பகுதி -1பகுதி - 2பகுதி - 3மீராவின் நாசியிலே சுவாசம் குறைந்து கொண்டே போனது, ICU விற்கு கொண்டுபோகப்பட்டாள் மீரா. செயற்கை முறையில் மீரா மூச்சுவிட ஏற்பாடு செய்வதாகவும், பிழைப்பது சிரமம் ,'keep your fingers crossed' என டாக்டர் கூறினார்.
கையில் மீராவின் குழந்தை.....பசியில் அழுதது,
நர்ஸ் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டுச் சென்றார்.
மீராவிற்கு குழந்தை நல்லபடியாக பிறந்ததும், சுமதி கோயிலுக்கு சென்றுவிட்டு, மாற்று உடைகள் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்றிருந்தார்.
ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் மீரா, பசியினால் அழும் அவள் குழந்தை, தவிப்புடன் நான்..........
திருமணம் ஆகி இன்றைய நாள் வரை, எனக்காக கடவுளிடம் எதுவுமே வேண்டிக்கொள்ளவில்லை...........கடவுள் மீது கோபம், ஏன் எனக்கு இப்படி ஒரு மணவாழ்க்கை அமைத்தாய் என்று,
ஆனால் இன்று...
'கடவுளே...என் மீராவிற்கு உயிர் பிச்சை கொடு,
அவளை என்னிடம் திருப்பி கொடு ப்ளீஸ்,
எனக்கு என் மீரா வேணும்
என்னை விட்டு அவளை பிரிச்சிடாதே!'
நான்.........நானா........நேற்று 'சீ தொடாதே' என்று அருவருத்த நானா இன்று 'என் மீரா' என சொல்கிறேன்???
மீரா உயிருக்காக போராடிய அந்த இரண்டு நாட்களில் தான் எனக்குள் மீரா பதிந்திருப்பதை உணர்ந்தேன்.
நர்ஸின் பாதுகாப்பில் மீராவின் குழந்தை, ஆறுதலாக சுமதியின் குடும்பம், எனினும்........மனதில் வெறுமை,
வீட்டிற்கு வந்தால்....மீரா அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டின் எதிரொலி, அவளின் ரோஜா செடி.........மேஜையின் மேலிருந்த அவளது கைக்கடிகாரம், wash basin கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் நெத்தி ஸ்டிக்கர் பொட்டு, soap dish ல் அவள் உபயோகிக்கும் 'Johnsons baby soap' ......
இப்படி அத்தனையும் அவளை ஞாபகப்படுத்தின,
என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!
கடவுள் புண்ணியத்தில் மீரா உயிர் பிழைத்தாள்.
மீராவின் பெற்றோர் மீராவின் பிரசவத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது என்ற நினைப்பில் அமெரிக்காவிலுள்ள மூத்த பெண்ணின் வீட்டிற்கு சென்றவர்களால் உடன் இந்தியா திரும்ப முடியாத சூழ்நிலை அங்கு,
என் அம்மா அப்பாவும் போன முறை புனே வந்தபோது உடல்நிலை பாதிக்க பட்டதால் நெடுந்தூரப் பயணம் செய்ய முடியாத நிலை.
குழந்தையை பார்க்க ஆசைபட்ட அவர்களிடம்.....குறை பிரசவத்தில் பிறந்ததால் இப்போது உடனே குழந்தையுடன் பிரயாணம் செய்ய இயலாது என அவர்களை சமாளித்தோம்.
அதனால் சுமதிதான் மீராவையும் குழந்தையையும் நன்கு கவனித்துக்கொண்டாள்.
இந்நிலையில் புனே அலுவலகத்திற்கு மாறுதல் ஆகி வந்தான் என் நண்பன் ரகு, மும்பையிலிருந்த அவனது அக்காவிடம் ரகு விவரங்கள் கூற, ரகுவின் அக்கா தன் மகளுடன் எங்கள் வீட்டில் வந்து தங்கி இருந்து கவனித்துக்கொண்டார்.
சிறிது சிறிதாக மீராவின் உடல் நிலை தேறியது.
வீட்டில் நிறையபேர் இருந்ததாலும், மீரா குழந்தையை கவனிப்பதில் பிஸியாக இருந்ததாலும் நான் மீராவிடம் தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.
அன்று ரகுவும் அவனது அக்கா குடும்பமும் மும்பைக்கு புறப்பட்டதும் மீராவிடம் பேசலாம் என நினைத்துச் சென்றேன்.
மீராவின் முகத்தில் ஒரு புது தெளிவு தெரிந்தது.....அது....
தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????இனம் புரியா ஒரு வித தீர்க்கமான பார்வையை என்னால் உணர முடிந்தது மீராவிடம்.
குற்ற உணர்விலும், பயம் தந்த நடுக்கத்துடனும் மிரளும் விழிகளில் புதுவித வெளிச்சம் இருந்தது இப்போது!
நான் மனம்திறக்கும் முன் மீராவே பேச தொடங்கினாள்....
"அடுத்த வாரத்தில் குழந்தைக்கு இரண்டு மாதம் ஆகிடும், தடுப்பூசி போட்டுட்டு......கோயம்புத்தூர் போலாம்னு நினைக்கிறேன். என்னை கூட்டிட்டு போக முடியுமா ......ப்ளீஸ்?"
"ஹும் சரி.......அங்கே போய்ட்டு??"
"அங்க......அவங்க வாரிசை ஒப்படைக்க போறேன்"
தொண்டையில் ஏற்பட்ட அடைப்பை அடக்கிக்கொண்டாள் மீரா.
"ஹும்.."
"உங்க ஃப்ரண்ட் ரகு வோட அக்கா......அவங்களோட Bangalore ஃப்ரண்ட் கிட்ட சொல்லி எனக்கு வேலையும், பெண்கள் தங்கும் விடுதியில் இடத்திற்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க......போன வாரம் தான் வேலை கன்ஃப்ர்ம் ஆச்சு"
அட! இவ்வளவு ஏற்பாடு பண்ணியிருக்காளா மீரா???
முடிவோடதான் இருக்கிறாப்போல........
"என் parents next month தான் இந்தியா வராங்க, அவங்க கிட்ட நான் பேசி சமாளிச்சுக்கிறேன்........நீங்க........உங்க........வீட்ல......எப்படி?"
அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு என் அறைக்குச் சென்றுவிட்டேன்.
தன் குழந்தையை பிரிந்து தனித்து வாழ துணிந்தவளிடம், குழந்தை பிறந்ததும் சட்டபடி பிரிந்து விடுகிறேன் என உறுதியிட்டவளிடம்..........இப்போ என் மனவிருப்பத்தை எப்படி சொல்வது??
'என்னை விட்டு நீயும் குழந்தையும் போக வேண்டாம்'னு சொல்ல வந்த வார்த்தைகள் ஏனோ வெளிவரவே இல்லை மீரா பேசும்போது!!
மீரா சொன்னபடி கோவைக்குச் சென்றோம்.
ஹோட்டல் 'சிட்டி டவரில்' ரூம் புக் செய்திருந்தேன். குளித்துவிட்டு காலை டிபன் ரூம் ஆர்டரில் சாப்பிட்டுவிட்டு ஸ்ரீதரின் வீட்டிற்கு புறப்பட்டோம்.
குழந்தையை மார்போடு இறுக்கி அணைத்திருந்த மீராவின் கண்களில் நீர் ததும்பி நின்றது. அவள் நிலைமையை காண பொறுக்காமல் என் மனம் கணத்தது.
குழந்தைக்கு தேவையானதை எல்லாம் தனியாக ஒரு பையில் எடுத்துக்கொண்டாள் மீரா.
ஸ்ரீதர் உயிரோடு இருப்பானா?
அவனது குடும்பம் இவளை நம்புமா??
இந்தக் குழந்தையை தங்கள் வாரிசு என ஏற்குமா???
குழப்பத்துடன் ஸ்ரீதரின் வீட்டிற்குச் சென்றோம்.
கதவை திறந்த வேலையாள் ஸ்ரீதர் வீட்டில் இல்லை, அவனது டெக்ஸ்டைல் ஷோரும்க்கு அவன் சென்றிருப்பதாக சொன்னதும், ஸ்ரீதர் உயிருடன்......நல்ல உடல் நிலையில் இருக்கிறான் என்பது உர்ஜிதம் ஆனது.
"கொஞ்ச நேரம் இங்கே வெயிட் பண்ணுங்க.........ஐயாவோட சம்சாரத்தை வர சொல்றேன்" என்று வேலையாள் கூறியதும் மீராவின் கண்களில் மிரட்சி.
சிறிது நேரத்தில், அன்று நான் ஸ்ரீதர் அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் பார்த்த அந்த பெண் வந்து நமஸ்காரம் செய்தாள். என்னை அன்று பார்த்தது அவளுக்கு நினைவில் இல்லை போலும்.......ஆனால் மீராவை சரியாக அடையாளம் கண்டுக்கொண்டாள்,
"நீங்க மீரா.....மீரா.....தானே.........மாமா உங்க ஃபோட்டோ காண்பிச்சார், எப்படி இருக்கிறீங்க.......??"
உபசரித்து உட்காரவைத்துவிட்டு என்னை நோக்கினாள் அப்பெண்.
'இது யார்' என்பது போல் அப்பெண் மீராவை நோக்க,
"இவர் என் ஹஸ்பெண்ட்"
முதல் முறையாக எனக்குள் ஒரு shock wave ....... மீரா என்னை தன் கணவன் என்று அறிமுகம் செய்ததின் தாக்கம்!!!
அந்த பெண் எனக்கு வணக்கம் கூறிவிட்டு, மேலும் பேசத் தொடங்கினாள்,
"மீரா, என் பேரு செல்வி........மாமா உங்களை பத்தி எல்லாம் சொன்னார், மாமாவுக்கு அடிபட்டு 4 மாதம் சுயநினைவு இல்லாம இருந்தார், கடவுள் புண்ணியத்தில் தன் நினைவுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவர் திரும்பினதும் உங்களைத் தான் தேடினார். நான் அவரோட மாமா பொண்ணு.......எனக்கு ஸ்ரீதர் மாமானா உசிரு, ஆனா அவர் மனசு முழுசும் நீங்க தான் இருக்கிறீங்கன்னு அவர் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன். உங்களை பத்தி அவரோட நண்பர்கள் கிட்ட விசாரிச்சுப் பார்த்தபோ தான்.....நீங்க கல்யாணமாகி புனேவுக்கு போய்ட்டீங்கன்னு தகவல் தெரிஞ்சு அழுதார். நான் ஆறுதல் சொல்லி அவரை பார்த்துக்கிட்டேன்.
அப்போ கூட அவர் என்னை கட்டிக்க சம்மதிக்கவேயில்லை. ஏன்னா, கார் விபத்துல அவருக்கு அடிபட்டபோ சுயநினைவை மட்டும் இல்லை..........ஒரு தகப்பனாகும் தகுதியையும் அவர் இழந்துட்டார், அதெல்லாம் உங்களுக்கு அவர் பண்ண துரோகம்னு புலம்பிட்டே இருந்தார். இதெல்லாம் தெரிஞ்சும் நான் மாமாவை பிடிவாதமா கட்டிப்பேன்னு சொன்னதாலதான் சம்மதிச்சார். போன மாதம் தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு, இப்போ......உங்களை......பார்த்தா........."
"கவலைபடாதீங்க செல்வி.......உங்க மாமா உங்களுக்குத்தான்"
"மீரா........"
"உங்க மாமா மட்டுமில்ல.........உங்க மாமாவோட வாரிசும் உங்களுக்குத்தான் செல்வி"
கையிலிருந்த குழந்தையை மீரா செல்வியிடம் நீட்ட,
செல்வி கண்களில் நீர் வடிய குழந்தையை வாங்கிக்கொண்டு மீராவின் காலில் விழ எத்தனித்ததை மிரா தடுத்தாள்.
"கொஞ்சம் இருங்க மீரா............மாமாவுக்கு ஃபோன் போட்டு உடனே வீட்டுக்கு வரச்சொல்றேன்"
"இல்ல செல்வி.........அவர் நல்லாயிருக்கார்னு தெரிஞ்சதே எனக்கு போதும், அவருக்கு ஏதும் ஆகியிருந்தா அவர் குடும்பம் அவரோட குழந்தையை ஏத்துக்குமான்னு யோசனையோடு வந்தேன், குழந்தைக்கு நீங்க ஒரு தாயா இங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷம் செல்வி..........அப்போ நாங்க கிளம்புறோம்"
நாங்கள் புறப்பட எத்தனித்தபோது......
"மீரா......"
குரல் கேட்டு நாங்கள் மூவரும் திரும்பினோம்...அங்கு 'ஸ்ரீதர்' !!!
நானும் செல்வியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அத்தனை நேரம் தைரியமாக பேசிய மீரா....இப்போது......1 வருடம் கழித்து ஸ்ரீதரை பார்க்கும் இன்ப அதிர்ச்சியில் நிலை குலைந்தாள்.
சூழ்நிலையையும் தன் நிலையையும் சற்றென்று மீரா சுதாரித்துக்கொள்வதை நான் உணர்ந்தேன்.
இருவரும் பேசிக்கொள்ளட்டும் என நான் வெளியேறும் போது மீரா.......
"எங்க போறீங்க...நானும் வரேன்"
என்று என்னை பின் தொடர,
ஸ்ரீதர் எங்கள் இருவரையும் வழிமறித்து நின்றார்.
"ப்ளீஸ்........போகாதே மீரா......."
"....."
"மீரா........செல்வி கையில இருக்கிறது.........நம்ம......நம்ம.."
"ஹும்" என்று தலை அசைத்தள் மீரா.
"மீரா.......ப்ளீஸ் நீயும் குழந்தையும் எங்க கூடவே இருந்திடுங்க....ப்ளீஸ்"
மீரா என்னை நோக்கினாள்.
'மீரா உன் குழந்தையை அதன் அப்பாவோட நீ ஒப்படைச்சப்போ எனக்கு வலிக்கல,
ஆனா.........
நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா '
என் மனதிற்குள் தோன்றிய வார்த்தைகள் வெளிவராமல் தொண்டையில் சிக்கியது.
ஸ்ரீதரின் கெஞ்சும் பார்வை,
என் நிலைக்கொள்ளா தடுமாற்றம்,
செல்வியின் சொல்ல முடியா தவிப்பு...
எல்லாவற்றிற்கும் மீரா பதில் தந்தாள்.
"ஸ்ரீதர், உங்கள் காதல் தந்த சின்னத்தை உங்க கிட்ட சேர்த்திட்டேன். இதுக்குமேல நமக்குள்ள எதுவும் இல்லை...........குழந்தையின் மீது மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு. குழந்தையை நல்லபடியா வளர்ப்பீங்கன்னு நம்புறேன்.......வரேன் ஸ்ரீதர்"
தான் சொல்ல நினைத்ததை திட்டமாக கூறிவிட்டு யார் பதிலுக்கும் காத்திராமல் வேகமாக வெளியேறினாள் மீரா.
காரில் ஹோட்டல் அறைக்கு திரும்பும் வரை மீரா என்னிடம் எதுவுமே பேசவில்லை. எங்களுக்கு நடுவில் இருந்த மெளனத்தின் நிசப்தத்தில் பல புது அர்த்தங்கள் இருப்பதாக என் மனதிற்கு பட்டது!!
சிட்டி டவர் ஹோட்டலில் வந்து இறங்கியதும், taxi யை waiting யில் இருக்கும்படியாகவும், ரெயில்வே ஸ்டேஷன் போகவேண்டும் எனவும் taxi driver யிடம் கூறினாள் மீரா.
ரூமிற்கு வந்து தன் உடமைகளை எடுத்துக்கொண்ட மீரா,
"நான் அப்போ........கிளம்புறேன்.......Bangalore ட்ரெயினுக்கு டைம் ஆச்சு"
"ஹும்"
மீராவிடம் நான் மனம் திறக்கும் முன் அவள் என்னிடம் விடைபெற்று காரில் சென்றுவிட்டிருந்தாள்.
ஹோட்டல் ரூம் பெட்டில் பொத்தென்று விழுந்து, விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.
ஆசைதானடி உன்மேல் எனக்கு!
அப்புறம் எதற்கு என்மனதில்
தயக்கம் சாக்கு போக்கு
எல்லாம்??
கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??
என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??
வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்???
தொடங்கிய நம் பந்தத்தை
தொடர
எனக்கொரு சந்தர்ப்பம் தந்து
தலையசைப்பாயா??
முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??
சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!
ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!
மீராவின் ட்ரெயின் புறப்பட இன்னும் 30 நிமிடம் இருக்கிறது...........உடனே call taxi அமர்த்தி ரெயில்வே ஸ்டேஷன் விரைந்தேன்.
அவளுக்கு டிக்கட் நான் புக் செய்து கொடுத்திருந்ததால் அவளது இருக்கையை எளிதாக கண்டுப்பிடித்தேன்.
ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்தபடி கண்ணிருடன் மீரா.........
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அவளது கண்களில் நீரோட்டம்.
முதன்முறையாக மீராவின் கண்ணீரைக் கண்டு என்னையுமறியாமல் என் கண்களில் நீர் பூத்தது.
அன்று காதலித்தவனிடம்
தன்னையே கொடுத்து
இன்று தன் சேயையும்
அவனிடமே சேர்த்துவிட்டு
வாழ்ந்த வாடகை
மணவாழ்க்கை தந்த
அர்த்தமற்ற தாலியுடன்
ஒப்பந்தத்தை நிறைவேற்ற
பந்தத்தை முறித்து.....
தனிமை பயணத்தில் மீரா.......!!
இது ரெயில்வே ஸ்டேஷன், பொது இடம் என்று கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு நான் சுதாரித்தபோது தான் மீராவின் கையில் இருந்ததை கவனித்தேன்,
அவள் கைகளில்........என்.......என் ........ favourite key chain!!
அதை பார்த்து பார்த்து தான் தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டு அழுதபடி இருந்தாள் மீரா.
என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து என் சாவி கொத்தை எடுத்துப் பார்த்தபோதுதான் கவனித்தேன்.........என் key chain அதில் இல்லை,
இந்த key chain யை என் கை விரலில் சுற்றிக்கொண்டிருப்பது என் பழக்கம், அதுவும் இந்த key chain எனக்கு மிகவும் பிடித்தமானது, பல வருடங்களாக என் கைகளில் விளையாடிக்கொண்டிருப்பது என ஒரு நாள் பேச்சு வாக்கில் மீராவிடம் கூறியது நினைவுக்கு வந்தது.
அதை......அந்த key chain யை......ஏன் மீரா.........எடுத்துக்கொள்ள வேண்டும்???
புரிந்தது!!!!.........இனிமேலும் தாமதிக்க கூடாது என என் உள் மனம் என்னை உந்த,
டக்கென்று ட்ரெயினில் ஏறி அவள் இருக்கைக்கு அருகில் சென்றேன்.
"மீரா...."
குரல் கேட்டு மீரா திரும்பினாள்,
என் வருகையை சற்றும் எதிர்பார்க்காத மீரா முகத்தில் அழுகையும் புன்னகையும் கலந்த ஒரு இன்ப அதிர்ச்சி ரியாக்க்ஷன்!!
அவளிடம் எதுவும் கூறாமல் கடகட வென அவளது உடைமைகளை எடுத்துக்கொண்டு ட்ரெயினை விட்டு கிழே இறங்கினேன்.
"ஹையோ........ஏன் bag எல்லாம் எடுக்கிறீங்க........ஏங்க........ட்ரெயின் புறப்பட போகுதுங்க......"
என்று கேட்டபடியே மீரா பதற்றதோடு என்னை பின் தொடர்ந்து ட்ரெயினை விட்டு இறங்கினாள்.
"ஏங்க......bag எல்லாம் இறக்கிட்டீங்க.......ட்ரெயின் புறப்படுற டைம் ஆச்சுங்க"
"என்னோட ........பொருள்.........ஒன்னு காணோம்....." என்றேன்.
"ஓ........என்ன.........என்னது .....??"
"இரு ......தேடி பார்க்கிறேன்"
என்று அவள் பையை திறப்பது போல் குனிந்தேன்.
"ஸாரிங்க......உங்க......key chain......அதைதான்.....ரொம்ப ஸாரி, இந்தாங்க.......உங்க key chain"
"key chain மட்டும்தான் .........என்கிட்ட இருந்து எடுத்துட்டு போறியா மீரா??"
"....."
"என்னையும்.....சேர்த்து......திருடிட்டு........"
சொல்லி முடிப்பதற்குள் 'என் மீரா' கண்ணீரோடு என் மார்பில் சாய்ந்திருந்தாள்!!
முற்றும்...!!