பகுதி - 1சத்யா காலிங் பெல்லை அழுத்திவிட்டு காத்திருந்தான், அவன் எதிர்பார்த்தபடி 'அவள்' தான் கதவை திறந்தாள்......
அவளை இதற்கு முன் பார்த்ததே இல்லாததுபோல் முகத்தை வைத்துக்கொண்டு, அவளிடம்....
"இந்த பில்டிங்ல மிஸ்டர் ராம்குமாரோட வீடு எதுன்னு கொஞ்சம் சொல்ல முடியுமா??" என்றான் சத்யா.
".............." அவள் பதலளிக்காமல் புருவமுயர்த்தி அவனை கூர்ந்து பார்த்தாள்.
"என்னங்க உங்களைத்தான் கேட்கிறேன்........மிஸ்டர் ராம்குமாரோட....."
"என்ன.......மிஸ்டர் சத்யா........... உங்க அண்ணா வீட்டுக்கே ....என்கிட்ட வழி கேட்கிறீங்களா????......வீட்டு சாவி வாங்க வந்துட்டு, இதுல லொள்ளு வேற" என்று கேலி புன்னகை சிந்தினாள் அவள்!
'
தான் யார் என்பது இவளுக்கு எப்படி தெரியும்' என்று அவன் விழித்துக்கொண்டிருக்க, கிட்ச்சனில் வேலையாக இருந்த அவளது அம்மா....
"வாசல்ல ........யாருமா வைஷு" என்று கேட்டுக்கொண்டே வாசலுக்கு வந்தவர், சத்யாவை அங்கு கண்டதும்,
"வாங்க தம்பி.......வாங்க......உள்ள வாங்க" என்று முகம் மலர உபசரித்தார்.
"இல்ல..........சாவி வேணும்.............நான் யார்னு உங்களுக்கு........எப்படி?"
"நீங்க விடிய காலையில கிரிஜா வீட்டுக்காரர் கூட ரெயில்வே ஸ்டேஷன்ல இருந்து கார்ல வந்து இறங்கினதை, நானும் வைஷுவும் எங்க வீட்டு பால்கனியில இருந்து பார்த்தோம்............கிரிஜா ஏற்கெனவே நீங்க பெங்களுர்ல இருந்து இங்க ஒரு கல்யாணத்துக்கு வர்ரதா சொல்லியிருந்தாப்ல"
" ஓ.......அப்படீங்களா"
'
அடப்பாவி........நான் யார்ன்னு உனக்கு முன்னமே தெரியுமா??........தெரிஞ்சுட்டுத்தான் இவ்ளோ பேச்சு பேசினியா???'
யோசித்தபடியே சத்யா.......தன் அம்மாவிற்கு பின் மறைவாக நின்றிருந்த வைஷு என்ற வைஷ்ணவியை பார்த்தான்,
தலையை லேசாக சாய்த்து, அதே நமட்டு சிரிப்பு அவளிடமிருந்து!!
"அண்ணி சாவி கொடுத்தாங்களா.........சாவி தர்ரீங்களா??"
"கிரிஜா இப்போ ஆஸ்பத்திரில இருந்து ஃபோன் பண்ணாப்ல........ஆஸ்பத்திரில ரொம்ப கூட்டமா இருக்குதாம், வீட்டுக்கு வர்ரதுக்கு லேட்டாகும்னு சொன்னாப்டி.......நீங்க உள்ளாற வாங்க தம்பி.......பத்து நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும், எங்க வீட்ல சாப்பிடலாம்"
"இல்ல..........இல்லீங்க ப்ரவாயில்ல......நான் கிளம்ப்றேன்.....சாவி....." என்று சத்யா மறுத்துக்கொண்டிருக்க, கழுவிய முகத்தை மேல் துண்டால் துடைத்தபடி வைஷுவின் அப்பா உள்ளிருந்து வாசலுக்கு வந்தார்,
"உள்ள வாங்க.........உங்களுக்காகத்தான் வெயிட் ப்ண்ணிட்டு இருந்தோம்....நம்ம வீட்ல டின்னர் சாப்பிட்டுட்டு போலாம் வாங்க" என்று அவரும் சிரித்த முகத்துடன் வரவேற்க, மேலும் மறுக்க இயலாமல் அவருடன் உள்ளே சென்று ஸோஃபாவில் அமர்ந்தான் சத்யா.
சமையல் அறையில் உதவி செய்கிறேன் பேர்விழி என்று அம்மாவின் பின்னாடியே ஒட்டிக்கொண்டு உள்ளே சென்று மறைந்துக்கொண்டாள் வைஷ்ணவி!
அரசியல் , நாட்டு நடப்பு, பொருளாதாரம் என்று கலகலப்பாக தோழமையுடன் வைஷ்ணவியின் அப்பா பேசிக்கொண்டு இருந்தது, அவரிடம் நீண்ட நாட்கள் பழகிய ஒரு உணர்வையும் , மதிப்பையும் ஏற்படுத்தியது சத்யாவின் மனதில்.
இரண்டு நிமிடத்திற்கு ஒரு முறை, கிட்சனிலிருந்து வெளிவந்து,
"இன்னும் ரெண்டே நிமிஷத்துல டின்னர் ரெடி ஆகிடும் தம்பி" என்று பாசத்துடன் தம்பி......தம்பி என்று வைஷுவின் அம்மா அழைத்தது, அவனுக்குள்ளும் ஒரு பாசயுணர்வை உண்டாக்கியது.
டின்னர் சாப்பிட டைனிங் டேபிளில் அமர்ந்த வேளையில், டியூஷன் சென்றிருந்த வைஷ்ணவியின் தம்பி வீட்டிற்கு வந்தான், அவனும் 'நான் என் அப்பாவிற்கு சலைத்தவன் இல்லை' என்று நிரூபிக்கும் வன்னம் க்ரிக்கட், சினிமா என்று கலகலத்துக்கொண்டிருந்தான்.
முழு குடும்பத்தையும் சத்யாவிற்கு மிகவும் பிடித்துப்போனது!!
டின்னர் நேரத்தில், அவ்வப்போது சாப்பாடு பரிமாற டைனிங் டேபிள் வந்தாளே தவிர, அவனை நிமிர்ந்து பார்க்கவே இல்லை வைஷ்ணவி!
'
என்கிட்ட மாட்டமலா போய்டுவா.......கள்ளி!' என்று நினைத்துக்கொண்டான் சத்யா.
அவர்கள் சாப்பிட்டு முடிக்கும் நேரம் வைஷுவின் அப்பாவிற்கு ஃபோன் வந்துவிட, அவளது தம்பி ட்ரஸ் சேஞ்ச் என்று அவனது அறைக்கு சென்றுவிட, அவளது அம்மா வைஷுவிடம்..........சத்யா கை கழுவ பாத்ரூம் எங்கு இருக்கிறது என்று காண்பிக்கும்படி கூறினார்.
சத்யா கைகழுவுவதற்காக பாத்ரூம்க்கு அருகிலிருந்த வாஷ்பேசினை காட்டிவிட்டு , அவ்விடம் விட்டு நகர எத்தனித்தாள் வைஷு......
"என்ன அம்மனி நைஸா நழுவுறீங்க......வெயிட் வெயிட்...உன்கிட்ட கொஞ்சம் பேசனும்"
அவன் வெயிட் பண்ண சொன்னதும், சுவரோடு ஒட்டிக்கொண்டு நின்றாள் வைஷு,
கைகழுவி விட்டு அங்கிருந்த டவலில் கைகளை துடைத்தபடி சத்யா அவளருகில் வந்து...
"ஸோ.......நான் யார்னு தெரிஞ்சுட்டேதான் இத்தனை கலாட்டாவும் பண்ணிருக்க...அப்படித்தானே???"
"அதான் இப்ப தெரிஞ்சுடுச்சில......தனியா வேற சொல்லனுமாக்கும்" என்று மெதுவான குரலில் முனுமுனுத்தாள் வைஷு. பண்ணின லூட்டி அப்பா அம்மாவிற்கு கேட்டுவிடுமோ என்ற பயம் அவளுக்கு.
"என்ன வாய்க்குள்ளே முனங்குற........பேரர் கெட்சப்ன்னு கேட்கிறப்போ மட்டும் ஃபுல் ஃபாஸ்ட் ஃபுட்டுக்கும் கேட்கிற மாதிரி குரல் கொடுத்தே......."
"..........."
"சரி....ஏன் அப்படி வம்பு பண்ணின?"
"அது.......அது வந்து....."
"ஹ்ம் வந்து........."
"..........."
"என்ன பேச்சே காணோம்...........சொல்லு.........."
தொண்டையை செறுமிக்கொண்டு குரலை சரி செய்து கொண்ட வைஷு, அவனிடம்....
"அது வந்து......போன வாரம் உங்க அண்ணி......அதான் கிரிஜா அக்கா, அவங்களும் என் அம்மாவும் பேசிட்டிருந்ததை நான் கேட்டேன்....."
"ம்ம்ம்........என்ன பேசிக்கிட்டாங்க?"
"வருணோட சித்தப்பா சத்யா பெங்களூர்ல இருந்து இங்க வர்ராங்க, நீங்க பையனை பாருங்க, பிடிச்சிருந்தா சொல்லுங்க......நானும் என் வீட்டுக்காரரும் அவர்கிட்ட நம்ம வைஷுவை பத்தி பேசுறோம், அவருக்கும் பிடிச்சிருந்தா........மேற்கொண்டு என் மாமனர் மாமியார்கிட்ட பேசி முடிச்சுடலாம்.........அப்படின்னு......"
"ஹா ஹா...!!! அடடா என் அண்ணி எனக்கு பொண்ணு பார்க்கிற வேலையை எனக்கே தெரியாம பண்றாங்களா, இது தெரியாம போச்சே"
"................'
"சரி.........மாப்பிள்ளை பையன்னு தெரிஞ்சுமா .......என்கிட்ட லொள்ளு பண்ணின?"
"ம்ம்.........ஆமா...."
"நீ பண்ணின வாலுத்தனம் பார்த்து ஒருவேளை எனக்கு உன்னைய பிடிக்காம போயிருந்துச்சுன்னா.......??"
"உங்களுக்கு கொடுத்து வைச்சது அவ்வளவுதான்னு ..........போய்ட்டே இருப்போம்ல" என்று குறும்பு புன்னகையுடன், இல்லாத காலரை தூக்கி விட்டுக்கொண்டாள் வைஷு.
"கவுத்திட்டியே .........கள்ளி!!" என்றபடி அவளுக்கு மிக அருகில் நின்று.....அவள் கண்களை ஊடுருவ பார்த்தபடி....
" பிடிச்சிருக்கு........ரொம்ப பிடிச்சிருக்கு.........உன்னையும் உன் குடும்பத்தையும்" என்றான் சத்யா.
அவனது அருகாமை,
காதல் மொழி பேசும் அவனது பார்வை.......
அனைத்தும் அவளது ரத்த நாளங்களுடன் விளையாட,
செவ்வானமாக சிவந்தது வைஷ்னவியின் முகம்!!
அவளது வெட்கி சிவந்த முகத்தை ரசிப்புடன் பார்த்த சத்யாவை....மீண்டும் உணர்வு தென்றல் வியாபித்தது!!
நீ கொஞ்சம் பேசினாலே
கொஞ்ச தோன்றுகிறதே..
மிச்சமும் பேசினால்
மிஞ்சவும் தோன்றுமோ?
இதற்கு மேல் தாங்காது என்று அவள் சட்டென்று அங்கிருந்து நகர, அவளை போகவிடாமல் சுவற்றில் கைவைத்து மறித்தபடி சத்யா.....
"ஹே வைஷு..........ஒன் மினிட் வெயிட்.......நமக்குள்ளே இன்னொரு கணக்கு முடிக்க வேண்டியிருக்கு"
"எ......என்னது?"
"பேரர்ன்னு கூப்பிட்டதுக்கு ........இன்னும் நீ ஸாரி கேட்கலியே"
தலையை லேசாக சாய்த்து , அவனை கூர்ந்து பார்த்த வைஷு.....
"சாதா ஸாரி வேணுமா.........ஸ்பேஷல் ஸாரி வேணுமா?" என்றாள்.
"அதென்ன ஸ்பெஷல் ஸாரி......"
"முகத்தை பாவமா வைச்சுட்டு........'ஐ அம் ஸாரி' அப்படின்னு சொன்னா, அது சாதா ஸாரி..........அதுவே
ஜெயம் ரவி கிட்ட அசின் கேட்ட மாதிரி ஸாரி கேட்டா.........அது ஸ்பெஷல் ஸாரி"
"ஆஹா...........அப்போ எனக்கு சூப்பர் ஸ்பெஷல் ஸாரிதான் வேணும்"
"அய்யே.......ஆசைதான்"
"யாரும் வர்ரதுக்கு முன்னாடி ஸ்பேஷல் ஸாரி கேளு...கமான் க்விக், க்விக்!"
"அட அவசரபடாதீங்க சார்............எங்க அம்மா செய்த சப்பாத்தி& குருமாவை ஆஹா ஓஹோன்னு புகழ்ந்தீங்க இல்ல..........அதே ஸ்பீடோட கல்யாண சாப்பாடு ரெடி பண்ண ஏற்பாடு பண்ணுங்க.........அப்புறம் ஸ்பேஷல் ஸாரி மட்டுமில்ல...........அதோட சேர்த்து போனஸும் தரேன்"
அவள் குறும்புடன் கண்சிமிட்ட..........அவன் அவளது நாடியை பிடித்து நிமிர்த்தி, கண்ணோடு கண் பார்த்து.........
"ஷ்யுர் வைஷு.........சீக்கிரம் கட்டிக்கலாம்" என்று கிறங்கடிக்கும் குரலில் கூறியதும், மீண்டும் வைஷுவின் முகம் செவ்வண்ணம் பூசிக்கொண்டது.
பெரியவர்களின் சம்மதத்துடன், சத்யா-வைஷு வின் திருமணம் விரைவிலே நடைபெற்றது.
முற்றும்.