October 30, 2007

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 2










குமார்: எப்படி பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று சொல்லு திவ்யா.


திவ்யா:முதல் எடுத்தவுடனே " என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?" அப்படின்னு அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது.
அப்படி நீ கேட்டு அதுக்கு அந்த பொண்ணு " ஆமாம்" என்று பதில் சொன்னா,

' வெளித்தோற்றம்' 'பெற்றோரின் வலியுறுத்தல்' காரணமா இருக்கலாம்.
"இல்லை" ன்னு பதில் சொன்னா,.............


குமார்: சரி , சரி.......போதும், இந்த கேள்வி நான் ஃபர்ஸ்ட் கேட்க மாட்டேன். வேற என்ன பேசுறதுன்னு சொல்லு.


திவ்யா: "உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.
" இல்லை, என் அம்மா வாங்கித்தந்தாங்க"ன்னு சொன்னா, அம்மா பேச்சுக்கு 'உம்' கொட்டுற பொண்ணுன்னு புரிஞ்சுக்கலாம்.


குமார்: சரி அவ சுயசிந்தனை திறன் தெரிஞ்சாச்சு, அடுத்து.......


திவ்யா: அப்புறம் அவளோட ஆம்பிஷன்[ வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள்] ஏதாவது இருக்கான்னு கேளு.
" ஆமாம்" ன்னு ஏதாவது ஒரு லட்ச்சியம் சொன்னா, அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்குன்னு புரிஞ்சுக்கோ.
" அப்படி ஏதும் குறிப்பா குறிக்கோள் இல்லீங்க" ன்னு பதில் சொன்னா, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வீட்டுல மாப்பிள்ளை பார்ட்த்துக் கட்டி வைக்கிறாங்கன்னு வாழ்க்கையை அதன் வழியில் ஏத்துக்கிற டைப்புன்னு அர்த்தம்.


குமார்: அடுத்து என்ன கேட்கலாம்?


திவ்யா: இது என்ன கேள்வி பதில் நேரமா? நீ மட்டும் தான் கேட்டுக்கிட்டேயிருப்பியா? அவளுக்கும் பேச சான்ஸ் கொடு, " உங்களுக்கு என் கிட்ட ஏதும் கேட்கனுமா?" ன்னு கேட்டுப் பாரு.


குமார்: அந்த பொண்ணு ஏதுவுமே பேசாம தலை குனிஞ்சுட்டேயிருந்துட்டான்னா??


திவ்யா:அப்படி அவ இருந்துட்டா, உன்னை பார்க்க கூட பிடிக்கலீன்னு அர்த்தம்.


குமார்: கிண்டல் அடிக்காம சொல்லு திவ்யா.


திவ்யா: அவ பேசலைன்னா, ஒன்னு ரொம்ப அடக்க ஒடுக்கமா நடிக்கிறான்னு அர்த்தம்,
இல்லீனா உண்மையிலேயே ரொம்ப வெட்கபடுகிற, ஆண்கள் கிட்ட பேச கூச்சப்படுகிற சுபாவமாயிருக்கலாம்.
அது நீ தான் கண்டுப்பிடிக்கனும்.


குமார்: அட இது வேற இருக்கா. சரி பதிலுக்கு அந்த பொண்ணு என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சா?


திவ்யா: வெல் அண்ட் குட்! அவ பேசினா இன்னும் அதிகம் அவளை பற்றி தெரிஞ்சுக்கலாம் சுலபமா.
நீ கேட்ட அதே கேள்விகளை அவ திருப்பிக் கேட்டா, ஏதோ கேள்வி கேட்கனுமேன்னு கேட்கிறா.
அவளே ஏதாவது கேட்டா, உன்னை பற்றி தெரிஞ்சுக்க நினைக்கிறான்னு அர்த்தம்.


குமார்: அப்படி என்ன தான் பொண்ணுங்க கேட்பாங்க?


திவ்யா: அது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனால், அந்த பொண்ணு " நீங்க எந்த ஊர்ல வேலை பார்க்குறீங்க, எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" என்று ஒப்புக்கு கேள்வி கேட்டா, உன்னை பற்றி எதுவுமே தன் பெற்றோரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளாமல், அவர்கள் விருப்பத்திற்காக இந்த பெண் பார்க்கும் சம்பவத்தில் பங்கு வகிக்கிறாள் , இல்லையென்றால் இந்த திருமண விஷயத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லாததும் காரணமாக இருக்கலாம்.


குமார்: சரி , சமைக்க தெரியுமா ன்னு கேட்டுடலாமா?


திவ்யா: நீ உன் காரியத்திலேயே கண்ணாயிரு.
அப்படி டைரக்ட்டா கேட்காதே.


அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.
வீட்டு சாப்பாடு பிடிக்குமா, இல்லை வெளில சாப்பிட பிடிக்குமா ன்னு வேணா இன்னொரு கேள்வி கேட்டு, அவ சமையல் திறனை புரிஞ்சுக்கோ.


குமார்: இவ்வளவு கேள்வி கேட்டாவே ஒரளவுக்கு அந்த பொண்ணை புரிஞ்சுக்க முடியுமா?


திவ்யா: ஹும், புரிஞ்சுக்கிறது உன் திறமை. வேணா இன்னும் ஒரே ஒரு டிப்ஸ் தரேன்,


" உங்க வீடு ரொம்ப அழகா , நீட் அண்ட் ப்ரைட்டா இருக்கு, நீங்க தான் இப்படி மெயிண்டேன் பண்றதா? நல்ல ரசனை உங்களுக்கு" அப்படின்னு சும்மா போட்டுப் பாரு,


அவ கொஞ்சம் அதிர்ச்சி ஆகி, 'பே பே' ன்னு முழிச்சா..........பெண் பார்க்க வர்ரதால தான் அவ வீட்டில் உள்ளவங்க வீட்டை இவ்வளவு நீட்டாக்கிருக்காங்க, மத்தப்படி அவளுக்கும் இதுக்கும் சம்பதேமே இல்லைன்னு அர்த்தம்.


" ரொம்ப தாங்க்ஸ்ங்க உங்க காம்பிளிமெண்ட்ஸ்க்கு, இந்த பெயிண்டிங் வொர்க் , ஆர்ட் வொர்க் எல்லாம் நானே பண்ணினது " அப்படின்னு ஆர்வமா அவ தன் கைத்திறனை காட்டினா.......
ரொம்ப பொறுப்புள்ள, கலை ரசனையுள்ள , வீட்டை சுத்தமாக பராமரிக்கும் திறனுள்ள பொண்ணுன்னு புரிஞ்சுக்கலாம்.
வீட்டை அழகா, நேர்த்தியா வைக்க பிரியப்படுகிற பெண்கள் நிறைய பேருக்கு சமைக்கவும் ஒரளவுக்கு தெரிந்திருக்கும்,
அப்படி அவர்கள் கற்றுக்கொள்ள திருமணத்திற்கு முன் சந்தர்ப்பம் கிடைக்கலீனாலும், திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.
அதனால, "பொண்ணுக்கு சமைக்க தெரியுமா? சமைக்க தெரியுமா? "ன்னு அது பற்றி மட்டுமே யோசிச்சுட்டு இருக்காம, சகஜமா பேசி , அந்த பெண்ணை பற்றி தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு.


ஆல் தி பெஸ்ட் குமார்!!


குமார்: ஹே ரொம்ப தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்.



[முற்றும்.]

October 23, 2007

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 1


என் கல்லூரி சீனியர், என் நண்பர் குமாரின் தங்கையின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், அங்கும் இங்கும் ஓடியாடி கலயாணவேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் குமார். 'பரவாயில்லையே! தன் வீட்டுக் கலயாண வேலை எல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறானே என்று பாராட்டினேன், அதற்கு அவன் சொன்ன பதில், அதன் பின்னான எங்கள் உரையாடல்..........
குமார்: நீவேற திவ்ஸு, நானாவது வேலை எல்லாம் செய்றதாவது. என் தங்கைக்கு கல்யாணம் ஆனா என் 'லைன் க்ளியர்' ஆச்சு இல்ல, அடுத்து எனக்குத்தான் கல்யாணம், ஸோ இப்படி அங்கயும் இங்கயுமா ஓடியாடி வேலை செய்தா நாலு பேர் கண்ணுல படுவேன், அதுக்கு தான் இந்த ஸீன்.......
நான்: அடப்பாவி! சரி அப்படி நாலு பேர் கண்ணுல நீ ஏன் படனும்??
குமார்: இதுக்கூடவா புரில, அப்போதான் பொண்ணு வைச்சிருக்கவங்க நாலு பேர் கண்ணுல படுவேன், என்னை மாப்பிள்ளை கேட்டு வருவாங்க.
நான்: அடச்சீ வெட்கமா இல்ல, தங்கை கல்யாணதுக்கு நல்லா வேலை செய்றியேன்னு பார்த்தா, நீ இப்படி என்னத்துல அலையுறியா??
குமார்: ஓய் இதுல வெட்க்கப்பட என்ன இருக்கு, எவ்வளவு நாள் தான் நான் McD லயும்[ Mc Donalds], BK லேயும் [Burger King] சாப்பிடுட்டு இருக்கிறது.
தங்கச்சிக்கு கல்யாணம் முடிந்ததும் உனக்கு பொண்ணு பார்த்திடலாம்டா ன்னு அம்மா சொன்னாங்க.
ஆனா பாரு, நான் மூன்று வருஷம் தொடர்ந்து அமெரிக்கா ல ஆணி புடுங்கிட்டு இருந்துட்டேனா, இங்க இருக்கிற சொந்த பந்தத்துக்கெல்லாம் என்னை ஞாபகம் இருக்காது, அதான் ஒரு விளம்பரத்திற்க்காக இங்க ஆக்ட் விட்டுட்டு இருக்கிறேன், இது பொறுக்காதே உனக்கு???
நான்: ஹேய் குமார், நீ சொல்றது பார்த்தா, சமையலுக்கு ஆள் தேடுறாப்ல இருக்கு?
குமார்: இங்க பாரு திவ்ஸு, உண்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும், ஆனாலும் கேட்டுக்கோ, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற முக்கால்வாசி பேச்சுலர் பசங்க ஆசைபடுற முக்கிய தேவைகளில் இந்த சமையல் தான் ஃபர்ஸ்ட்.
நான்: ஓஹோ அப்படியா! சரி, நானும் ஒரு உண்மை சொல்றேன் நீ கேட்டுக்கோ. இந்த காலத்து பொண்ணுங்க முக்கால்வாசி பேருக்கு சமைக்கவே தெரியாது.
'சமைக்க தெரியாது' ன்னு சொல்றது ஒரு ஸ்டையில் + ஃபேஷன், தெரியுமா உனக்கு????
குமார்: அடிப்பாவிங்களா, ஹே திவ்ஸு நிஜம்மாதான் சொல்றியா??
நான்: இதுல ஏன் நான் பொய் சொல்றேன், நீ வேனா பாரு, உன கல்யாணத்துக்கு அப்புறமும் நீ McD லேயும், BK லேயும் இரண்டு பார்சல் [togo] வாங்கிட்டு போய் உன் சம்சாரியோடு வீட்டுல சேர்ந்து சாப்பிட போற.
குமார்: என்ன நீ இப்படி பயமுறுத்துற,
ஏதோ ஒரு வரன் வந்திருக்கு, இன்னும் இரண்டு நாள்ல போய் பெண் பார்க்கனும்னு அம்மா சொன்னாங்க.
திவ்ஸு, நான் பெண் பார்க்க போறப்போ, அந்த பொண்ணு கிட்ட என்ன பேசலாம், எப்படி அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம் ன்னு கொஞ்சம் சொல்லிக் கொடேன்.
நான்: நீ சமையலுக்கு தான ஆள் தேட போற, ஸோ நேரா பொண்ணுக்கிட்ட " இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,
" நானே தான் இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் செய்தேன்" னு அவ சொன்னா, "இவளே என் சமையல் காரி.............ஊப்ஸ் ஸாரி, இவ தான் என் சம்சாரி " அப்ப்டின்னு முடிவு பண்ணிடு.
குமார்: என்ன கிண்டலாயிருக்கா என்ன பார்த்தா? வெறுப்பேத்தாம ஏதாவது ஐடியா கொடு திவ்யா.
நான்: உன்ன பார்த்தா பாவமாதான் இருக்கு, திவ்யா னு மரியாதையா வேற கேட்குற, ஸோ ஐடியா தரேன், ஆனா.........
பத்து வருஷம் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டவனுக்கே தன் மனைவியின் மனதை புரிஞ்சுக்க முடில, நீ 10 நிமிஷம் அந்த பொண்ணு கிட்ட பேசி அவளை பத்தி எப்படி தெரிஞ்சுப்பே?
சரி உனக்கு என்னவெல்லாம் அந்த பொண்ணு பத்தி தெரிஞ்சுக்கனும்னு சொல்லு,
நீ என்ன கேள்விகள் கேட்டா? அதற்கு அவ எப்படி பதில் சொன்னா அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நான் சொல்லித் தரேன்..........


[தொடரும்....]

October 14, 2007

மணமகளே! மருமகளே!! வா வா....!!!



திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும் பெண்ணா நீங்கள், இந்த போஸ்ட் உங்களுக்கே உங்களுக்கு தான்......

மணவாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், அப்போ இந்த போஸ்ட நீங்க மணப்பாடம் செய்துக்கோங்க......

திருமணம் ஆகி பல வருடம் ஆயாச்சு, மாமியோரோடு தினமும் 'குஸ்தி'யும் போட்டாச்சுன்னு யோசிக்கிறீங்களா.......கவலையே வேண்டாம், இந்த டிப்ஸ் எல்லாம் கடைபிடிக்க கத்துக்கோங்க, ஜமாய்ச்சுடலாம்!!!!

சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க இதோ சில முக்கியமான டிப்ஸ்..........

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.

6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.

7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.

8.எல்லா அம்மாக்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.

என் தோழிகள் பலர் மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போவதாலும், சிலர் அடியெடுத்து வைத்துவிட்டு மாமியாரை எப்படி வசியப்படுத்துவது என தெரியாமல் 'பேந்த பேந்த' விழிப்பதாலும், மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,
இன்னும் குறிப்புகளை உங்கள் அனுபவத்தில் அறிந்திருந்தால், பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளவும்.
[திருமணம் ஆன ஆண்கள், தங்கள் மனைவிக்கு இந்த டிப்ஸை சொல்லிக் கொடுத்து, உங்கள் அன்னைக்கும்-தங்கமணிக்கும் நடுவில் உங்கள் தலை உருளுவதை தவிர்க்கலாம்]