
படித்ததில் மனதில் பதிந்த கதை, என் கற்பனை கலந்து, சில மாற்றங்களுடன் இங்கு என் எழுத்துருவில் பதிவாக........ஆகஸ்ட் 24 ஆம் தேதி பிறந்தநாள் கொண்டாடும் என் தம்பிக்கு பிறந்தநாள் வாழ்த்துக்களுடன்.......!!!
St.Joseph's International School, ஹாஸ்டலில் தன் படுக்கைக்கு அருகில் இருந்த அலாரம் காலை 6 மணிக்கு அடிக்க விழித்துக்கொண்ட பன்னிரண்டு வயது டெய்ஸி, காலை கடன்களை முடித்துவிட்டு, அவசரம் அவசரமாக ஹார்லிக்ஸ் மட்டும் அருந்திவிட்டு, ஆண்கள் விடுதி நோக்கி நடந்தாள் தன் தம்பி டேனியலை சந்திக்க,
வழியில் ஸ்கூல் சேப்பலில் ஜெபம் செய்ய செல்கையில், ஜூலியா மிஸ்சை சந்தித்தாள்.
இவளது ஹாஸ்டல் வார்டனாக இருந்தவர் மிஸ் ஜூலியா.அவர் மேல் டெய்ஸிக்கு அலாதி ப்ரியமும் , மரியாதையும்.
பெண்கள் விடுதியின் வார்டனாக இருந்த ஜுலியா மிஸ், புனித மேரி இல்லத்திற்கு வார்டனாக போனதும், டெய்ஸி மிகவும் ஏங்கிப் போனாள்.
புனித மேரி இல்லமும் டெய்ஸி படிக்கும் ஸ்தாபனம் நடத்துவதுதான், ஆனால் அது அனாதை குழந்தைகள் படிக்கும் விடுதி.
ஜூலியா மிஸ்சும் ஒரு அனாததான் என்பதும், அதுவே அவர்கள் அவ்வில்லத்திற்கு வார்டனாக சென்றதிற்கான காரணம் என்றும் இவளது தோழிகள் மூலம் அறிந்துக்கொண்டாள் டெய்ஸி.

டெய்ஸிக்கு அடுத்த ஜென்மம் என்று ஒன்றிருந்தால் ஜூலியா மிஸ்சாகப் பிறக்க வேண்டும் என்று தோன்றும்.
ஜூலியா மிஸ் அன்போடும் அரவனைப்போடும் டெய்ஸியையும் அவளது தம்பியையும் கவனித்துக்கொள்ளும் போது, இவர்கள் எங்களின் அம்மாவாக இருந்தால் எப்படி இருக்கும் என நினைத்துக்கொள்வாள் டெய்ஸி,
ஆனால்....ஜூலியா மிஸ் கன்னியாஸ்திரி, கல்யாணமே செய்து கொள்ள போவதில்லை என்பதும் அவளுக்கு புரிந்தது.
ஆண்கள் விடுதியை அடைந்தாள் டெய்ஸி, அங்கு அழுவதற்கு தயாராக இருந்தான் டேனியல், சில்வியா ஆயா அவனை சமாதனப்படுத்தி, "இதோ உங்கக்கா வந்தாச்சு பாரு" என்று டெய்ஸியிடம் அவனை ஒப்படைத்தாள்.
அப்படியே அவனைத் தூக்கி நெஞ்சோடு அணைத்துக் கொண்டாள் டெய்ஸி.
"டேனி.....இன்னும் கொஞ்ச நேரத்துல வீட்ல இருந்து கார் வந்திடும்,நாம வீட்டுக்கு போறோம் டா.....செல்லம், கார் வரைக்கும் நானே உன்னை உப்பு மூட்டை தூக்கிட்டு போறேன், சரியா"
"ஓ......சரிக்கா" என்றான் உற்சாகமாய்.
டெய்ஸி-டேனியலின் அம்மா ஒரு முன்னனி கைனக்காலிஜிஸ்ட், இரவிலும் ஹாஸ்பிடல் கால் வந்து டியூட்டி பார்க்க சென்றுவிடுவார்.
அப்பா கோயம்பத்தூர் விவசாயக்கல்லூரியில் தாவிர இயல் விஞ்ஞானி. எப்போதும் செடி கொடிகளுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பார்.
அப்பாவும் அம்மாவும் பிரிந்து வாழ்கிறார்கள், அதனால்தான் பிள்ளைகள் ரெஸ்டென்ஷியல் ஸ்கூலில்.

சிறிது நேரத்தில் இவர்கள் இருவரையும் அழைத்துச்செல்ல வழக்கமாக வரும் ட்ரைவர் காருடன் வர, வார்டன் இருவரையும் கார் வரை வந்து அமர்த்திவிட்டு, கையசைத்து வழியனுப்பினார்.
கோயம்பத்தூரில் தாங்கள் சந்திக்க இருக்கும் அதிர்ச்சியை அறியாமல் இரு பிஞ்சு உள்ளங்களும் குதூகலத்தோடு பிரயாணப்பட்டன.
வீட்டிற்கு போனபோது அங்கு ஹாலில் அம்மாவோடு டாக்டர் தனபாலன் அங்கிளும் இருந்தார். அம்மாவுடன் மருத்துவ கல்லூரியில் ஒன்றாக படித்தவர், இப்போது அம்மாவுடன் ஒன்றாக வேலை செய்பவர் என்ற அளவில் மட்டுமே டெய்ஸிக்கு அவரை தெரியும்.
ஆனால்.....இன்று ஹாலில் தன் அம்மாவின் மிக அருகில் நெருக்கமாக அவர் அமர்ந்திருப்பது 12 வயது டெய்ஸிக்கு ஏனோ, அருவருப்பாக தோன்றியது.
ஏற்கெனவே அப்பாவும் அம்மாவும் கடந்த 1 வருடமாக பிரிந்து வாழ்வதும், இருவரும் டைவர்ஸ் ஆகி பிரிந்தே வாழ போகவதாகவும், வீட்டில் வேலை செய்யும் ஆயா சொல்லி அறிந்திருந்தாள் டெய்ஸி.
தனபால் அங்கிள் கொடுத்து காட்ப்ரீஸை கண்டதும் டேனியல் அவரின் அருகில் அமர்ந்துக்கொண்டான், டெய்ஸி தர்மச்சங்கடத்தோடு அங்கு நிற்க, அவளது அம்மா அவளை தனியே அழைத்துச்சென்று இன்று குடும்ப நல கோர்ட்டில் அவளது அப்பா-அம்மா வின் விவாகரத்து வழக்கிற்கான தீர்ப்பு வழங்கப்படுவதாகவும், அதற்காகவே ஹாஸ்டலில் இருந்து இவர்கள் இருவரையும் அழைத்ததாகவும் கூறினாள்.
சிறிது நேரத்தில், தனபால் அங்கிள் காரிலேயே கோர்டிற்கு சென்றனர்,
அங்கு வாயிலில் அப்பாவை கண்டதும் , "அப்பா" என்ற அலறலுடன் இரு குழந்தைகளும் அருகில் ஓட,
அப்பாவிற்கு பின்னாலிருந்து , அவரிடம் டாக்ட்ரேடிற்காக பயிற்சி எடுத்துக்கொள்ளும் நித்யா ஆண்டி, "ஹாய் குட்டீஸ்' என்றார்.
அவளது அப்பாவின் கரத்தோடு நித்யா ஆண்டி கை கோர்த்திருந்த விதம்.......டெய்ஸிக்கு அதிர்ச்சியாகவும், அருவருப்பாகவும் இருந்தது.
தன் தலையை வருடம் அப்பாவின் ஸ்பரிசம் முதல் முறையாக,கம்பிளி பூச்சு ஊறுவது போன்று தோன்றியது.
கோர்ட்டில் தீர்ப்பு வழங்கினார்கள்,
டெய்ஸியின் அப்பா அம்மாவிற்கு விவாகரத்து கொடுத்துவிட்டு, டெய்ஸி அவளது அப்பாவின் பாதுகாப்பிலும்,
தம்பி டேனியல் அம்மாவின் பாதுகாப்பிலும் வளர்வது என்று தீர்ப்பானது.
வீட்டிற்கு வரும் வழியில்தான் , அம்மாவும் தனபால் அங்கிளும் பேசிக்கொண்டதில், அவளது அம்மாவும் தனபால் அங்கிளும் லண்டனுக்கு செல்ல போவதாகவும், தம்பியையும் அவர்களுடன் அழைத்துச் செல்வதும் டெய்ஸிக்கு புரிந்தது.
இவள் ஹாஸ்டலிலோ, அப்பாவுடன் 'Tamil Nadu Agricultural University' கேம்பஸில் அப்பாவின் குவார்டஸிலோ இருக்கப்போகிறாள்.
யாரைக் கேட்டு முடிவு செய்தார்கள்?
இது வரையில் என்றாவது ஒரு நாள் இவர்கள் இருவரும் எங்களோடு சிரித்துப் பேசி விளையாடியதுண்டா?
அம்மாவுக்கு அப்பா தேவையில்லாமல் இருக்கலாம்,
அப்பாவுக்கு அம்மா தேவையில்லாமல் இருக்கலாம்,
இருவருக்கும் சேர்ந்து நாங்கள் தேவையில்லாமல் இருக்கலாம்.
ஆனால்..........எனக்கு.........என் தம்பி வேண்டும்!!
என்னை விட்டு ஒருகணம் கூட இருக்க மாட்டானே என் தம்பி.......அவனை வெளிநாடு அனுப்பி விட்டு நான் மட்டும் எப்படி இங்கிருக்க முடியும்?
டெய்ஸியின் மனதில் ஆயிரம் கேள்விகள்,
உதடு துடிக்க, கண்ணீர் பொங்கி வர, வீட்டிற்குள் வந்ததும் வேகமாக தன் அறைக்குள் சென்று , கட்டிலில் குப்புறப்ப்டுத்து குலுங்கி அழுதாள்.
இவள் பின்னாலேயே மாடி ஏறி வந்த அவள் அம்மா," டெய்ஸி.......ஒன்னும் அவசரமில்லைமா, உன்னை தயார்படுத்திக்கோ,.......இரண்டு நாள் கழிச்சு கூட நீ உன் அப்பாகிட்ட போகலாம், டேக் யுவர் டைம்" என்று சமாதனப்படுத்தி விட்டுப் போனாள்.
இரவு முழுவதும் அழுது அழுது முகம் வீங்கிக் கிடந்தது டெய்ஸிக்கு. இவள் எதையோ நினைத்து நினைத்து அழுவதைப் பார்த்து டேனியலும் அழுதான்.
இவனை எப்படி பிரிய முடியும்.......தம்பியின் முகத்தை கையில் ஏந்தி தேம்பினாள் டெய்ஸி.
லண்டனுக்கு கூட்டிட்டு போய் கூட அம்மாவா இவனை கவனிக்க போகிறாள், அங்கயும் ஆயாவிடம் தான் விடப்போகிறாள்.
"அக்கா"ன்னு இவன் அழுதா எனக்கு இங்கே கேட்குமா??? முடியாது.......
இவனை இந்த ராட்சஸர்களிடம் விடவே மாட்டேன்.......எனக்கு அம்மாவோ, அப்பாவோ வேண்டாம், என் தம்பிதான் வேண்டும்.
கடிகாரத்தில் மணியைப் பார்த்தாள், மணி காலை ஐந்து, வீட்டில் அம்மா அயர்ந்த தூக்கத்தில் அவளது அறையில்,
அவசரமாக எழுந்தாள் டெய்ஸி,
தம்பியை தூக்கி தோளில் போட்டுக்கொண்டாள்,
செலவிற்காக அப்பா கொடுத்திருந்த 300 ரூபாய் பணம் இவளது கைப்பையிலிருந்தது, அதனையும் எடுத்துக்கொண்டாள்,
வீட்டைவிட்டு கவனமாக எவருக்கும் தெரியாமல் வெளியேறினாள், கோவை மத்திய பஸ் நிலையம் இவளது வீட்டிலிருந்து 3 கீலோ மீட்டர் தூரம், பாதி தூரத்திற்கு மேல் நடக்க மாட்டேன் என அடம்பிடித்த தம்பியை தூக்கிக் கொண்டு நடக்க முடியாமல் நடந்து பஸ் நிலையம் சென்றாள், ஊட்டி பஸ் பார்த்து ஏறிக்கொண்டாள்.
மூன்று மணி நேரத்தில் பஸ் ஊட்டியை சென்று அடைந்தது.
ஒருவாரம் விடுமுறைக்காக போன ஆறாம் வகுப்பு டெய்ஸி, தம்பியோடு தன் அறையில் அடுத்த நாள் காலையிலேயே வந்து நிற்பதைக் கண்டு திகைத்தார் ஃபாதர் ஜோசஃப்.
அந்த சிறு பெண்ணின் உருண்ட விழிகள் அழுது சிவந்து, இரட்டை ஜடையில் ஒன்றில் மட்டும் ரிப்பன், காலில் ஷு இல்லை, ரப்பர் செருப்புடன்.....தம்பி டேனியலின் சட்டையெல்லாம் புழுதி, கலைந்த தலைமுடி......அந்த சிறுவனும் புரியாமல் அழுதுகொண்டே இருந்தான்.
பணக்கார களையோட இத்தனை நாட்கள் பார்த்திருந்த ஃபாதருக்கு, குழந்தைகளின் இந்நிலை மனதை கணமாக்கியது,
"என்னமா டெய்ஸி.......என்னாச்சு??" என்று படபடப்பாகக் கேட்டார்.
"ஃபா .........ஃபாதர்"
"அப்பா.........அம்மா கூட வரலியா.....உங்க கார்ல வரலியா?"
"ஃபாதர்........எங்களுக்கு அப்பா அம்மா இல்லை......நாங்க அனாதை.....ப்ளீஸ் எங்களை புனித மேரி இல்லத்தில சேர்த்துகோங்க ஃபாதர்"
ஃபாதரின் கண்ணில் நீர் பூத்தது.
குழந்தைகளை குளிப்பாட்டி உணவு கொடுக்க சொல்லி சிஸ்டர் ஜூலியாவிடம் ஒப்படைத்துவிட்டு, ஃபாதர் ஜோசஃப் டெய்ஸியின் பெற்றோரை வரவழைத்தார்.
அவர்களிடமும் டெய்ஸி பிடிவாதமாக தாங்கள் இருவரும் இல்லத்திலேயே இருக்க விரும்புவதாக கூற......பெற்றோரும் பெரிதும் அலட்டிக்கொள்ளாமல், தங்கள் வழி திரும்பிச் சென்றனர்.
தன் தம்பியின் மேல் பாசத்தை கொட்டி பார்த்துக்கொண்டாள் டெய்ஸி, ஆங்கில மொழியில் பி.ஏ பட்டபடிப்பும், ஆசிரியர் பயிற்சியும் புனித மேரி இல்லத்தின் உதவியோடே படித்து முடித்து, அங்கே அவளும் டீச்சராக பதிவியேற்றாள்.......கன்னியாஸ்திரி டீச்சராக.

டேனியல் படிப்பிலும், விளையாட்டிலும் படு சுட்டியாக வளர்ந்தான் அக்காவின் அரவணைப்பில், இன்று அமெரிக்காவில் தனது உயர் படிப்பை முடித்துவிட்டு தாயகம் திரும்புகிறான்..........அதுவும் அவனது பிறந்தநாளான இன்று அவன் இந்தியா வருவது இரட்டிப்பு சந்தோஷம் சிஸ்டர் டெய்ஸிக்கு!!
விமான நிலையத்தின் வரவேற்பு வாயிலில் , பழைய நினைவுகளை அசைப்போட்டபடி......தம்பியின் வரவிற்காக காத்திருந்த சிஸ்டர் டெய்ஸியின் சிந்தனையை,
"அக்கா"
என்ற குரல் கலைக்க, திரும்பிய டெய்ஸி சிஸ்டர்.......சேயைக் கண்ட தாயாய் உவகையுடன் தன் தம்பியை நோக்க, கண்ணில் ஆனந்த கண்ணீர்,
"அக்கா" என்று குதூகலத்துடன் டேனியல் அவரை நோக்கி தன் கரங்களை அகல விரிக்க........
"த......ம்.........பி......."
உண்மையான நேசத்தின் தேவையும்
நெஞ்சம் தேடும்
பாசத்தின் தவிப்பும்
உன்னாலும் என்னாலும் மட்டுமே
உண்மையாய் உணர முடியும்!
ம்…!
உன் தலை சாய்த்துக் கொள்ள
தக்க தருணங்களில்
அன்புத் தாயாய் நான்
என் சேயாய் நீ!
என் உயிரின் கடைசித் துளி
என்னை விட்டுப் பிரியும் வரை…
உன் அன்புத் தோழியாய் நான்
என் அன்புத் தோழனாய் நீ!
"போடா" என்று சொல்லி
பொய்ச் சண்டை போட்டு
மறு நிமிடம்
“மன்னிப்பு” என்னும் பூ தூவி
உயிரின் தீபமேற்றி
உன் உயிரோடு கலக்கும்
உன் அக்காவாய் நான்
என் தம்பியாய் நீ!
ஒற்றை விரல் கோர்த்து
பற்றிப் படர்ந்து
எனக்காக நீயும்
உனக்காக நானும்
நிறைவான அன்பினில்…
நீளும் உன் கரங்கள்
நிஜமென நம்பி…
தம்பி...
இரு சிறகுகளிலும்
இருந்த பாரங்களை
இறக்கி வைத்த
சின்னப் பட்டாம் பூச்சியாய் நான்..
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள் தம்பி!!