July 29, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 5

பகுதி - 1

பகுதி - 2

பகுதி - 3

பகுதி - 4


ஹாஸ்பிட்டல் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிந்துக்கொள்ள தங்கள் அறைக்கு வந்த கார்த்திக், அங்கு.....


அவள் தங்க இதழ்களில்,
சிந்தி வழிந்தன புன்னகைகள்!

அவள் சங்கு கழுத்தில்,
மின்னி ஒளிர்ந்தன பொன்னகைகள்!

கண்கள் கண்ட காட்சியில்
மனம் புன்னைகைத்தது!




நந்தினியின் கிறங்கடிக்கும் அழகில் தன்னை ஒரு கணம் மறந்து ரசித்துப்பார்த்தான் கார்த்திக்.

"ஹேய் ...ஜொள்ளா........என்னடா அப்படி பார்ர்கிற...பெருசா நேத்து ராத்திரி மூஞ்சி திருப்பிட்டு தூங்கின.....இப்போ...இப்படி பார்க்கிறே, திருட்டுப் பையா!!!"

தன் செவ்விதழ் சுளித்து, குறும்பு பார்வையுடன் கண் சிமிட்டினாள் நந்தினி.

கார்த்திக் தன் ரசிப்பை மறைத்துவிட்டு, அவள் முகம் பார்க்கும் தெம்பில்லாமல்,

"டைம் ஆச்சு.......வா.....ஹாஸ்பிட்டல் போலாம்" என்று கூறிவிட்டு

அவள் பதிலுக்கு காத்திராமல் காரில் போய் உட்கார்ந்துக்கொண்டான்.

காரில் இருவரும் ஹஸ்பிடல் செல்லும் வரை எதுவுமே பேசிக்கொள்ளவில்லை.

மருத்துவ பரிசோதனையில் கார்த்திக் பயந்த மாதிரி 'எந்தவித' பாதிப்பும் நந்தினிக்கோ, வயிற்றிலுள்ள குழந்தைக்கோ ஏற்படவில்லை. இதனை அறிந்து மனதிற்கு ஒரு வித திருப்தியாக இருந்தாலும், தான் இல்லாமல் நந்தினி எப்படி குழந்தையுடன் வாழ்வை தொடர்வாள் என்று நினைக்கையில் ' திக்' கென்று இருந்தது கார்த்திக்கிற்கு.

இவனது மன ஓட்டங்களை உணராத நந்தினி, நாளுக்கு நாள் சோர்வடைந்து வரும் கார்த்திக்கிடம்,

"என்னங்க நீங்க...எப்ப பாரு டல்லடிக்கிறீங்க, 'ஜிம்'க்கு போய் 'ஜம்'முன்னு எவ்ளோ ஸ்மார்ட்டா இருந்தீங்க..........இப்ப பாருங்க எப்படி இருக்கிறீங்கன்னு?....."

"....."

" நீங்க ஜிம்முக்கு போயே 1 மாசம் ஆச்சு.........எல்லா ஆம்பிள்ளைகளும் இப்படிதான்.......கல்யாணம் ஆகுற வரைக்கும் ' ஜிம்' .......'வொர்க் அவுட்' னு muscled ஆ திரியறது, அப்புறம்........கல்யாணம் ஆனதும்......'mission accomplished' அப்படினு ......exercise யே பண்ணாம 'தொப்பையும்' 'தொந்தியுமா'.......சோம்பேறி ஆகிட வேண்டியது"

"....."


"என்னங்க இது.....நான் பாட்டுக்கு பேசிட்டே இருக்கிறேன்.........ஒரு வார்த்தை பதில் பேசுறீங்களா???........எப்பவும் எதையோ பறிகொடுத்த மாதிரியே ஒரு லுக்கு..........ஏங்க இப்படி இருக்கிறீங்க"

"இப்ப உனக்கு என்ன வேணும்..........'muscled body' ஆ ..........நானா??"

"ச்சீ.........ஏங்க இப்படி....... தப்பா அர்த்தம் பண்ணிக்கிறீங்க"

வார்த்தைகள் உடைந்தன நந்தினிக்கு.
கார்த்திக்கா இப்படி பேசுவது.......என்ற அதிர்ச்சி அவளுக்கு.

"என்னமா நந்தினி..........எதுக்கு கத்துறான் கார்த்தி".என்று கேட்டுக்கொண்டே நந்தினியின் மாமியார் அங்கு வர,

"ஒன்னு....மில்ல.....அத்தை" என்று சமாளித்தாள் நந்தினி.

கணவன் மனைவிக்குள் எந்த ஒரு மனஸ்தாபம் இருந்தாலும் சரி, கணவனிடம் குறையாக தான் எதையும் உணர்ந்தாலும் சரி அதனை மாமியாரிடமோ, தன் தாயிடமோ புகாராக குறைகூறி கண்கசக்காமல்.......தானே நேரிடையாக தன் கணவனிடம் மனம்விட்டு பேசி சரி செய்ய நினைப்பது நந்தினியின் இயல்பு.
கணவனை அவரது அன்னையிடம் கூட விட்டுக்கொடுத்து பேசுவதை தவிர்ப்பாள்.

நந்தினி தன்னிடம் மறைத்தாலும், தன் மகனின் போக்கில் மாற்றத்தை உணராமலில்லை கார்த்திக்கின் அம்மா.

மகனிடம் தனிமையில் அறியுரை கூறிக்கொண்டுதானிருந்தாள். ஆனால் கார்த்திக்கின் போக்கில் எந்த ஒரு மாற்றமுமில்லை, மாறாக நாளுக்கு நாள் விட்டத்தியான பார்வையும், சோர்வான நடையுமாக கார்த்திக்கின் உடலும் மனமும் தளர்ந்துக்கொண்டே போனது.

அம்மாவின் அன்பும் அக்கறையும் கலந்த அறிவுரைகள் ஒருபுறம்.........அன்பு மனைவியின் கள்ளமில்லா குழந்தை முகம் ஒருபுறமென கார்த்திக்கை மேலும் மனபலவீனமடைய செய்தது.


சாவு நம்மை தேடி வரவேண்டும்
நானோ
சாவை தேடி சென்றுக் கொண்டிருக்கிறேன்
என் நாட்களை எண்ணும்
புண்ணியம் பெற்றிருக்கிறேன்..

உனக்கு செய்த
முதல் துரோகம்
என் முடிவையும்
தேடிக் கொடுத்திருக்கிறது...

உன் களங்கமில்லா அன்பு
என் கயமையையும்
மன்னிக்குமென தெரியுமடி செல்லமே!!
தெரிந்தேதான்
உன்னைவிட்டு விலகுகிறேன் - ஆனாலும்
கண்மணியே...
என் உணர்வோடு
கலந்துவிட்ட உன்னை
உயிருடன் கொன்றுவிட
மனதில்லையடி தங்கமே!!!


தன் மறைவிற்கு பின் நந்தினியும் தன் தாய் கைம்பெண்ணாக தன்னை வளர்க்க சிரமப்பட்டது போன்று பொருளாதார ரீதியில் கஷ்டபடக்கூடாது என்ற எண்ணத்துடன், அவளுக்கு தன் சேமிப்பு, சொத்து மற்றும் இன்ஷுரன்ஸ் விபரங்கள், என அனைத்தையும் விவரிக்க ஆரம்பித்தான்.
எல்லா விதத்திலும் அவளை தயார் படுத்தும் நோக்குடன் அவன் செயல்பட்டது, நந்தினிக்கு ஏன் என்று புரியவில்லை.

"இப்போ எதுக்குங்க.....எனக்கு இந்த விபரமெல்லாம்??"

"சொல்லித்தந்தா.......தெரிஞ்சுக்கோ......ஏன்? எதுக்கு?ன்னு கேட்காதே"

"இப்போ நான் தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் என்னங்க??"

"ஒன்னும் தெரியாத மரமண்டையாவே உங்க அப்பா வளர்த்து வைச்சிருக்காரு..........இப்படி பட்டிக்காடாவே இருக்க போறியா??"

வெடுக்கென்று கார்த்திக் அப்படி கூறவும், அகல விரிந்த நந்தினியின் கண்களில் நீர் தேம்பியது.

அவளது கண்ணீருக்கு முன் கார்த்திக் என்றுமே ஒரு கோழைதான், அவளது கண்ணீரை தாங்கும் சக்தி அவனுக்கோ........அவன் காதலுக்கோ இல்லை!!!

"இப்போ எதுக்கு அழுற............எல்லாத்தையும் சேர்த்து வைச்சுக்கோ........மொத்தமா அழுதுக்க"

சொல்லிவிட்டு அவ்விடம் விட்டு நகர்ந்தான் கார்த்திக்.

கண்ணீர் திரையாக கண்களை மறைக்க........கார்த்திக் செல்வதையே பார்த்துக்கொண்டிருந்தாள் நந்தினி.

தன்னை விட்டு கார்த்திக் விலகி விலகி போவதின் அர்த்தம் உணர முடியாமல், அந்த நிராகரிப்பின் வலியை வெளிக்காட்டிக்கொள்ள முடியாமல் நந்தினி தவித்தாள்.


என்னை கொள்ளைக்
கொண்ட கள்வனே
புரிந்து கொள்...
உனக்குள் உறைந்து கிடக்கிறேன்...
வெறுத்து விலகியபடி ஏன்...??
உறவா பகையா நீ....
நெருங்க மறுக்கிறாய்...
குளிர்ந்த நிலவும் நீயாய்...
சுடும் சூரியனும் நீயாய்...
நெஞ்சை மிதித்து நடக்கிறாய்...
நொருங்கி போகிறேன்...
சில சமயங்களில்...



கண்களில் வழிந்த கண்ணீரை துடைத்துக்கொண்டவள்..........சிறிது நேரம் கண்களை மூடி, காதலுடன் கார்த்திக்கும் அவளும் கழித்த தித்திக்கும் தருணங்களை நினைத்துக்கொண்டாள்.

'முதல் பிரசவம் எங்கள் வீட்டில்தான்' என நந்தினியின் பெற்றோரும் உறவினரும் அவளுக்கு சிறப்பாக வளைகாப்பு செய்து ஊருக்கு அழைத்துச்சென்றனர்.
ஊருக்குச் சென்றபின்பும், தனியாக இருக்கும் தன் மாமியாருக்கும், ஃபோனில் பேசும்போதும் கடுகடுப்பாக பேசும் கார்த்திக்கிற்கும் அடிக்கடி ஃபோன் செய்தாள் நந்தினி.

"அத்தை சாப்பிட்டீங்களா??"
"அத்தை.......ஒரு ஸ்ட்ராங் காஃபி குடிக்கலாமா"
"அத்தை கோயிலுக்கு போலாமா??".......
இப்படி வார்த்தைக்கு முன்னூறு அத்தை போட்டு பாசமுடன் வலம் வந்த மருமகள் இல்லாமல், முகம் கொடுத்து கூட பேசாத மகனுடன் இருப்பது கார்த்திக்கின் அம்மாவிற்கு கஷ்டமாக இருந்தது. அதனால் சம்மந்தார் வீட்டில் 'டேரா' என்று ஊரும் உறவும் சிரித்தாலும் ப்ரவாயில்லை என்று மருமகளைக் காண சென்றுவிட்டார் காத்திக்கின் அம்மா.

அப்பா இல்லாமல் வளர்ந்த கர்த்திக், இதுவரை 1 வாரத்திற்கு மேல் தன் அம்மாவை பிரிந்திருந்ததில்லை, இந்த முறை அம்மாவின் பிரிவும்.......மனைவியின் பிரிவும் சேர்ந்து அவனை தனிமை சிறையில் தள்ளியது.

மரணம் என்பது
ஒரு நொடியில் உயிர் போகும்
ஆனால் பிரிவு என்பது
ஒவ்வொரு நொடியும் உயிர் போகும்...



ஆனாலும்..........தன் அம்மாவிற்கும் நந்தினிக்கும் இடையிலான இந்த பாசப்பிணைப்பு மட்டுமே அவனுக்கு இருக்கும் ஒரே ஆறுதல்.

தனிமையுணர்வில் ....தன் நாட்களை எண்ணிக்கொண்டிருந்த கார்த்திக், ஒரு நாள் பைக்கில் சென்று கொண்டிருந்தபோது, எதிரில் வந்த காரில் மோதி தூக்கி வீசப்பட்டான்.

கண்விழித்த போது, தலையில் கட்டுடன் தான் ஒரு ஆஸ்பத்திரியில் அனுமதிக்க பட்டிருப்பதை உணர்ந்தான். கார்த்திக் கண்விழித்ததை டாக்டரிடம் நர்ஸ் தெரிவிக்க, டாக்டர் அவனது அறைக்குள் வந்தார்,

"ஹலோ மிஸ்டர் கார்த்திக்.."

"எனக்கு........என்னாச்சு.....டாக்டர்"

"பைக் கார் மேல மோதி நீங்க கீழே விழுந்ததில், தலையில் அடிப்பட்டிருந்தது.........தையல் போட்டிருக்கிறேன்.....இரண்டு நாள்ல சரியாகிடும், உங்க பர்ஸ்ல இருந்த உங்க நண்பர் ஒருவரின் விசிட்டிங் கார்ட் மூலம் அவரை மட்டும் தான் தொடர்பு கொள்ள முடிந்தது.......வேற யாருக்கும் இன்ஃபார்ம் பண்ணனுமா??"

"என்னை........எதுக்கு.......டாக்டர் காப்பாத்தினீங்க........"

"என்ன சொல்றீங்க மிஸ்டர் கார்த்திக்......உங்களை காப்பாத்த வேண்டியது எங்க டுயுட்டி......ஆர் யு ஒகே??"

கார்த்திக்கின் கண்களில் நீரைக்கண்டதும், டாக்டர் திகைப்புடன்,

"மிஸ்டர் கார்த்திக்.........உங்களுக்கு லேசாகத்தான் அடிபட்டிருக்கு, பயப்படும்படியா பெரிய காயம் எதுவுமில்லை.......ஏன் நீங்க இப்போ எமோஷனல் ஆகிறீங்க"

டாக்டரிடம் தன் பிளட் டெஸ்ட் ரிப்போர்ட்டின் விபரங்களை கார்த்திக் கூற, அவரோ......."உங்கள் இரத்தம் நாங்கள் பரிசோதித்த போது எந்தவித HIV அறிகுறியும் இல்லை' என்றும், இன்னொருமுறை வேண்டுமானால் பரிசோதனை செய்துவிடலாம் என மறுமுறை பரிசோதித்தும், HIV- நெகடிவ் என்ற ரிசல்ட் வர , கார்த்திக் குழம்பி போனான்.

அதே சமயத்தில் கார்த்திக்கை பார்ப்பதற்கு , விசிட்டிங் கார்ட் மூலம் டாக்டர் தொடர்பு கொண்டிருந்த கார்த்திக்குடன் வேலைப் பார்க்கும் ஹரி அறைக்குள் வர, கார்த்திக் தன் குழப்பத்தை வெளிக்காட்டிக்கொள்ளாமல், அவனிடம் பேசினான்.

ஹரி தாழ்ந்த குரலில் , கார்த்திக்கிடம்.....

"ஸாரி கார்த்திக்.......டாக்டர் ஃபோன் பண்ணின உடனே என்னால வரமுடியல"

"ப்ரவாயில்லை ஹரி"

"ஒரே சமயத்தில்..........இரண்டு பேரைப்பற்றிய அதிர்ச்சியான செய்தி...அதுவும் இரண்டு பேரின் பெயரும் ஒரே பேர்.....அரண்டுப்போய்டேன் கார்த்திக்"

"என்ன சொல்ற.....ஹரி???"

"கார்த்திக்.......I am not sure......if it is the good time to convey this news to you......நம்ம டீம் கார்த்திக் இறந்துட்டான்"

"யா......ரு......கார்த்திக் குமாரா"

"அவனே தான்..,.....பார்ட்டி அனிமெல்"

"என்ன சொல்ற......ஹரி.....எப்படி??"

ஹரி தன் குரலை மிகவும் தாழ்த்தி......

"எய்ட்ஸ்...ரீசண்டாதான் கண்டுபிடிச்சிருக்காங்க.....அதுக்குள்ள....."

"......."

"பின்ன அவன் பண்ணின லீலைக்கெல்லாம்........சே....ஆளே போய்ட்டான்.......அவனைப் பத்தி பேசி என்ன ஆகப்போகுது"

"....."

"உனக்கு ஆக்ஸிடெண்ட் ஆகிருக்குனு ஃபோன் வந்து சில நிமிஷத்துல இந்த தகவலும் வந்தது......அதான் நான் இங்க வர்ரதுக்கு லேட்......ஸாரி கார்த்திக்"

அதற்கு மேல் ஹரி பேசியது எதுவும் கார்த்திக்கின் காதில் விழவில்லை!

கார்த்திக்கின் நெற்றியில் 'பொட்'டென தட்டினார் போன்ற உணர்வு, ஹைதிராபாத்தில் இரத்தம் கொடுக்க முன் வந்தவர்களில் அவன் குழுவில் இருந்த அந்த கார்த்திக் குமாரும் ஒருவன், இப்போது விளங்கியது கார்த்திக்கிற்கு..........தன் பிளட் டெஸ்ட் ரிசல்ட்டின் ரிப்போர்ட்டின் ஆள் மாறாட்டம்.


உடனே கண்முன், தன் கடுமையான பேச்சினாலும், கசப்பான வார்த்தைகளாலும் காயப்படுத்தி, ரணப்படுத்திய நந்தினியின் அழுது சிவந்த முகம் தோன்றியது.

"ஹரி......ப்ளீஸ்......எனக்கு சென்னை-தூத்துக்குடி ஃப்ளைட்டுக்கு உடனே ஒரு டிக்கட் புக் பண்ணித்தர முடியுமா??"

"இந்த நிலைமையில்.........எப்படி.....கார்த்திக்"

நண்பன் மருத்துவர் என்று யார் தடுத்தும் கேளாமல் , தலையில் கட்டுடன்...........கார்த்திக் நந்தினையை நேரில் பார்த்தே ஆகவேண்டும் என்ற வேகத்தில் அவளுக்கு ஃபோன் கூட பண்ணாமல் தூத்துக்குடி ஏர்போர்ட்டில் தரையிறங்கினான்.

விபத்தில் காயப்பட்டபோது தன் செல்ஃபோன் சிதறிப்போனது அப்போது தான் நினைவிற்கும் வந்தது.

நந்தினியை உடனே பார்த்தே ஆக வேண்டும்........செய்த தப்பை சொல்லி........மன்னிப்பு கேட்டு......அவள் மடியில் முகம் புதைத்து கதற வேண்டும் என்று மட்டுமே மனசு துடித்தது!!

தூத்துக்குடி விமான நிலையத்திலிருந்து டாக்ஸியில் நந்தினியின் ஊருக்குச் சென்றான்.

நந்தினியின் வீடு இருக்கும் தெருவில் , அவர்களது வீடுதான் சற்று பெரிதான வீடு, தெருமுனையில் கார் திரும்பியது ஒரு குலுக்கலுடன் கார் நின்றது, டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்ய கீழே இறங்க எத்தனிக்க.......

"பக்கத்துல தான் வீடு........நானே போய்கிறேன்.....இந்தாப்பா பணம்" என்று டாக்ஸி ட்ரைவர் காரை சரி செய்துவிடுகிறேன் வெயிட் பண்ணுங்க சார் என்று கூறியும் கேளாமல், அவன் கையில் பணத்தை தினித்துவிட்டு, நந்தினியின் வீடு நோக்கி நடந்தான்.

சற்று தொலைவிலேயே......நந்தினியின் வீட்டின் முன் கூட்டமாக ஆட்களிருப்பது தெரிந்தது.
இந்நேரத்தில்........ஏன் இத்தனை கூட்டம் அவள் வீட்டுமுன்...

வீட்டை நெருங்க நெருங்க கார்த்திக்கின் இதயம் வெளியில் வந்துவிடும் போல் வேகமாக துடித்தது.

வீட்டின் முகப்பில் நின்ற அவளது உறவுக்கார ஆண்கள், ஊர் காரர்கள் அனைவரின் முகத்திலும் ......சோகம் நிரம்பிருப்பதைக் கண்டதும்......கார்த்திக்கின் படபடப்பு அதிகரித்தது.
இவனைக் கண்டதும் அனைவரும் இவனை.....இரக்க பார்வை பார்த்தார்களே தவிர, யாரும் விபரம் எதுவும் கூறவில்லை.

நந்தினியின் சித்தப்பா கார்த்திக்கை கண்டதும், இவனது கரங்களை பதற்றத்துடன் பற்றிக்கொண்டு....

"மாப்பிள........மாப்ள......எங்கே போய்ட்டீங்க....உங்களுக்கு தகவல் சொல்ல எத்தனை தடவ.....நாங்க ஃபோன் பண்ணினோம்........"

"என்........னா.....ச்சு........." வறண்டு போன நாவிலிருந்து வார்த்தைகள் உடைந்து வெளிவந்தன கார்த்திக்கிடமிருந்து.

"மாப்ள.....நம்ம........ந......ந்தி.....னி............"

கண் இருண்டது கார்த்திக்கிற்கு....

[தொடரும்]

பகுதி- 6

July 23, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 4

பகுதி-1

பகுதி-2

பகுதி-3

அலுவலக விஷயமாக ஹைதிராபாத் சென்ற கார்த்திக், நான்கு நாட்கள் தன் குழுவிலுள்ள நண்பர்களுடன் முக்கியமான ப்ராஜக்ட் வேலையில் மூழ்கியிருந்தான், கடின உழைப்பிற்கு பிரதிபலனாக இவர்களது வேலையும் வெற்றிகரமாக முடிந்தது.

அதனை கொண்டாட இவனது குழுவினர் தீர்மானித்தனர். கார்த்திக்கும் அவர்களுடன் இரவு பார்ட்டிக்குச் சென்றான். வெற்றி களிப்பு, நண்பர்களின் தூண்டுதல், தன் அடிமனதிலுள்ள தனிமையின் தவிப்பு எல்லாமுமாக சேர்ந்து சற்று அளவுக்கு அதிகமாகவே மது அருந்தினான் கார்த்திக்.

Occasional alcohol taker ஆன கார்த்திக்கிற்கு இந்த திடீர் போதை தன் தனிமை உணர்விற்கு ஒரு வடிகாலாக தோன்றியது.

அருந்திய மது அவன் மதியை மந்தமாக்க, நண்பர்களின் உந்துதலினால் 'மாது'வையும் தேட வைத்தது.

மறுநாள் தன் ஹோட்டல் அறையில் சுயபுத்திக்கு வந்த கார்த்திக், நந்தினிக்கு தான் செய்த துரோகத்தை உணர்ந்து , குற்ற உணர்வில் குறுகிப்போனான்.

நந்தினியிடம் உண்மையை கூறவா, வேணடாமா என்று மனதில் தடுமாற்றம்,
'நேருக்கு நேர்' படத்தில் ரகுவரனுக்கு வந்த நிலைமையை நினைத்துக்கொண்டான்.


சென்னைக்கு திரும்பிய பின்பும், செய்த தவறு கார்த்தின் மனதை அழுத்திக்கொண்டே இருந்தது,
நந்தினியிடம் பக்குவமாக , சந்தர்ப்பம் பார்த்து மனம்விட்டு சொல்லிவிட வேண்டும் என முடிவு பண்ணினான் கார்த்திக்.

மூன்று வாரங்களில் நந்தினியும் சென்னைக்குத் திரும்பி வந்தாள்.

குறு குறுக்கும் மனதுடன் நந்தினியிடம் முன்பு போல் பழக முடியாமல் தடுமாறிக்கொண்டிருந்தான் கார்த்திக்.


தன் தந்தையின் திடீர் மாரடைப்பு, தாய்மை அடைய தடையாக தன் உடல்நிலை என கவலைகள் சூழ்ந்துக்கொள்ள நந்தினியும் சோர்வாகவே காணப்பட்டாள். எதிலும் அதிக ஈடுபாடு இல்லாமல் மனதில் வெறுமை, இறுக்கமான முகத்தோடு வலம்வந்தாள்.

கணவன் மனைவிக்குள் முன்பிருந்த ஒட்டுதல் இல்லை என புரிந்துக் கொண்ட கார்த்திக்கின் அம்மா, அவர்கள் இருவரையும் ஒரு வாரம் ஊட்டிக்கு சென்றுவர வற்புறுத்தி அனுப்பி வைத்தார்.

புதிய சூழல், இதமான குளிர்ந்த சீதோஷன நிலை, இருவருக்குமேயான நீடிய தனிமை தருணங்கள் கணவன் மனைவிக்குள் மீண்டும் நேச அனலை புதுப்பித்தது.


கணவனின் அன்பான அரவணைப்பால் நந்தினியின் முகத்தில் புன்னகை பரவ ஆரம்பித்திருந்தாலும், அவளது அடிமனதில்....

அம்மி மிதித்து
அருந்ததி பார்த்து
ஆண்டு இங்கு
இரண்டாச்சு...!!

எப்போ நீ பிறப்பாய்
என்று தான்
இங்கு ஒரே பேச்சு...!!


இதயத்து அறைகளிலே
இளம்பிஞ்சே
உன்முகம் தான்...

என் கந்தகக்
கருப்பையில்
ஃபீனிக்ஸாய் எழுவாயா???

விரதமும் வேண்டுதலும் -
உன் வரவைச் சொல்லலையே...!!

உன் பிஞ்சுவிரல் ஸ்பரிசத்துக்காய்
என்உயிரே தவிக்குதிங்கே...!!


நஞ்சுரைக்கும் உறவினர்களால் -
என்நெஞ்சு மருகி விம்முதிங்கே...!!


நாட்கள்பல போனாலும் -
உன் வரவு
கனவில் தான் நிஜமாச்சு...!!'

'ம்மா'-னு நீ சொல்ல
தவமிருக்கும் இந்த
தரிசுத்தாய் நானாச்சு..!!


பிரம்மன் வரையா ஓவியமே..!!
சிற்பி செதுக்கா சீர் சிலையே..!! -
என்வயிற்றில்
வளராவளர் பிறையே...!!

என்று வந்து
என் வயிற்றில்
உயிர்த்து என்னை
உயிர்ப்பிப்பாய்..???


மாதங்களும் கடந்தன....நந்தினியின் மனதிலிருந்த வேண்டுதல் நிறைவேறியது.

நந்தினி கர்ப்பமாக இருக்கிறாள் என மருத்துவர் உறுதி செய்ததும் குடும்பமே சந்தோஷ களிப்பில் திளைத்தது.


நீண்ட பயணம் கூடாது என மருத்துவர்கள் அறிவுறுத்தியும் கருவுற்றிருக்கும் தன் ஆசை மகளைக் காண நந்தினியின் அப்பா சென்னை வந்தது நந்தினிக்கு இரட்டிப்பு சந்தோஷமாக இருந்தது.

புதிய உறவு உதித்த மகிழ்ச்சியில் கார்த்திக் முழுவதுமாய் தன் ஹைதிரபாத் 'நிகழ்வை' மறந்தே போயிருந்தான்.

கர்ப்பமாக இருக்கும் தன் மருமகளை கண்ணும் கருத்துமாய் கவனித்துக் கொண்டார் கார்த்திக்கின் அம்மா.

இப்படியாக நாட்கள் உருண்டோட , கார்த்திக் மீண்டும் அலுவலக விஷயமாக ஹைதிரபாத் செல்ல நேர்ந்தது.

ஒரு நாள் அலுவல் முடிந்து கார்த்திக்கும் அவனது குழுவினரும் டாக்ஸியில் தங்கள் ஹோட்டல் அறைக்கு திரும்பிக்கொண்டிருக்கையில், வழியில் சாலை விபத்தொன்றில் அடிபட்டு உயிருக்கு போராடும் முதியவரை தங்கள் டாக்ஸியில் அருகிலிருந்த மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.


அம்முதியவரின் மருத்துவ சிகிச்சைக்காக ரத்தம் தேவைப்பட, கார்த்திக்கும் அவனது குழுவிலிருந்த இருவரும் ரத்த தானம் செய்ய முன்வந்தனர்.

இரத்த பரிசோதனை நிலையத்திலிருந்து ரிப்போர்ட் வந்ததும், மருத்துவர் கார்த்திக்கை மட்டும் தனியாக தன் அறைக்கு அழைத்தார்.

பேச தொடங்கவே தயங்கிய மருத்துவரிடம் கார்த்திக்,

"Whats the matter Doctor.......please open up"

"Mr.Karthik.....I am very sorry to say ....that......you are infected with HIV"

அதிர்ச்சியில் கார்த்திக்கின் முகத்தில் ரத்தம் சுண்டிப் போனது,
மார்பு வெகு வேகமாக அடித்துக் கொள்ள,
யோசனைத் திறன் சற்று நேரத்திற்கு விலகிக் கொண்டது,
தன்னை சமாளித்துக் கொள்ள கார்த்திக்கிற்கு சில வினாடிகள் பிடித்தன.

கார்த்திக் அதிர்விலிருந்து தன்னை சுதாரித்துக் கொள்ள தடுமாறிய அதே வேளையில், மருத்துவரின் அறைக்குள் வந்த நர்ஸ் , விபத்தில் அடிபட்டு அனுமதிக்கபட்ட முதியவர் ரத்தம் கொடுப்பதற்கு முன்பே, சிகிச்சை பலனின்றி இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

நிலையற்ற மனித வாழ்க்கையில் யதார்த்தம்,
சாவை நோக்கி பயணிக்கும் தன் நிலைமை,
என அனைத்தும் ஒரே தருணத்தில் தாக்க
ஸ்தம்பித்து போனான் கார்த்திக்.

ஹோட்டல் அறைக்கு வந்து மறுநாள் அதிகாலை விமானத்தில் சென்னைக்கு திரும்புவதற்காக தன் உடைமைகளை எடுத்து வைத்துக்கொண்டிருந்த போதுதான், தன்னை தாக்கியுள்ள உயிர்கொல்லி தன் மனைவி...........வயிற்றில் உள்ள குழந்தை இருவரையும் தாக்கியிருக்க கூடுமோ என்ற சந்தேகம் எழுந்தது.


ஊருக்குச் சென்றதும் நந்தினியை கைனக்காலஜிஸ்டிடம் அழைத்துச் சென்று, மருத்துவரிடம் ஏதாவது ஒரு காரணம் கூறி, நந்தினிக்கு முழுவதுமாய் ரத்த பரிசோதனை செய்துவிட வேண்டும் என்ற முடிவுடன், உடனே ஃபோனில் அப்பாயின்மெண்டும் வாங்கிவிட்டான்.


நினைவுகளிலிருந்து வெளிவந்த கார்த்திக், தன்னருகில் படுத்திருக்கும் தன் அன்பு மனைவியை மீண்டும் நோக்கினான்.
அவன் கண்களில் நீர் ததும்பி கசிய காத்திருந்தது.


இறப்பு யாருக்கோ என்ற
கேள்வி படுகையில்
செய்தியாக தோன்றுகிறது
அது தன்னையே நெருங்கும் போது
பயமும் வேதனையும்
முட்டி மோதுகின்றது;

கார்த்திக் படுக்கையிலிருந்து எழுந்து, அருகிலிருந்த மேஜையின் மேலிருந்த விளக்கை ஏற்றிவிட்டு, தன் டைரியில் எழுத ஆரம்பித்தான்...


ஓசை இல்லாமல்
ஒரு அழுகுரல்
ரத்தம் இல்லாமல்
ஒரு காயம்
மருந்தில்லா ஒரு நோய்

ஒரு நிமிட உறவால்
முறை தவறிய என்னால்
உறவுகளைதொலைத்து - என்னுள்
தொலைந்துக் கொண்டிருக்கிறேன்...
உன்னையும் தான்...

டைரியை பீரோவில் பத்திரப்படுத்திவிட்டு கார்த்திக் படுக்கச் சென்றான்.

மறுநாள் காலையில் மருத்துவமனைக்குச் செல்ல நந்தினி தயாராகிவிட்டாளா என அறிய தங்கள் அறைக்குச் சென்ற கார்த்திக்............அங்கு...நந்தினி....



[தொடரும்]

பகுதி - 5

பகுதி-6

July 15, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 3

பகுதி - 1

பகுதி - 2

கார்த்திக் தன் மேஜை மீதிருந்த கவரை மெதுவாக பிரித்தான்.

அதே சமயம் தனக்கு பின்னாலிருந்து
'க்ஹும்.."
என தொண்டையை செருமும் குரல் கேட்டு திரும்பினான்.

அங்கு..
அன்றலர்ந்த மலராய்,
உதட்டில் புன்னகை மின்னிட,
கண்களில் துள்ளலோடு.......
நந்தினி !!!!

ஒரு வாரம் கழித்து அவளை பாப்பதின் பரவசத்தையும், அவள் பிரிவு ஏற்படுத்திய தவிப்பையும் வெளிக் காட்டிக்கொள்ளாமல், சிடு சிடு முகத்துடன்....

தன் கையிலிருந்த கவரை பிரித்தபடியே,

" என்ன இது?...." என்றான்.

இப்போது ஒரு வெட்க புன்னகை நந்தினியின் முகத்தில்,
நொடிக்கொருமுறை மாறும் பெண்ணின் புன்னகை மொழியை உணர முடியவில்லை கார்த்திக்கால்,

கவரினுள் நான்காக மடித்து வைக்கப்பட்டிருந்த பேப்பரை எடுத்தான் கார்த்திக்,

" என்ன பேப்பர் இது?"

"பிரிச்சுப் பாருங்க"

மெதுவாக பிரித்துப் பார்த்தான் கார்த்திக்.

உள்ளே குண்டு குண்டு கையெழுத்தில்...
க.குமரேசன்
முன்னாள் பேரூராட்சி தலைவர்,
சாத்தான்குளம்,
திருநெல்வேலி மாவட்டம்.
என்ற முகவரியும், அதன் கீழ் பஸ் ரூட், ரெயில் ரூட், கார் ரூட் என எல்லா வழிதளங்களிலும் எவ்வாறு அந்த முகவரிக்கு சென்றடையலாம் என்று விளக்கமாக எழுதியிருந்தது.
' யார் அட்ரஸ் இது......எதுக்கு என்கிட்ட கொடுக்கிறா' என்ற குழப்பத்துடன்.......

"இது.....யார் அட்ரஸ்?" என்றான் கார்த்திக்.

" இது உங்க மாமனார் வீட்டு அட்ரஸ்"

" மாமனாரா???"

இப்போது நந்தினியின் முகம் முழுவதுமாக சிவந்தது.........கார்த்திக்கிற்கு எல்லாம் புரிந்தது.
ஆயிரம் காதல் அர்த்தங்கள் கொண்ட புன்னகையை மட்டுமே இருவராலும் அப்போது பரிமாற கொள்ள முடிந்தது.

மகள் ஆசைப்பட்ட கல்லூரி படிப்பை படிக்க வைத்து வேலைக்கும் அனுப்பிய நந்தினியின் அப்பா, காதலை வெளிப்படுத்தியவரின் விபரங்களை தன் மகள் மறைக்காமல் தன்னிடம் கூறியதும், 'காதல்' என்ற ஒற்றைச் சொல்லிற்கே எதிரி என்ற தொணியில் எதிர்க்காமல், மகள் கூறிய விபரங்களுடன் பையனை பற்றிய தகவல்களை விசாரித்து தெரிந்துக்கொண்டு, தன் சம்மதத்தை மகளிடம் கூறி, முறைப்படி பெண்கேட்டு வரச்சொல்லியிருந்தார்.

இருவீட்டாரின் முழு விருப்பத்துடன் கார்த்திக் - நந்தினி திருமணம் விமரிசையாக நடந்தேறியது.
தன்னை விரும்பியவர், தனக்கும் பிடித்திருந்தவரையே தன் வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுத்த தன் அப்பாவின் பாசமழையில் திளைத்துப் போனாள் நந்தினி.


கண்ணுக்குள் வைத்து காக்கும் கணவன்,
கையில் வைத்து தாங்கும் மாமியார்
என நந்தினியின் மணவாழ்க்கை இனிதே தொடர்ந்தது.

ஆஃபீஸிலிருந்து கார்த்திக்கும் நந்தினியும் வீட்டுக்கு வந்ததும், நாள் முழுவதும் அலுவலகத்தில் நடந்ததை அபிநயத்துடன் நந்தினி தன் மாமியாரிடம் கூறுவாள், அவரும் தான் நாள் முழுக்க பார்த்த டீவி சீரியலிலிருந்து, பக்கத்து வீட்டு கதை வரைக்கும் அடுக்கடுக்காக மருமகளிடம் ஓப்பிப்பார்,இருவரும கலகலப்புடன் பேசிக்கொண்டே அடுப்படியில் இரவு உணவு தயாரிப்பதை மன நிறைவுடன் ரசித்தபடியே ஹாலில் டீவி பார்த்துக்கொண்டிருப்பான் கார்த்திக்.


இந்த மாமியார் மருமகள் அரட்டை சில சமயங்களில் இரவு வெகுநேரம் வரை நீளும், முக்கியமாக சனிக்கிழமை இரவுகளில், மறுநாள் விடுமுறை என்ற காரணத்தால் வெகு நேரம் இரவில் ஊர் கதை பேசிக்கொண்டே இருப்பார்கள் இருவரும்,

"அம்மா, நைட் ரொம்ப லேட் ஆச்சும்மா......இவ்வளவு நேரம் முழிச்சுட்டு இருந்தா உங்க உடம்புக்கு என்ன ஆகிறது, சீக்கிரம் படுத்துக்கோங்கமா" என்று கார்த்திக் அவர்களின் அரட்டையை முடிக்க தருணம் பார்ப்பான்.

" ப்ரவாயில்லபா கார்த்தி....நாளைக்கு ஞாயிற்றுக் கிழமை தானே.........லேட்டா எழுந்திருச்சா போகுது.....!" என்பார் அவன் அம்மா.

இவன் நந்தினியை பரிதாபமாகப் பார்ப்பான்.
கண்கள் தேவையிலும், காதலிலும் கெஞ்சும்.

"நந்தினி நீ தான் வாயைத் திறந்து அம்மாக்கு எடுத்து சொல்லக் கூடாதா? ராத்திரி பதினொரு மணி வரைக்கும் முழிச்சிட்டிருந்தா உடம்புக்கு ஆகாதுன்னு எடுத்துச் சொல்ல மாட்டியா?"

"நான் என்னங்க சொல்றது.......நாளிக்கு லீவுன்னுதானே நாங்க பேசிட்டிருக்கிறோம்...அதான் அத்தையே சொல்லிட்டாங்களே, லேட்டா எழுந்தா போகுதுன்னு.....அத்தை நீங்க சொல்லிடிருந்த கதையை சொல்லுங்க , அப்புறம் என்னாச்சு??"


வேண்டுமென்றே நந்தினி தூண்டி விடுவாள். அவனுள் எரியும் நெருப்பை விசிறி வேடிக்கை பார்ப்பாள்.தலையைச் சாய்த்து, கண்களை மிருதுவாக அகற்றி அழகான சிரிப்பில் இவனது மனதை இன்னமும் கொள்ளை கொள்வாள்.

" சீக்கிரம் படுத்தா வயசான காலத்துல உடம்புக்கு நல்லதுன்னு சொன்னா.....உங்களுக்கு விளையாட்டா இருக்கா?" உள் தகிப்பில் கார்த்திக்கின் குரலில் லேசாய் எரிச்சல் எட்டிப் பார்க்கும்.

இப்படி குறும்பும் கறும்புமாக கார்த்திக்- நந்தினியின் இல்வாழ்க்கை இனிதே நகர்ந்தது.
தன் அன்னையை தாயைப் போல் நேசிக்கும் மனைவி, தன் விளையாட்டுத்தனமான வெகுளிப் பேச்சால் மனதை குளிர்விக்க, கார்த்திக் தன் வாழ்வே பூரணமானதாக உணர்ந்தான்.

நாட்கள் வேகமாக நகர
மாதங்கள் புரண்டோட
வருடமும் விரைந்து......
கார்த்திக்-நந்தினி தம்பதிகளுக்கு திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியது.


இந்த இரண்டு வருட மணவாழ்க்கை கார்த்திக்கை பொதுவாழ்விலும் பெரிதும் மாற்றி இருந்தது.
தனக்கென ஒரு வட்டம் அமைத்து மற்றவரிடம் சகஜமாக பேசிப் பழக மறுக்கும் கார்த்திக்கிற்கு இப்போது நட்பு வட்டாரங்கள் அதிகமாயின.

திருப்திகரமான இல்லறம் கொடுக்கும் உத்வேகம் அவனது வேலை செய்யும் திறனையும் மேம்பட வைத்தது, பதவியில் பல உயர்வுகள், உயர்மட்ட நட்புகள், அடிக்கடி கம்பெனி விஷயமாக வெளியூர் பிரயாணங்கள், என்று கார்த்திக்கின் வாழ்க்கை புதிய கோணத்தில் பயணித்தது.
பொருளாதார நிலையிலும் பெரிதான முன்னேற்றம் அவன் வாழ்வில்.

"எல்லாம் என் மருமகள் வந்த நேரம்தான் என் புள்ள இவ்வளவும் சாதிச்சிருக்கிறான்" என்று நந்தினியின் மாமியார் தன் மருமகளை உச்சி முகர்ந்தார்.

எல்லாம் சீராக சென்றுக்கொண்டிருக்கும் தங்கள் வாழ்வில், திருமணமாகி இரண்டு வருடங்கள் ஆகியும் குழந்தை பாக்கியம் இல்லை என்பதை கார்த்திக்-நந்தினி உணர ஆரம்பித்தனர்.

வீட்டிலும், உறவுக்காரர்களிடமும் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் திணறிய போதுதான், மருத்துவரை அணுகி பரசோதத்தில், நந்தினி தாய்மை அடைய சில பிரச்சனைகள் இருப்பது கண்டறியப்பட்டது.

நந்தினியால் இந்த குறைவை தாங்கிக்கொள்ள முடியாமல் , தன்னுள் சுக்கு நூறாக உடைந்துப்போனாள்.

மாமியாரும், கணவனும் எவ்வளவோ ஆறுதலும், உற்சாகமும் கொடுத்தும் , தன் வேலையை ராஜினாமா செய்து விட்டு, மருத்துவ சிகிச்சையை மனமுடைந்த நிலையில் தான் மேற்கொண்டாள் நந்தினி.

இந்த சமயத்தில் நந்தினியின் அப்பா ஹார்ட் அட்டாக்கில் சீரியஸான நிலையில் ஹாஸ்பிடலில் அனுமதிக்க பட, ஊருக்குச் சென்ற நந்தினி, அப்பாவின் உடல் நிலை சிறிது சிறிதாக தேறின பின்பும், தன் அம்மாவிற்கு துணையாக அங்கேயே சிறிது காலம் தங்கிவிட ஆசைபட்டாள்.
அவளது மனநிலைக்கு இந்த இடமாறுதலும் நல்லது என கார்த்திக்கின் அம்மாவும் மருமகளுக்கு சப்போர்ட் செய்தாலும், கார்த்திக்கிற்கு ஏனோ சம்மதிக்க மனமேயில்லை.

உயிர் மீண்டு வந்திருக்கும் தன் அப்பாவுடன் இன்னும் சிறிது நாட்கள் தான் இருக்க கார்த்திக்கிற்கு விருப்பமில்லை என்பதை அறிந்த நந்தினியின் மனம் தவித்தது.... .


மணமா? நிறமா?
என்றால்,
மலர் எதுவென்று சொல்லும்?

உரமா? நீரா?
என்றால்
நிலம் எதுவென்று சொல்லும்?

உயிரா? உணர்வா?
என்றால்
மனம் எதுவென்று சொல்லும்?

அவரோ,
உயிர் தந்தார்,
உடல் தந்தார்,
கண் என காத்தார்,
கலைகள் பல தந்தார்,
கடமையில் சிறந்தார்-உறவானார்!

அவனோ,
உணர்வுக்கு உயிரளித்தான்,
நினைவுக்கு கவி கொடுத்தான்,
கனவுக்கு சுவை கொடுத்தான்,
காதலில் உயிர் கலந்தான்-உணர்வானான்.

உணர்வு உறவினை மறுத்தால்,
உயிர் எதை ஏற்க்கும்?
எதை மறுக்கும்?


தன் அம்மாவின் வற்புறுத்தல், ஆசை மனைவியின் முகத்தில் கவலைகளின் ரேகை........கார்த்திக் அரைமனதாக நந்தினி அங்கு தங்கிட சம்மதித்தான்.

நந்தினியின் பிரிவு ஒருவித தனிமையுணர்வை கார்த்திக்கிடம் அதிகரித்தது.
நீண்ட இடைவெளிக்குப் பின் இந்த வெறுமை அவனுக்குள் பெரும் பாதிப்பை ஏற்படுத்திக்கொண்டிருந்தது.
இந்த புதுவித மனநிலை அவனுள் செல்லரித்துக்கொண்டிருக்க, அலுவலக விஷயமாக கார்த்திக் ஹைதிரபாத் செல்ல வேண்டியிருந்தது.

ஹைதிரபாத்தில்..............கார்த்திக்..........


[தொடரும்]

பகுதி - 4

பகுதி - 5

பகுதி - 6

July 07, 2008

நீ வேண்டும்....நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும்!!! - 2


மனதில் கொள்ளை ப்ரியம் நந்தினியின் மேல் இருந்தாலும், அதனை வெளிப்படுத்த தெரியாத கார்த்திக், தனது வழக்கமான சிடு மூஞ்சியுடன் அவளிடம்...

"நந்தினி, ஐ திங் ஐ அம் இன் லவ்......"

"அப்..படிங்...களா"

"ஆமாம்"

"வாழ்த்துக்களுங்க"

அப்பாவித்தனமாக அவள் தமிழில் ' வாழ்த்துக்கள்' என கூறியதும், உதட்டோரம் கார்த்திக்கிற்கு சிரிப்பொன்று மலர்ந்தது.

"தாங்க்ஸ்..."

"...."

" யாரை லவ் பண்றேன்னு கேட்க மாட்டியா?"

"யா........யாருங்க?"

"நீங்க.......தாங்க"

"...."

" ஐ லவ் யூ நந்தினி"

'ஐயோ.....' என முகத்தை தன் கைகளால் மூடிக்கொண்டு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள் நந்தினி.

இந்த ரியாக்ஷனை கார்த்திக் சற்றும் எதிர்பார்க்காததால் கொஞ்சம் பயந்துதான் போனான்.

பையன் 'ஐ லவ் யூ' சொன்னா, பொண்ணுக்கும் ஒகே னா வெக்கப்பட்டு சிரிப்பா,
பிடிக்கலினா கோபமா முறைச்சுட்டு, திட்டிட்டு சீன் போடுவாங்கன்னு தான சினிமாவுல காட்டுவாங்க,
இந்த பொண்ணு ஏன் இப்படி தேம்பி தேம்பி அழுகுறா??


"நந்தினி.....இப்ப எதுக்கு இப்படி அழுற"

"நீங்க.......இப்படி கெட்ட வார்த்தை எல்லாம் பேசுவீங்கன்னு நினைக்கவே இல்ல"

" கெட்ட வார்த்தையா??............எது.........எது கெட்ட வார்த்தை........நான் எப்போ சொன்னேன்?"

"இப்ப..........இப்ப........கொஞ்சம் முந்தி சொன்னீங்க"

"ஐ லவ் யூ ........கெட்ட வார்த்தையா??"

அந்த வார்த்தையை கேட்டதும் மறுபடியும், 'ஓ' வென அழுதாள் நந்தினி.

'என்னடா இது வம்பா போச்சு, பொண்ணு அழகாவும் இருக்கா, நல்ல பொண்ணாவும் இருக்கான்னு காதலைச் சொன்னா.......இப்படி அசடா இருப்பான்னு நினைக்கவே இல்லையே' என யோசித்த கார்த்திக்கால் 'ஜகா' வாங்கவும் அவனுள் ஆழமாக பதிந்த காதல் இடம் கொடுக்கவில்லை.

" எங்கூர் பள்ளிகூடத்துல எல்லாம் இந்த சினிமாகாரக வார்த்தையை அப்படிதான் சொல்லுவோம்" என்றாள் அழுகையின் நடுவில்.

பள்ளி படிப்பு முடித்து நாலு வருஷம் ஆச்சு,
பட்டணத்தில் கல்லூரி படிப்பும் படிச்சாச்சு,
பெரிய கம்பெனியில் வேலைக்கும் சேர்ந்தாச்சு.....

இன்னுமா இந்த பொண்ணு இதை கெட்ட வார்த்தைன்னு சொல்லிட்டு இருக்கா??

இவ நடிக்கிறாளா...............இல்ல நிஜம்மாவே வெகுளியான்னு கார்த்திக்கால் புரிந்துக்கொள்ள முடியவிலலை.

எந்த பையனால தான் அதை இதுவரை கண்டுபிடிக்க முடிஞ்சிருக்கு...........கார்த்திக் மட்டும் கண்டுபிடிக்க!!

"இங்க பாரு நந்தினி......எனக்கு உன்னை பிடிச்சிருக்கு..........ரொம்ப பிடிச்சிருக்கு......உன்னை கல்யாணம் பண்ணிக்க விரும்புறேன்"

சற்று அதிகார தொனியில் கார்த்திக் பேசவும் நந்தினி தன் கண்ணீரை துடைத்துக்கொண்டு தெளிவாக பேச முயன்றாள்,

" நீங்க இப்படி எல்லாம் பொண்ணுங்க கிட்ட சொல்ல மாட்டீங்கன்னு ஆபீஸ்ல எல்லாரும் சொல்லிக்கிட்டாங்க, நானும் எவ்வளவு நம்பிக்கை வைச்சிருந்தேன் உங்க மேல.........நீங்க இப்படி சொல்லுவீங்கன்னு நான் நினைக்கவே இல்ல"

"ம்ம்...........இது நாள் வரை என் மனசுல ......உன்னை போல யாரும் இப்படி பதிந்ததில்ல நந்தினி. எந்த பொண்ணுகிட்டவும் வலியப்போய் நான் பேசினதுமில்ல..........ஆனா உன்னை மட்டும் ரொம்ப பிடிச்சிருக்கு , அவ்வளவு தான்"

மீண்டும் அழ தொடங்கினாள் நந்தினி.

"இப்போ எதுக்கு அழுகிற??.......நான் தான் அந்த கெட்ட வார்த்தைய மறுபடியும் சொல்லலியே"

"இந்த காதல் கீதல் ன்னு........ஏதாவது என் அப்பாவுக்கு தெரிஞ்சா........என்னை வெட்டிப்போடக் கூடத் தயங்க மாட்டார். நான் எப்போவும் அப்பா பிள்ளை............என் அப்பா சொல்லை தட்டி நடக்க மாட்டேன்.....நான் பட்டணத்துல போய் படிக்க சொந்தக்காரக எல்லாம் தடுத்தபோ கூட என் அப்பா என் மேல நம்பிக்கையோட படிக்க அனுபிச்சாங்க, கம்பியூட்டர் கம்பெனில வேலைக்கு போற பொம்பளை பிள்ளைக அங்கே பக்கத்து பக்கதுல ஆம்பிளைங்க கூட ராத்திரி பகல் னு நேரம் கெட்ட நேரத்தில எல்லாம் வேலை செய்யறப்போ, காதலிச்சு தானே தன் வாழ்க்கைய தீர்மாணிச்சுருமாம்ண்ணே, அதனால நம்ம நந்தினிய படிக்க வைச்சதோட நிறுத்திடுங்கண்ணே...........வேலைக்கெல்லாம் அனுப்பாதீகன்னு எங்க சித்தப்பா எவ்வளவோ சொல்லியும், இப்போ 1 வருஷம் வேலைக்கும் போமா உன் இஷ்டபடின்னு அனுமதிச்சிருக்காங்க.......லவ்வு ஜவ்வுன்னு டாவு பண்ற ஆளு இல்ல நீங்கன்னு எல்லாரும் சொன்னதால தான் உங்க கிட்ட மட்டும் பேசினேன், நீங்க ..........இப்படி சொல்லிட்டீங்களே"

மீண்டும் விசும்பல்,


பாரதிராஜா படத்தில் வரும் பட்டிகாட்டு பொண்ணு
பட்டணதில் பொட்டி தட்ட வந்தப்போ தான்
பட்டாம்பூச்சி எனக்குள் பறந்திருக்கா????
கார்த்திக்கிற்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.

சில நிமிடங்களுக்கு பிறகு கார்த்திக் பேச தொடங்கினான்,

"நந்தினி......நான் உன்னை மனசார விரும்புறேன், உனக்கா என் மேல எப்போ காதல் வருதோ அப்போ என்கிட்ட சொல்லு, அதுவரைக்கும் நான் காத்திட்டிருப்பேன்"
என்று தெளிவாக கூறினான் கார்த்திக்.

நந்தினிக்கு தன் குடும்பத்தின் மேல் தான் பயம்.........தன் மீது வெறுப்பு இல்லை என அவன் மனதில் உறுதியாக உணர்ந்தான்.

நந்தினி பதில் ஏதும் சொல்லாது சிலைத்துப் போய் நின்றாள்.........சில நிமிடங்கள் ஆகியும் நந்தினியின் மெளனம் கலையவில்லை.

அந்த மெளனத்தின் அர்த்தம்??

அந்த கணத்தில்........
இரண்டு இதயங்கள் தராசுத் தட்டுகளாகி...
நெஞ்சின் முள்ளை அலைமோதச் செய்கின்றன!!

எதுவும் பேசாமல் நந்தினி அவ்விடம் விட்டு நகர்ந்தாள்.

அதன்பின் வியாழன், வெள்ளி இரண்டு நாட்கள் அலுவலகத்தில் முடிந்தவரை கார்த்திக்கை நேருக்கு நேர் சந்திப்பதை தவிர்த்தாள் நந்தினி.


சிடுமூஞ்சி சொன்ன காதலில்
சின்ன பொண்ணு குழம்பி போயிருக்கு
சீக்கிரம் சரி என்று தலையாட்டுவது கஷ்டம் தான்
சிறிது சிறிதாக சரி ஆகிடுவா
என்ற நம்பிக்கையில் கார்த்திக்கும் அவளை கண்டுக்கொள்ளாமல் இருந்தான்.

சனி ஞாயிறு வார விடுமுறை முடிந்து திங்கள் கிழமை அலுவலகம் வந்த கார்த்திக்கிற்கு அதிர்ச்சி.......நந்தினி அலுவலகம் வரவில்லை..

நந்தினி ஏன் வேலைக்கு வரல........??? டீமில் விசாரித்ததில், வாரயிறுதிக்காக சொந்த ஊருக்குச் சென்ற நந்தினி இன்னும் சென்னைக்குத் திரும்பவில்லை என் தெரிந்துக்கொண்டான் கார்த்திக்.

நந்தினி இல்லாத ஒவ்வொருநாளும் ஒரு யுகமாக தெரிந்தது கார்த்திக்கிற்கு,



அன்புச் சிலையே
ஆசைக் கிளியே

என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதயம் துடிக்கவில்லை
சத்தம் மட்டும் அதிருது

அழகாய் பூத்திருந்த என்
இதயத்தில் புதியதாய் யாரோ
குடிவந்ததாய் உணர்கிறேன்

என்னை சுற்றி இந்த உலகமே
வேடிக்கை பார்க்க
உன் நினைவுகளை என்னுள்
திரையிட்டு தனியே சிரித்து ரசிக்கிறேன்

செல்லம் என்ன இது
என்னை என்ன
செய்தாய்

இதுவரை நான்
எப்படிப்பட்டவனாக
இருந்தேனோ தெரியாது

ஆனால் ஏனோ
இப்பொழுதெல்லாம்
நான் நானாக
இல்லை என்பது
மட்டும் உணருகிறேன்

அன்பே என்னை
என்ன செய்தாய்!!!




நந்தினியின் வீட்டு தொலைபேசி எண் அவள் டீம்மேட் பெண்களிடம் கேட்டு அவளை தொடர்பு கொள்வது ஒன்றும் பெரிய காரியமல்ல, எனினும், அவளது குடும்ப சூழ்நிலை தெரியாமல் அவளுக்கு ஃபோன் பண்ணி அவளை சங்கடபடுத்த வேண்டாம் என ஒரு வாரம் அவளுக்காக தவிப்புடன் காத்திருந்தான் கார்த்திக்.

இனிமேலும் அவளிடம் தொடர்பு கொள்ளாமல் இருக்க முடியாது என உணர்ந்தவனாய், எப்படியும் அவளுக்கு ஃபோன் பண்ணியே தீர்வது என்ற முடிவுடன் தன் இருக்கைக்கு வந்தவன், மேஜையின் மீதிருந்த கவரைக்கண்டு அதிர்ச்சியில் உறைந்துப்போனான்.........

[தொடரும்]

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6

June 30, 2008

நீ வேண்டும்...நீ வேண்டும்...என்றென்றும் நீ வேண்டும் - 1

" என்னங்க உங்க பையன் ' கிக் பாஸிங்' ஆரம்பிச்சுட்டான், இனிமே நான் தூங்கினாப்ல தான்!
என் தூக்கத்தை திருடுறதுல உங்களுக்கு போட்டியா இப்போ உங்க பையன், என் வயித்துக்குள்ள இருக்கிறப்போவே இப்படி ஆட்டம் போடுறானே....வெளியில வந்ததும் என்னை ஒருவழி பண்ணிடுவான் போலிருக்குங்க"

ஆறு மாதம் கர்ப்பமான நந்தினி தன்னருகில் படுத்திருக்கும் தன் காதல் கணவன் கார்த்திக்கின் உள்ளங்கையை தன் வயிற்றின் மீது வைத்து தன்னுள் வளரும் தங்கள் முதல் ஈவின் துள்ளலை உணர வைத்தாள்.

சட்டென்று தன் கைகளை விலக்கிக் கொண்ட கார்த்திக் மறுபக்கமாக திரும்பி படுத்துக்கொண்டான்.

வழக்கமாக தன் மடிமீது தலை வைத்து வயிற்றில் உள்ள குழந்தையுடன் உரையாடுவதும், கொஞ்சுவதுமாக சில்மிஷம் செய்யும் கார்த்திக் இன்று இப்படி நடந்துக்கொண்டது நந்தினிக்கு வியப்பாகவும் கஷ்டமாகவும் இருந்தது. இருப்பினும் அதனை வெளிக்காட்டிக்கொள்ளாமல்....

"என்னடா செல்லம்....என்னாச்சு இன்னிக்கு, என் மேல் ஏதும் கோபமா??" என கேட்டுக்கொண்டே தன் பக்கமாக கார்த்திக்கை திருப்ப முயன்று தோற்றாள் நந்தினி.

திருமணமான இந்த மூன்று வருடத்தில் ஒருநாள் கூட இப்படி அவன் முகம் திருப்பியது கிடையாது.

'போதும் போதும்' என்று கெஞ்சினாலும் மிஞ்சும் கொஞ்சல்களும்,
திக்கு முக்காட' வைக்கும் குறும்புகளும்
நிறைந்த கார்த்திக்கிற்கு இன்று என்னவாயிற்று??

குழம்பிப்போன நந்தினிக்கு அழுகை முட்டிக்கொண்டு வந்தது, ஆனாலும் கணவனிடம் தன் அழுமூஞ்சியை காட்டி அந்த அழகிய இரவை வீணாக்க விரும்பவில்லை நந்தினி.

"ஏங்க உடம்பு சரியில்லையா???.........ஆஃபிஸ்ல ஏதும் பிரச்சனையா????"

"இல்ல...."

"பின்ன ஏங்க ஒருமாதிரி இருக்கிறீங்க? ஹைதிரபாத்க்கு போய்ட்டு நாலு நாள் கழிச்சு இன்னிக்கு காலையில வந்ததிலிருந்து நீங்க சரியாவே இல்ல, அத்தை முன்னாடி வைச்சு கேட்க வேணாம், ஆஃபீஸ் போய்ட்டு வந்ததும் கேட்டுக்கலாம்னு இருந்தேன்..........இப்போ சொல்லுடா கார்த்தி........என்னடா கண்ணா உனக்கு ஆச்சு?"

மற்றவர்களுக்கு முன்பும், மாமியாருக்கு முன்பும் மட்டும்தான் 'ஏங்க......வாங்க....போங்க' அப்படினு கார்த்திக்கு மரியாதை எல்லாம்,
தனிமை நேரத்தில் 'கார்த்தி' என பேர் சொல்ல்வதும்,
நெருக்கமான தருணத்தில் 'என்னடா................செல்ல திருடா' இப்படி கொஞ்சுவதும் நந்தினியின் பழக்கம்.



கார்த்திக்கிடமிருந்து பதில் ஏதும் வராததால் கொஞ்சம் கோபமும் வந்தது நந்தினிக்கு இப்போது,

"என்னடா செல்லம்........நான் கேட்டுட்டே இருக்கிறேனில்ல........சொல்லேன்டா திருடா"

"ஒன்னுமில்லைன்னு சொல்றேன் இல்ல..........சீக்கிரம் தூங்கு, நாளிக்கு காலையில உன் கைனக்காலிஜிஸ்ட் கிட்ட போகனும்"

'என்னடா செல்லம்'னு நந்தினி தன் ஹஸ்கி வாய்ஸ்ல சொன்னாலே கிறங்கிப்போய்விடும் கார்த்திக் இன்று எந்த சலனமும் இல்லாததிருந்தது நந்தினிக்கு அதிர்ச்சியாக இருந்தது!!

"போன வாரம் தானே நீங்க ஊருக்கு போறதுக்கு முன்னாடி டாக்டர்கிட்ட போனோம்..........அடுத்த விசிட் க்கு இன்னும் இரண்டு வாரம் இருக்குதே , இப்போ எதுகுங்க டாக்டர் பார்க்கனும்??"

"பார்க்கனும்னா பார்க்கனும் அவ்ளோதான்............சும்மா தொண தொணக்காம தூங்கு"

கார்த்திக்கின் சுரீரென்ற பதிலில் தெரிந்த எரிச்சல் நந்தினிக்கு புதிய பயத்தை அளித்தாலும், ஆஃபீஸ்ல ஏதோ பிரச்சனை போலிருக்கு, நாமும் ஏதாவது கேள்வி கேட்டு கஷ்டபடுத்த வேண்டாம் என நினைத்தவளாய், தனக்குள் வளரும் சிசுவின் அசைவுகளின் ஸ்பரிசத்தில் லயித்தவளாய் , மறுபுறம் திரும்பி படுத்து உறங்கிப்போனாள்.


சிறிது நேரத்தில் நேராக திரும்பிப் படுத்த கார்த்திக், தன் தேவதை அருகில் உறங்கும் அழகை ஒரு கணம் ரசித்தவன்.........மனதின் இறுக்கம் அதிகமாக, மேலே விட்டத்தை வெறித்துப் பார்த்தான்.
மின் விசிறி சுழல........கார்த்திக்கின் நினைவுகளும் பின்னோக்கி நகர்ந்தன.




பொறுப்புடன் படித்து முடித்து நல்ல ஒரு பதவியில் வேலையில் அமர்ந்து, உழைப்பால் முன்னேறி, கைநிறைய சம்பாதிக்கும் 27 வயது இளைஞனுக்கே உரிய மனநிறைவும், கர்வமும் கொடுக்கும் மிடுக்குடன் கலையான முகத்துடன், பெரும்பாலான பெண்கள் விரும்பும் உயரமும், handsome ஆன உடல் தோற்றமும், காந்த பார்வையும் என அத்தனை அம்சங்களுடன் இருக்கும் கார்த்திக்,

ஏனோ பெண்களிடம் அதிக ஈடுபாடும் ஆர்வமும் காட்டுவது கிடையாது.
சிறுவயதிலேயே தன் தந்தையை இழந்த தனக்கு தந்தையும் தாயுமாய் இருந்து வளர்த்த தன் அம்மாவிடம் தனக்குள்ள பாசத்தை பறித்து விடுவாளோ தன்னுடன் வாழ்வை பகிர்ந்துக்கொள்ளும் பெண் என்ற ஒருவித பயமே கார்த்திக்கை பெண்களிடமிருந்து தன்னை தனிமைபடுத்திக்கொள்ள செய்தது.

அதனாலேயே தன்னுடன் வேலை செய்யும் பெண்களிடம் தேவையில்லாமல் ஒரு வார்த்தை கூட அதிகம் பேசாமல் தனக்கென ஒரு வேலியமைத்துக் கட்டுப்பாட்டுடன் இருந்தான் கார்த்திக்.
இதனால் அவன் வேலை செய்யும் அந்த மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரியும் இளம்பெண்கள் மத்தியில் ஒரு வெறுப்பும்,
சில சமயங்களில் கடுமையுடன் பதிலளிக்கும் இவன் தன்மை ஒருவித எரிச்சலையும் ஏற்படுத்தியிருந்தது.

இந்த சமயத்தில் தான் நந்தினி இவனது குழுவில் ' trainee' ஆக சேர்ந்தாள்.

நந்தினி திருநெல்வேலிக்கு அருகில் உள்ள ஒரு கிராமத்துப் பெண். +2 வில் அதிக மதிப்பெண்கள் எடுத்து , வீட்டிலும் மற்றும் சொந்தக்காரர்கள் மத்தியிலும் இருந்து வந்த எதிர்ப்புகளையும் மீறி மதுரை தியாகராய பொறியியல் கல்லூரியில் கணனிதுறையில் பட்டப்படிப்பு முடித்து, இறுதி ஆண்டு ' campus interview' வில், கூட்டத்தோடு கூட்டமாக கார்த்திக் பணிபுரியும் மென்பொருள் நிறுவனத்தால் தேர்ந்தெடுக்கப்பட்ட பொறியாளர்களில் ஒருத்தி.

இன்று கார்த்திக்கிடம் trainee ஆக பணியில் சேர்ந்திருந்தாள்.

நகர்புறத்து நவநாகரீக பெண்களின் நுனிநாக்கு ஆங்கிலமும்,
சிறிது அலட்டலும்,
சகஜமாக ஆண்களுடன் நட்புடனும் தைரியத்துடனும் பேசும்
பெண்களையே பார்த்து பழகியிருந்த கார்த்திக்கிற்கு......


மையிட்ட மான்விழிகளுக்குள் மின்னும் மிரட்சியும்,
பவுடர் பூசியிருப்பதை தவிர வேறு எந்த அதீத அலங்கரிப்புகளும் இல்லாத
பாந்தமான முகமும்,
அம்முகத்தில் மிளிரும் பொலிவும்,
காதோரம் அவளது கன்னம் தொட்டு நடனமாடும் சிறு ஜிமிக்கியும்,
பின்னலிடப்பட்ட நீண்ட கூந்தலுமாக,
ஓர் தங்க விக்கிரகமாக தெரிந்தாள் நந்தினி!!!

தன் மனம் அவள்மேல் ஈர்க்கப்படுவதையும், அலைபாயுவதையும் தடுப்பதாக நினைத்துக்கொண்டு, தேவையின்றி அவளிடம் வேலை நேரங்களில் கடுகடுப்புடன் கடுமையாக நடந்துக்கொண்டான் கார்த்திக்.

வெளித்தோற்றத்தில் அமைதியான நந்தினி, வேலையில் புத்திசாலியும் சுட்டியுமாக இருந்தது இன்னும் வெகுவாக கார்த்திக்கை கவர்ந்தது.

Day by day கார்த்திக்கின் பிரம்மச்சாரியக் கோட்டை நந்தினியால் தகர்த்தப்பட்டுக் கொண்டிருந்தது.

ஒரு கட்டத்தில் தன் மனதில் உள்ள விருப்பத்தை நந்தினியிடம் கூறிவிட முடிவு செய்தான் கார்த்திக்,

தன் காதலை நந்தினியிடம் தெரிவித்தால் , இப்படி ஒரு ரியாக்ஷன் வரும் என அவன் சற்றும் எதிர்பார்க்கவில்லை........

[தொடரும்]

பகுதி - 2

பகுதி - 3

பகுதி-4

பகுதி - 5

பகுதி - 6

June 19, 2008

வேலைக்குச் செல்லும் பெண்களுக்காக......

குமுதம் சிநேகிதி வார இதழில் வெளிவந்த 'வேலைக்குச் செல்லும் பெண்களுக்கான ஆலோசனைகள்' ....இங்கு பதிவாக!!



இன்றைய சூழலில் ஆணும் பெண்ணும் சேர்ந்து வேலை செய்வது என்பது தவிர்க்க இயலாதது.
இப்படிப்பட்ட சூழலில் சக ஆண்களிடம் இருந்து பிரச்சனைகள் வராமல் இருக்கவேண்டுமெனில் அவர்களிடம் நாம் [பெண்கள்] .......

எப்படி நடந்து கொள்ளவேண்டும்??

பழக்கத்தின் எல்லை எதுவரை இருக்கலாம்?

இதோ உங்களுக்கு உதவ சில பயனுள்ள ஆலோசனைகள்!

* நம் உடைகள் எதிரிலிருப்பவரின் உணர்வுகளைத் தூண்டாமல் இருப்பது நல்லது. மாடர்ன் ஆக உடுத்தினாலும் நேர்த்தியாக உடுத்துங்கள்.

*முக்கியமாக உடன் வேலை பார்க்கும் ஆண்களிடம் நம்முடைய பர்சனல் விஷயங்களை பங்கு போடாதீர்கள். அங்கேதான் ஆரம்பிக்கிறது பல பிரச்சனைகள்.

*சொந்த குடும்ப விஷய்ங்களுக்கு உடன் வேலைபார்க்கும் ஆண்களிடம் ஐடியாக்களைக் கேட்காதீர்கள், அட்வாண்டேஜ் எடுக்க முன் வருவார்கள்!

*உடன் வேலை செய்தாலும் பர்சனல் செல் நம்பர்களை யாருக்கும் தராதீர்கள். நம்பிக்கைக்குரிய நபர்களை தவிர.

*சில நேரங்களில் உயர் அதிகாரிகளே தொல்லைகள் தருவார்கள். எடுத்தேன் கவிழ்த்தேன் என்று ஹாண்டில் செய்யாமல், பிரச்சனைகள் தீரும் வகையில் மிக ஜாக்கிரதையாகக் கையாளுங்கள்.

*ஆண் நண்பர்களிடம் கை குலுக்குவது தவறல்ல, அதற்காக எல்லாவற்றுக்கும் கைக்கொடுப்பது , தொட்டுப் பேசுவது கூடாது.

*உங்களின் பொருளாதார இயலாமை நிலையை உடன் பணிபுரியும் ஆண்களிடம் கூறாதீர்கள்.

*உடன் பணிபுரியும் ஆண் விமர்சிக்கும் அளவிற்கு உடையணியாதீர்கள்.

*அலுவலகம் என்பது பணிபுரிய மட்டுமே, மற்ற உங்களது தனிப்பட்ட விருப்பங்களுக்கும் குடும்ப பிரச்சனைகளுக்கும் ஏற்ற இடம் அது அல்ல என்பதை நீங்கள் முதலில் உணரவேண்டும்.

* நட்பு ரீதியாக புன்னகைக்கலாம், ஆனால் காரணமில்லாமல் எல்லாவற்றுக்கும் ஆண்களிடம் சிரிக்காதீர்கள்.

* ஒரு ஆணிடம் கை குலுக்குதல், தேநீர் பருகுதல், இரவு நேரத்தில் வாகனத்தில் செல்லுதல் இவையெல்லாம் நம் அக்கம் பக்கத்தினரால் கூர்மையாக கண்காணிக்கப்படும் விஷயங்கள் என்பதை மனசில் வைத்துக்கொள்ளுங்கள்!
ஒரு ஆணுக்கும் பெண்ணுக்கும் உள்ள தனிப்பட்ட இயல்பு , மனமெச்சூரிட்டி போன்றவற்றை பொறுத்து ஆணிடம் பெண்கள் பழகலாம்.

* உடன் வேலை பார்க்கும் ஆண் தவறாக நடக்க முயற்சிக்கும்போது பெண்கள் கண்டிப்பாக எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும். இல்லையெனில் அதுவே ஆணகளுக்கு மிகப்பெரிய பலம் ஆகிவிடும்.
'நாம எது செஞ்சாலும் வெளில கமிச்சுக்காம அமைதியாத்தேன் இருக்காங்க ! மத்த விஷயத்திலேயும் நமக்கு ஒத்துழைப்பாங்க!' என்று சம்பத்தப்பட்ட ஆண் நினைத்து விடுவான்.
இதனால் பிரச்சனை பூதாகரமாகும்போது பெண்கள் வேலைக்கு போகும் உரிமையை வீட்டில் இழக்கிறார்கள்.

* பெண்களுக்கு சாதகமாக இப்போது நிறைய சட்டங்கள் உள்ளன. பெண்கள் அவற்றை தெரிந்து கொள்வது அவர்களுக்கு அதிக பாதுகாப்பு ஏற்படுத்தித் தரும்!.

*தன்னிடம் அன்பாக பேசக் கூடியவர்கள் எல்லோருமே தன்னுடைய வாழ்க்கையை காப்பாற்றப் போகிறவர்க்ள் என்ற எண்ணம் பெண்களுக்கு கூடாது. வேலை செய்யும் இடத்தில் ஆண் பெண் உடல் ரீதியான ஈர்ப்புகளுக்கு ஆளானால் அதனால் ஏற்படும் பின் விளைவுகள் நிஜமாகவே விபிரீதமாக இருக்கும்.

* ஆபீஸில் குறிப்பாக எந்தவொரு ஆணுடனும் தாழ்வான ரகசியக் குரலில் பேசாதீர்கள். இது கேட்பவர்களுக்கும் பார்ப்பவர்களுக்கும் தப்பான அபிப்ராயத்தை ஏற்படுத்தும்.

* ஜல் ஜல் என்று அதிக மணியோசை கொண்ட கொலுசை தவிர்க்கலாம். அலுவலகத்துக்கு அதிக சத்தம் போடும் கண்ணாடி வளையல்களும் வேண்டாமே!

* உங்கள் ஆடை பற்றி (அ) உங்களுக்கு உள்ள திறமை பற்றி பாராட்டும்போது 'நன்றி' என்று ஸ்டிரெய்ட்டாக சொல்லுங்கள். தேவையில்லாமல் வெட்கப்படுவதை தவிருங்கள்.

*யாரிடம் பேசினாலும் கண்ணைப் பார்த்துப் பேசுங்கள், அவர்களையும் அப்படியே பேச அனுமதியுங்கள்.

* அரட்டையில் , ஜோக்ஸ் என்ற பேரில் விரச பேச்சுகளை அனுமதிக்காதீர்கள்.

*எதற்காகவும் எந்த பிரச்சனைக்காகவும் அழாதீர்கள், அழும் பெண்களை சுலபமாக ஆண்கள் திசை திருப்பிவிடுகிறார்கள்.

* தேவையே இல்லாமல் எதற்கெடுத்தாலும் சத்தமாக சிரிக்காதீர்கள்.

* விழா , விசேஷம் தவிர உடன் வேலைப் பார்க்கும் ஆணை தேவையில்லாமல் வீட்டுக்கு அழைக்காதீர்கள், நீங்களும் செல்லாதீர்கள்.

* ஆண்கள் தனது மனைவியை உங்களோடு ஒப்பீட்டு பேசுவதையோ அல்லது அவளுக்கு ஒண்ணுமே தெரியாது என்று மதிப்பை குறைத்துப் பேசுவதையோ அனுமதிக்காதீர்கள்.

* ஆண் எந்த நோக்கத்திற்காக உங்களிடம் பேசுகிறான் என்று அவன் நோக்கத்தை அவன் வார்த்தைகளிலும் கண்களிலும் இருந்து பெண்கள் புரிந்துக் கொள்ள வேண்டும்.
அதைப்பொறுத்தே ஒரு பெண் ஆணுடம் பழகும் போது அந்த உறவை எவ்வளவு தூரத்தில் வைக்கலாம் என்று வரைமுறைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

*பெண்களுக்கு தங்கள் விஷயங்களை பகிர்ந்துகொள்ள நட்பு ரீதியிலான பழக்கம் ஆணிடமோ, பெண்ணிடமோ ஏற்படுவது இயல்பானதுதான். ஆனால் அது அவளது சுயகெளரவத்தை எந்த வகையிலும் பாதிக்காத வகையில் இருக்கவேண்டும்.
அதுவே பாதிப்புகளை ஏற்படுத்தாது, அதுவே நிலைக்கும்!!!

June 11, 2008

கண் பேசும் வார்த்தை புரிவதில்லை....

[படித்ததில் பிடித்த கதை......சில மாற்றங்களுடன் என் எழுத்தில் பதிவாக]

சென்னையிலிருந்து கோவை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸில் தன் ஜன்னலோர இருக்கையில் அமர்ந்தாள் கீதா.

கைப்பையைத் திறந்து புத்தகம் ஒன்றை எடுத்துக் கொண்டு படிக்க வசதியாக அமர்ந்துக்கொண்டாள்.
அந்த 8 மணிநேர ரயில் போக்குவரத்திற்கு இப்போது அவளுக்குத் துணையாகியிருக்கிறது இந்த புத்தகம்.





எதிரில் ஜன்னலோரம் இருந்தவர் மீது சரிவாய்

ஒரு பார்வை..... பார்த்தாள் கீதா.


அட......பாரேன் அவரும் இவ்வளவு நேரமா என்னையே தான் பார்த்துக்கொண்டு இருந்திருக்கிறார்..

ம்கூம்....'இந்த ஆம்பிளைகளே இப்படிதான்'என்று மனதில் திட்டி முதுகை மட்டும்பக்கவாட்டில் திருப்பி மீண்டும் கண்களை புத்தகத்தின் எழுத்துகளில் பதித்தாள்...

ஆனால்....மனதோ எதிரே இருந்தவர் மீது திசைதிரும்பியது.


ம்......இப்போது நைஸா பார்ப்போம்...அவர் எங்கே பார்க்கிறார் என்று என கீதாவின் மனது பேசிக்கொண்டது.

அடச்சீ.......இன்னும் என்ன இப்படி விழுங்குற மாதிரி...ஒரு பார்வை பார்க்கிறாரே,இந்த கூட்டத்தில இடம் மாறிக்கூட இருக்கமுடியாதே.....என தவித்தாள் கீதா.

மறுமுறை கீதா பார்த்தபோது,மெதுவாய் ஒரு புன்முறுவல்...எதிரே இருந்த அவனிடமிருந்து!

அந்த சிரிப்பில் குறும்பு கொப்பளித்ததை கீதா கவனிக்க தவறவில்லை.


கீதா மாதிரி அழகு பெண்ணை யார் தான் பார்க்காமல் போவார்கள்!!
பார்த்ததும் மனதில் பசக்கென்று ஒட்டிக்கொள்ளும் அப்படி ஒரு அழகு.. கீதா!!


இதில் இவன் இப்படி பார்ப்பதில் தப்பேயில்லை.

அவளை கண்களால் ஜாடை காட்டி "என்ன" என்றான்..

கண் ஜாடையில் அவன் அப்படி கேட்டதும், கோபத்தின் உச்சத்திற்கே போனாள் கீதா,அவளும் கண்களில் நெருப்பை கொட்டி எரித்துப்பார்த்தாள்.


இப்போது அவன் உதட்டில் மீண்டும் ஒரு வசீகரமான கேலி புன்னகை.

பெரிய 'புன்னகை மன்னனு' நினைப்புதான்' என மனதிற்குள் திட்டிதீர்த்தாள் கீதா.


அப்போது ரயில் ஏதோ ஒரு நிறுத்ததில் நிற்க..அவசரமாய் கீதாவின் அருகில் இருந்தவர் இறங்கினார்.. ...


அடடா '

அந்தக்குயிலின் பக்கத்தில் இடம் ஒன்று காலி..
என் மனமும் அதையே நாடி...

என அவன் மனம் பாடியது!!


"பக்கத்தில் வரட்டுமா" என்று...மீண்டும் கண்களில் கெஞ்சும் பார்வை வீசினான்.

ஐயோ! அடபாவி பார்வையாலே இப்படி கேட்கிறானே.........என்று....தன் கையிலிருந்த புத்தகத்தினால் தன் தலையில் அடித்துக்கொண்டாள்....கீதா!

அதன் பின் சில மணி நேரம் புத்தகத்திலேயே மூழ்கி போனாள் கீதா, அவனை கண்டுக்கொள்ளவுமில்லை.

மீண்டும் தீடிரென அவன் நினைவு வரவே,மெதுவாக எட்டிப்பார்ததாள்...ஆள் அசதியான தூக்கத்தில் இருந்தான்.

அப்பாடா.....நானும் நிம்மதியா தூங்கலாம், என நினைத்தவளாய் ஆழ்ந்த தூக்கத்தில் உறங்கிப்போனாள் கீதா..


தீடிரென் மக்களின் பேச்சுத் சத்தங்கள் காதை ஊடுறுவ..மெல்லக் கண்களை திறந்து பார்த்தாள்...


எங்கே இவர்...எதிரேயிலிருந்வரைக் காணவில்லையே...? எங்கே போயிருப்பார்....????


ம்.....ம்..ரெயில் நிறுத்தத்தில் நிற்பதால் ஏதும் வாங்கபோயிருப்பார் போலும்.. என நினைத்துக்கொண்டாள் கீதா.

மனது அடிக்கடி ஜன்னல் வழியே எட்டி எட்டி பார்க்கச் சொன்னது. அவளும் பார்த்தாள்.

ம்..........வரவேயில்லை அவன்....விசல் சத்தத்துடன் ரெயில் புறப்பட்டது.

அவளின் மனதோ வேகமாக அடித்துக்கொண்டது. ஓடிச்சென்று வாசலின் பக்கத்தில் கைபிடியை பிடித்தபடி கீதா..

காற்றில் அவள் கூந்தல் கலைய ,
மனமோ தவிக்க....
அவரைத்தேடி கண்கள் வலை வீச....


எங்கும் தென்படவில்லை அவன்....

அழுதாள்..கண்களில் கண்ணீரை தேக்கிவைத்தபடி அழுதாள் .....!!


கீதாவின் பின்னால் ஒருவர்....."கண் தேடுதே .....செல்லமே உன்னைக் கண்தேடுதே" என்று பாடியபடி கட்டிப்பிடித்தார்.




"என்னங்க..நீங்க....இப்படி பண்ணிட்டீங்க......நீங்க மட்டும் இப்ப வரல்லைன்னா......நான் குதிச்சிருப்பேன்."
விசும்பலுடன் அவன் தோளில் சாய்ந்தாள் கீதா.


அடடா என் மனைவி கோபத்திலும் குழந்தை மாதிரித்தான்......என கீதாவின் உச்சி முகர்ந்தவன்,

"எவ்வளவு சமாதனப்படுத்தியும் கேட்காம, வீட்டில் போட்ட சண்டையால இவ்வளவு நேரம் மூஞ்சு தூக்கி வைச்சிட்டிருந்தா எப்படிடா செல்லம், கண்ணால எவ்வளவு கெஞ்சல் கோரிக்கை வைச்சேன், நீ தான் முறுக்கிக்கிட்டே இருந்த, அதான்.......என் செல்ல பொண்டாட்டிக்கு ஒரு ஷாக் ட்ரீட்மெண்ட்"


"ஷாக் ட்ரீட்மென்ட் கொடுக்கிற ஆளை பாரு.....எவ்வளவு பயந்துட்டேன் தெரியுமா, ஸாரிங்க......ரொம்ப கோபப்பட்டுடேன்,உங்க கிட்ட பேசாம மூஞ்சி தூக்கி வைச்சுக்கிட்டு.....கஷ்டபடுத்திட்டேன் உங்களை,........... ப்ளீஸ் மன்னிச்சிடுங்க" என கொஞ்சலுடன் கீதா சிணுங்க.



"எதுக்குமா மன்னிப்பெல்லாம் கேட்கிற,நல்ல நல்ல சந்தர்ப்பங்கள் வருவதும், நம் அன்பு ஆழமாவதும் இந்த மாதிரி குட்டி குட்டிச் சணடைகளில் தானடி என் செல்லமே" என்ற அவனது கரம் அவளை வளைத்துக்கொண்டது அவன் பிடிக்குள்!!.




கொஞ்சிக் கொஞ்சி நீ பேசும்போது
கொஞ்சம் உயிர் விட ஆசை !


குலுங்கிக் குலுங்கி நீ சிரிக்கும்போது
அழுகையையே மறந்துவிட ஆசை !


உள்ளங்கையில் உன் பெயரை எழுதி
முத்தமிட ஆசை !

உன் அன்பில் நான் நனைந்து
உலராமல் இருக்க ஆசை !


உன்னோடு இருக்கும் ஒருநாள்
ஒரு யுகமாய் மாற ஆசை !


எனைப்பார்க்கும் போது உன் கண்கள்
இமைக்காமல் இருக்க ஆசை !


கோபமாய் நீயிருக்கும் நாளை
காலண்டரில் குறித்துவைக்க ஆசை !


என் கோபம் தணிய கொஞ்சும் உன்
கெஞ்சல்கள் மிஞ்சிட ஆசை!


நம் ஆசைகளை நிறைவேற்றுவது
யார் கடமை !

ஆசைகளை பூட்டிவைத்திருக்கும் என் மனம்
உன்னிடம் என்பது தானே உண்மை !!

June 03, 2008

நாத்தனாருக்கு ....நமஸ்காரம்!!

தாரணி: என்னமா கண்ணு.......கல்யாணப் பொண்ணு, டல் அடிக்கிற, என்னா மேட்டரு??

ராஹினி: என்னமோ தெரில......பயமா இருக்கு கல்யாண வாழ்க்கையை நினைச்சா.

தாரணி:இந்த கவலை உன்னைக் கட்டிக்கப்போறவருக்கு வரவேண்டியது...........உனக்கு ஏன்??

ராஹினி: ஒய் என்ன கொழுப்பா, நானே நொந்து போய் இருக்கிறேன், சும்மா நீ வேற வெறுப்பேத்தாதே.

தாரணி: என்ன பயம்..........எதுக்கு பயம்.......யார் மேல பயம்......ஒவ்வொன்னா சொல்லு:)))

ராஹினி:எனக்கு..........அவரோட..........அக்கா, தங்கச்சிங்க எல்லாம் நினைச்சா தான் கொஞ்சம் பயமா இருக்கு.

தாரணி:அட.......மாமியார் பயம் எல்லாம் போய் இப்போ நாத்தனார் பயமா?

ராஹினி: அதான் மாமியார்க்கு எப்படி மஸ்கா போடனும்னு 'பதிவு' எல்லாம் படிச்சு மனப்பாடம் பண்ணிக்கிட்டோம்ல..........நாத்தனார் மேட்டருக்கு தான் என்ன பண்றதுன்னு தெரில...


தாரணி: டோண்ட் வொரி ....நான் சொல்லித்தரேன் கேட்டுக்கோ. உன் நாத்தனார் உன் கணவரோட அக்காவா?? தங்கையா ன்றது பொறுத்து தான் நீ எப்படி சமாளிக்கனும்னு சொல்லித்தர முடியும்.

ராஹினி: நீ எல்லா ரக நாத்தனாருக்கும் சொல்லுமா தாயே.........நான் நோட் பண்ணிக்கிறேன்.




தாரணி: ஒகே ஃபைன், முதல் ரகம்.........வீட்டுக்காரரோட அக்கா...............அதுவும் வயது அதிக வித்தியாசம் உள்ள பெரிய அக்கா, இவங்க ஒரு இரண்டாவது மாமியார்னே சொல்லலாம். இவங்களுக்கு தன் தம்பி தனக்கும் ஒரு குழந்தை மாதிரி அப்படின்ற நினைப்புலயே இருப்பாங்க.
தன் தம்பிக்கு கல்யாணம் ஆனாலும் தன் உரிமை + ஆதிக்கத்தை அவ்வளவு ஈஸியா விட்டுத் தரமாட்டாங்க, உன் மாமியார் குடும்பத்துலயும் அவங்களுக்குன்னு ஒரு தனி மரியாதை வேற இருக்கும்.
ஸோ மெது மெதுவா தான் அவங்களோட பாசப்பிடியிலிருந்து உன் வீட்டுக்காரரை உன் பக்கம் திருப்ப முடியும்.

ராஹினி: என்னடி இப்படி பயமுறுத்துற.........


தாரணி: அட அதெல்லாம் சமாளிச்சிடலாம் இவங்களை, கவலைப்படாதே,
தன் தம்பிக்கு எப்போ பொண்ணு பார்க்கனும், எந்த ஊர்ல பொண்ணு பார்க்கனும், எப்படி பட்ட பொண்ணு பார்க்கனும் அப்படின்ற எல்லா விஷயமும் இவங்க எடுத்த முடிவாதான் பெரும்பாலும் இருக்கும்.
ஸோ இவங்களை ரொம்ப ரொம்ப பதமா பக்குவமா டீல் பண்ணனும்.
அப்போ அப்போ இவங்ககிட்ட ஆலோசனை, அறிவுரை எல்லாம் கேட்டு ஆக்ட் விடு, அவங்களுக்கு நீ கொடுக்கிற முக்கியத்துவம் தான் அவங்களை உன்கிட்ட மோதாம இருக்க வைக்கும், புரிஞ்சதோ???

ராஹினி: ஏதோ கொஞ்சம் புரிஞ்ச மாதிரி இருக்கு............சரி அடுத்த வகை நாத்தனார் பத்தி சொல்லு.

தாரணி: ஒகே அடுத்த ரகம்.......கணவரைவிட ஒரு இரண்டு அல்லது மூன்று வயது பெரிய அக்காவா இருந்தா..........இவங்க உன் திருமணத்திற்கு கொஞ்சம் வருஷம் முன்னாடி வரைக்கும் தன் தம்பிகூட ' அடி பிடி' சண்டை போட்டு ரொம்ப க்ளோஸ் ஆன சகோதரி + சினேகிதியா இருந்திருப்பாங்க.
இவங்க கல்யாணம் ஆகி இன்னொரு வீட்டுக்கு மருமகளா போயிருந்தாலும் தன் பிறந்த வீட்ல இன்னும் ரொம்ப அதிகாரம் பண்ணிட்டு திரிவாங்க, ஸோ..........கொஞ்சம் ஆரம்பத்திலேயே நீ ஒழுங்கா கவனிச்சுக்கிட்டா ஈஸியா சமாளிச்சுடலாம்.
இவங்க கிட்ட ஃப்ரண்ட்லியாவும் எளிதில் நெருங்க முடியாது, டக்னு கட் பண்ணியும் விட முடியாது, நைஸ் நைஸாதான் இவங்ககிட்ட பிரச்சனைவராம பார்த்துகனும்.


ராஹினி: அப்போ........இந்த கொஞ்ச வயசு வித்தியாசித்தில இருக்கிற நாத்தனார் தான் ரொம்ப டேஞ்சரா???

தாரணி: இரு இரு.........இதைவிட டேஞ்சர் பார்ட்டி இருக்கு, இது உன் வீட்டுக்காரரோட தங்கை.......இதுலயும் இரண்டை வகை தங்கச்சி ரகம் இருக்கு,
1.கல்யாணம் ஆன தங்கை
2.கல்யாணமாகத வீட்டில் இருக்கும் கல்லூரி/பள்ளி யில் படிக்கும் தங்கை.
இந்த கேடகரி நாத்தனார் ஓரளவுக்கு உன் வயதை ஒத்த பெண்ணா இருப்பாங்க. நிறைய ஈகோ மோதல் வரும்.
அண்ணனின் செல்லம் , பாசம் எல்லாம் மொத்தமா கிடைச்சிட்டிருந்த இந்த தங்கச்சிக்கு அவ்வளவு ஈஸில எல்லாத்தையும் விட்டுதர முடியாது.
அதுவும் கல்யாண ஆகின தங்கைனா கொஞ்சம் ஒகே, எப்பவாச்சும் தான் நீ அவங்களை மீட் பண்ணுவே, ஆனா உன் மாமியார் வீட்டுலயே இருக்கிற தங்கச்சி நாத்தனார்ஸ் தான் கொஞ்சம் கஷ்டம் சமாளிக்க.



ராஹினி: ஹேய்.........எப்படி சமாளிக்கிறதுன்னும் சொல்லிடு ப்ளீஸ்:))




தாரணி: தன் அம்மாகிட்ட.........அதான் உன் மாமியார்கிட்ட போட்டு கொடுத்து மாட்டி விடுறதெல்லாம் இந்த ரக நாத்தனார்ஸ் தான் , நேர்ல மோதினா குழாய் அடி சண்டை ரேஞ்சுக்கு இருக்கும்னு இப்படி அட்டாக் பண்ணுவாங்க.
இந்த அட்டாக் உன் வீட்டுக்காரர் வரைக்கும் கூட வரும், ஸோ இந்த ' பாச மலர்' அட்டாச்மெண்ட் ல நீ ரொம்ப உஷாரா இருக்கனும்.
தங்கச்சி நாத்தனார்கிட்ட நேசக்கரம், நட்பு கரம் நீட்டுறதுதான் நல்லது.
நீ உன் மருமகள் கெத்தைவிட்டு ரொம்ப இறங்கி வர முடியலினாலும், ஒரளவுக்கு ஒரு புரிதல் அந்த தங்கச்சி பொண்ணுகிட்ட வைச்சுக்கிறது சிறந்தது.
அவங்க ரசனை, பழக்க வழக்கம் எல்லாம் கணவர் கிட்ட கேட்டு தெரிஞ்சுகிட்டு அந்த நாத்தனார் ரூட்லயே போய் கைக்குள்ள போட்டு வைச்சுக்கனும்.


'என் அண்ணி எனக்கு ஒரு தோழி' அப்படின்னு அந்த தங்கச்சி நாத்தனாரை மார்தட்ட வைக்கனும்.


ராஹினி: ஹே............ஒரு நிமிஷம் இரு............இதே டயலாக்கை நீ மார்தட்டி நான் கேட்டிருக்கிறேனே.........அப்போ உன் அண்ணி உன்கிட்ட பயன்படுத்தின டெக்னிக்கைதான் என்கிட்ட க்ளாஸ் எடுக்கிறியா நீ???

தாரணி: அனுபவத்துல தெரிஞ்சுக்கிட்டதோ..........ஆராய்ஞ்சு தெரிஞ்சுக்கிட்டதோ, நாலு நல்ல விஷ்யம் சொல்லிக்கொடுத்தா, அப்படியான்னு கேட்டுக்கனும், அதைவிட்டுட்டு......இப்படி எல்லாம் பப்ளிக்கா கேட்கபிடாது, சொல்லிட்டேன்!!!!

May 22, 2008

அன்னைக்கு......தலைசாய தோள் கொடு!!!




பாசமிகு தந்தை இறைவனடி சேர்ந்திட
இழப்பின் தாக்கம் நெஞ்சை உலுக்கிட
திடீர் மறைவை ஏற்று தாங்கிட
மனம் தடுமாறும் போது...

அப்பாவின் நினைவுகள் நெஞ்சில் மோதிட
மனதில் இருள் சூழ்ந்திட
கண்ணீர் துடைக்க கரமொன்றை மனம் வேண்டிட
உள்ளம் ஏங்குகையில்....

தன்னில் பாதியாம் தன் கணவனை இழந்து
கைம்பெண்ணாய் நம் கண்முன் நிற்கும்
அன்னைக்கு ஆறுதல் அளிப்பது எப்படி???



நம் தலைகோதி தன் மடியில் துயில் கொள்ள செய்யும் அம்மா .........இன்று தலை சாய நாம் தோள் கொடுக்க வேண்டியது, அப்பா விட்டுச்சென்ற கடமைகளில் ஒன்று!

அக்கடமையை செய்வது அத்துணை சுலபமல்ல.....

அப்பா பதித்து சென்ற நினைவுகள் தரும் பாரம் நெஞ்சில் அழுத்த,
மறைந்த அப்பாவை நினைத்து அழுவதா??
மங்களகரமான புன்னகையுடன் இத்தனை வருடங்கள் கண்டிருந்த அம்மாவின் இன்றைய நிலைகண்டு கதறுவதா????

துக்கம் தொண்டையை அடைக்க, குடும்பத்தை தாங்கி நடத்த தடுமாறும் அத்தருணத்தில், அம்மாவிற்கு எவ்வகையில் ஆறுதல் அளிக்க முயற்சிக்கலாம் என என் அனுபவ ஆலோசனைகள், இங்கு பதிவாக............

* துக்கத்தில் இருப்பவர்களுக்கு ஆறுதல் சொல்வதற்கு பல நேரங்களில் நாம் மெளனமாக இருந்து அவர்களை மனம் திறந்து பேச விடுவது சிறந்தது.
அப்பாவின் நினைவுகளை கண்ணீரோடு அம்மா பகிர்ந்துக் கொள்ளும்போது பொறுமையுடன் உங்கள் கண்ணீரை வெளிக்காட்டிக்கொள்ளாமல் கவனியுங்கள்.
மனம் விட்டு பேச பேச தான் மனதின் பாரம் குறையும்.

*அம்மா புலம்பி அழுகையில் நீங்கள் உங்கள் 'கண்ணீர் அணை' உடைபட்டு கதறிவிட்டால் , அம்மா நொறுங்கிப் போவார்கள். உங்கள் கண்ணீர் அவர்களை பலவீனப்படுத்தும்.

* அதிகமான அனுதாப வார்த்தைகள் மேலும் துயர் கொள்ளச் செய்யும்.
அதனால் அவ்விதம் பேசி பேசி ஆறாத காயங்களை ரணப்படுத்தும் உறவினர்கள், அயலகாத்தாரிடமிருந்து பத்திரமாக அம்மாவை பார்த்துக்கொள்ளுங்கள்.

[பட்சாதாப வார்த்தைகள் கூறிக்கொண்டே இருப்பது துக்கத்தையும் சுய இரக்கத்தையும் அதிகப்படுத்தும் எனத் தெரியாமல் பேசுபவர்களும் உண்டு...........வேண்டுமென்றே கிண்டி கிளறி காயப்படுத்துவோரும் உண்டு]

* அவர்களின் ஒத்த வயதில் உறவு பெண்கள் யாராவது சில நாட்கள் அம்மாவுடன் இருப்பது சாத்தியமானால் நன்று. ஆனால் அப்பெண்களும் ஒப்பாரி வைக்கும் கூட்டமாக இருந்திட கூடாது.

*அம்மாவிற்கு பிடித்த உணவகம், கோயில், உறவினர்/நண்பர்கள் இல்லம்........இப்படி எங்காவது அழைத்துச் செல்லுங்கள்,
இடமாறுதல் மனதில் ஒரு தெளிவை ஏற்படுத்த வாய்ப்பிருக்கிறது.

*முன்பு போல் உடுத்திக்கொண்டு வெளியில் சென்றால் சமூகம் என்ன நினைக்கும் என்ற பயமும்.............சுயபட்சாதாபமும் அதிகம் இருக்கும் அவர்கள் மனதில், நீங்கள் தான் தன்னம்பிக்கை வார்த்தைகள் கூறி சகஜ நிலைக்கு கொண்டு வரவேண்டும்.

* நாட்டு நடப்பு, சீதோஷன மாற்றங்கள், பக்கத்துவீட்டு குழந்தையின் குறும்பு.........இப்படி ஏதாவது ஒன்றை பற்றி பேசி, அம்மாவின் சிந்தனைகளை திசைதிருப்பி, இயல் நிலைக்கு வர உதவுங்கள்.

*அம்மாவிற்கு அதிக ஈடுபாடு உள்ள விஷயம் என்னவென்று அறிந்து, அதில் அவரை ஈடுபடுத்திக்கொள்ள வைக்கலாம்.

*நம் துக்கத்தை மறைத்து , அன்னைக்கு ஊக்கமும் உற்சாகமும் அளிக்க தைரியமான முகத்திரை மிக மிக அவசியம்.
குடும்பத்தை தொடர்ந்து தாங்கி நடத்த நீங்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பதே அம்மாவிற்கு புது தெம்பை கொடுக்கும்.

*அப்பா விட்டுச் சென்ற வெற்றிடத்தை நிரப்ப நம்மால் முடியாது...........உடைந்த அன்னையின் உள்ளம் உருகுலையாமல் நிச்சயம் பார்த்துக் கொள்ள முடியும்.



துக்கத்தின் அளவுகோலும்,
துயர் தாங்கும் மனவலிமையும்,
துன்பம் பகிர துடிக்கும் ஏக்கமும்,
நபருக்கு நபர் வேறுபடும்...

குழந்தை பருவத்தில் நம்
அழுகையின் குறிப்பறிந்து பாலூட்டிய
அன்னையின் இன்றைய கண்ணீரின் அர்த்தம்........
சேய்க்கு மட்டுமே புரியும்!!


காலம்தான் காயத்தை ஆற்றும்,துயரை துடைக்கும்..........

அன்னை அந்நிலையை விரைவில் அடைவதற்கு நம் ஆறுதல் தோள் அவசியம் தேவை!!

May 07, 2008

எனக்கென ஏற்கெனவே ...பிறந்தவள் இவளோ??? - பகுதி 4



பகுதி -1

பகுதி - 2

பகுதி - 3

மீராவின் நாசியிலே சுவாசம் குறைந்து கொண்டே போனது, ICU விற்கு கொண்டுபோகப்பட்டாள் மீரா. செயற்கை முறையில் மீரா மூச்சுவிட ஏற்பாடு செய்வதாகவும், பிழைப்பது சிரமம் ,'keep your fingers crossed' என டாக்டர் கூறினார்.

கையில் மீராவின் குழந்தை.....பசியில் அழுதது,
நர்ஸ் என்னிடமிருந்து குழந்தையை வாங்கிக் கொண்டுச் சென்றார்.

மீராவிற்கு குழந்தை நல்லபடியாக பிறந்ததும், சுமதி கோயிலுக்கு சென்றுவிட்டு, மாற்று உடைகள் எடுத்து வருவதாக கூறி வீட்டிற்கு சென்றிருந்தார்.

ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடும் மீரா, பசியினால் அழும் அவள் குழந்தை, தவிப்புடன் நான்..........

திருமணம் ஆகி இன்றைய நாள் வரை, எனக்காக கடவுளிடம் எதுவுமே வேண்டிக்கொள்ளவில்லை...........கடவுள் மீது கோபம், ஏன் எனக்கு இப்படி ஒரு மணவாழ்க்கை அமைத்தாய் என்று,

ஆனால் இன்று...

'கடவுளே...என் மீராவிற்கு உயிர் பிச்சை கொடு,
அவளை என்னிடம் திருப்பி கொடு ப்ளீஸ்,
எனக்கு என் மீரா வேணும்
என்னை விட்டு அவளை பிரிச்சிடாதே!'

நான்.........நானா........நேற்று 'சீ தொடாதே' என்று அருவருத்த நானா இன்று 'என் மீரா' என சொல்கிறேன்???

மீரா உயிருக்காக போராடிய அந்த இரண்டு நாட்களில் தான் எனக்குள் மீரா பதிந்திருப்பதை உணர்ந்தேன்.

நர்ஸின் பாதுகாப்பில் மீராவின் குழந்தை, ஆறுதலாக சுமதியின் குடும்பம், எனினும்........மனதில் வெறுமை,

வீட்டிற்கு வந்தால்....மீரா அடிக்கடி முனுமுனுக்கும் பாட்டின் எதிரொலி, அவளின் ரோஜா செடி.........மேஜையின் மேலிருந்த அவளது கைக்கடிகாரம், wash basin கண்ணாடியில் ஒட்டியிருந்த அவள் நெத்தி ஸ்டிக்கர் பொட்டு, soap dish ல் அவள் உபயோகிக்கும் 'Johnsons baby soap' ......

இப்படி அத்தனையும் அவளை ஞாபகப்படுத்தின,

என்னுடன் 7 மாதம் ஒரே வீட்டில் தங்கி இருந்த நண்பனின் பிரிவு தரும் வலியா, இல்லை......நான் தாலி கட்டிய மனைவி மீராவின் உயிர் போகின்றதே என்ற வேதனையா??......எதுவென்று புரியவில்லை எனக்கு....ஒன்று மட்டும் புரிந்தது, ....எனக்கு என் மீரா வேண்டும்!!

கடவுள் புண்ணியத்தில் மீரா உயிர் பிழைத்தாள்.

மீராவின் பெற்றோர் மீராவின் பிரசவத்திற்கு இன்னும் 3 மாதங்கள் இருக்கிறது என்ற நினைப்பில் அமெரிக்காவிலுள்ள மூத்த பெண்ணின் வீட்டிற்கு சென்றவர்களால் உடன் இந்தியா திரும்ப முடியாத சூழ்நிலை அங்கு,
என் அம்மா அப்பாவும் போன முறை புனே வந்தபோது உடல்நிலை பாதிக்க பட்டதால் நெடுந்தூரப் பயணம் செய்ய முடியாத நிலை.
குழந்தையை பார்க்க ஆசைபட்ட அவர்களிடம்.....குறை பிரசவத்தில் பிறந்ததால் இப்போது உடனே குழந்தையுடன் பிரயாணம் செய்ய இயலாது என அவர்களை சமாளித்தோம்.
அதனால் சுமதிதான் மீராவையும் குழந்தையையும் நன்கு கவனித்துக்கொண்டாள்.

இந்நிலையில் புனே அலுவலகத்திற்கு மாறுதல் ஆகி வந்தான் என் நண்பன் ரகு, மும்பையிலிருந்த அவனது அக்காவிடம் ரகு விவரங்கள் கூற, ரகுவின் அக்கா தன் மகளுடன் எங்கள் வீட்டில் வந்து தங்கி இருந்து கவனித்துக்கொண்டார்.
சிறிது சிறிதாக மீராவின் உடல் நிலை தேறியது.




வீட்டில் நிறையபேர் இருந்ததாலும், மீரா குழந்தையை கவனிப்பதில் பிஸியாக இருந்ததாலும் நான் மீராவிடம் தனியாக பேச சந்தர்ப்பமே கிடைக்கவில்லை.

அன்று ரகுவும் அவனது அக்கா குடும்பமும் மும்பைக்கு புறப்பட்டதும் மீராவிடம் பேசலாம் என நினைத்துச் சென்றேன்.

மீராவின் முகத்தில் ஒரு புது தெளிவு தெரிந்தது.....அது....



தாய்மை தந்த கர்வமா?
நினைத்தபடி குழந்தையை பெற்றெடுத்த மன நிறைவா??
தனித்து வாழ எழுந்த துணிச்சலா???
வாழ்க்கையில் ஏமாற்றமும் இழப்பும் கற்றுத்தந்த முதிர்ச்சியா????


இனம் புரியா ஒரு வித தீர்க்கமான பார்வையை என்னால் உணர முடிந்தது மீராவிடம்.

குற்ற உணர்விலும், பயம் தந்த நடுக்கத்துடனும் மிரளும் விழிகளில் புதுவித வெளிச்சம் இருந்தது இப்போது!

நான் மனம்திறக்கும் முன் மீராவே பேச தொடங்கினாள்....

"அடுத்த வாரத்தில் குழந்தைக்கு இரண்டு மாதம் ஆகிடும், தடுப்பூசி போட்டுட்டு......கோயம்புத்தூர் போலாம்னு நினைக்கிறேன். என்னை கூட்டிட்டு போக முடியுமா ......ப்ளீஸ்?"

"ஹும் சரி.......அங்கே போய்ட்டு??"

"அங்க......அவங்க வாரிசை ஒப்படைக்க போறேன்"

தொண்டையில் ஏற்பட்ட அடைப்பை அடக்கிக்கொண்டாள் மீரா.

"ஹும்.."

"உங்க ஃப்ரண்ட் ரகு வோட அக்கா......அவங்களோட Bangalore ஃப்ரண்ட் கிட்ட சொல்லி எனக்கு வேலையும், பெண்கள் தங்கும் விடுதியில் இடத்திற்கும் ஏற்பாடு பண்ணியிருக்காங்க......போன வாரம் தான் வேலை கன்ஃப்ர்ம் ஆச்சு"

அட! இவ்வளவு ஏற்பாடு பண்ணியிருக்காளா மீரா???
முடிவோடதான் இருக்கிறாப்போல........

"என் parents next month தான் இந்தியா வராங்க, அவங்க கிட்ட நான் பேசி சமாளிச்சுக்கிறேன்........நீங்க........உங்க........வீட்ல......எப்படி?"

அதை நான் பார்த்துக்கொள்கிறேன் என்பது போல் கையால் சைகை காட்டி விட்டு என் அறைக்குச் சென்றுவிட்டேன்.

தன் குழந்தையை பிரிந்து தனித்து வாழ துணிந்தவளிடம், குழந்தை பிறந்ததும் சட்டபடி பிரிந்து விடுகிறேன் என உறுதியிட்டவளிடம்..........இப்போ என் மனவிருப்பத்தை எப்படி சொல்வது??

'என்னை விட்டு நீயும் குழந்தையும் போக வேண்டாம்'னு சொல்ல வந்த வார்த்தைகள் ஏனோ வெளிவரவே இல்லை மீரா பேசும்போது!!

மீரா சொன்னபடி கோவைக்குச் சென்றோம்.

ஹோட்டல் 'சிட்டி டவரில்' ரூம் புக் செய்திருந்தேன். குளித்துவிட்டு காலை டிபன் ரூம் ஆர்டரில் சாப்பிட்டுவிட்டு ஸ்ரீதரின் வீட்டிற்கு புறப்பட்டோம்.

குழந்தையை மார்போடு இறுக்கி அணைத்திருந்த மீராவின் கண்களில் நீர் ததும்பி நின்றது. அவள் நிலைமையை காண பொறுக்காமல் என் மனம் கணத்தது.

குழந்தைக்கு தேவையானதை எல்லாம் தனியாக ஒரு பையில் எடுத்துக்கொண்டாள் மீரா.

ஸ்ரீதர் உயிரோடு இருப்பானா?
அவனது குடும்பம் இவளை நம்புமா??
இந்தக் குழந்தையை தங்கள் வாரிசு என ஏற்குமா???

குழப்பத்துடன் ஸ்ரீதரின் வீட்டிற்குச் சென்றோம்.

கதவை திறந்த வேலையாள் ஸ்ரீதர் வீட்டில் இல்லை, அவனது டெக்ஸ்டைல் ஷோரும்க்கு அவன் சென்றிருப்பதாக சொன்னதும், ஸ்ரீதர் உயிருடன்......நல்ல உடல் நிலையில் இருக்கிறான் என்பது உர்ஜிதம் ஆனது.

"கொஞ்ச நேரம் இங்கே வெயிட் பண்ணுங்க.........ஐயாவோட சம்சாரத்தை வர சொல்றேன்" என்று வேலையாள் கூறியதும் மீராவின் கண்களில் மிரட்சி.

சிறிது நேரத்தில், அன்று நான் ஸ்ரீதர் அம்மாவுடன் ஆஸ்பத்திரியில் பார்த்த அந்த பெண் வந்து நமஸ்காரம் செய்தாள். என்னை அன்று பார்த்தது அவளுக்கு நினைவில் இல்லை போலும்.......ஆனால் மீராவை சரியாக அடையாளம் கண்டுக்கொண்டாள்,

"நீங்க மீரா.....மீரா.....தானே.........மாமா உங்க ஃபோட்டோ காண்பிச்சார், எப்படி இருக்கிறீங்க.......??"

உபசரித்து உட்காரவைத்துவிட்டு என்னை நோக்கினாள் அப்பெண்.
'இது யார்' என்பது போல் அப்பெண் மீராவை நோக்க,

"இவர் என் ஹஸ்பெண்ட்"

முதல் முறையாக எனக்குள் ஒரு shock wave ....... மீரா என்னை தன் கணவன் என்று அறிமுகம் செய்ததின் தாக்கம்!!!

அந்த பெண் எனக்கு வணக்கம் கூறிவிட்டு, மேலும் பேசத் தொடங்கினாள்,

"மீரா, என் பேரு செல்வி........மாமா உங்களை பத்தி எல்லாம் சொன்னார், மாமாவுக்கு அடிபட்டு 4 மாதம் சுயநினைவு இல்லாம இருந்தார், கடவுள் புண்ணியத்தில் தன் நினைவுக்கு கொஞ்சம் கொஞ்சமா அவர் திரும்பினதும் உங்களைத் தான் தேடினார். நான் அவரோட மாமா பொண்ணு.......எனக்கு ஸ்ரீதர் மாமானா உசிரு, ஆனா அவர் மனசு முழுசும் நீங்க தான் இருக்கிறீங்கன்னு அவர் சொன்னதும் புரிஞ்சுக்கிட்டேன். உங்களை பத்தி அவரோட நண்பர்கள் கிட்ட விசாரிச்சுப் பார்த்தபோ தான்.....நீங்க கல்யாணமாகி புனேவுக்கு போய்ட்டீங்கன்னு தகவல் தெரிஞ்சு அழுதார். நான் ஆறுதல் சொல்லி அவரை பார்த்துக்கிட்டேன்.

அப்போ கூட அவர் என்னை கட்டிக்க சம்மதிக்கவேயில்லை. ஏன்னா, கார் விபத்துல அவருக்கு அடிபட்டபோ சுயநினைவை மட்டும் இல்லை..........ஒரு தகப்பனாகும் தகுதியையும் அவர் இழந்துட்டார், அதெல்லாம் உங்களுக்கு அவர் பண்ண துரோகம்னு புலம்பிட்டே இருந்தார். இதெல்லாம் தெரிஞ்சும் நான் மாமாவை பிடிவாதமா கட்டிப்பேன்னு சொன்னதாலதான் சம்மதிச்சார். போன மாதம் தான் எங்களுக்கு கல்யாணம் ஆச்சு, இப்போ......உங்களை......பார்த்தா........."

"கவலைபடாதீங்க செல்வி.......உங்க மாமா உங்களுக்குத்தான்"


"மீரா........"

"உங்க மாமா மட்டுமில்ல.........உங்க மாமாவோட வாரிசும் உங்களுக்குத்தான் செல்வி"

கையிலிருந்த குழந்தையை மீரா செல்வியிடம் நீட்ட,

செல்வி கண்களில் நீர் வடிய குழந்தையை வாங்கிக்கொண்டு மீராவின் காலில் விழ எத்தனித்ததை மிரா தடுத்தாள்.

"கொஞ்சம் இருங்க மீரா............மாமாவுக்கு ஃபோன் போட்டு உடனே வீட்டுக்கு வரச்சொல்றேன்"

"இல்ல செல்வி.........அவர் நல்லாயிருக்கார்னு தெரிஞ்சதே எனக்கு போதும், அவருக்கு ஏதும் ஆகியிருந்தா அவர் குடும்பம் அவரோட குழந்தையை ஏத்துக்குமான்னு யோசனையோடு வந்தேன், குழந்தைக்கு நீங்க ஒரு தாயா இங்க இருப்பீங்கன்னு தெரிஞ்சதும் ரொம்ப சந்தோஷம் செல்வி..........அப்போ நாங்க கிளம்புறோம்"

நாங்கள் புறப்பட எத்தனித்தபோது......


"மீரா......"

குரல் கேட்டு நாங்கள் மூவரும் திரும்பினோம்...அங்கு 'ஸ்ரீதர்' !!!

நானும் செல்வியும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டோம். அத்தனை நேரம் தைரியமாக பேசிய மீரா....இப்போது......1 வருடம் கழித்து ஸ்ரீதரை பார்க்கும் இன்ப அதிர்ச்சியில் நிலை குலைந்தாள்.

சூழ்நிலையையும் தன் நிலையையும் சற்றென்று மீரா சுதாரித்துக்கொள்வதை நான் உணர்ந்தேன்.

இருவரும் பேசிக்கொள்ளட்டும் என நான் வெளியேறும் போது மீரா.......

"எங்க போறீங்க...நானும் வரேன்"

என்று என்னை பின் தொடர,

ஸ்ரீதர் எங்கள் இருவரையும் வழிமறித்து நின்றார்.

"ப்ளீஸ்........போகாதே மீரா......."

"....."

"மீரா........செல்வி கையில இருக்கிறது.........நம்ம......நம்ம.."

"ஹும்" என்று தலை அசைத்தள் மீரா.

"மீரா.......ப்ளீஸ் நீயும் குழந்தையும் எங்க கூடவே இருந்திடுங்க....ப்ளீஸ்"

மீரா என்னை நோக்கினாள்.

'மீரா உன் குழந்தையை அதன் அப்பாவோட நீ ஒப்படைச்சப்போ எனக்கு வலிக்கல,
ஆனா.........
நீ என் குழந்தைடா...உன்னை விட்டு தரமாட்டேன்டா
'

என் மனதிற்குள் தோன்றிய வார்த்தைகள் வெளிவராமல் தொண்டையில் சிக்கியது.

ஸ்ரீதரின் கெஞ்சும் பார்வை,
என் நிலைக்கொள்ளா தடுமாற்றம்,
செல்வியின் சொல்ல முடியா தவிப்பு...

எல்லாவற்றிற்கும் மீரா பதில் தந்தாள்.


"ஸ்ரீதர், உங்கள் காதல் தந்த சின்னத்தை உங்க கிட்ட சேர்த்திட்டேன். இதுக்குமேல நமக்குள்ள எதுவும் இல்லை...........குழந்தையின் மீது மட்டும் தான் உங்களுக்கு உரிமை இருக்கு. குழந்தையை நல்லபடியா வளர்ப்பீங்கன்னு நம்புறேன்.......வரேன் ஸ்ரீதர்"

தான் சொல்ல நினைத்ததை திட்டமாக கூறிவிட்டு யார் பதிலுக்கும் காத்திராமல் வேகமாக வெளியேறினாள் மீரா.

காரில் ஹோட்டல் அறைக்கு திரும்பும் வரை மீரா என்னிடம் எதுவுமே பேசவில்லை. எங்களுக்கு நடுவில் இருந்த மெளனத்தின் நிசப்தத்தில் பல புது அர்த்தங்கள் இருப்பதாக என் மனதிற்கு பட்டது!!

சிட்டி டவர் ஹோட்டலில் வந்து இறங்கியதும், taxi யை waiting யில் இருக்கும்படியாகவும், ரெயில்வே ஸ்டேஷன் போகவேண்டும் எனவும் taxi driver யிடம் கூறினாள் மீரா.


ரூமிற்கு வந்து தன் உடமைகளை எடுத்துக்கொண்ட மீரா,

"நான் அப்போ........கிளம்புறேன்.......Bangalore ட்ரெயினுக்கு டைம் ஆச்சு"

"ஹும்"

மீராவிடம் நான் மனம் திறக்கும் முன் அவள் என்னிடம் விடைபெற்று காரில் சென்றுவிட்டிருந்தாள்.

ஹோட்டல் ரூம் பெட்டில் பொத்தென்று விழுந்து, விட்டத்தை வெறித்துப் பார்த்துக்கொண்டிருந்தேன்.

ஆசைதானடி உன்மேல் எனக்கு!

அப்புறம் எதற்கு என்மனதில்
தயக்கம் சாக்கு போக்கு
எல்லாம்??

கற்பு தியாகம் என்று சந்ததி கடந்த
விஷ்யங்களுக்காகவா...
நம் உறவின் மீது இரங்கல் தீர்மானம்
இயற்றினாய்??

என்னை முழுவதுமாய் அறுவடைச் செய்தவளே!
அதெப்படி என்னை அம்போவென
விட்டுச் செல்ல மனமுவந்தாய்??

வாழ்க்கையை அடகு வைத்தா...
உன் காதலின் சின்னத்தை
மீட்டு வந்தாய்???

தொடங்கிய நம் பந்தத்தை
தொடர
எனக்கொரு சந்தர்ப்பம் தந்து
தலையசைப்பாயா??

முடிவுரை எழுதியபின்
முற்றுப் புள்ளி வைக்க
முடிவான முடிவு செய்தாயோ??

சேராத உன் காதலுக்காக
சேர்த்து வைத்த என் காதலை
செலவழிக்க மறுக்காதே!!

ஆசைதானடி உன்மேல் எனக்கு!!!



மீராவின் ட்ரெயின் புறப்பட இன்னும் 30 நிமிடம் இருக்கிறது...........உடனே call taxi அமர்த்தி ரெயில்வே ஸ்டேஷன் விரைந்தேன்.
அவளுக்கு டிக்கட் நான் புக் செய்து கொடுத்திருந்ததால் அவளது இருக்கையை எளிதாக கண்டுப்பிடித்தேன்.


ஜன்னல் கம்பிகளில் தலை சாய்த்தபடி கண்ணிருடன் மீரா.........
இவ்வளவு நேரம் அடக்கி வைத்திருந்த கண்ணீரை கொட்டித் தீர்த்துக் கொண்டிருந்த அவளது கண்களில் நீரோட்டம்.

முதன்முறையாக மீராவின் கண்ணீரைக் கண்டு என்னையுமறியாமல் என் கண்களில் நீர் பூத்தது.

அன்று காதலித்தவனிடம்
தன்னையே கொடுத்து
இன்று தன் சேயையும்
அவனிடமே சேர்த்துவிட்டு

வாழ்ந்த வாடகை
மணவாழ்க்கை தந்த
அர்த்தமற்ற தாலியுடன்
ஒப்பந்தத்தை நிறைவேற்ற
பந்தத்தை முறித்து.....

தனிமை பயணத்தில் மீரா.......!!

இது ரெயில்வே ஸ்டேஷன், பொது இடம் என்று கண்ணீரை கட்டுப்படுத்திக்கொண்டு நான் சுதாரித்தபோது தான் மீராவின் கையில் இருந்ததை கவனித்தேன்,

அவள் கைகளில்........என்.......என் ........ favourite key chain!!

அதை பார்த்து பார்த்து தான் தன் கண்ணீரையும் துடைத்துக்கொண்டு அழுதபடி இருந்தாள் மீரா.

என் பேண்ட் பாக்கெட்டில் இருந்து என் சாவி கொத்தை எடுத்துப் பார்த்தபோதுதான் கவனித்தேன்.........என் key chain அதில் இல்லை,

இந்த key chain யை என் கை விரலில் சுற்றிக்கொண்டிருப்பது என் பழக்கம், அதுவும் இந்த key chain எனக்கு மிகவும் பிடித்தமானது, பல வருடங்களாக என் கைகளில் விளையாடிக்கொண்டிருப்பது என ஒரு நாள் பேச்சு வாக்கில் மீராவிடம் கூறியது நினைவுக்கு வந்தது.

அதை......அந்த key chain யை......ஏன் மீரா.........எடுத்துக்கொள்ள வேண்டும்???

புரிந்தது!!!!.........இனிமேலும் தாமதிக்க கூடாது என என் உள் மனம் என்னை உந்த,
டக்கென்று ட்ரெயினில் ஏறி அவள் இருக்கைக்கு அருகில் சென்றேன்.

"மீரா...."

குரல் கேட்டு மீரா திரும்பினாள்,

என் வருகையை சற்றும் எதிர்பார்க்காத மீரா முகத்தில் அழுகையும் புன்னகையும் கலந்த ஒரு இன்ப அதிர்ச்சி ரியாக்க்ஷன்!!

அவளிடம் எதுவும் கூறாமல் கடகட வென அவளது உடைமைகளை எடுத்துக்கொண்டு ட்ரெயினை விட்டு கிழே இறங்கினேன்.

"ஹையோ........ஏன் bag எல்லாம் எடுக்கிறீங்க........ஏங்க........ட்ரெயின் புறப்பட போகுதுங்க......"
என்று கேட்டபடியே மீரா பதற்றதோடு என்னை பின் தொடர்ந்து ட்ரெயினை விட்டு இறங்கினாள்.

"ஏங்க......bag எல்லாம் இறக்கிட்டீங்க.......ட்ரெயின் புறப்படுற டைம் ஆச்சுங்க"

"என்னோட ........பொருள்.........ஒன்னு காணோம்....." என்றேன்.

"ஓ........என்ன.........என்னது .....??"

"இரு ......தேடி பார்க்கிறேன்"

என்று அவள் பையை திறப்பது போல் குனிந்தேன்.

"ஸாரிங்க......உங்க......key chain......அதைதான்.....ரொம்ப ஸாரி, இந்தாங்க.......உங்க key chain"

"key chain மட்டும்தான் .........என்கிட்ட இருந்து எடுத்துட்டு போறியா மீரா??"

"....."

"என்னையும்.....சேர்த்து......திருடிட்டு........"

சொல்லி முடிப்பதற்குள் 'என் மீரா' கண்ணீரோடு என் மார்பில் சாய்ந்திருந்தாள்!!



முற்றும்...!!