சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு வேலை மாறுதலாகி வந்திருந்த தனது அண்ணன் ராம்குமார் வீட்டில் தங்கிருந்தான் சத்யா. அவனது அண்ணனுக்கு, மனைவி கிரிஜா மற்றும் நான்கு வயது வருண் என்று ஒரு அழகான அளவான குடும்பம்.
பல வருடங்களுக்கு பின் கோவையின் ஜில்லென்ற காற்றை சுவாதித்தபடி, கல்லூரி நாட்களின் நினைவுகளை அசை போட்டபடி ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட்டில் சந்திப்பதாக சொன்ன தனது நண்பனை சந்திக்க பைக்கில் சென்றான் சத்யா.
ஃபாஸ்ட் ஃபுட் கடையின் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன், தன் ஃப்ரண்ட் ரவி எங்கே என்று தேடி கண்களை அலைபாய விட்டான்,
நான்காவது டேபிளில் ஐந்தாரு கல்லூரி பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர், தீடிரென அதில் ஒரு பெண் சதயாவை நோக்கி....

அவள் தன்னிடம்தான் கூறுகிறாளா? என்று விழித்த சத்யா, தனக்குபின் பேரர் யாரும் நிற்கிறார்களா என்று திரும்பி பார்த்தான், அதற்குள் மீண்டும் அந்த பெண்.......
"பேரர் உங்களைத்தான்.........டோமேட்டோ கெட்சப் வேணும்" என்றாள்.
'அடிப்பாவி, என்னையவா பேரர்ன்னு நினைச்சுட்டா??' கோபத்தில் சத்யாவின் மூக்கு வெடவெடத்தது........அவளது டேபிளுக்கு அருகில் சென்றவன்,
"ஹலோ....என்னைய பார்த்தா பேரர் மாதிரி இருக்கா??" என்றான் எரிச்சலுடன்.
"ஆ..........ஆமா..."
"என்ன ஆமா...நோமா.....பேரர் யாரு கஸ்டமர் யாருன்னு தெரிஞ்சுட்டு பேசனும், புரிஞ்சுதா?"
"சார்....கூல் டவுன் சார், கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க, இந்த ஃபாஸ்ட் ஃபுட் பேரர்ஸ் போட்டிருக்கிற யூனிஃபார்ம்......மஞ்ச கலர் ஷர்ட், ப்ளு பாண்ட்.......அப்படியே மெதுவா உங்க ட்ரஸ் கலர் என்னன்னு பாருங்க, அப்புறம சொல்லுங்க நான் உங்களை பேரர்ன்னு கூப்பிட்டது தப்பா, சரியான்னு"
அங்கு பணியில் இருந்த மற்றோரு பேரரின் யூனிஃபார்மை அப்போதுதான் கவனித்தான் சத்யா....

"ஹலோ.......ஹலோ..........பேரர்ன்னா என்ன சார் அவ்ளோ கேவலமா??? இப்படி இளக்காரமா பேசுறீங்க.......நீங்க பேரர்ஸ் போட்டிருக்கிற கலர் ட்ரஸ் போட்டுட்டு ஒவ்வொரு டேபிளா கூர்ந்து பார்த்துட்டு இருந்தீங்க, சரி........வேலைக்கு புதுசு போல ன்னு நினைச்சுட்டு.......டோமேட்டோ கெட்சப் கேட்டேன்........"
சத்யா பதில் பேசும்முன் அவனது நண்பன் ரவி அங்கு வந்துவிட,
"டேய் இங்க என்னடா ப்ரச்சனை........" என்றான் பதட்டத்துடன்.
"என்னய பார்த்து பேரர்ன்னு சொல்றாடா இந்த பொண்ணு.........தெரியாம சொல்லிட்டேன் ஸாரி ன்னு ஒரு வார்த்தை சொல்லாம பேசிட்டே போறா....."
"சரி .....சரி விடுடா......வேற முக்கியமான வேலை இருக்குடா, நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வெயிட்டிங் உனக்காக..........நாம கிளம்பலாம் வா" என்று சத்யாவை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியேறினான் ரவி.
கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு வெளியேறும் போது திரும்பி அவளைப் பார்த்தான் சத்யா......

திருவிழா கூட்டத்தில் கூட பளிச்சென்று தெரியும் அழகு!
துரு துரு கண்களில் உற்சாகம் துள்ளிக்கொண்டிருந்தது,
வெண்ணையில் செய்த கன்னங்கள்,
எளிமையான அலங்காரம்,
ஒரு கணம் அவளது முகத்தை ஆராய்ந்தவன்,
அவள் அவனைப் பார்த்து உதடு சுளித்து நமட்டு சிரிப்பு சிரித்ததும்,
கோபமெல்லாம் மறந்து....சத்யாவின் உள்ளுக்குள் ஒர் உணர்வு தென்றல் வருடிச்சென்று...... மனதிற்குள் புன்னகைக்க வைத்தது!
என் கோபங்களையும்
கொன்று விடுகிறது உன்
கள்ள சிரிப்பு...!!
என் இதய துடிப்பும்
உன் இமைகளின் அசைவில்
அதிர்கிறதே ....!!!
தேவதை திருவிழாக்களில்
தொலைந்து போன தேவதை
நீ தானோ???
அன்றைய நாள் முழுவதும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு, மறுநாள் நண்பனின் திருமண வரவேற்பில் நண்பர்களை மீட் பண்ணலாம் என்று விடை பெற்றுக்கொண்ட சத்யா, தன் அண்ணன் வீட்டிற்கு திரும்பும் வழியில் பழமுதிர் நிலையத்தை பார்த்ததும், ஜூஸ் குடிப்பதற்காக தன் பைக்கை நிறுத்தினான்.....
பைக்கை ஆஃப் செய்துவிட்டு காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது, ஏதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான் சத்யா!

'அடடே!! நம்ம பைக்ல இருந்து இறங்குறப்போ எட்டி உதைச்சது 'ஃபாஸ்ட்' ஃபுட் அம்மனி மேலதானா?......இவமேலன்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்சம் வேகமாக காலை தூக்கி போட்டிருக்கலாமே' என்று நினைத்துக்கொண்டே சத்யா குறும்புடன் அவளை நோக்க.......
"என்ன மிஸ்டர்.......கண்ணு தெரிலையா???" என்றாள் காட்டமாக.
"ஆமா தெரில.....உங்களுக்கு நல்லா கண்ணு தெரிதில்ல, பைக்ல இருந்து இறங்குறானே ஒருத்தன்......கொஞ்சம் விலகி நிப்போம்னு ஒழுங்க நிற்கிருதுக்கென்ன???" என்றான் சத்யா.
"ஹலோ ...பின்னால யாரு இருக்காங்கன்னு பார்த்து இறங்கிறதில்ல.....அப்புறம் பேச்சு மட்டும் பெருசா பேசுறீங்க?"
"இதென்ன சைக்கிள்ளா முன்னாடிலேர்ந்து காலை எடுக்க, இது பைக்மா.....பைக், இப்படித்தான் இறங்குவோம், நீங்கதான் பார்த்து நகர்ந்து நிக்கனும்" என்றான் சத்யாவும் விடாமல்.
"கவனிக்காம .....தெரியாம இடிச்சுட்டேன் ஸாரின்னு சொல்றதை விட்டுட்டு என்ன ஓவரா பேசுறீங்க"
"ஸாரி கேட்கிறதை பத்தி நீங்க பேசாப்பிடாதுங்க மேடம்.......காலையில ஃபாஸ்ட் புட்ல அந்த அமளி பண்ணினீங்க, ஒரு ஸாரி கேட்டீங்களா நீங்க??"
"அது வேற.......இது வேற" கடுகடுப்புடன் பதிலளித்தாள் அவள்.
"சரி ரொம்ப சூடா இருக்கிறீங்க......ரெண்டு பேரும்.ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு, அப்புறம் யாரு முதல்ல ஸாரி கேட்கிறதுன்னு முடிவு பண்ணலாம்"

"ஒன்னும் தேவையில்ல........உங்க ஓசி ஜூஸ் இங்க யாருக்கு வேணும்"
"ஹலோ அம்மனி.......ஜீஸ் குடிக்கலாம்னு தான் சொன்னேன்.....உங்க ஜூஸ்க்கு நானே காசு கொடுக்கிறேன்னு சொன்னேன்னா, இருந்தாலும் உங்களுக்கு ஓசி சாப்பாடுன்னா ரொம்பதாங்க ஆசை.......காலையில் ஓசில பர்கர் ஒரு பிடி பிடிச்சுட்டு இருந்தீங்க ஃபாஸ்ட் ஃபுட்ல.......இப்போ என் கணக்குல ஜூஸ் குடிச்சுடலாம்னு நினைச்சீங்களா??"
கோபத்தில் பதில் ஏதும் சொல்லாமல்.........உதடை சுளித்துவிட்டு, வேக வேகமாக தான் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் அவள்.
ஸ்கூட்டியில் செல்லும் அவளை பார்த்த சத்யா....
கோயம்புத்தூர் பொண்ணுங்களுக்கு
குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சா...
கோபமும் நல்லாத்தான் வருது!
என்று சிரித்துக்கொண்டான்.
ஒரு ஆப்பிள் ஜுஸ்க்கு ஆர்டர் செய்துவிட்டு அவன் காத்திருக்கும் போது அவனது பெங்களுர் நண்பன் மொபைல் ஃபோன்க்கு கால் செய்தான், அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , பின் தன் அண்ணனின் ஃபளாட்டிற்கு சென்றான் சத்யா.
இரண்டாவது தளத்தில் இருக்கும் தன் அண்ணனின் வீட்டிற்கு செல்ல அவன் படிகளில் ஏறும்போது, மீண்டும் அவனது செல்ஃபோன் சினுங்கியது, பேசியது அவன் அண்ணன்......
"டேய், சத்யா நான் ராம் பேசுறேன்........வருணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அண்ணி அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கா, நான் ஆஃபீஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிட்டல் போய் அவங்களை கூட்டிட்டு வரேன், நம்ம வீட்டு சாவி ஃபோர்த் ஃபோளிர்ல ........16 C ஃப்ளாட்ல போய் வாங்கிக்கோ, நாங்க இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்டா"
"சரிண்ணா........"
மொபைலை அணைத்துவிட்டு............ஃபோர்த் ஃப்ளோர்..........16 C....என்று மனதிற்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டே மாடி படிகளில் தாவி தாவி ஏறி ஃபோர்த் ஃப்ளோருக்கு சென்ற சத்யா, 16 C க்கு அருகில் வந்தபோது.....
முன் ஹாலின் ஜன்னல் திறந்து இருந்திருக்க.......அங்கு ஸோஃபாவில் காலை தூக்கிவைத்துக்கொண்டு டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் உருவம், மிகவும் ப்ரிச்சயமானதாக தெரியவே.....கூர்ந்து கவனித்தான்....

' அட நம்ம...........ஃபாஸ்ட் ஃபுட் மஞ்சக்குருவி!!!......இது இவ வீடுதானா?? அவ்ளோ லொள்ளு பண்ணினா இல்ல.........அவளுக்கு இப்போ ஒரு ஷாக் கொடுக்கலாம் ' என்று நினைத்தபடி......16 C காலிங் பெல்லை அழுத்தினான் சத்யா......!
இந்த 'சந்தித்தவேளை'யை ஒரே பகுதியில் எழுதிட இயலாத காரணத்தால்..........சந்திப்பு அடுத்த பகுதியில் தொடரும்.
பகுதி - 2