம் தடயத்தோடு மாட்டினதும் பேந்த பேந்த முழிச்சா எப்படி??"

"................"

"சரி........கூல் டவுன்.........சரஸ்வதி புருஷன் முத்து சாகல"

"நீ....நீ என்ன சொல்ற கார்த்திக்?"

"என்ன........நீ போட்ட விஷ ஊசி எப்படி வேலை செய்யாம போச்சுன்னு பார்க்கிறியா??"

"..............."

" நீ முத்துவுக்கு நேத்து ராத்திரி போட்டது வெறும் சத்து ஊசி............."

".............."

" நீ திடீருன்னு சரஸ்வதி புருஷன் மேல இரக்கப்பட்டு பெயில்ல எடுத்ததுமே எனக்கு ஒரு சின்ன டவுட்.........இப்படி ஏதாச்சும் தத்தக்கா பித்தக்கான்னு பண்ணிடுவியோன்னு நினைச்சேன், மோர் ஓவர்.........நீ முத்துவ பெயில்ல கூடிட்டு போறப்போ......அவன் உன்னையும் என்னையும் நம்பாம கோபமா முறைச்சுட்டே போனான், அவனால உனக்கு ஏதும் ஆபத்து வந்துடக்கூடாதுன்னு அவனை கண்கானிக்க ஒரு கான்ஸ்டபிளை அப்பாயிண்ட் பண்ணினேன், அப்படியே உன்னையும் நான் வாட்ச் பண்ணிட்டு இருந்தேன்"

".............."

"நான் எதிர் பார்த்த மாதிரியே நீ முத்துவை உன் ஃப்ரண்டோட க்ளினிக்ல அட்மிட் பண்ணின...........நைட் நீ நர்ஸ்கிட்ட போட கொடுத்த விஷ ஊசியையும் நான் தான் மாத்தினேன்......"

"கார்த்தி.......நான் தெரியாம.........ரொம்ப எமோஷனலாகி.........இப்படி பண்ணிட்டேன்..........."

"இந்த கோபம்..........தண்டிக்கனும்ன்ற உணர்வெல்லாம் இத்தோட விட்ரு தீபா.......சரஸ்வதியையும் முத்துவையும் எப்படி நல்ல படியா வாழவைக்கிறதுன்னு யோசிப்போம், இனியும் அவன் திருந்தலீனா............விஷ ஊசி எல்லாம் வேணாம்........என்கவுண்ட்ர்ல போட்டு தள்ளிடுறேன்"

" நீங்க போட்டு தள்ளினா மட்டும் ............நியாயமா?? தொழில் தர்மமா??..........இது நல்லா கதையா இருக்குதே"

படபடப்பு குறைந்து, மெல்லிய புன்னகை படர்ந்திருந்தது தீபாவின் முகத்தில்.

"சரி..சரி அதெல்லாம் இருக்கட்டும்......எப்போ அரஸ்ட் வாரண்டோட டாக்டரம்மாவை வந்து பார்க்கட்டும்......."

"..............."

"என்ன தீபா......பதிலே காணோம்"

"அரெஸ்ட் வாரண்ட் எதுக்கு கார்த்திக்...........அதான் நான் உன்கிட்ட சரணடைஞ்சுட்டேனே"

என்னை விழிகளால்
கைது செய்தவளை
நான் விலங்கினால்
கைது செய்ய முடியுமா??

என்னிதய சிறைக்குள்
குடியிருப்பவளை -இனி
எந்த சிறைக்குள்
சென்றடைக்க முடியும்???

கைதியிடமே சரணடைவது
காதலில் மட்டுமே சாத்தியம்!

உன்னிடத்தில் நான் சரணடைந்தேன்!முற்றும்.

May 07, 2009

உன்னிடத்தில்.........சரணடைந்தேன்!!! - 4

பகுதி - 1
பகுதி - 2
பகுதி - 3


தன்னையும் தீபாவையும் ஹாஸ்பிட்டல் வராண்டாவில் கூர்ந்து கவனிக்கும் அந்த உருவம் யாராக இருக்கலாம் என்று கார்த்திக்கால் சரியாக யூகிக்க முடிந்தது.

"தீபா........சரஸ்வதியை பத்திரமா பார்த்துக்கோ.....அவ வாக்குமூலத்தில உண்மையை சொல்லலியேன்னு கோபப்படாதே, கான்ஸ்டபி்ள்ல இந்த அறைக்கு பாதுகாப்பா விட்டுட்டு போறேன்.."

"கான்ஸ்டபிள் எல்லாம் எதுக்கு கார்த்திக்......."

"அதெல்லாம் அப்புறமா சொல்றேன் தீபா........நான் இப்போ உடனடியா போகனும்" என்று அவளது பதிலுக்கு கூட காத்திராமல் அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

அவனது சீற்றமான முக மாறுதலும், பரப்பரப்பான நடையையும் சிறிது நேரம் குழப்பத்துடன் பார்த்துக்கொண்டுருந்த தீபா, மீண்டும் சரஸ்வதியின் அறையினுள் வந்தாள்.

தீபாவை கண்டதும், சரஸ்வதியின் கண்கள் தானாக வழிந்தன.

"டாக்டரம்மா......என்னை மன்னிச்சிடுங்க........நீங்க வந்துட்டு போன கொஞ்ச நேரத்துல என் புருஷன் வந்தாருமா........நடந்த உண்மையெல்லாம் உங்ககிட்ட சொன்னா, என்னைய மட்டுமில்ல உங்களையும் சேர்த்தே தீர்த்து கட்டிருவேன்னு மிரட்டினாரு.........அதான்........நான் போலீஸ் கிட்ட...அப்படி....என்னை மன்னிச்சிடுங்கமா"

முகம் சிவக்க அவள் தேம்பி தேம்பி அழுவதை கண்டதும் தீபாவின் மனம் இளகியது.


"ஹும் ....நான் மன்னிக்கிறதெல்லாம் இருக்கட்டும், நீ தைரியமா இரு...........உனக்கு இப்போ வேண்டியதெல்லாம் கம்ப்ளீட் ரெஸ்ட், எதையும் போட்டு மனசை குழப்பிக்காம இரு சரஸ்வதி"

தீபா அவளிடம் தான் அவளை தேடி அவளது வீட்டிற்கு சென்றதையும், அவளது மகன் நன்றாக இருக்கிறான் என்பதையும் கூறி அவளை தைரியப்படுத்தினாள்.

பின் ட்யூட்டியில் இருந்த நர்ஸிடமும், கான்ஸ்டபளிடமும் சரஸ்வதியை சந்திக்க யார் வந்தாலும் அனுமதிக்க வேண்டாம் என எச்சரித்து விட்டு, தனது அறைக்கு சென்றாள்.
ஒரு மணிநேரத்தில் கார்த்திக்கிடமிருந்து தீபாவிற்கு ஃபோன் கால் வந்தது, அதில் அவன் சொன்ன செய்தியை கேட்டு அதிர்ச்சி அடைந்த தீபா, உடனடியாக அவன் சொன்ன போலீஸ் ஸ்டேஷனுக்கு விரைந்தாள்.

அங்கு சென்றதும், கார்த்திக்கும் மற்றுமொரு போலீஸ்காரரும், சரஸ்வதியின் கணவனை அடி பிண்ணிக்கொண்டிருந்ததை கண்டதும்....

"கா..............கார்த்திக்................ஸ்டாப் இட்........."

தீபாவின் குரல் கேட்டு திரும்பிய கார்த்திக், மூச்சிரைக்க.....

"ஹாய் தீபா......வா......."

"வாட் இஸ் ஆல் திஸ் கார்த்தி..........இப்படி போட்டு அடிக்கிற??"


"இவனை மாதிரி ஆளுங்களை எல்லாம் இப்படி தான் கவனிக்கனும், ........பொண்டாட்டிய மிரட்டி உண்மையை மறைச்சுட்டா?? சும்மா விட்டுருவோமா...........ஏதாவது ஒரு கேஸ் போட்டு உள்ள தள்ளி இப்படி லாடம் கட்டினா தான் இவனுங்க எல்லாம் சரிபட்டு வருவானுங்க......"

சொல்லிக்கொண்டே சரஸ்வதியின் கணவன் மீது தன் பூட்ஸ் காலால் ஓங்கி ஒரு உதை விட்டான் கார்த்திக்.

"இப்படி காட்டுமிராண்டிதனமா போட்டு அடிக்கிறதை முதல்ல நிறுத்து கார்த்தி......."

"என்ன தீபா புரியாம பேசுற..........இது தான் போலீஸ் வே ஆஃப் ட்ரீட்மெண்ட்......."

"அதுக்காக இப்படியா...........பொய் கேஸ் போட்டு உள்ள தள்ளுர குறுக்கு வழில எல்லாம் கார்த்திக் ஐ.பி.எஸ் போவாருன்னு நான் எதிர்பார்க்கவே இல்லை"

"நீ தானே தீபா...........சரஸ்வதி புருஷன் மேல நடவடிக்கை எடுக்கனும்னு அவகிட்ட வாக்குமூலம் வாங்க கூட்டிட்டு போன.......அவளை மிரட்டி அப்படி வாக்குமூலம் மாத்தி கொடுக்க வைச்சதே இந்த கபோதி தான்.........அதான் இப்படி உள்ள தள்ளி நொறுக்கி எடுக்கிறேன்"

மீண்டும் சரஸ்வதியின் கணவனை கார்த்திக் அடிக்க எத்தனிக்க............தீபா....

"தட்ஸ் இட் கார்த்திக்.............ஜஸ்ட் ஸ்டாப் திஸ் ............நான் சரஸ்வதி புருஷனை பெயில்ல எடுக்க போறேன்"

"தீ.........தீபா.........அர் யூ ஜோக்கிங்??"

"நோ கார்த்திக்.............ஐ அம் நாட்........ஒன் மினிட் வெயிட்" என்று கூறிவிட்டு தன்னுடன் அவள் அழைத்து வந்திருந்த வைக்கீல் ஒருவரை வெளியில் சென்று அழைத்து வந்தாள்.

"அஸிஸ்டண்ட் கமீஷ்னர் சார்......இவர் என்னோட வக்கீல் மிஸ்டர்.நாராயணமூர்த்தி, சரஸ்வதி புருஷன் முத்துவை பெயில்ல ரிலீஸ் பண்ணுங்க"

"தீ.......தீபா..........."

"நான்....முத்துவை பெயில்ல எடுக்க வந்திருக்கிற டாக்டர் தீபா.......புருஞ்சுதா அஸிச்டண்ட் கமிஷ்னர் சார்??"

"ஸா....ஸாரி டாக்டர்........."

பெயில் பேப்பர்ஸில் கையெழுத்து வாங்கிவிட்டு, தன்னருகில் நின்றிருந்த கான்ஸ்டபளிடம் முத்துவை ரிலீஸ் பண்ண சைகை காட்டினான் கார்த்திக்.

போலீஸ் அடியில்........கசக்கி பிழியப்பட்ட நிலையில் இருந்த முத்து, தட்டு தடுமாறி எழுந்து தீபாவுடன் சென்றான்.

"வாங்க முத்து...........பக்கத்துல இருக்கிற என் ஃப்ரண்டோட க்ளீனிக்ல உங்க காயங்களுக்கு மருந்து போட்டுட்டு அப்புறமா உங்க வீட்ல கொண்டு போய் விடுறேன்" என்று தீபா அவனை போலீஸ் ஸ்டேஷனை விட்டு அழைத்து சென்றாள்.

தீபாவின் செய்கைகள் கார்த்திக்கின் கோபத்தை அதிகரித்தது, அவளுடன் சென்ற முத்துவை அனல் பறக்கும் பார்வை பார்த்தபடி.......

'இந்த தடவை டாக்டரம்மா சரஸ்வதி மேல வைச்சிருக்கிர பாச செண்டிமெண்ட்னால தப்பிச்சுட்ட.........வேற ஒரு கேஸ்ல மாட்டாமலா போய்டுவ........அப்போ வைச்சுக்கிறேன்டா உனக்கு கச்சேரி' என்று மனதிற்குள் நினைத்துக்கொண்டான் கார்த்திக்.

வாசல்வரை தீபாவுடன் மெதுவாக நடந்து சென்ற முத்து, கதவருகே நின்று கார்த்திக்கை கோப பார்வையுடன் திரும்பி பார்த்தான்.............

'டேய் போலீஸ்காரா.......நீயும் இந்த பொம்பளை டாக்டரும் சேர்ந்து போடுர ட்ராமா எனக்கு தெரியாதுன்னு நினைச்சியா?? வேணும்னே என்னை பொய் கேஸ்ல உள்ள போட வைச்சு, அடி பிண்ணி எடுத்துட்டு, இப்போ பெயில்ல எடுக்கிற மாதிரி அவளும் நீயும் சேர்ந்து ட்ராமாவாடா பண்றீங்க.........உங்க இரண்டு பேருக்கும் வைச்சிருக்கிறேன்டா ஆப்பு....."

முத்துவின் அந்த சுட்டெரிக்கும் பார்வையை கண்டதும் கார்த்திக்..........

[தொடரும்]


பகுதி - 5

April 29, 2009

உன்னிடத்தில்......சரணடைந்தேன்!!! - 3

பகுதி - 1

பகுதி - 2

சரஸ்வதி விஷமருந்திவிட்டாள் என்று அந்த முதியவர் கூறியதும், கண்ணீருடன் ஸ்தம்பித்து நின்ற டாக்டர் தீபா,
தன் கையிலுள்ள பிஸ்கட் பாக்கெட்டையும், தன்னையும் மாறி மாறி பார்த்து புன்னகைக்கும் சரஸ்வதியின் குழந்தையை பார்த்ததும், துக்கம் நெஞ்சை அடைக்க.............அந்த சிறுவனை தன்னிடம் அணைத்துக் கொண்டு கன்னத்தில் முத்தம் பதித்து, தான் வாங்கி வந்திருந்த பிஸ்கெட்டை கொடுத்தாள்.

அந்த வயதான பெண்மனி, தன் கண்களை துடைத்தபடியே உடைந்த குரலில் .......மீண்டும் பேச தொடங்கினாள்,

"அந்த புள்ள சரஸு மருந்து குடிச்சு இரண்டு நாள் ஆச்சுமா, பெரிய ஆஸ்பத்திரில தான்மா சேத்திருக்கு........உசிர காப்பாத்திட்டாக, ஆனா கொத்துயிரும் கொலையுருமா கிடைக்குதுமா ஆஸ்பத்திரில,அதான் அவ பையனை நான் பாத்துக்கிறேன்" என்றார்.

சரஸ்வதி உயிரோடு தான் இருக்கிறாள் என்று தெரிந்து நிம்மதி பெருமூச்சினால் தீபாவின் நெஞ்சு ஏறி இறங்கியது. சரஸ்வதியின் பையனை அந்த பெண்ணிடம் கொடுத்துவிட்டு, அவரது கைகளில் இரண்டு நூறு ரூபாய் நோட்டுகளை திணித்துவிட்டு,

"பையனுக்கு சாப்பிட ஏதாச்சும் வாங்கி கொடுங்க பாட்டி, நான் சரஸ்வதியை ஹாஸ்பிட்டல்ல போய் பார்க்கிறேன்" என்று கூறி, வேக வேகமாக ஆஸ்பத்திரிக்கு விரைந்தாள் தீபா.

அங்கு சரஸ்வதி அனுமதிக்கப்பட்டிருந்த சிகிச்சை பிரிவினை கண்டறிந்து,ட்யூட்டில் இருந்த டாக்டரிடம் சரஸ்வதியின் உடல் நிலையினை பற்றி கேட்டறிந்த தீபா, சரஸ்வதி இருந்த அறைக்கு சென்றாள்.

கழுத்துவரை போர்த்தப்பட்டு, தலை கலைந்து, முகம் கறுத்துப்போய்............பரிதாபமாக படுத்திருந்த சரஸ்வதியை பார்த்ததும், தான் ஒரு டாக்டர் என்பதையும் மீறி அழுகை வந்தது தீபாவிற்கு. தன்னை கட்டுப்படுத்திக் கொண்டவள், சரஸ்வதியின் படுக்கையின் அருகில் அமைதியாக நின்றிருந்தாள்.

சில நிமிடங்கள் கழித்து கண்திறந்த சரஸு, டாக்டர் தீபாவை பார்த்ததும், விசும்பலுடன் அழ துவங்கினாள்.
தீபா படுக்கையின் அருகில் இருந்த இருக்கையில் அமர்ந்து, சரஸ்வதியின் கைகளை தடவியபடி ஆறுதல் கூறி,சரஸ்வதி மருந்து குடித்து தற்கொலை செய்து கொள்ளும் முடிவிற்கு சென்றதின் காரணம் கேட்டாள்.


தான் மேற்கொண்டு படிப்பதையோ, வேலைக்கு செல்வதையோ விரும்பாத தன் கணவன், தன்னை கடுமையாக தாக்கியது மட்டுமில்லாமல், காப்பியில் விஷத்தை கலந்து குடிக்க வற்புறுத்தி,

மறுத்த சரஸ்வதியிடம் அவளது மூன்று வயது மகனுக்கு அவள் கண் எதிரிலேயே மண்ணென்னைய் ஊற்றி கொளுத்த போவதாக மிரட்டியதும்,குடி போதையில் தன் கணவன் ஏடாகூடாமாக ஏதும் செய்து விட கூடாது என்று, மகனை காப்பாற்றும் எண்ணத்தில் அவனது மிரட்டலுக்கு பணிந்து போனதையும்.......அழுகையின் நடுவில் திக்கி தினறி அடிக்குரலில் சொல்லி முடித்தாள் சரஸ்வதி.

இத்தனை கொடூரகாரனா சரஸ்வதியின் கணவன்???? கோபத்தில் ரத்தம் கொதித்தது தீபாவிற்கு.

அங்கு ட்யூட்டில் இருந்த நர்ஸிடம் , சரஸ்வதியை நன்றாக கவனித்துக்கொள்ளும் படி கூறிவிட்டு, உடனடியாக கார்த்திக்கிற்கு ஃபோன் செய்தாள் தீபா. அவனை நேரில் சந்திக்க முடியுமா என்று கேட்டறிந்து விட்டு, கமீஷ்னர் அலுவலக வளாகத்திலிருந்த கார்த்திக்கின் அலுவலக அறைக்கு சென்றாள் தீபா.

வெளியில் அமர்ந்திருந்த கான்ஸ்டபளிடம் தன் வரவை தெரிவித்து, கார்த்திக்கின் அனுமதி பெற்று , அவனது அறையினுள் பட படப்புடன் நுழைந்தாள் தீபா,

"ஹாய் .....டாக்டர் மேடம் ...வாங்க வாங்க"

"கார்த்திக்............ரொம்ப அர்ஜண்ட்"

"அர்ஜண்ட்டா??.......வராண்டால நேரா போய் லெஃப்ட்ல திரும்பினா லேடீஸ் பாத்ரூம் இருக்கு தீபா"

"ச்சீ விளையாடதே கார்த்திக்...........ஐ அம் டாம்ன் சீரியஸ்"

"ஸாரி ஸாரி.........கூல் டவுன் தீபா........ஏன் இவ்வளவு டென்ஷன்.....இந்தா இந்த தண்ணி கொஞ்சம் குடி"

தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்ட தீபா, ஆஸ்பத்திரியில் சரஸ்வதி தன்னிடம் கூறியதை எல்லாம் அவனிடம் விரிவாக சொன்னாள்.

"டாமிட்.........சரியான ஆயோக்கியனா இருப்பான் போலிருக்குதே இந்த சரஸ்வதியோட புருஷன், சரஸ்வதி கொடுக்கிற வாக்குமூலத்தை வைச்சு அவனை உள்ளே தள்ளி முட்டிக்கு முட்டி தட்டிடலாம்............கம் தீபா..........லெட்ஸ் ஹரி அப்"

இருவரும் விரைந்து , சரஸ்வதியை சந்திக்க ஆஸ்பத்திரி சென்றனர்.

சொட்டு சொட்டாக இறங்கி கொண்டிருந்த சலைன் பாக்கட்டை பார்த்துக் கொண்டிருந்த சரஸ்வதி, கதவு திறக்கப்படும் சத்தம் கேட்டு திரும்பினாள்.

டாக்டர் தீபாவுடன் போலீஸ் சீருடையில் வந்திருந்த கார்த்திக்கை கண்டதும், ஏதும் புரியாமல் விழித்தாள் சரஸ்வதி.

"சரஸ்வதி......நான் சொன்னேன்ல உன் படிப்புக்காக உதவி பண்ற என்னோட நண்பன்னு......அது இவர்தான், அஸிஸ்டண்ட் கமிஷனர் கார்த்திக், ............என்கிட்ட சொன்னதையெல்லாம் இப்போ......வாக்குமூலமா இவர்கிட்ட சொல்லு, மத்ததை இவர் பார்த்துப்பார்"

"................."

"பயப்படாம......நடந்தது என்னன்னு என்கிட்ட சொல்லுங்கமா" என்று கூறிய கார்த்திக், தன்னுடன் வந்திருந்த கான்ஸ்டபளிடம் வாக்குமூலம் எழுதி கொள்ளுமாறு சைகை காட்டினான்.

மிரண்டு போயிருந்த சரஸ்வதி, தன் நாவை ஈரப்படுத்திக் கொண்டு பேச தொடங்கினாள்,

"எனக்கு..........ரொம்ப நாளாவே வயித்து வலி இருந்துச்சு, தாங்கிக்க முடியாமத்தான்........விஷத்தை குடிச்சுட்டேன்........வயித்துல இருந்த புள்ள செத்துப்போச்சு........என்னைய மட்டும் காப்பாத்திட்டாங்களே" என்று ஓ வென அழுதாள் சரஸ்வதி.

சரஸ்வதியின் இந்த பேச்சு மாற்றம்,..... அதிர்ச்சியையும், ஏமாற்றத்தையும் தர, வெறுப்போடு ஒரு பார்வை சரஸ்வதியை பார்த்துவிட்டு, வேகமாக அறையை விட்டு வெளியேறினாள் தீபா.

வராண்டா தூணில் சாய்ந்தபடி நின்றிருந்த தீபாவிடம் வந்த கார்த்திக்,

"இது.......இது தான் நம்ம தமிழ் பொண்ணுங்களோட வீக்னெஸ் தீபா..........."

"ச்சே..........எப்படி ........எப்படி கார்த்திக்.....அப்படியே ப்ளேட்டை மாத்தி போட்டுட்டா அந்த பொண்ணு??"

"நோ டென்ஷன் ப்ளீஸ்...........போலீஸ்னதும் சரஸ்வதி பயந்துட்டா......"

"ஏன் இப்படி இருக்காங்க..........."

"பதி பக்தி..........கணவன் தன்னை கொலையே பண்ணினாலும் காட்டிக்கொடுக்காத .......பதிபக்தி"

"என்ன பக்தியோ..........பாவி அவளை இவ்ளோ கொடுமை படுத்துறான், உண்மையை சொல்லாம மறைக்கிறாளே இவ, எனக்கு வர்ர ஆத்திரத்துக்கு" கோபத்தில் தீபாவின் உதடுகள் துடித்தன.

"தீபா.........காம் டவுண் ..........இதை வேற மாதிரிதான் டீல் பண்ணனும்......ஸோ டோண்ட் வொர்ரி"

"வேற மாதிரின்னா.............என்ன பண்ணப்போறே கார்த்திக்?"

"பொறுத்திருந்து பாருங்க டாக்டரம்மா......."

அந்த டென்ஷனிலும், கார்த்திக்கின் கண்சிமிட்டல் தீபாவின் முகத்தில் லேசான புன்னகையை படர்வித்தது!

அவளது மெல்லிய புன்னகையை தன் அடிமனதில் படம் பிடித்து பதித்துக் கொண்டிருந்த கார்த்திக்............அவனும் தீபாவும் நின்றிருந்த வராண்டாவின் மறுமுனையில் ஒரு உருவம் தூணின் பின்புறமாக மறைந்திருந்து இவர்களை கவனிப்பதை கண்டு சுதாரித்துக்கொண்டான்,

உடனடியாக கார்த்திக்............

[தொடரும்]

பகுதி - 4