
சென்னையிலுள்ள பிரபல மருத்துவரின் ஒரே மகளான டாக்டர் தீபா, அரசாங்க மருத்துவருக்கான தேர்வில் தேர்ச்சியாகி, திருநெல்வேலி ஹைகிரவுண்ட் அரசாங்க மருத்துவமனையில் பணிபுரிவதற்கான அனுமதிப் பெற்றாள்.
தனது க்ளினிக்கில் பணிபுரியாமல், வெளியூரில் சென்று மகள் பணிபுரிய விரும்புவது மனதிற்கு கஷ்டமாக இருந்தாலும், மகள் தீபாவிற்கு இந்த இடமாறுதல் மன ஆறுதலை தரும் என்ற நம்பிக்கையில், தீபாவின் அப்பா மகளின் முடிவிற்கு சம்மதித்தார்.
திருநெல்வேலி செல்லும் தீபாவிற்கு துணையாக அவளது பாட்டியும் தாத்தாவும் உடன் வந்திருந்தனர்.
நெல்லை ஹைகிரவுண்ட் ஜி.ஹெச்சில் தன் முதல் நாள் பணியினை தொடங்கினாள் தீபா.
காலை பத்து மணியளவில், மகப்பேறு பிரிவில் அவுட் பேஷண்ட்ஸை ஒவ்வொருவராக அவள் பரிசோதித்துக் கொண்டிருந்தபோது, 20 வயதிற்குள் மதிக்க தக்க ஓர் இளம்பெண் தனது மூன்று வயது மகனுடன் அறையினுள் வந்தாள். தீபா அவளிடம்.......
"சொல்லுங்கம்மா.......உங்க பேர் என்ன?"
"ச....சரஸ்வதி"
"உடம்புக்கு என்ன???"
"எனக்கு.........அபார்ஷன் பண்ணனும் டாக்டர்....."
"எத்தனை மாசம் இப்போ....."
"இரண்டு...."
"ஏன்மா........இந்த குழந்தை வேணாம்னு கலைக்க சொல்ற"
பதில் சொல்லவில்லை சரஸ்வதி, மாறாக சிறு விசும்பலுடன் அழ ஆரம்பித்தாள்.
"ஆழாதேமா.........என்ன காரணம்னு சொல்லு என்கிட்ட"
"டாக்டரம்மா......இந்த குழந்தை வேணாம்......கலைச்சிருங்க....."
"அதான் ஏன்னு கேட்கிறேன்.......உன் முத குழந்தைக்கு ரெண்டு அல்லது மூணு வயசு இருக்குமா இப்போ?......அப்புறம் ஏன் இரண்டாவது குழந்தை வேணாம்னு சொல்ற"
"என்....என் வீட்டுக்காரர் இந்த குழந்தையை அவரோடதில்லைன்னு சந்தேகப்படுறார்"
"சந்தேகப்படுறாரா???...............இது அவர் குழந்தைதானே?"
"அய்யோ......டாக்ட்டரம்மா......சத்தியமா இது அவர் குழந்தைதாம்மா, ஆனா அந்த மனுஷன் தான் என்னையும் அவரோட கூட்டாளியையும் சேர்த்து வைச்சு அசிங்கமா பேசி..........தினத்திக்கும் அடிக்கிறார்மா"
இப்போது சரஸ்வதியின் அழுகை அதிகரித்தது.
அவளை கூர்ந்து நோக்கினாள் தீபா.......நல்ல படித்த , வசதியான குடும்பத்து பெண்ணிற்கு, ஏழை பெண்ணாக மாறுவேஷம் போட்டது போன்று ஒரு தோற்றம் அவளிடம்.

சரஸ்வதியின் முகத்தில் ஒரு வெகுளித்தனம்,
அழகான வட்ட முக அமைப்பு,
மினுமினுப்பான தங்க நிறம்...ஏழ்மையினால் மங்கியிருந்தது,
அவளது நூல் புடவையையும், வெற்று கழுத்தையும் மீறி அவளது அழகு பார்ப்பவர்களை பிரமிக்க வைக்கும் வண்ணமிருந்தது.
"உன் புருஷன் அடிக்கிறார்னா........நீ உன் அப்பா அம்மாகிட்ட சொல்லு, அவங்க சொல்லியும் கேட்கலீனா......குழந்தை பிறக்கிற வரைக்கும் உன் அப்பா அம்மா வீட்ல இரு, இப்படி அவசரப்பட்டு கர்பத்தை கலைக்க கூடாதுமா"
டாக்டர் தீபா ............அப்பா, அம்மா என்று வார்த்தைக்கு வார்த்தை கூறவும், "ஓ!!" வென தலையில் அடித்துக்கொண்டு அழுதாள் சரஸ்வதி....
பதற்றதுடன் தீபா அவளிடம் என்னவென்று விசாரிக்க, அழுகையினுடனே பேச ஆரம்பித்தாள் சரஸ்வதி.....

"அப்பா அம்மா பேச்சை கேட்காம......பதினொன்னாங் க்ளாஸ் படிக்கிறப்போ, இந்த ஆட்டோகாரரோட ஓடி வந்துட்டேன்......எல்லாம் வயசு கோளாறுமா........என்னைய என் வீட்ல தலைமூழ்கிட்டாங்க......இப்போ நாதி அத்து போய் இந்த குடிகார பயலோட கொச்சையான பேச்சையும்,ஏச்சையும் கேட்டுக்கிட்டு, அடியும் வாங்கிக்கிட்டு..........நான் பெத்த இந்த பையனுக்காக உசிரோட இருக்கேன்"
அவளுக்கு குடிக்க தண்ணீர் கொடுத்து, ஆசுவாசப்படுத்திய தீபா, அவளுக்கு ஆறுதல் கூறியதோடு நிறுத்தாமல், அவளது பத்தாம் வகுப்பு சான்றிதளை தன்னிடம் தந்தால், சரஸ்வதி பன்னிரெண்டாம் வகுப்பு பரீட்ச்சை எழுத உதவி செய்வதாகவும்,பின் தட்டச்சு படித்து ஏதாவது ஒரு நல்ல வேலைக்கு செல்லலாம், புருஷனுக்கும் உறுதுணையாக இருந்து, இருவரும் நல்ல நிலைமைக்கு வரலாம் என்று அறிவுரை கூறினாள்.
தன் கரம் கூப்பி தீபாவுக்கு நன்றி கூறிய சரஸ்வதி, முகத்தில் ஒரு தெளிவுடன் அவ்வறையைவிட்டு வெளியேறினாள்.
இரண்டு நாள் கழித்து , முகத்திலும் கையிலும் சிறு சிறு காயங்களுடன் தீபாவை சந்திக்க வந்தாள் சரஸ்வதி.
தனது பத்தாம் வகுப்பு சான்றிதழை தேடியபோது, தான் தொடர்ந்து படிக்க போவது அறிந்து, தன்னை தன் கணவன் அடித்ததாகவும், எப்படியோ அவனுக்கு தெரியாமல் பரணிலிருந்த சான்றிதழை எடுத்து வந்ததாகவும் கூறி, தன் சான்றிதழ்களை தீபாவிடம் கொடுத்தாள் சரஸ்வதி.
சரஸ்வதியின் கண்களில் , எப்படியும் மேற்கொண்டு படித்து முன்னேற வேண்டும் என்ற ஆர்வமும், விருப்பமும் இருப்பதை தீபாவால் உணர முடிந்தது.
இனிமேலும் மேற்படிப்பிற்கு சரஸ்வதியின் கணவன் எதிர்ப்பு தெரிவித்தால், அவனை தன்னிடம் அழைத்துவருமாறும், தான் அவருக்கு பெண்களுக்கு படிப்பு எத்தனை முக்கியமென்பதை எடுத்துக் கூறுவதாகவும் அவளுக்கு வாக்களித்து, அவளை அனுப்பி வைத்தாள் தீபா.
அதன்பின் டாக்டர் தீபா, ஆப்ரேஷன் தியேட்டரில் ஒரு பெண்ணிற்கு சிசேரியன் முறையில் டெலிவரி செய்துவிட்டு, தனது அறைக்கு திரும்பியபோது...........எதேச்சையாக வராண்டாவில் தன் எதிரில் வந்த நபர் மீது மோதிக்கொண்டாள்.
தலை நிமிர்ந்த தீபா, தான் மோதியது ஒரு காவல் துறை அதிகாரியின் மேல் என்பதை அவரது சீருடையின் மூலம் அறிந்துக்கொண்டு,
"ஸாரி........ஸாரி சார்" என்றாள்.
"இட்ஸ் ஓகே...." என்று அவர் பதலளித்ததும், தீபா அவரை கடந்து சென்றாள்.
இரண்டு அடிதான் அவள் எடுத்து வைத்திருப்பாள், திடீரென "தீபா........" என்று ஒருமையில் தன் பெயரை யாரோ மிக அருகாமையில் அழைத்ததும், நின்று திரும்பிய தீபா, அவள் மோதிய் அந்த போலீஸ்காரர், தன் போலீஸ் தொப்பியை கழற்றிவிட்டு சிரித்த முகத்துடன் தன்னை நோக்கி வருவதை குழப்பத்துடன் பார்த்தாள்.

"தீபா............என்னை யார்ன்னு தெரியுதா??"
"............"
" தீபா............நான் கார்த்திக்.............கார்த்திக் குமார், +2 படிக்கிறப்போ உன் கூட கெமிஸ்ட்ரி டியூஷன் படிச்சேனே.........ஞாபகமிருக்கா??"
"ஏ..........கார்த்தி............நீ.........நீயா...........சட்டுன்னு இந்த கெட்டப்ல உன்னை அடையாளமே தெரில"
"ஹலோ டாக்டர் மேடம்..........இது என் யூனிஃபார்ம், ........கெட்டப் செட்டப்னு சொல்லிட்டீயே.......இப்போ நான் கார்த்திக் ஐ.பி.எஸ்" என்று காலரை தூக்கிவிட்டு குறும்பு புன்னகை புரிந்தான்.

"ஹையோ.........ஸோ ஸாரி..........ஐ.பி.எஸ் சார்............தெரியாம சொல்லிட்டேன் மன்னிச்சுடுங்க" என்று பதிலுக்கு அவளும் சிரிப்புடன் பதிலளித்தாள்.
"ச்சே.....ச்சே......எதுக்கு ஸாரி எல்லாம் கேட்கிறீங்க டாக்டர் மேடம்" என்று கண்சிமிட்டியவன்,
"நாம மீட் பண்ணி ஒரு 6 அல்லது 7 வருஷம் இருக்குமா??......ஸ்கூல் டேய்ஸ்ல ரோட் ஸைட் ரோமியோ கெட்டப்ல பார்த்த ஒருத்தனை, போலீஸ் யூனிஃபார்மல இப்போ பார்த்தா நிச்சயம் அடையாளம் தெரியாது............"
"ஐ.பி.எஸ்...........படிச்சிருந்தாலும்........இன்னும் உன்னோட அந்த குறும்பு பேச்சும், சிரிப்பும் மாறவே இல்ல கார்த்தி"
பின் இருவரது பேச்சும் தங்கள் தொழில் சம்பந்தமாக சென்றது, ஒரு கொலை கேஸ் விஷயமாக, இன்வெஸ்டிகேஷனுக்காக தான் அரசு மருத்துவமனைக்கு வந்ததாக கூறினான் கார்த்திக்.
இருவரும் சிறிது நேரம் பேசியிருந்து விட்டு, தங்கள் மொபைல் எண்களை பரிமாறிக்கொண்டு விடைபெற்றனர்.
அன்று சாயந்திரம் ஹாஸ்ப்பிட்டல் ட்யூட்டி முடிந்து தனது காரில் டாக்டர் தீபா வீடு திரும்பிக்கொண்டிருக்கையில்..........ஒரு வளைவில் கார் திரும்பும் போது, எதிரில் கையில் சிறு குழந்தையுடன் ஒரு பெண் கதறிக்கொண்டு ரோட்டை வேகமாக க்ராஸ் செய்ய, தீபாவின் கார் ட்ரைவர் சடன் ப்ரேக் போட்டார், தீபா அதிர்ச்சியுடன் அந்த பெண்ணை கூர்ந்து நோக்கினாள்,
'இது........இது.........சரஸ்வதிதானே' இவ ஏன் இப்படி ஓடுறா ரோட்ல............தீபா யோசித்துக்கொண்டிருக்கும்போதே, அவளை துரத்திக்கொண்டு கையில் ஒரு பெரிய கட்டையுடன் ஒரு ஆள் சந்திலிருந்து பின்னால் ஓடி வந்தான், அது அவளது கணவனாக இருக்க வேண்டும் என்று நொடியில் யூகித்துக்கொண்டாள் தீபா.

"ஓ..........மை காட்...!"
சரஸ்வதியை காப்பாற்ற வேண்டும் என்று தீபா தன் காரிலிருந்து இறங்குவதற்குள்...........
[தொடரும்]
பகுதி - 2