March 30, 2009

சந்தித்தவேளை - 2 [பகுதி 1]

கோயமுத்தூர் பொறியியல் கல்லூரியில், ஹாஸ்டலில் தங்கிருந்து தனது பட்டப்படிப்பை முடித்துவிட்டு, பெங்களூரில் ஒரு மென்பொருள் நிறுவனத்தில் வேலையில் அமர்ந்தபின், .........சுமார் ஐந்து வருடங்கள் கழித்து, தனது நண்பனின் திருமணத்தில் கலந்து கொள்வதற்காக கோவை வந்திருந்தான் சத்யா எனும் சத்யப்ரகாஷ்!

சில மாதங்களுக்கு முன் சென்னையிலிருந்து கோயமுத்தூருக்கு வேலை மாறுதலாகி வந்திருந்த தனது அண்ணன் ராம்குமார் வீட்டில் தங்கிருந்தான் சத்யா. அவனது அண்ணனுக்கு, மனைவி கிரிஜா மற்றும் நான்கு வயது வருண் என்று ஒரு அழகான அளவான குடும்பம்.

பல வருடங்களுக்கு பின் கோவையின் ஜில்லென்ற காற்றை சுவாதித்தபடி, கல்லூரி நாட்களின் நினைவுகளை அசை போட்டபடி ஆர்.எஸ்.புரம், டி.பி ரோட்டில் உள்ள ஃபாஸ்ட் ஃபுட்டில் சந்திப்பதாக சொன்ன தனது நண்பனை சந்திக்க பைக்கில் சென்றான் சத்யா.

ஃபாஸ்ட் ஃபுட் கடையின் கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு உள்ளே சென்றவன், தன் ஃப்ரண்ட் ரவி எங்கே என்று தேடி கண்களை அலைபாய விட்டான்,

நான்காவது டேபிளில் ஐந்தாரு கல்லூரி பெண்கள் அமர்ந்து உணவருந்திக் கொண்டிருந்தனர், தீடிரென அதில் ஒரு பெண் சதயாவை நோக்கி....

"ஹலோ பேரர்...........எஸ்கூஸ்மீ.......கெட்சப் ப்ளீஸ்" என்று குரல் கொடுத்தாள்.

அவள் தன்னிடம்தான் கூறுகிறாளா? என்று விழித்த சத்யா, தனக்குபின் பேரர் யாரும் நிற்கிறார்களா என்று திரும்பி பார்த்தான், அதற்குள் மீண்டும் அந்த பெண்.......

"பேரர் உங்களைத்தான்.........டோமேட்டோ கெட்சப் வேணும்" என்றாள்.

'அடிப்பாவி, என்னையவா பேரர்ன்னு நினைச்சுட்டா??' கோபத்தில் சத்யாவின் மூக்கு வெடவெடத்தது........அவளது டேபிளுக்கு அருகில் சென்றவன்,

"ஹலோ....என்னைய பார்த்தா பேரர் மாதிரி இருக்கா??" என்றான் எரிச்சலுடன்.

"ஆ..........ஆமா..."

"என்ன ஆமா...நோமா.....பேரர் யாரு கஸ்டமர் யாருன்னு தெரிஞ்சுட்டு பேசனும், புரிஞ்சுதா?"

"சார்....கூல் டவுன் சார், கொஞ்சம் கண்ணை நல்லா திறந்து பாருங்க, இந்த ஃபாஸ்ட் ஃபுட் பேரர்ஸ் போட்டிருக்கிற யூனிஃபார்ம்......மஞ்ச கலர் ஷர்ட், ப்ளு பாண்ட்.......அப்படியே மெதுவா உங்க ட்ரஸ் கலர் என்னன்னு பாருங்க, அப்புறம சொல்லுங்க நான் உங்களை பேரர்ன்னு கூப்பிட்டது தப்பா, சரியான்னு"

அங்கு பணியில் இருந்த மற்றோரு பேரரின் யூனிஃபார்மை அப்போதுதான் கவனித்தான் சத்யா....

"மஞ்ச சட்டை போட்டிருந்தா.......யாருன்னு கூட யோசிக்காம, இப்படி பேரர்ன்னு கூப்பிட்டு அசிங்கப்படுத்திடறதா??"

"ஹலோ.......ஹலோ..........பேரர்ன்னா என்ன சார் அவ்ளோ கேவலமா??? இப்படி இளக்காரமா பேசுறீங்க.......நீங்க பேரர்ஸ் போட்டிருக்கிற கலர் ட்ரஸ் போட்டுட்டு ஒவ்வொரு டேபிளா கூர்ந்து பார்த்துட்டு இருந்தீங்க, சரி........வேலைக்கு புதுசு போல ன்னு நினைச்சுட்டு.......டோமேட்டோ கெட்சப் கேட்டேன்........"

சத்யா பதில் பேசும்முன் அவனது நண்பன் ரவி அங்கு வந்துவிட,

"டேய் இங்க என்னடா ப்ரச்சனை........" என்றான் பதட்டத்துடன்.

"என்னய பார்த்து பேரர்ன்னு சொல்றாடா இந்த பொண்ணு.........தெரியாம சொல்லிட்டேன் ஸாரி ன்னு ஒரு வார்த்தை சொல்லாம பேசிட்டே போறா....."

"சரி .....சரி விடுடா......வேற முக்கியமான வேலை இருக்குடா, நம்ம ஃப்ரண்ட்ஸ் எல்லாரும் வெயிட்டிங் உனக்காக..........நாம கிளம்பலாம் வா" என்று சத்யாவை அங்கிருந்து இழுத்துக்கொண்டு வெளியேறினான் ரவி.

கண்ணாடி கதவை திறந்துக் கொண்டு வெளியேறும் போது திரும்பி அவளைப் பார்த்தான் சத்யா......


திருவிழா கூட்டத்தில் கூட பளிச்சென்று தெரியும் அழகு!
துரு துரு கண்களில் உற்சாகம் துள்ளிக்கொண்டிருந்தது,
வெண்ணையில் செய்த கன்னங்கள்,
எளிமையான அலங்காரம்,
ஒரு கணம் அவளது முகத்தை ஆராய்ந்தவன்,
அவள் அவனைப் பார்த்து உதடு சுளித்து நமட்டு சிரிப்பு சிரித்ததும்,
கோபமெல்லாம் மறந்து....சத்யாவின் உள்ளுக்குள் ஒர் உணர்வு தென்றல் வருடிச்சென்று...... மனதிற்குள் புன்னகைக்க வைத்தது!

என் கோபங்களையும்
கொன்று விடுகிறது உன்
கள்ள சிரிப்பு...!!
என் இதய துடிப்பும்
உன் இமைகளின் அசைவில்
அதிர்கிறதே ....!!!

தேவதை திருவிழாக்களில்
தொலைந்து போன தேவதை
நீ தானோ???


அன்றைய நாள் முழுவதும் தன் நண்பர்களுடன் ஊர் சுற்றி விட்டு, மறுநாள் நண்பனின் திருமண வரவேற்பில் நண்பர்களை மீட் பண்ணலாம் என்று விடை பெற்றுக்கொண்ட சத்யா, தன் அண்ணன் வீட்டிற்கு திரும்பும் வழியில் பழமுதிர் நிலையத்தை பார்த்ததும், ஜூஸ் குடிப்பதற்காக தன் பைக்கை நிறுத்தினான்.....

பைக்கை ஆஃப் செய்துவிட்டு காலை பின் பக்கமாக தூக்கி நின்றபோது, ஏதோ மென்மையாக படவே திரும்பி பார்த்தான் சத்யா!

அங்கு.....தன் கைகளை கட்டிக்கொண்டு, எரிக்கும் பார்வை பாத்தபடி கோபமாக நின்றிருந்தாள் 'அவள்'!!

'அடடே!! நம்ம பைக்ல இருந்து இறங்குறப்போ எட்டி உதைச்சது 'ஃபாஸ்ட்' ஃபுட் அம்மனி மேலதானா?......இவமேலன்னு தெரிஞ்சிருந்தா, இன்னும் கொஞ்சம் வேகமாக காலை தூக்கி போட்டிருக்கலாமே' என்று நினைத்துக்கொண்டே சத்யா குறும்புடன் அவளை நோக்க.......

"என்ன மிஸ்டர்.......கண்ணு தெரிலையா???" என்றாள் காட்டமாக.

"ஆமா தெரில.....உங்களுக்கு நல்லா கண்ணு தெரிதில்ல, பைக்ல இருந்து இறங்குறானே ஒருத்தன்......கொஞ்சம் விலகி நிப்போம்னு ஒழுங்க நிற்கிருதுக்கென்ன???" என்றான் சத்யா.

"ஹலோ ...பின்னால யாரு இருக்காங்கன்னு பார்த்து இறங்கிறதில்ல.....அப்புறம் பேச்சு மட்டும் பெருசா பேசுறீங்க?"

"இதென்ன சைக்கிள்ளா முன்னாடிலேர்ந்து காலை எடுக்க, இது பைக்மா.....பைக், இப்படித்தான் இறங்குவோம், நீங்கதான் பார்த்து நகர்ந்து நிக்கனும்" என்றான் சத்யாவும் விடாமல்.

"கவனிக்காம .....தெரியாம இடிச்சுட்டேன் ஸாரின்னு சொல்றதை விட்டுட்டு என்ன ஓவரா பேசுறீங்க"

"ஸாரி கேட்கிறதை பத்தி நீங்க பேசாப்பிடாதுங்க மேடம்.......காலையில ஃபாஸ்ட் புட்ல அந்த அமளி பண்ணினீங்க, ஒரு ஸாரி கேட்டீங்களா நீங்க??"

"அது வேற.......இது வேற" கடுகடுப்புடன் பதிலளித்தாள் அவள்.

"சரி ரொம்ப சூடா இருக்கிறீங்க......ரெண்டு பேரும்.ஜில்லுன்னு ஒரு ஜூஸ் குடிச்சுட்டு, அப்புறம் யாரு முதல்ல ஸாரி கேட்கிறதுன்னு முடிவு பண்ணலாம்"


"ஒன்னும் தேவையில்ல........உங்க ஓசி ஜூஸ் இங்க யாருக்கு வேணும்"

"ஹலோ அம்மனி.......ஜீஸ் குடிக்கலாம்னு தான் சொன்னேன்.....உங்க ஜூஸ்க்கு நானே காசு கொடுக்கிறேன்னு சொன்னேன்னா, இருந்தாலும் உங்களுக்கு ஓசி சாப்பாடுன்னா ரொம்பதாங்க ஆசை.......காலையில் ஓசில பர்கர் ஒரு பிடி பிடிச்சுட்டு இருந்தீங்க ஃபாஸ்ட் ஃபுட்ல.......இப்போ என் கணக்குல ஜூஸ் குடிச்சுடலாம்னு நினைச்சீங்களா??"

கோபத்தில் பதில் ஏதும் சொல்லாமல்.........உதடை சுளித்துவிட்டு, வேக வேகமாக தான் நிறுத்தியிருந்த தனது ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் அவள்.

ஸ்கூட்டியில் செல்லும் அவளை பார்த்த சத்யா....
கோயம்புத்தூர் பொண்ணுங்களுக்கு
குசும்பு தான் ஜாஸ்தின்னு நினைச்சா...
கோபமும் நல்லாத்தான் வருது!
என்று சிரித்துக்கொண்டான்.

ஒரு ஆப்பிள் ஜுஸ்க்கு ஆர்டர் செய்துவிட்டு அவன் காத்திருக்கும் போது அவனது பெங்களுர் நண்பன் மொபைல் ஃபோன்க்கு கால் செய்தான், அவனிடம் சிறிது நேரம் பேசிவிட்டு , பின் தன் அண்ணனின் ஃபளாட்டிற்கு சென்றான் சத்யா.

இரண்டாவது தளத்தில் இருக்கும் தன் அண்ணனின் வீட்டிற்கு செல்ல அவன் படிகளில் ஏறும்போது, மீண்டும் அவனது செல்ஃபோன் சினுங்கியது, பேசியது அவன் அண்ணன்......

"டேய், சத்யா நான் ராம் பேசுறேன்........வருணுக்கு கொஞ்சம் உடம்பு சரியில்லை, அண்ணி அவனை ஹாஸ்பிட்டல் கூட்டிட்டு போயிருக்கா, நான் ஆஃபீஸ்ல இருந்து நேரா ஹாஸ்பிட்டல் போய் அவங்களை கூட்டிட்டு வரேன், நம்ம வீட்டு சாவி ஃபோர்த் ஃபோளிர்ல ........16 C ஃப்ளாட்ல போய் வாங்கிக்கோ, நாங்க இப்போ கொஞ்ச நேரத்துல வந்துடுறோம்டா"

"சரிண்ணா........"

மொபைலை அணைத்துவிட்டு............ஃபோர்த் ஃப்ளோர்..........16 C....என்று மனதிற்குள் சொல்லிப்பார்த்துக்கொண்டே மாடி படிகளில் தாவி தாவி ஏறி ஃபோர்த் ஃப்ளோருக்கு சென்ற சத்யா, 16 C க்கு அருகில் வந்தபோது.....

முன் ஹாலின் ஜன்னல் திறந்து இருந்திருக்க.......அங்கு ஸோஃபாவில் காலை தூக்கிவைத்துக்கொண்டு டி.வி பார்த்துக்கொண்டிருக்கும் உருவம், மிகவும் ப்ரிச்சயமானதாக தெரியவே.....கூர்ந்து கவனித்தான்....


' அட நம்ம...........ஃபாஸ்ட் ஃபுட் மஞ்சக்குருவி!!!......இது இவ வீடுதானா?? அவ்ளோ லொள்ளு பண்ணினா இல்ல.........அவளுக்கு இப்போ ஒரு ஷாக் கொடுக்கலாம் ' என்று நினைத்தபடி......16 C காலிங் பெல்லை அழுத்தினான் சத்யா......!

இந்த 'சந்தித்தவேளை'யை ஒரே பகுதியில் எழுதிட இயலாத காரணத்தால்..........சந்திப்பு அடுத்த பகுதியில் தொடரும்.


பகுதி - 2

March 24, 2009

'அவரிடம்'........சில கேள்விகள்!!!




'பெண் பார்க்க வர்ராங்க மாப்பிள்ளை வீட்டுக்காரங்க'ன்னு சொன்னதுமே, பெண் வீட்டிலுள்ளவர்களுக்கு ஒரு பரபரப்பும்,
பப்ளிக் எக்ஸாம் எழுத போவது போன்ற படபடப்பு பெண்ணிற்கும் ஏற்படுவது இயல்பு.

"அதென்ன பெண் பார்க்க வந்தா, பொண்ணு பட்டு புடவை தான் கட்டிக்கனுமா?? தினமும் பட்டு புடவையிலா குடும்பம் நடத்த போறேன்.....எதுக்கு கல்யாண பெண் மாதிரி அலங்கரிச்சுக்க சொல்றாங்க??"

"உனக்கு சமைக்க தெரியுமான்னு?? பொண்ணுகிட்ட கேட்டா ஒரு அர்த்தம் இருக்கு.........பொண்ணு பையனுக்கு சமைக்குமா? இல்ல பையன் தான் பொண்ணுக்கும் சேர்த்து சமைக்கனுமான்னு தெரிஞ்சுக்கலாம், அதை விட்டுட்டு.....பாட்டு பாடுன்னு கேட்கிறதெல்லாம், சுத்த பேத்தல், .......
'சூப்பர் ஸிங்கர்'க்கு ஆடிஷனா நடத்தறாங்க???"

இப்படி தங்கள் ஆதகங்களை பெண்கள் வெளிப்படுத்த ஆரம்பித்த பிறகு, இயல்பான உடையில், சகஜமான சூழ்நிலையில் பெண்பார்க்கும் சம்பவங்கள் இன்று நடைபெற்றாலும், இந்த டென்ஷன் மட்டும் பெண்ணுக்கும் பெண் வீட்டாருக்கும் குறைந்த பாடில்லை.

பெண் பார்க்கும் வைபவத்தில், "பையனுக்கு பொண்ணுகிட்ட பத்து நிமிஷம் தனியா பேசனுமாம்" என்று மாப்பிள்ளை வீட்டு கூட்டத்தில் இருந்து ஒருவர் குரல் கொடுப்பார், உடனே பெண்ணையும், பையனையும் தனியாக பேச அனுமதிப்பார்கள்.
பையன் தான் பேச நினைத்ததை பேசிவிட்டு......பெண்ணிடம் தான் கேட்க நினைத்த கேள்விகளை கேட்பார், பொண்ணும்....
"ஆங்"..."ஆமா"...."இல்லை" என்று ஒரிரு வார்த்தையில் பதில் சொல்லிவிட்டு,
"உங்களுக்கு என்கிட்ட ஏதாவது பேசனுமா.....கேட்கனுமா?"அப்படின்னு மாப்பிள்ளை பையன் பேச சந்தர்ப்பம் கொடுத்தா கூட, பேசாம 'பெப்பே பெப்பே' என்று முழிப்பாள்.

எத்தனை நாட்களுக்குத்தான் இப்படி தனியா பேச சந்தர்ப்பம் கிடைக்கிறப்போ......சேலை நுனியை திருகிக்கிட்டு, தலை குனிஞ்சுட்டு, 'ஆமா'...'இல்லை' ன்னு மண்டைய மண்டைய ஆட்டி ஃபில்ம் காட்டுறது????

பெண்ணும் இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி,பையனிடம் பேசி, சில பல கேள்விகள் கேட்டு பையனை பற்றி தெரிந்துக்கொள்ளலாமே!!!

* பையன் பெண்ணிடம் தனியா பேச விருப்பப்படுறான்னு சொன்னா, அவனுக்கு பெண்ணின் தோற்றம்[appearance]பிடிச்சு போய்டுச்சு, அடுத்து அனுகுமுறை[approach] எப்படின்னு தெரிஞ்சுக்கத்தான் தனியா பேசனும்னு சொல்லுவார்.

ஸோ.....உங்களுக்கு[பெண்ணிற்கு] அவரோட தோற்றம் மனசுக்கு பிடிச்சிருந்தா, அவருடைய பெர்ஸனாலிட்டி/approach எல்லாம் எப்படின்ன்னு தெரிஞ்சுக்க பேசிப் பாருங்க.

* 'எப்படி பேச்சை ஆரம்பிக்கிறது?'
'பேசினா தப்பா நினைப்பாறோ??'
அப்படின்னு எல்லாம் தடுமாறாம......இயல்பா இருங்க.
அதான் உங்க appearance test ல பாஸ் ஆகிட்டீங்களே.......ஸோ நோ மோர் டென்ஷன்!!

ஆனா......என்ன பேசுறதுன்னு முன் யோசனை இல்லாம.......

"உங்களுக்கு எந்த நடிகை பிடிக்கும்"னு அசட்டுத்தனமான கேள்வி எல்லாம் கேட்காம.........கிடைச்ச 5 நிமிஷத்துல உருப்படியா பேசனும்.

* முதல் முதலா கேட்கிற கேள்வி...........அவருடைய வாழ்க்கை லட்சியம்/குறிக்கோள் , இப்படி ஏதாவது இருக்கா?? இருந்தா.........அது என்ன? அப்படின்னு கேட்கலாம்.

தன் வேலையிலோ[career], தொழிலோ சில உயர்வான நிலையை அடைவது அவரது லட்ச்சியமாக அவர் கூறினால், வாழ்க்கையை திட்டமிட்டு , ஒரு குறிக்கோளோடு முன்னேறி செல்பவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.

[ 'நமக்கெல்லாம் நோ ambition..........ஜஸ்ட் டேக் லைஃப் அஸ் இட் கம்ஸ்.........லிவ் ஃபார் தி டே" அப்படின்னு பையன் மொக்கை போட்டா....மார்க் கம்மி பண்ணிடுங்க']

*அடுத்து அவருக்கு, பிடித்தமான பொழுதுபோக்கு[hobby] என்னன்னு கேட்கலாம்.......அந்த ஹாபி விளையாட்டு சம்மந்தமானதாக இருந்தால், உடம்பை கட்டுப்பாட்டுடன் வைத்திருப்பதில் அக்கறை உள்ளவர்ன்னு புரிஞ்சுக்கலாம்.
அப்படியே 'ஜிம்' க்கு போற பழக்கம் இருக்கான்னும் கேட்டுக்கங்க.

*நீங்க வேலைக்கு சென்று கொண்டிருப்பவராக இருந்தால், திருமணத்திற்கு பின் வேலைக்கு செல்வதில் அவரது விருப்பம் என்ன என்பதை பேசி தெரிந்துக் கொள்வது நலம்.

வேலை பார்க்கும் இடம் காரணமாக இருவரும் வெவ்வேறு ஊரில் பணிபுரிந்தால், இடம் மாறுதல் சாத்தியமா?அதற்கான வழிமுறைகள் என்ன என்பதையும் தெரிந்துக்கொள்வது நல்லது.

*அடுத்த முக்கியமான விஷயம், அவரது பழக்க வழக்கங்கள்.

உங்களுக்கு சிகரெட், மது பழக்கங்கள் சுத்தமாக பிடிக்காது என்றால், அவருக்கு அந்த பழக்கம் இருக்கிறதா என்பதை தெளிவாக கேட்டு தெரிந்துக் கொள்ளுங்கள்.

"கொஞ்சம் கொஞ்சமா இந்த பழக்கத்தை விட ட்ரை பண்ணிட்டு இருக்கிறேன்..........கல்யாணத்துக்கு அப்புறமா முழுசா விட்டுறுவேன்" அப்படின்னு டயலாக் விட்டா.......உஷார்!!!

பழக்கத்தை கைவிடனும்னு நினைச்சா..........கல்யாணம் வரைக்கும் வெயிட் பண்ண வேண்டிய அவசியமில்லையே!
ஸோ.....எந்த காரணத்தை கொண்டும் உங்கள் எண்ணங்கள், எதிர்பார்ப்புகளை காம்ப்ரமைஸ் பண்ணிக்காதீங்க.

[ஸ்மோக்கிங் & occational drinking .......ஆணின் மேனரிஸமாக நீங்க கருதினா, இந்த கேள்வி உங்களுக்கு முக்கியமானதாக இருக்காது]

* உங்களுக்கென்று தனிப்பட்ட ஆசைகள், லட்சியங்கள் இருந்தால், அதனை அவரிடம் தெளிவாக வெளிப்படுத்துங்கள்.
உதாரணமாக.... பாட்டு, டான்ஸ்.........போன்ற கலைகளில் உங்களுக்கு அதிக ஈடுபாடு இருக்குமானால், திருமணத்திற்கு பின்பு உங்கள் கலை ஆர்வத்தை எந்த நிலையில் வைத்திருக்க விரும்புகிறீர்கள் என்பதை தெளிவு படுத்துவது நல்லது.

* இதுவரை கேட்ட கேள்விகளும், உரையாடலும்.......உங்களுக்கு அவரிடம் ஒருவித மனம் ஒத்துபோன இயல்பான சூழ்நிலையை[comfort zone] ஏற்படுத்தியிருக்குமானால்,
அவரது கடந்த கால காதல் விவகாரம், அல்லது உங்கள் வாழ்க்கையில் அவ்விதம் ஏதும் இருந்தால் அவரிடம் மனம் விட்டு பேசலாம்.

தனியாக பேச கிடைத்த 10 நிமிஷ சந்தர்ப்பத்தில், ஒருவரையொருவர் முழுவதுமாக புரிந்துக் கொள்ள இயலாவிட்டாலும்,
"இவருடன் என் வாழ்க்கை எப்படி இருக்கும்? ஒத்து போகுமா??" போன்ற சில கேள்விகளுக்கு பதிலும், முடிவெடுக்க மனதில் ஒரு தெளிவும் நிச்சயம் வரும்.

கண்டதும் காதல் வரும்போது....
கலந்து பேசி புரிதல் வருவது சாத்தியம்தானே!!


'அவளிடம்'......சில கேள்விகள்!!!



March 16, 2009

சந்தித்தவேளை - 1



கோயம்புத்தூர் நிர்மலா கல்லூரியில் பி.காம் படித்து முடித்துவிட்டு, சென்னையிலுள்ள தன் சித்தியின் வீட்டில் தங்கியிருந்து பட்டபடிப்பினை தொடர,அங்குள்ள ஒரு பிரபல கல்லூரியில் எம்.பி.ஏ அட்மிஷனிற்காக தன் பெற்றோருடன் சென்னைக்கு சென்றாள் அபிநயா.

ஒரு வாரம் சென்னையில் தங்கியிருந்து, தூரத்து உறவினர் இல்லத்திருமண விழாவிற்கும் சென்றுவிட்டு, அபியும் கல்லூரிக்கு செல்ல ஆரம்பித்ததும் கோயம்புத்தூர் திருமபலாம் என முடிவு செய்திருந்தனர் அவளது பெற்றோர்.

அபிநயாவின் சித்தி மகள் மாலினி, எத்திராஜ் கல்லூரியில் முதலாமாண்டு பி.ஏ படித்துக்கொண்டிருக்கும் சுட்டி பெண்.சிறுவயதிலிருந்தே அபியும் மாலினியும் அக்கா தங்கை என்பதற்கும் மேலாக நல்ல தோழிகள்.மாலினியின் தம்பி வருண் பள்ளியில் +1 படித்துக்கொண்டிருந்தான்.

மூவரும் நீண்ட நாட்களுக்கு பின் ஒருவரை ஒருவர் சந்தித்துக்கொண்டதால், லூட்டி அடித்துக்கொண்டிருக்க, வீட்டிலுள்ள பெரியவர்கள் மட்டும் உறவினரின் திருமண வரவேற்பிற்கு சென்றனர்.
திருமண விழாவில் தன் பள்ளிகால நண்பரான நடராஜனை சந்தித்தார் அபியின் அப்பா பாலு.
பல வருடங்களுக்கு பின் ஏதேச்சையாக சந்தித்துக்கொண்டதும், நண்பர்கள் இருவரும் உற்சாகமாக அரட்டை அடித்துக்கொண்டனர்.

நடராஜ் தன் மனைவி மற்றும் மகன் கிஷோரை பாலுவின் குடும்பத்திற்கு அறிமுகப் படுத்தினார்.பெரியவர்களுக்கு மரியாதையுடன் வணக்கம் தெரிவித்த கிஷோர், தன் நண்பர்களின் கூட்டத்தோடு மீண்டும் கலந்துவிட்டான்.

தன் மகள் அபிநயா தங்களுடன் வராததால், தனது மணிபர்ஸலிருந்த குடும்ப புகைப்படத்தை நண்பனுக்கும், அவரது மனைவிக்கும் காட்டினார் பாலு.


அபி எனும் அழகு தேவதையை புகைப்படத்தில் கண்டதும், நடராஜும் அவரது மனைவியும் ஒரு அர்த்த புன்னகை உதிர்த்தனர்.
பின், தங்கள் மகன் கிஷோருக்கு 3 மாதத்துக்குள் திருமணம் செய்துவிடுவது அவனது ஜாதகப்படி நல்லது, என கடந்த வாரம் ஜோசியர் தங்களிடம் சொல்லியதை தெரிவித்து, நண்பர்கள் சம்பந்திகளாவது குறித்து பேசினர்.
பாலுவின் குடும்பத்திற்கும் முழு விருப்பமாக இருந்ததால், அபியிடம் ஒரு வார்த்தை கூட கேட்காமலே , வெள்ளிக்கிழமை பெண் பார்க்க வீட்டுற்கு அழைத்தனர்.

திருமண வைபவம் முடிந்து வீட்டிற்கு வந்த பெற்றோர், பெண் பார்க்க வரும் செய்தியை அபியிடம் சொன்னதும், அவள் முழுவதுமாய் உடைந்து போனாள்.
தனது எம்.பி.ஏ கணவு ஒரு சில மணி நேரத்தில் சிதைக்கபட்டுவிட்டதை உணர்ந்த அபி, தன் அம்மாவிடமும் சித்தியிடமும் அழுது கெஞ்சியும், எதுவும் பலிக்கவில்லை.அவளது அப்பா முடிவு என்று ஒன்று எடுத்துவிட்டால்.....யார் சொன்னாலும் மாற்றிக்கொள்ள மாட்டார் என்பது குடும்பத்தில் அனைவரும் அறிந்திருந்தபடியால், அபியின் கெஞ்சுதல் அர்த்தமற்று போனது.

இவ்வளவு நேரம் தங்களுடன் சிரித்து பேசி கும்மாளமடித்து கொண்டிருந்த அபி, இப்படி உடைந்து போய் அழுவது கண்டு, மாலினியும் வருணும் அவளை சமாதனப்படுத்தினர்.

"அபி அக்கா........உனக்கு இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னா......அந்த மாப்பிள்ளை பையன் பொண்ணு பார்க்க வர்ரப்போ, தனியா 10 நிமிஷம் பேசனும்னு கூப்பிட்டு, உனக்கு இஷ்டமில்லன்னு சொல்லி கல்யாணத்தை நிறுத்திடு, அப்படியும் மாப்பிள்ளை பையன் கேட்கலைன்னு வை..........என்கிட்ட சொல்லு நான் பாத்துக்கிறேன்" என்று பெரிய மனுஷன் மாதிரி பேசினான் வருண்.



"அப்படி தனியா பேச அப்பா......சம்மதிப்பாரா தெரியல......அதுவும் மாப்பிள்ளை பையன் கேட்காம நான் எப்படிடா தனியா பேசனும்னு சொல்ல முடியும்"என்றாள் அபி பாவமான முகத்துடன். அவள் கண்களில் தன் அப்பாவின் மீது வைத்திருந்த பயம் அப்பட்டமாக தெரிந்தது.

"அபி சொல்றதும் சரிதான்டா வருண்......பெரியப்பாகிட்ட இதெல்லாம் செல்லாது..............ஒரே வழிதான் இருக்கு அபி இதுல இருந்து தப்பிக்க"

"என்னடி அது........."

"நேரா மாப்பிள்ளை பையனையே போய் அபி அக்கா மீட் பண்ணிடுறதுதான்........."

"என்னடி உளர்ற......."

"நான் சொல்றதை கேளு அபி............மாப்பிள்ளை பையன் ஃபோடோ கூட நம்மகிட்ட காட்டல, பட் இட்ஸ் ஒகே.........நான் நைஸா மாப்பிள்ளை பையன் எங்கே வேலை பார்ர்கிறார்ன்னு என் அம்மா கிட்ட கேட்டு தெரிஞ்சுட்டு வரேன், வெள்ளிக்கிழமை பொண்ணு பார்க்க வர்றதால.....ப்யூட்டு பார்லர்ல ஃபேஷியல் பண்ணனும்னு சொல்லி உன்னை நான் வெளியில கூட்டிட்டு போறேன், நாம இரண்டு பேரும் போய் அந்த பையனை நேர்ல மீட் பண்ணி, எப்படியாச்சும் இந்த கல்யாணத்தை நிறுத்திடுங்கன்னு கேட்டுப்பார்க்கலாம்"

"ஹை........இது சூப்பர் ஐடியா மாலு.........உனக்கு கூட அப்பப்போ மூளை வேலை செய்யுதே" என கிண்டலடித்தான் வருண்.

எப்படியாவது இந்த கல்யாணம் நடக்க கூடாது, தன் எம்.பி.ஏ படிப்பும் கெட கூடாது என்ற ஆசையில் அபியும் சம்மதித்து, மாலினியுடன் மறுநாள் சென்றாள்.

சென்னையிலுள்ள ஒரு பிரசித்தமான ஃப்ர்னிச்சர் கடையின் சொந்தக்காரர் தான் திரு.நடராஜ் என்பதையும், ராயப்பேட்டையிலுள்ள கிளையினை அவரது மகன், மாப்பிள்ளை பையன் கிஷோர் பார்த்துக்கொள்வதையும் மாலினி தன் அம்மாவிடம் கேட்டு தெரிந்து வைத்திருந்தாள்.

இருவரும் கடையினை நெருங்கியதும் , அதன் பிரமாண்டத்தை கண்டு ஒரு நிமிடம் ஆச்சரியத்தில் மலைத்துபோயினர்.
பின் கடையின் கீழ்தளத்தில் இருந்த கடை பையனிடம் , கடையின் ஓனர் திரு,கிஷோரை பார்க்கவேண்டும் என்று கூறி, மேல் தளத்தில் இருக்கும் அவனது அறையில் இருப்பதை அறிந்துக்கொண்டு அங்கு சென்றனர்.

சிறிது திறந்திருந்த கதவை , லேசாக தட்டிவிட்டு,

" எஸ்கூஸ்மீ......." என்றாள் மாலினி.

"யெஸ்......கம் மின்" என்ற பதிலுக்கு பின் இருவரும் அறையினுள் சென்றனர்.

யார் இந்த இரு பெண்களும்??என்பதுபோல் அவன் புருவமுயர்த்தி யோசிப்பதை பார்த்ததும்,
அட! பையனுக்கும் பொண்ணு ஃபோட்டோ காட்டலியா?
என்று நினைத்துக்கொண்டாள் மாலினி.

"ஹாய் மிஸ்டர் கிஷோர்............ஐ அம் மாலினி, இவ என்னோட அக்கா அபிநயா........இவளைத்தான் நீங்க வெள்ளிக்கிழமை எங்க வீட்டுக்கு பொண்ணு பார்க்க வர்ரீங்க"

'அடடே!!! இது தான் கிஷோர் அப்பா அவனுக்கு பார்த்து வைச்சிருக்கிற பொண்ணா!! இந்த கல்யாணத்தை பெண் பார்க்கும் படலத்துக்கு முன்னமே எப்படியாச்சும் நிறுத்தனும்னு இவ்வளவு நேரம் என்கிட்ட கிஷோர் புலம்பிட்டு, கொஞ்ச நேரம் கடையை பார்த்துக்கோடான்னு சொல்லிட்டு, இப்ப......இப்பத்தான் அவனோட லவ்வரை பார்க்க போனான், அந்நேரம் பார்த்து இந்த பொண்ணுங்க வந்திருக்காங்களே.....!' என்று யோசித்தவன்,

அவன் கிஷோர் இல்லை, அமெரிக்காவிலிருந்து 1 மாத விடுமுறையில் தன் அக்காவின் கல்யாணத்திற்கு இந்தியா வந்திருக்கும் சூர்யா என்பதை சொல்ல வாய்திறக்கும் முன்னே......

"இங்க பாருங்க கிஷோர்........அபிக்கு இந்த கல்யாணத்தில இஷ்டமில்ல, நீங்க பெண் பார்க்க வர்றதுக்கு முன்னமே உங்ககிட்ட சொல்லி, இந்த கல்யாணத்தை நிறுத்த தான் நாங்க இங்க வந்திருக்கிறோம்" என படபடத்தாள் மாலினி.



'அப்படி போடு!!! பொண்ணுக்கும் இஷ்டமில்லையா??? சரி பொண்ணுக்கு ஏன் இந்த கல்யாணத்தில் இஷ்டமில்லைன்னு தெரிஞ்சுக்கிற வரைக்கும் நான் யார்ன்னு சொல்லாமலே பேச்சு கொடுக்கலாம், டைம் பாஸ் ஆன மாதிரி இருக்கும்!' என்று நினைத்த சூர்யா,

"ஓ.......அப்படியா.......ஏ......ஏன் உங்களுக்கு இந்த கல்யாணதுல இஷ்டமில்லைன்னு நான் தெரிஞ்சுக்கலாமா மிஸ் அபிநயா?"

"அவளுக்கு எம்.பி.ஏ படிக்க அட்மிஷன் கிடைச்சிருக்கு........அவ படிக்க போறா........ஸோ அவளுக்கு இதுல இஷ்டமில்ல"

"என்ன மாலினி.......வந்ததுல இருந்து நீயே பேசிட்டு இருக்க, உங்க அக்கா பேசமாட்டாங்களா?? ........அவங்க இப்போ பேசாலீனா.....நாளைக்கு பொண்ணு பார்க்க வர்றப்போ, பாட்டு பாட சொல்லுவேன்" என்று குறும்பாக சிரித்தான்.

"என்ன ஓவரா கிண்டல் பண்றீங்க........அதான் நான் அவ சார்ப்ல சொல்றேன்ல"

"ஒரு நிமிஷம் இரு மாலு.......நானே பேசுறேன்" என்று அவள் கை பிடித்து நிறுத்தினாள் அபி.

"என்னங்க பேசதானே சொன்னேன்...........பாட்டாவே பாடிட்டீங்க" என்று அவன் கண்சிமிட்ட,

".........." அவன் என்ன சொல்கிறான் என புரியாமல் விழித்தாள் அபி.

"என்னங்க அப்படி முழிக்கிறீங்க..........நீங்க ரெண்டு வார்த்தை பேசினதே பாட்டு பாடினா மாதிரி அழகா இருக்குதுங்க, அதைதான் சொன்னேன்......தப்பா நினைச்சுக்காதீங்க, இட்ஸ் ஜஸ்ட் மை காம்பிளிமென்ட்ஸ் டு யுவர் ஸ்வீட் வாய்ஸ்"

அவனது குறுகுறு பார்வையும், நகைச்சுவை பேச்சும் அபிக்கு ஜொள்ளாக தெரியவில்லை.......மாறாக ஏதோ ஒருவித மின் அதிர்வு ஏற்படுத்தியது!!

"சரி........நான் கேட்ட கேள்விக்கு இன்னும் நீங்க பதில் சொல்லல அபிநயா"

"ஆங்.......எனக்கு மேல படிக்கனும், ஸோ......கல்யாணம் பண்ணிக்க இஷ்டமில்ல"

"இதை நீங்க உங்க வீட்ல உள்ளவங்க கிட்ட சொல்லிருக்கலாமே அபிநயா"

"சொன்னேங்க.........ஆனா கேட்க மாட்டென்றாங்க,அதான்........"

"நான் என்ன பண்ணனும்னு எதிர்பார்க்கிறீங்க.........?"

"நீங்.......நீங்க இந்த கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு சொல்லிட்டா மட்டும் போதும், கல்யாணம் நின்னிடும்....."

"நான் சொல்றது இருக்கட்டும்.........இப்படி உங்களை பொண்ணு பார்க்க வர்ற ஒவ்வொரு மாப்பிள்ளை கிட்டயா போய் சொல்லி, கல்யாணத்தை நிறுத்திட்டு இருக்க போறீங்களா?? "

"இல்லீங்க........எனக்கு மாப்பிள்ளை பார்க்க எங்க வீட்ல ஆரம்பிக்கவே இல்ல.......உங்க வீட்ல ரொம்ப விரும்பி கேட்டதால தான்.......இந்த ஏற்பாடே நடக்குது...இது மட்டும் நிறுத்திட்டா.......நான் என் ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணிடுவேன்........ஸோ........"

"ஜஸ்ட் ஒன் மோர் கொஷ்டியன் அபி.........கல்யாணம் பண்ணிகிட்டா மேல படிக்க முடியாதுன்னு ஏன் நினைக்கிறீங்க??"

"................"இந்த கேள்விக்க்கு தன்னிடம் பதிலிள்ளாமல்.......விழித்தாள் அபி.

"என்ன சார் இது.........அதான் கல்யாணத்துல இஷ்டமில்லைன்னு பொண்ணே வந்து சொல்றாயில்ல.........பொண்ணு பிடிக்கலன்னு சொல்லிட்டு போக வேண்டியதுதானே...அதை விட்டுட்டு குண்டக்க மண்டக்கான்னு கேள்வி மேல கேள்வி கேட்கிறீங்க" என்று சலித்துக்கொண்டாள் மாலு.

"என்ன........சொல்லி கல்யாணத்தை நிறுத்த சொன்னீங்க.........." என்று திருப்பி கேள்வி கேட்டான் மாலினியிடம்.

ஒரு நிமிடம் யோசித்த மாலினி......

"பொண்ணு பிடிக்கலைன்னு சொல்லி..........நிறுத்த......சொன்...."

"என்னால அப்படி பொய் எல்லாம் சொல்ல முடியாது..........."

டக்கென்று பதிலளித்த சூர்யாவை நிமிர்ந்து பார்த்த அபி, அவனது பார்வையின் அர்த்தம் புரியாவிட்டாலும், மீண்டும் ஒரு மின் அதிர்வை தனக்குள் உணர்ந்தாள்!!

"என்ன அப்படி பார்க்கிறீங்க.....உங்களை போய் பிடிக்கலன்னு சொன்னா எங்க அம்மா ஏன்டா நீ என்ன குருடா?? அப்படின்னு திட்டமாட்டாங்களா.....????" மீண்டும் அவனிடமிருந்து அதே வசீகரமான சிரிப்பு.

அவனது கிண்டல் பேச்சு மாலினிக்கு மேலும் எரிச்சலூட்டியது, டக்கென்று தன்னிருக்கையிலிருந்து எழுந்துக்கொண்டவள்,

"வா அபி.......இனியும் இவர்கிட்ட பேசி ப்ரயோஜனம் இல்ல.....வேற ஏதாச்சும் ஐடியா பண்ணலாம்"

"ஹலோ........ஹலோ........ஒரு நிமிஷம்......வேற ஐடியாவெல்லாம் பண்ணி உங்க கொஞ்சூண்டு மூளையும் கசக்க வேணாம்..........நீங்க தேடி வந்த மாப்பிள்ளை பையன் நானில்ல....."

அவன் என்ன சொல்கிறான் என்று புரியாமல், திகைப்புடன் விழித்த இருவரிடமும்.......

தான் யார் என்ற விபரமும், தன் நண்பன் கிஷோரின் காதல் விவகாரத்தினால் இந்த திருமணத்தில் அவனுக்கும் விருப்பமில்லததையும் விரிவாக கூறி முடித்தான் சூர்யா.

அபிநயாவிடம் சூர்யா......

"மிஸ் அபிநயா.......உங்க கிட்ட ரெண்டு நிமிஷம் பெர்ஸனலா பேசலாமா??"

"ஓ.......ஓகே...."

"அபி.....நீங்க ரெண்டு பேரும் தேடி வந்தது கிஷோரைத்தான்னு தெரிஞ்சதும், உண்மை சொல்லிட தான் நினைச்சேன், ஏனோ இந்த கல்யாணத்தில உங்க விருப்பமின்மைக்கு காரணம் தெரிஞ்சுக்கனும்னு தோனினதால..........ஒரு விளையாட்டுத்தனத்தோடு உங்ககிட்ட உண்மைய சொல்லாம பேச்சுக்கொடுத்தேன்"

"............."

"ஆனா ஜஸ்ட் லைக் தட் உங்க கிட்ட பேச ஆரம்பிச்சதும்........என்னன்னு தெரிலீங்க அபிநயா....ஏதோ ஒருவித உள்ளுணர்வு.....'ஷீ இஸ் மைன் 'அப்படின்னு ஒரு டப் டப் என் ஹார்ட்குள்ள, இந்த உணர்வு ஏன் வந்துச்சு, எப்படி வந்துச்சுன்னு நீங்க கேட்டா.......கண்டிப்பா எனக்கு சொல்ல தெரில"

"......."

"கண்டதும் காதல்.......பொண்ணு பார்க்க போய் பத்து நிமிஷம் பஜ்ஜி சொஜ்ஜி சாப்பிட்டுட்டே பிடிச்சுப்போறது இதெல்லாம் சுத்த பேத்தல்ன்னு அலப்பறை விட்டவந்தான் நான்........பட்.......நெள ஐ ஃபீல் இட் வித்தின் மீ..........."

"................"

"நீங்க இப்போ உடனே உங்க பதிலை சொல்லனும்னு அவசியமில்ல.......நல்லா யோசிச்சு உங்க பதிலை இன்னும் பத்து நாள்ல நான் யூ.எஸ் போறதுக்கு முன்னாடி சொன்னா போதும், நீங்க விருப்பபட்ட மாதிரியே உங்க ஸ்டடீஸ் கண்டினியூ பண்ணுங்க, உங்க கோர்ஸ் முடிஞ்சதும்............நான்.....நாம........."

அதற்கு மேல் பேச வார்த்தைகளின்றி.......ஒரு தவிப்புடன் அபியை பார்த்தான் சூர்யா.


அபியின் மனதில்........
அவனது குறும்பு பார்வை ஒரு அதிர்வை ஏற்படுத்தியதுன்னா......
இந்த தவிப்பு பார்வை வேறுவிதமான தாக்கத்தை ஏற்படுத்துதே!!
ஒரு ஆணுக்குள் இத்தனை காந்தமா!!!


அந்நேரத்தில் வெளியில் சென்றிருந்த கிஷோர் அங்கு வந்தான். சுருக்கமாக நடந்ததனைத்தையும் சூர்யாவும் மாலினியும் அவனிடம் சொல்லி முடித்தனர்.

எதுவும் பேசாமல் அமைதியாக ஆழ்ந்த யோசனையில் இருந்த அபியிடம் கிஷோர்,

" நீங்க இங்கே என்னை சந்திக்க வந்தது பற்றி உங்க வீட்ல சொல்லாமலே, இந்த கல்யாண ஏற்பாடை நான் நிறுத்திடுறேன் அபிநயா......டோண்ட் வொர்ரி, ஆனா.......சூர்யாவோட ப்ரோபஸல் பத்தி யோசிச்சு பதில் சொல்லுங்க அபி, நானே உங்க வீட்லயும் இவனோட வீட்லயும் பேசுறேன்"

பதில் சொல்ல தெரியாமல் அபி விழித்தாள்!
அவளது தடுமாற்றத்தை புரிந்துக்கொண்ட சூர்யா..........மேஜையிலிருந்த ஒரு துண்டு காகிதத்தில்,

'என் கை தினம் கட்டித்தழுவும் மெளபைலின் எண் xxxxxxxxxx '
என்று எழுதி அபியிடம் கொடுத்தான்.

வீட்டுக்கு ஆட்டோவில் செல்லும் வழியில் அபி எதுவும் பேசவில்லை மாலினியிடம், அக்கா ஆழ்ந்த சிந்தனையில் இருக்கிறாள் என்பதை உணர்ந்து மாலுவும் எதுவும் நோண்டி நோண்டி கேட்காமல் இருந்தாள்.

வீட்டிற்கு வந்த பின் அபிநயா......அமைதியாக யோசித்துப்பார்த்தாள்.

அப்பா தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளை சூர்யாதான் என்று நினைத்து பேசிய போது மனதில் ஏதோ ஒரு மூலையில், 'அப்பா ஸெலக்ஷ்ன் சூப்பர்!!' என்று நினைத்ததை மறுப்பதிற்கில்லை!


அவனது துறு துறு கண்கள்,
குறு குறுக்கும் பார்வை,
வசீகரமான சிரிப்பு மாறா முகம்,
நகைச்சுவையுணர்வு........
எல்லாவற்றிற்கும் மேலாக அவளிடம் மிக மரியாதையுடன் அவளது கண்கள் பார்த்து தெளிவாக பேசியது.......
என அனைத்துமே அவளை கவராமல் இல்லை!!


இதெல்லாம் தன்னை மறுநாள் பெண் பார்க்க வரும் மாப்பிள்ளை என்ற கோணத்தில் தான் அவனைப் பார்த்ததால் ஏற்பட்ட உணர்வு என வைத்துக்கொண்டாலும்.........

தாங்கள் தேடி வந்த மாப்பிள்ளை பையன் அவனில்லை என்று சூர்யா சொன்னதும்..........மனசுக்குள்ள பறந்துக்கொண்டிருந்த ஒவ்வொரு இதய வடிவ பலூனும் பட் பட்டென்று உடைந்தது போன்று ஏமாற்றம் தன்னுள் ஏற்பட்ட உணர்விற்கு என்ன பெயர்??

தனிப்பட்ட முறையில் தான் சூர்வின் மேல் ஈர்க்க பட்டிருப்பதை உணர முடிந்தது அபிநயாவிற்கு!!

தப்பிக்க முயன்றேன்..
உன்
வசீகர புன்னகையால்
வீழ்த்தி விட்டாய்!!

எழ முயன்றேன்...
காந்த பார்வையால்
கட்டி பிடித்து
சிறைவைத்துக் கொண்டாய்!!

இனி....
தப்பிக்க முயலபோவதில்லை
தயவுசெய்து..
விடுதலை மட்டும்
செய்துவிடாதே ப்ளீஸ்....!!!

ஆனால் இந்த ஒரு சந்திப்பை வைத்து முடிவெடுக்க கூடியதா வாழ்க்கை.........??

யோசித்து யோசித்து களைத்துப்போன அபி, சூர்யாவின் தொலைப்பேசிக்கு அழைத்தாள், மனதில் உள்ளதை வெளிப்படையாக தெரிவித்தாள்.
அவள் படித்து முடிக்கும் வரை நட்புடன் பேசி,ஒருவரை ஒருவர் நன்கு புரிந்துக்கொள்ளலாம் என முடிவு செய்தனர் இருவரும்.



சூர்யா அமெரிக்கா சென்ற பின்பும், கிஷோரின் உதவியோடு, பெற்றோரின் சம்மதத்துடன்........... ஃபோன் , இமெயிலில் தொடர்ந்து, நல்லதொரு புரிதலுடன் வளர்ந்த அவர்களது அன்பு, அபியின் பட்டப்படிப்பிற்கு பின் ,இரு வீட்டாரின் சம்மத்ததுடன் திருமணத்தில் முடிந்தது.

முற்றும்.

சந்தித்தவேளை என்ற தொடரில்.......ஒவ்வொரு பகுதியிலும், ஒரு சுவாரஸியமான சந்திப்பு வெளியிடப்படும்!!!

மீண்டும் அடுத்த சந்தித்த வேளையில் சந்திப்போம்!!!

March 13, 2009

கவிஞருக்கு...... ஒரு கவிமாலை!!!




கவிஞரின் பிறந்த நாளன்று
பரிசுடன் வாழ்த்துவதா?
இல்லை கவிமாலை சூட்டி
வாழ்த்துவதா??

கவிஞருக்கு இல்லாத
கவிதையா??
என எனைப் பார்த்து
கண்சிமிட்டி சிரித்தது
கவிதை!!!

என் இதயமே
எழுதிவிட்டால்....
கவிதையும் பரிசுதானே??



பல்லாண்டு பல்லாண்டு
பலகோடி நூற்றாண்டு
நல்லோர்கள் புடைசூழ
எத்திசையும் உன்
கவிதை மணம் வீசட்டும்!!

மொழியில்லை சொல்லில்லை
என்
நெஞ்சத்தின் வாழ்த்தினை சொல்ல.. .
உள்ளத்தின் உணர்வுகளை
ஒருமுகமாய்க் குவிக்கின்றேன் ...!

நோயற்ற வாழ்வோடும்
நொடிதவறா புன்னகையோடும்
ஓவியமாய்க் காவியமாய்
நல்லதமிழ் மகனாக
வற்றாத புகழோடு
எந்நாளும் வாழ்கவாழ்கவென...
வாழ்த்துகிறேன் கவிஞரே!!!


மனபூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்கள் நவீன் ப்ரகாஷ்!!

February 13, 2009

காதல் 'கைதி' !!


எதிரியாக நினைத்த காதலிடமே
கைதியாகிப் போனேன் - பார்
அழகாய் என்னை
குற்றவாளிக்கூண்டில் ஏற்றிவிட்டு
உன் இதயச்சிறையில்
ஆயுள் தண்டனையும் கொடுத்துவிட்டது!!!








"மனதில் கொள்ளை ஆசை இருக்கையில்
நாலே வரியில்
மின்னஞ்சல் அனுப்ப
எப்படியடா முடிகிறது அழுத்தக்காரா??"...
சொல்லி முடிக்குமுன்
அழுத்தமாய் முத்தமிட்டு
அழுத்தக்காரனென்று நிரூபித்தால்
என்னடா அர்த்தம்???







உன மனசு அளவுக்கு
அழுத்தம் உன் உதட்டிற்கில்லை
என சீண்டிப்பார்த்தது
தப்பா போச்சு.......
அழுத்தத்திலும் அழுத்தம்
உன் உதடுகள் மட்டும்தான்
ஒத்துக்கிறேன்டா!!








கால் தடுக்கி
என் கன்னக்குழியில்
விழுந்தது
நீ மட்டுமா??
உன் இதழ்களும் தான்,
இப்போதைக்கு
எழுவதாயில்லை அவைகள்!









எழுந்தாலும்..
மீண்டும் விழச்சொல்லும்
என் கன்னக்குழி,
நீயும் சேர்ந்து விழ
தயாராயிரு!!









மழைதுளியை கையிலேந்தி
குதூகலிக்கும் குழந்தையைப்போல
நான் தலை துவட்டுகையில்
தெரிக்கும் நீர் துளிகளுடன்
நீ விளையாடுகையில்
ஒரு நிமிடம்
என்னையும் மறந்து
நானும் ஒரு குழந்தையாகி போகிறேன்!!!









என்னை காதலிக்க
கற்றுக்கொள்ளும்போதே..
என்னைத் தவிர யாரையும்
காதலிக்கவே கூடாது
என்பதையும் சேர்த்தே கற்றுக்கொள்....!!
உன் ஜொள்ளு பார்வைகளையும்
லொள்ளு பேச்சுக்களையும்
என்னோடு நிறுத்திக்கொள்...!!








தெரியாத வெட்கம்
தெரிய வைத்ததே போதும்...…!
தெரியாத பலவற்றை
சொல்லி தர தொடங்கிவிடாதே...
தொலையாத என்னை முற்றிலும்
உன்னில் தொலைத்து விடுவேன்!!

January 19, 2009

கவிதை ' கண்ணாமூச்சி'...!!


இரகசியமாய்...
உன் கவிகுகையினுள்
வேவுபார்க்க நுழைந்தேன்...!
நான் இதுவரை
ரசித்த வரிகள்
முதன்முறையாக
வெட்க்கப்பட வைத்து
எனைப் பார்த்து சிரித்தது!!!






உன்
கவிகருவில் நானா?
கவி உருவில் நானா??
தெரியவில்லை....
ஆனால் எங்கேனும்
ஒரு வார்த்தையிலாவது
நான் இருப்பதை
உன் எழுத்து
உணர்த்த தவறவில்லை!!







புரிந்தது..
என் வெட்கத்தையும்
படம் பிடிக்கும்
புகைப்பட கருவி
உன் கவிதைகள் என!!!







இடைவெளியின்றி
படபடவென
நான் பேசுவதை
மெளனமாய்
கேட்டுக் கொண்டிருந்து
கவனமாய் மொழிபெயர்த்து
கவிதையாக வெளியிடுவதை
எப்போதடா நிறுத்தப் போகிறாய்??







நீ
எழுதும் கவிதையில்
நான் இருப்பதைவிட
உன் 'கவிதை'யாக
இருப்பதையே விரும்புகிறேனென்று
எப்படி தெரிந்துக் கொண்டாய்..??
உன் கவிதையாக எனை
மெது மெதுவாக
செதுக்க ஆரம்பித்துவிட்டாயே!!







உனக்கும்
உன் கவிதைக்கும்
அப்படி என்னதான் கோபம்?
பல நாட்கள்
என்னுடன் பேசாமல்
விரதம் இருந்து
சாதித்து விட்டீர்களே இருவரும்!!!







யார் யாரோ எழுதிய
கவிதையை நீ பாராட்டியதை
கண்டதிலிருந்து
கிறுக்கிக் கொண்டுதானிருக்கிறேன்
என்றாவது ஒருநாள்
என் கிறுக்கலும்
உனக்கு பிடித்த
கவிதையாகுமென்ற நப்பாசையில்!!






கவி எழுத தூண்டிய
உன் கண்கள்
தீண்டியபின் தான்
ஓவ்வொரு கவிதையையும்
பரிமாறுகின்றேன்
அனைவருக்கும்...






நீ
முதன் முதலில் படிப்பதில்
தலைக்கனம்
என் கவிதைகளுக்கு மட்டுமல்ல...
எனக்கும்தான்!!






என்ன மாயம் புரிந்தாய்...
உன் விழி தூண்டலில்
வரிகள் எழுதினால்
உன் விழி தடவிய‌தும்
வரிகளெல்லாம்
கவிதையாகி விடுகிறதே!!!






என் கவிதையை
நீ ரசிக்க
உன் கவிதை கண்டு
நான் வெட்கப்பட
நம் இருவருக்குமான
'கவிதைகளை'
நாம் வாசிக்க ஆரம்பித்ததும்
ஆர்பரித்தது கவிதைகள் மட்டுமா??







சிறிதுநேரம் இடைவெளிகொடு...
உன் ரசிப்பிற்கும்
என் வெட்கத்திற்கும்
நடுவே சிக்கி
மூச்சு விட திணறுகிறது
நம் காதல்....!

January 18, 2009

ஹேய்! ..... மனசுல பட்டாம்பூச்சி சிறகடித்து பறக்குதே......!!




என் வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து பாராட்டிய நண்பர் வித்யா சங்கருக்கும்[Gils], மற்றும் பிரபுவிற்கும்,
எனது 'கவிதை சோலை' வலைதளத்திற்கு பட்டாம்பூச்சி விருது கொடுத்து கெளரவித்த இரவீ க்கும் என் மனமார்ந்த நன்றி.

இவ்விருதினை நான் கொடுக்க விரும்புவது...

1. எழில் பாரதி
பிரபல கவியரசி இவர் என் உள்ளம் கவர்ந்த தோழியுமாவார்.
நளினமான வரிகளுடன்,
எளிமையான நடையில்,
எழிலான கவிதைகள் எழுதுவதில் இவருக்கு நிகர் இவரே.....!!!

2.ரிஷான்
இவரது அபாரமான எழுத்து நடை கண்டு பிரமிப்புடன் இவரது படைப்புகளை ரசித்து படித்திருக்கிறேன்.
தன்க்கென ஓர் எழுச்சியான எழுத்து திறனுடன் இவர் எழுதும் சிறுகதைகள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு விதத்தில் மனதை கவரும்.
பல அருமையான கவிதைகளும் எழுதி படிப்பவரின் மனதை தொட்டு செல்வது இவரது இயல்பு....

3.பாச மலர்
கருத்துள்ள கவிதைகள் மற்றும்
சிந்திக்க வைக்கும் பதிவுகள் நிறைந்த பெட்டகம் இவரது வலைதளம்.
நடைமுறையில் நிகழும் இயல்பான சம்பவங்களை கொண்டு இவர் எழுதும்
சிறுகதைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்.

4.தமிழன் கறுப்பி
கவிதைகளை பலர் எழுதிப்பார்த்திருக்கிறேன்,
உணர்வுகளை கொண்டு கவிதையை செதுக்குவதை
இவரது கவிதைகளில் கண்டு புருவமுயர்த்தி அசந்திருக்கிறேன்!!
பல புது புது அழகான வார்த்தைகளையும் இவரது கோர்வையான எழுத்துக்களில் காணலாம்.


இந்த விருது பெற்ற பின் பின்பற்ற வேண்டிய சில விதிமுறைகள்:

1. இந்த பட்டாம்பூச்சி இலச்சினை உங்கள் பதிவு பக்கத்தில் இருக்க வேண்டும் (Put the logo on your blog)
2. உங்களுக்கு விருது கொடுத்த நபரின் இணையதள முகவரிக்கு ஒரு இணைப்பு கொடுக்க வேண்டும் (Add a link to the person who awarded you)
3. 3 அல்லது அதற்கு மேலான பதிவர்களைத் தேர்வு செய்ய வேண்டும் (Nominate at least 3 other blogs)
4. தேர்வுசெய்யப்பட்ட பதிவுகளிற்கு உங்கள் பதிவில் இருந்து இணைப்பு தர வேண்டும் (Add links to those blogs on yours)
5. நீங்கள் தேர்ந்தெடுத்த பதிவுகளில் அவர்களுக்கு இச்செய்தியை தெரிவிக்க வேண்டும் (Leave a message for your nominees on their blogs)

December 19, 2008

காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???




காதல் எப்படி?..... எங்கே?..... ஏன்?? வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது.


கண்டதும் காதல் வரலாம்.
கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம்.
கண்ணடிச்சா காதல் வரலாம்.
கன்னத்துல அடிச்சா கூட காதல் வரலாம்.
இப்படி தொறந்த வீட்டுல..ஸாரி.............., தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.


பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.
நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.
அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.
எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.
கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.
தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.



*காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ,
*எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர்,
*கிழிஞ்சு போன பஸ் டிக்கெட்,
*லேசா செம்பட்டையான ஒரு முடி,
*குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,
*காது போன குட்டிக் கரடி பொம்மை,
*ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற ஃபீலிங் கிடைக்கும்.


இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.


* 23சி பஸ்ஸுக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்பீங்க. 25 வயசுள்ள ஒரு பையன் பஸ் வரலையேன்னு டென்ஷனோட 26 வது தடவையா நகத்தைக் கடிப்பான். 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவன் பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவன் கைக்குப் போகும். அப்புறம் அவன் டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவனுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!




* தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸாரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க.

அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.



* நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒருத்தன் உங்க பின்னாலேயே வருவான். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லுவான். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு!

திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?"ன்னு கேட்பான். இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை!!



* "எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்".
"அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா டவுட் கேட்க ஆரம்பிப்பாங்க.
"எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்ஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க.


கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும்.
அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை!!



* "ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."

ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெஸேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும்.



* "மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெட்டானது காட்று!'


- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.


ரெண்டே வரியில் நச்சுன்னு காதல் கவிதை எழுதுறவுகளும் கவிதை அம்புகளை அனுப்புவாக, அதை படிச்சுப்புட்டு,
"நம்ம பேரு என்ன இவ்வளவு கவித்துவமாவா இருக்கு??"
"நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது. ஜாக்கிரதை!!!



* "இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்டினு' பந்தாவா ஒருத்தி முள்ளைத் தூவிட்டுப் போவா.
"இந்த சுடி என் லவ்வர் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா.
"அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறா. நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும்.
"அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை!!!




* அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசாத்தி வேணாம்.


பட்டாசு வெடிச்சாத்தான் தீவாளி,
கேக்குத் தின்னாத்தான் கிறிஸ்மஸ்,
ப்ரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான்,
அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

(பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே.)

December 10, 2008

உயிரே!....உறவாகவா??? - 4



உயிரே!....உறவாகவா??? - 1

உயிரே!....உறவாகவா??? - 2

உயிரே!....உறவாகவா??? - 3



பானுவின் பிறந்தநாளான அன்று மட்டுமாவது இளமாறனிடம் பேசும்படி ரமேஷும் , பெற்றொரும் வற்புறுத்தவே பானுவும் சம்மதித்தாள்.

அவளது வீட்டினரின் சம்மதத்துடன் பானுவை வெளியில் அழைத்துச் சென்றான் இளமாறன்.

நீண்ட நாட்களுக்குப் பின் பானுவும் , இளாவும் அவனது காரில் சென்றனர்.

சாரல் மழையும்...
மெல்லத் தீண்டும் தென்றலும்...
மேனியை வருடிச் செல்ல…
அதுவே அன்றைய பொழுதில் ஒரு இனிய சுகத்தைக் கொடுத்தது.

அந்த சுகத்தை அனுபவித்தவாறு…
இருவரும் ...பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


நீண்ட நாட்களுக்கு பின்......அன்றைய கால நிலையும், சூழ்நிலையும் சேர்ந்து...
இளாவின் மனதுக்குள் புது வித ராகம் பாட…

அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு கண நேரத்திலும்...
அவன் முகத்திலும், அகத்திலும்...
ஆயிரமாயிரம் உணர்ச்சி வெள்ளம்...
இன்பமாக பொங்கி எழத் தொடங்கின.


மழை சாரல்!
மாலை நேரம்!
அருகில் தேவதையாய் அவள்!

அந்தத் தேவதைக்குப் பக்கத்தில் இருந்ததால்…
இதுவரை அவனுள் புதைந்திருந்த காதல் தீ...
பட்டெனப் பற்றிக் கொண்டு...
சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.

சாரலாகவோ
நிரம்பவோ
எப்பொழுதும் நான்
ரசிக்கும் மழை நீ...
எப்போது மீண்டும்
திரண்டு வந்து
மழையாய்
பொழிவாய் உன்
காதலை....
நனையக் காத்திருக்கிறேனடி...!!!


எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...

அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரிந்தது,
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!


அந்த இருட்டான வாகனத்தில் வெளிச்சம் வந்து போகும் போது...
அவனுக்கு அவனது தேவதை தெரிந்தாள்.

அவனது இதயத்தின் அறைகளில் எல்லாம்...
மெல்லிய பூவாசம் அடித்தால் போல்...
சுகந்தமாய் வாசம் வீசத் தொடங்கியது!!

அமைதியாக யோசனையில் மூழ்கிய படி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பானுவை பார்க்கையில்........இளாவிற்கு அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இளாவின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியது நினைவிற்கு வந்தது......!!



இளாவின் பிறந்தநாள் அன்று அவனது விருப்பப்படி, அவனுக்கு மிகவும் பிடித்த கலரில் புடவை உடுத்தி வந்தாள் பானு.
இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் வந்தமர்ந்ததும்......,

பானு அவனுக்கு அன்பளிப்புடன் ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்தாள்.
வாழ்த்து அட்டையை பிரித்த இளா.......அதனுள் பானு எழுதியிருந்த கவிதையை படித்து அதிசயத்துப் போனான்.

"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"

"நன்றி.......நன்றி........"

"ஒவ்வொரு வரியும் செம கியூட்டா இருக்கு.......உன்ன மாதிரியே"

"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"

"ஹே.......நிஜம்மா தாண்டா சொல்றேன்.....ரொம்ப பிடிச்சிருக்கு உன்னையும், உன் கவிதையையும்"

"ஹும்........"

"என்ன.........ஹும் னு சலிச்சுக்கிறே"

"ம்ம்.......வெறும் விமர்சனம் மட்டும்தானா என் கவிதைக்கு??"

"ச்ச.....ச்ச........இவ்வளவு அழகா கவிதை எழுதின என் செல்லத்துக்கு பரிசு கொடுக்காம இருப்பேனா"

கண்சிமிட்டலுடன்.......அவளது கரங்களை எடுத்து, உள்ளங்கையில் அழுத்தமான முத்தமிட்டான் இளா!

"கவிதை எழுதிய கைகளுக்கு பரிசாக முத்தம்......போதுமாடி செல்லம்??"


"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,

ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....

"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!

"ச்சீ........போடா"

"என்னது......போ 'டா' வா????????"


கோபப்படுவதுபோல் முகபாவத்தை மாற்றியபடி இளா இன்னும் அவளை நெருங்கி, அவள் காதில்.......


உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!


பழைய நினைவுகளை சுவைத்தபடி,
அவர்கள் வழக்கமாக செல்லும் பீச்சிற்கே காரைச் செலுத்தினான் இளா.
அவர்கள் பீச்சை சென்றடையும் போது மழை நின்றிருந்தது.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒர் இடத்தில் அமர்ந்தனர்.
அவன் பக்கம் திரும்பாமல் தூரத்தில் தெரிந்த அலைகளில் பார்வையை பதித்திருந்தாள் பானு.

"பாவி.. பக்கத்தில் உனது பார்வைக்கு ஏங்கும் ஜீவனை விட்டுட்டு.. அலைகளை பார்த்து கொண்டிருக்கிறாயே..?" என்று மனதுக்குள் செல்லமாய் பானுவை திட்டியவன்,கொஞ்சம் அசைந்தால் அவளை ஸ்பரிசிக்கலாம் என்ற அளவுக்கு இடைவெளி விட்டு அவளது அருகே அமர்ந்தான்.

பானு அவனை திரும்பி பார்த்தாள்.
பானுவின் முகத்தில் முன்பிருந்த பளபளப்பு இல்லை, இளமை இல்லை.
அவனது கண்களைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் ஓசைப்படுத்தாமல் அழுதாள்.

அவன் எதுவுமே சொல்லாமல் அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்தான்.

மனசில் பொங்கிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று சிவந்து போன அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
குனிந்திருந்த இளம் முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.


பால் போலக் கபடமற்ற முகம்.
தாமரை மலர் போல அழகான அமைப்பு.
இப்போது வேதனையால் மொட்டுப் போலக் கூம்பி விட்டதைக் காண அவனுக்கு சகிக்கவில்லை.
மெதுவாக அவளது இடது கை விரல்களை தடவியபடியே பேச்சை அரம்பித்தான்.

"பானு...."

"ம்ம்.."

"பானு.......மதிமாறன் மறுபடியும் கதை எழுதனும்"

வியப்புடன் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் பானு.

"ஆமாம் பானு.........நீ தொடர்ந்து எழுதனும்........நிறைய எழுதனும், உனக்குள்ள இவ்வளவு பெரிய எழுத்து திறமை வைச்சுட்டு நீ இப்படி இடிஞ்சு போய்ட கூடாதுமா செல்லம்"

" இளா.......நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் சொல்றீங்களா.........எனக்கு தான்.........வலது கை......."

தனது வலது கரத்தை அவள் முன் நீட்டினான் இளா......

"இந்த கை எழுதும்.........பானு எழுத நினைக்கிற எண்ணங்களை மதிமாறனின் எழுத்துக்களாக்கும் இளமாறனின் இந்த வலதுகை"

"........"

பேச வார்த்தைகளின்றி.....விளித்தாள் பானு!!!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
கை இல்லாவிட்டால்
என்னடி..
உன் தாயாக மட்டுமல்ல
உன் கையாகவும் இருப்பேன்
நான்...
நம்பிக்கை கொள்ளடி..
என் செல்லமே..


".........."

"என்னமா நம்ப மாட்டியா என்னை......."

"இல்ல...............எனக்கு.....என்ன சொல்றதுன்னு......"

"என்னடா இது இதுக்கெல்லாம் கண்கலங்கிக்கிட்டு.......கண் துடைச்சுக்கோ , "

"......."

"நான் ரசிச்சு பிரமிச்சுப்போன எழுத்துக்களுக்கு சொந்தகாரி நீன்னு தெரிஞ்சுப்போ.........சந்தோஷத்துல திக்கு முக்காடிட்டேன்டா பானு"

".........."

" என் செல்லதுக்குள்ளே இப்படி ஒரு எழுத்து திறமையான்னு மலைச்சுப்போய்ட்டேன் தெரியுமா??.........ஆனா கள்ளிடா நீ, வேணும்னே மதிமாறனோட எழுத்தை எவ்வளவு மட்டம் தட்டிருக்க என்கிட்ட"

செல்லமாய் அவள் கன்னங்களில் கிள்ளினான் இளமாறன்.

முன்பெல்லாம் இப்படி செல்லமாய் கிள்ளினால் கூட, உடனே பானு
செல்ல கோபத்தில்.. அழகாய் விழிகள் விரிய, அவளது உணர்ச்சிகளின் வெளிப்பாடாய், அவனது மார்பிலும்.. வயிற்றிலும்.. சரமாரியாய் அடிகளை குத்துகளை வாரிவழங்கி.. ஓய்ந்துபோய்.. கண்கள் கலங்க.. அவனது மார்பில் பானு சாய்ந்து கொள்வாள்…

இளா அவளை தனக்குள்ளே புதைத்து கொள்ளும் வேகத்தில்.. இறுக்கி அணைத்து.. அப்புறம்.. அப்புறம்.. முத்த மழை பொழிவான்!!!

ஆனால் இன்றோ வெறுமையான ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"என்னமா பானு........ஏன் ஒரு மாதிரி இருக்கிறே?"

"உங்கள் கைகள் மதிமாறனோட கதைகள் மட்டும் எழுதினா போதும்"

" நீ என்ன சொல்ல வர்ரேன்னு புரியல......"

" கை ஒடைஞ்சு போன உங்க ஆத்மார்த்த எழுத்தாளராய் மட்டும் என்னை பாருங்கன்னு சொல்றேன்"

"பானு........பானுமா........."

விருட்டென்று எழுந்தவள் தன் கண்ணீரை மறைக்க முடியாதவளாய், சிறிது தூரம் நடந்துச் சென்று கடல் அலைகளில் கால் நினைத்தபடி நின்றாள் பானு.


சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த இளா........அவள் தன்னைவிட்டு விலகி விலகி செல்வதும் அவள் தன் மீது வைத்திருக்கும் 'காதலால்' தான் என்பதை உணர்ந்தவனாய், அவளுக்கு தன் மீதுள்ள காதலை எண்ணி பிரமித்தான்!!

இப்போதிற்க்கு அவளது அருகாமையே போதும்..........அவளது எழுத்தாற்றல் மறைந்து போக கூடாது, என் பானுவிற்காக பொறுமையாக காத்திருப்பேன் என்ற தீர்மானத்துடன் அவளுக்கு அருகில் நின்று அலைகளில் கால் பதித்தான்.

"பானுமா........நீ இப்போ ரொம்ப குழம்பி போய் இருக்கிற......இப்போ எந்த முடிவிற்கும் வரவேண்டாம்.....இப்போதிற்க்கு கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்து, நீ எழுத நினைக்கிறதை என்கிட்ட சொல்லு........நான் எழுதுறேன்......மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் , சரியா???"

"ஹும்........"

" பெரிய எழுத்தாளர் மதிமாறனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க என் கைகள் கொடுத்து வைச்சிருக்கனும் "என்று கண் சிமிட்டினான்,


அவள் கட்டாயமாக புன்னகையை வரவழைக்க முயற்சித்தாள்.
அம்முயற்சி கூட அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தது.

சீறி வந்த அலை அவளது இடுப்பு வரையில் நனைத்து விட்டு ஓட....ஒரு கணம் தடுமாறி விழப்போனவளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் இளமாறன்..
இதைச் சற்றும் எதிர்பாராத பானு, தன்னை உதறிக்கொள்ள முயற்சிக்க..அடுத்த அலையினால் தாக்கப் பட்டவளாய் மீண்டும் அவன் மீதே சாய்ந்தாள்.

நிமிர்ந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவ்வளவுதான் .....அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு அவள் இதயத்துள் ஏதேதோ பேசியது...

உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!



அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.


அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

முற்றும்.