December 17, 2007

நட்பா?.....காதலா??

பி.காம் முடித்துவிட்டு 'சத்தியபாமா' கல்லூரியில் எம்.பி.ஏ பட்டப்படிப்பில் சேர்ந்து ஒரு வருடம் ஆகப்போகிறது. புதிய சென்னை வாசம், ஹாஸ்டல் வாழ்க்கை, தனிமையுணர்வு எல்லாவற்றிற்க்கும் மருந்தாக எனக்கு கிடைத்தது என்னுடன் படிக்கும் ஹேமாவின் நட்பு.

எளிதில் நட்புடன் பழகக்கூடிய திறனுடையவள் ஹேமா, அதனால் இருவரும் ஒரு சில மாதங்களிலேயே நெருங்கிய தோழிகளாகிவிட்டோம். அவ்வப்போது அவள் என் ஹாஸ்டல் அறைக்கு வந்து லூட்டி அடிப்பதும், வாரயிறுதிகளில் நான் அவள் வீட்டிற்க்கு சென்று அரட்டையடிப்பதும் வாடிக்கையானது.
"நிஷா நீயும் எனக்கொரு மகள்" என்று ஹேமாவின் அம்மா சொல்லுமளவுக்கு அவள் குடும்பத்தோடும் பழகிவிட்டேன்.

இன்று க்ளாஸ் முடிந்து, நான் மட்டும் லைப்ரரிக்குச் சென்றுவிட்டு ஹாஸ்டல் ரூமிற்க்கு வந்தால், அங்கு ஹேமா கலங்கிய கண்களுடன் சோகமாக...

நிஷா: ஹே ஹெமா என்னடி ஆச்சு, இங்க வந்து இப்படி சோகமா சீன் போட்டுட்டிருக்க, எக்ஸாம் ரிசல்ட் கூட வரலியே அப்புறமென்ன கண்ணில் நீர் , முகத்தில் சோகம்???

ஹேமா: ஒன்னுமில்ல நிஷா.

நிஷா: நீ ஒன்னுமில்லன்னு சொல்லிட்டேயிருப்ப, நான் கெஞ்சிக் கூத்தாடி உன்னை பேசவைக்கனும் , அதெல்லாம் வேணாம், நேரா மேட்டருக்கு வா,[இல்லீனா பதிவு நீளமாகிடும்], சரி என்ன ஆச்சுன்னு சொல்லு ஹேமா...


ஹேமா: நிஷா என் ஃப்ரெண்ட் விகாஷ் இருக்கானில்ல.......அவன் என்கிட்ட.......ப்ரோபோஸ் பண்ணிட்டான்..

நிஷா: அட்ரா! அட்ரா சக்கை!! அப்படிபோடு! கங்கிராட்ஸ் ஹேமா!! எப்போடி சொன்னான், எப்படிடி ப்ரோபோஸ் பண்ணினான்.......ஹெ சொல்லு........ப்ளீஸ்....சொல்லு!!

ஹேமா: வெறுப்பேத்தாதே நிஷா, நானே நொந்துப்போய் இருக்கிறேன்.

நிஷா: ஏண்டா......நொந்துப்போகிற அளவுக்கு என்னாச்சு, ஒத்த ரூபா 'ரெட் ரோஸ்' மட்டும் கொடுத்து ரொம்ப சீப்பா ப்ரோபோஸ் பண்ணிடான்னேன்னு ஃபீல் பண்றியா??

ஹேமா: நிறுத்து நிஷா, என்னோட வேதனை உனக்கு புரியல.......

நிஷா: ஓ.கே ஃபைன், உனக்கு இந்த ப்ரோபோஸ்ல என்ன ப்ராப்ளம்ன்னு சொல்லு.

ஹேமா: நிஷா, நான் அவனை என் ஃபரண்டா நினைச்சு தான் பேசினேன், இப்போ வந்து காதலிக்கிறேன் , நீயும் யோசின்றான், இவன் இப்படி வந்து கேட்பான்னு நான் எதிர்பார்க்கவேயில்லை..

நிஷா: இப்போ எதுக்கு அவனைத் திட்டுர, அவனோட பெஸ்ட் ஃப்ரண்ட் நீ, உன் மேல அவனுக்கு காதல் வந்தது தப்பா?

ஹேமா: என்னடி நீயும் அவனுக்கு சப்போர்ட் பண்ற,

நிஷா: இதுல சப்போர்ட் பண்ண என்னயிருக்கு, ஃப்ரண்டா நினைச்ச ஒருத்தன் ப்ரோபோஸ் பண்ணிட்டான்னே அப்படின்னு சொன்னியே , அதுக்கு தான் , அது என்ன பெரிய தப்பான்னு கேட்டேன்!. சரி என் கேள்விக்கு பதில் சொல்லு.........டு யு லவ் ஹிம்??

ஹேமா: நோ , நோ......அவன் எனக்கு ஒரு நல்ல ஃப்ரண்ட் அவ்ளோதான். அவன் மேல எனக்கு வேற எந்த இன்ட்ரெஸ்ட்டும் இல்ல, நான் அவனை லவ்வெல்லாம் பண்ணல.

நிஷா: ஒ.கே ஃபைன், எவ்வளவு வருஷமா அவனை உனக்குத் தெரியும்.

ஹேமா: பி.பி.ஏ படிக்கும் போதிலிருந்தே தெரியும்......ஒரு நாலு வருஷம்.

நிஷா: சரி, இத்தனை வருஷம் ஃப்ரண்டா இருந்தவனுக்கு, உன்கிட்ட திடீர்ன்னு காதல் வந்திருக்காது. ரொம்ப நாளாகவோ, இல்ல ரொம்ப வருஷமாகவோ அவனுக்கு உன் மேல காதல் இருந்திருக்கும், இப்போதான் வெளிப்படுத்தியிருக்கிறான்.
ஹேமா: எப்படி நிஷா அவன் ரொம்ப நாளா லவ் பண்ணிட்டே தான் என்கிட்ட ஃப்ரண்டா பழகிட்டு இருந்தான்னு சொல்ற, அதெப்படி எனக்கு இவ்வளவு நாள் அவன்கிட்ட பேசியும் புரியாம போச்சு.
நான் அவனை இம்ப்ரஸ் பண்ற மாதிரி எதுவுமே பண்ணினதில்ல, பின்ன எப்படி என்னை அவன் லவ் பண்ணினான், சதா எனக்கும் அவனுக்கும் சண்டையும், வாக்குவாதமும் தான் வரும், என்னால நம்பவே முடியல நிஷா........

நிஷா:என்னடி ஹேமா இப்படி வெகுளியாயிருக்க,
இம்ப்ரஸ் பண்ணனும்னு எதுவும் பண்ணாமயிருக்கிறது தான் இப்போதெல்லாம் பசங்களை ரொம்ப இம்ப்ரஸ் பண்ணிடுது,

உன்னை ஈர்க்க
ஏதுமே
செய்யவில்லையே நான்
பின் எப்படி?
எனக்கேட்கிறாய்
அதுதான் என்னை
ஈர்த்தது தெரியுமா?

இப்படி கவிதை எல்லாம் எழுத ஆரம்பிச்சுட்டாங்க,

அழகாயில்லையேன்னு கவலைப்பட்டு இனிமே பொண்ணுங்க எல்லாம் 'ஃபேர் அண்ட் லவ்லி'க்கும், பியூட்டி பார்லருக்கும் காசு தண்டம் அழ வேண்டாம்.
அழகாய் இருக்க வேண்டியது இல்லை
அவளாய் இருந்தால் போதும்!

இப்படியும் கூட கவிதை எழுதுறாங்க,

ஆனா பொண்ணுங்கதான், எனக்கு 'இப்படி' மாப்பிள்ளை வேணும் , 'அப்படி' வேணும்னு, பட்டியல் போட்டு , அதை டிவி யில வேற பகிரங்கம்மா பேசிடுறோம், பாவம் பசங்க, எப்படி இருந்தாதான் இந்த பொம்பளை புள்ளைகளுக்கு புடிக்குமோன்னு புரியாமா.........திணறிட்டிருக்காங்க,

ஹேமா: இப்போ எதுக்கு நீ கவிதை, கதைன்னு வளவளக்குற, என்னோட பிரச்சனைப் பத்தி மட்டும் பேசு, இல்லீனா என்னை தனியா விடு.....

நிஷா: ஒகே கூல் ........உன்னோட மேட்டருக்கு வருவோம், விகாஷ் இவ்வளவு நாள் இருந்த நட்பலையையும் தாண்டி காதலிக்க ஆரம்பிச்சு, அதை கண்டிப்பா உனக்கு கோடிட்டு காட்டியிருப்பான், உனக்குத் தான் புரியாம டூயுப் லைட்டாயிருந்திருப்ப, நீ ஒரு மண்டு....

ஹேமா: சரி நான் மண்டுன்னே வைச்சுக்கோ ! எப்படிடி, நாம ஃப்ரெண்டா நினைக்கிறவன் நம்மல லவ் பண்றான்னு புரிஞ்சுக்கிறது.

நிஷா: சொல்றேன் கேட்டுக்கோ,
நான் சொல்றத வைச்சுட்டு, நண்பனா பழகுகிற எல்லாரும் இப்படி பேசினா , காதலிக்கிறாங்கன்னு அர்த்தம் இல்ல, ஒரு உதாரணத்திற்க்குத் தான் இதெல்லாம் சொல்றேன் ஒகே வா?

ஹேமா: சரி ......சரி..........நீ சொல்லும்மா தாயே!

நிஷா: அதுக்கு முன்னாடி நான் கேட்கிற சில கேள்விகளுக்கு பதில் சொல்லு.
நீ விகாஷ் கிட்ட, எல்லா ஃப்ரெண்ட்ஸும் கூட இருக்கிறப்போ மட்டும் தான் பேசுவியா, இல்ல தனியா அவன் கூட மட்டும் அதிக நேரம் செலவழிப்பியா?

ஹேமா: எல்லாரும் சேர்ந்து தான் காஃபி ஷாப், ஐஸ்கிரீம் பார்லர் போவோம், ஃபோன்ல மட்டும் நானும் அவனும் தனியா பேசிப்போம்.

நிஷா: ஒஹோ, அப்படி... அப்படி....போகுதா கதை.சரி நீங்க அப்படி ரெண்டு பேரும் மட்டும் ஃபோன்ல பேசுறதுக்கும், எல்லார் கூடவும் நீ இருக்கும்போது அவன் உன் கிட்ட பேசுறதுக்கும் ஏதும் வித்தியாசம் இருந்ததா??

ஹேமா: வித்தியாசம்னா............நீ எதை வித்தியாசம்னு சொல்ற??

நிஷா: எல்லாத்தையும் உனக்கு விம் பார் போட்டு விளக்கி சொன்னாத்தான் புரியும், இந்த சாட், ஃபோன் இதுலெல்லாம் பேசுறப்போ சில விஷயம் கவனிக்கனும்,
உதாரணத்துக்கு, நீ வழக்கமா ஃபோன் பண்ற நேரத்துக்கு ஃபோன் பண்ணதப்போ, இல்ல ஃபோண் பண்றதுக்கு லேட்டானா, ரொம்ப டென்ஷனாகி அப்சட் ஆவானா??

ஹேமா: ஆமாம், செம டென்ஷன் ஆவான்,
ஆனா எல்லாரும் தான் சொன்ன நேரத்துக்கு ஃபோன் பண்ணலீன்னா டென்ஷன் ஆவாங்க, இதை வைச்சு எப்படி சொல்ல முடியும்?

நிஷா: எல்லாரும் படுற டென்ஷனுக்கும் , இதுக்கும் நிறைய வித்தியாசமிருக்குங்க அம்மணி!! சரி அதெல்லாம் பேசுற டோன் வைச்சு புரிஞ்சுக்கனும், அந்த அளவுக்கு உனக்கு விபரம் பத்தாது, சரி விடு.
ஃபோன் பேசிட்டு வைக்கும் போது, இல்லை ஒரு ரெண்டு மூணு நாள் நீ ஃபோன் பண்ணமுடியாம போச்சுன்னா, ' ரொம்ப மிஸ் பண்றேன்' அப்படின்னு சொல்வானா??

ஹேமா: ஆமா...........ஆமாம்...........சொல்லுவான்.

நிஷா: அப்படி போடு, இந்த மிஸ் பண்றேன்னு சொல்றப்போவே உஷார் ஆகிடனும். இதை 'மிஸ்' பன்ணிட்டா அப்புறம் இப்படி தான் அழுதுக்கிட்டு,
' நான் ஃப்ரெண்டா தானே பேசினேன், இப்படி லவ் பண்றேன்னு சொல்லிட்டான்னேன்னு ' புலம்ப வேண்டியது தான்.

ஹேமா: நீ சொல்றதெல்லாம் வைச்சுப் பார்த்தா, அவன் ரொம்ப நாளாகவே லவ் பண்ணிட்டு தான் இருந்திருக்கான். எனக்குத் தான் புரியல.

நிஷா: அவன் அப்பப்போ கோடு போட்டு காட்டியிருப்பான், நீ ஒரு பேக்கு, புரியாம இருந்ததும், இது சரிப்பட்டு வராது, இந்த டூயுப் லைட்டுக்கு நேரடி தாக்குதல் தான் சரின்னு முடிவு பண்ணி, ப்ரோபோஸ் பண்ணிட்டான்.

ஹேமா: நான் இப்போ என்னடி பண்றது????

நிஷா: ஹும்.........ஹேமா, உனக்கு அவனை பிடிச்சிருந்தா, அவன் மேல இருக்கிற நட்பு காதல்னு நீயும் உணர்ந்தா , ஒத்துக்கோ இந்த ஃப்ரோபோஸல,
ஒரு பெண்ணின் வாழ்க்கைத்துணை, அவளை ஒரு நண்பனைப் போல் நேசித்தால், மணவாழ்க்கை நல்லாத்தானே இருக்கும்!!

ஹேமா: ஆனா எனக்கு அவன் மேல அந்த மாதிரி எந்த ஈர்ப்பும், ஈடுபாடும், உணர்வுமில்லை. ஒரு நல்ல நண்பனா அவனை மதிக்கிறேன், நேசிக்கிறேன், ஆனா நிச்சயம் அது காதல் இல்ல. ஒரு பெஸ்ட் ஃப்ரெண்டா நினைச்சு அவன் மேல நான் காட்டின தனிப்பட்ட அக்கறை அவனுக்கு என் மேல இப்படி ஒரு எண்ணம் வர காரணமாயிருந்திருக்குன்னு நினைக்கிறப்போ, கஷ்டமாயிருக்கு.
அவனைப் பார்த்தா பாவமாயிருக்கு நிஷா.

நிஷா: ஆங், இப்போதான் நீ கவணமாயிருக்கனும் உன் முடிவுல. அவன் மேல அனுதாபப்பட்டோ, இரக்கப்பட்டோ அவனோட காதலை ஒத்துக்காதே.
காதல் ஒரு அற்புதமான உணர்வு, அது தானா வரனும்,
இப்போ அவன் மேல இரக்கப்பட்டு , நண்பன் கண்கலங்குகிறானேன்னு ஒத்துக்கிட்டு அப்புறம் ' எங்க அம்மா அழுதாங்க, ஆட்டுக்குட்டி அழுதுச்சுன்னு' பல்டி அடிச்சு வாழ்க்கை ஃபுல்லா அவனை அழ வைச்சிராதே.
யோசிச்சு முடிவு பண்ணு, பி ஸ்டராங் இன் யுவர் ஸ்டாண்ட்"

என்னிடம் பேசி முடித்துவிட்டு, தெளிந்த முகத்தோடு ஹேமா என் ரூமிலிருந்து வெளியேறியப் பின், என் மேஜையில் உள்ள பேப்பரில் அவள் கிறுக்கியிருந்த கவிதை...

நட்போடு......நண்பனாகவேயிரு!!!
நட்பை தந்தாய்
அன்பை தந்தாய்
பாசம் காட்டினாய்
பரிவு காட்டினாய்
அறிவுரை அள்ளித்தந்தாய்
வாழ ஊக்கமளித்தாய்
என்
கவிதை கூட உன்னால்தான்..
எல்லாம் நீ தந்தாய்
இன்று
காதலையும் தருவேன் என்கிறாய்?
உன்
காதலை மட்டும் என்னால்
ஏற்றுக்கொள்ள முடியவில்லையடா நண்பனே!!!






December 12, 2007

மீனா...



நாங்கள் திருமணமாகி இந்த வீட்டின் மேல்மாடியில் குடிவந்து ஒரு வருடமாகிறது. கீழ் போர்ஷனில் வீட்டின் உரிமையாளர் குடியிருக்கிறார்கள்,

அவர்களுக்கு 17 வயதில் ஒரே ஒரு மகள், பெயர் மீனாட்ச்சி. சில வருடங்களுக்கு முன் நடந்த ஒரு சாலை விபத்தில் அவளது தலையில் அடிபட்டு புத்தி பேதலித்த பெண் அவள்.
அந்த 17 வயதுக்கே உரித்தான வாலிப பொலிவுடன் பார்க்க மிகவும் அழகாயிருப்பாள் மீனா.அவளது குழந்தைத்தனமான நடவடிக்கைகள் அக்கம் பக்கத்தினரின் கேலிக்குக் காரணமாக இருப்பதாலும், மீனா தனியாக வெளியில் சென்று விடக்கூடாது என்பதாலும் மீனாவின் அம்மா அவளை வீட்டில் ஒரு அறையில் அடைத்து வைத்திருப்பார்.எப்போதாவது டி.வி பார்பதற்க்காக மட்டும் முன் அறைக்கு வர அனுமதிப்பார்.

என் கணவர் அலுவலகம் சென்றபின், அவ்வப்போது நான் அவர்கள் வீட்டிற்க்குச் சென்று மீனாவுடன் ஏதாவது பேசிக்கொண்டிருப்பேன், நான் பேசுவது புரிந்தது போல் தலையாட்டிக்கொண்டிருப்பாள், அவள் வெகுளித் தனத்தை ரசிப்பேன்.

என் பெயரை 'காஞ்சனா' என்று முழுவதுமாக உச்சரிக்காமல், 'காஞ்சு' என்று அழைப்பாள். என் கணவரை ஒருமையில் "ஹே ரமணா, எப்படி இருக்க" என்று பேசுவாள். மரியாதையுடன் பேசுமாறு மீனாவின் அம்மா அவளை அதட்டுவார்.

சில சமயங்களில் முன் அறையின் கதவு திறந்திருந்தால்,மீனா அவள் அம்மாவிற்கு தெரியாமல் வெளியில் ஓடிவிடுவாள்.பின் நானும் , மீனாவின் அம்மாவும் அவளை தேடிப் போய் அழைத்து வருவோம்.

வீடு சென்னையின் புறநகர் பகுதியில் அமைந்திருப்பதால், ஆள்நடமாட்டம் அதிகமிராது எங்கள் தெருவில், அடுத்த தெருவிலிருக்கும் கோயில் மண்டபத்தில் சிறுவர்கள் விளையாடிகொண்டிருபார்கள் மாலை வேளைகளில். அதனைக் காண தான் மீனா அங்கே ஓடுவாள். இரவிலும் சில நேரம் மீனா அங்கே ஓடிவிடுவாள். நானும் மீனாவின் அம்மாவிற்கு துணையாக செல்வேன்.

" காஞ்சனா,மாசமாயிருக்கிற பொண்ணுமா நீ, என் கூட இப்படி இருட்டிலே வர்ரியேம்மா, உனக்கு ரொம்ப கஷ்டம்மா" என்று புலம்பிக்கொண்டே வருவார்.

என் பிரசவகாலம் நெருங்கியதும், பிரசவத்திற்க்காக நான் என் பிறந்தகம் சென்றுவிட்டேன். 3 மாதம் கழித்து குழந்தையுடன் வீட்டிற்க்குத் திரும்பினேன். என்னை அன்போடு ஆரத்தி எடுத்து வரவேற்றார் மீனாவின் அம்மா. என் பெற்றோருக்கு அவரின் அன்பினைப் பார்த்து ரொம்ப சந்தோஷம்.

என் பெற்றோர் ஊருக்கு திரும்பியதும், நான் என் குழந்தையை மீனா பார்க்கவில்லையே என்று அவளிடம் காட்டுவதற்க்காக, குழந்தையுடன் அவர்கள் வீட்டிற்குச் சென்றேன்.
மீனாவின் அம்மா என்னைப் பார்த்ததும் அழ தொடங்கினார்.

" ஏன்மா அழுறீங்க, மீனா எங்கே? நான் வந்ததிலிருந்து அவளை பார்க்கவேயில்லை, என் குழந்தையைப் பார்த்தா மீனா ரொம்ப சந்தோஷப்படுவா, அவளை கூப்பிடுங்கமா" என்றேன்.

"காஞ்சனா" என்று குரல் உடைந்து வந்தது, பின் மறுபடியும் அழ ஆரம்பித்தார்.

எனக்கு ஒன்றுமே புரியவில்லை, மீனாவிற்க்கு என்னவாயிற்று என்று என்னால் யுகிக்க முடியாமல், நெஞ்சு படபடத்தது.

மீனாவின் அம்மா அழுகையை சிறிது நிறுத்திவிட்டு பேச தொடங்கினார்.

" காஞ்சனா, நீ உன் குழந்தையை அவ கிட்ட காட்ட வந்திருக்க, இன்னும் எட்டு மாசத்துல அவ உன்கிட்ட அவ குழந்தையை காட்டப் போறா" மீண்டும் அழுதார் மீனாவின் அம்மா.

"என்ன............என்னமா........இது"

" ஆமா காஞ்சனா, அவ மாசமாயிருக்கா......."

"எப்படிம்மா............அவ எப்படிம்மா........."

" அதுதான் காஞ்சனா எனக்கும் புரியல, யாரு இதுக்கு காரணம், எப்போ எங்கேன்னு எதுவுமே சொல்ல தெரியலியேம்மா இவளுக்கு" என்று தன் சேலை முந்தானையில் முகம் புதைத்து மீண்டும் கதற ஆரம்பித்தார்.

எப்படி ஆறுதல் சொல்வதென தெரியாமல் தினறினேன். பின் அவரை ஆசுவாசப்படுத்தி, டாக்டரிடம் ஆலோசனைக் கேட்கலாம் என்று தைரியம் கூறிவிட்டு என் வீட்டிற்கு வந்தேன்.
அன்று முழுவதும் மனசே சரியில்லை எனக்கு. இரவு என் கணவரும் லேட்டாக வீட்டிற்கு வருவதாக ஃபோன் செய்தார். குழந்தையும் நானும் தனியாக இருந்தோம். நினைப்பு முழுவதும் மீனாவின் மேல்.

கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு சிந்தனை கலைத்தேன், குழந்தை தூங்கிக் கொண்டிருந்தான். வேகமாக சென்றுக் கதவை திறந்தேன்.கண்களில் கண்ணீரோடும், பதைபதைப்போடும் மீனாவின் அம்மா.

"காஞ்சனா, மீனா வெளியில ஓடிட்டாமா, இரண்டு நாளா நான் சரியா சாப்பிடல, என்னால நடக்க கூட முடியல.........நீ.......கொஞ்சம்........"

"சரிம்மா, நான் போய் கூட்டிட்டு வரேன், அவ கோயிலுக்கு தான் போயிருப்பா, நீங்க குழந்தையைப் பார்த்துக்கோங்க" என்று கூறிவிட்டு தெருவில் வேகமாக நடந்தேன், தெருமுனையில் மீனா திரும்புவது தெருவிளக்கின் மெல்லிய வெளிச்சத்தில் தெரிந்தது. என் நடையை வேகமாக்கினேன். அவள் அந்த கோயில் மண்டபத்துக்குத்தான் சென்றாள்.

மீனாவின் கரம்பிடித்து ," மீனா வாமா வீட்டுக்கு போலாம்" என்றேன்.
வழக்கம்போல் வரமாட்டேன் என்று அடம்பிடித்தாள்

நான் அவள் கரம் பிடித்து இழுக்க முயல, அவள் முரண்பிடிக்க , கல் தடுக்கி கீழே விழுந்தாள் மீனா.அவளை தரையிலிருந்து தூக்கிவிட நான் அவளின் கரம் பற்றுகையில், அவளது துப்பட்டா என் கைகளில் வந்தது,

உடனே அலற ஆரம்பித்தாள் மீனா,
"என்ன விட்ரு ரமணா, என்ன விட்ரு......என் ட்ரஸ் கழட்டாதே ரமணா,..........ரமணா என்னை ஒன்னும் பண்ணிடாதே"

எனக்கு தலை சுற்றியது,

பேதை பெண் மீனா தொடர்ந்து அலறிய வார்த்தைகளும், நான் ஊரில் இல்லாத நாட்களில் மீனா இரவில் ஓடிய போது சில சமயங்களில் என் கணவரின் உதவியை மீனாவின் அம்மா நாடியதாக கூறியதும், என்ன நடந்திருக்கும் என எனக்கு வெளிச்சம் போட்டு காட்டியது.....

அப்போ மீனாவின்.......கர்ப்பத்திற்க்கு காரணம்..............ரமணா.............என் கணவரா???????

என் மூளையின் அணுக்கள் சிதறின எனக்குள்.

[நச்சுன்னு ஒரு கதை போட்டிக்காக]

December 10, 2007

தாய்மை



வழக்கம்போல் அன்றும் எனக்கு என் அண்ணா அண்ணியிடமிருந்து அர்ச்சனை ஆரம்பம் ஆனது. இந்தக் ' காட்சி' கடந்த இரண்டு வருடங்களாக அவ்வப்போது எங்கள் வீட்டில் அரங்கேறும். முதலில் கெஞ்சலுடன் ஆரம்பிக்கும் அண்ணி, என் பிடிவாதம் இறுக இறுக அண்ணனுடன் சேர்ந்து அர்ச்சிக்க ஆரம்பிப்பார். எதற்கு தான் என்னை இப்படி திட்டுகிறார்கள் என்று பாருங்கள்....

" இங்க பாரு யமுனா, இதுவரைக்கும் வந்த எல்லா வரனையும் தட்டி கழிச்சுட்டே, காலேஜ் படிச்சு முடிச்சு இரண்டு வருஷம் ஆச்சு, இனிமேலயேயும் உன் கல்யாணத்தை நாங்க தள்ளி போட முடியாது" இது என் அண்ணி சுமதி.

" அம்மா இல்லாத பொண்ணுன்னு ரொம்ப செல்லம் கொடுத்தது தப்பா போச்சு. MBBS படி, நம்ம க்ளீனிக்கை பார்த்துக்கலாம்னு சொன்னப்போ ' எனக்கு இரத்தம் பார்த்தாலே பயம், குடும்பமே பரம்பரை டாக்டர்களாக இருக்கனுமா? நீயும் அப்பாவும் டாக்டராயிருக்கிறது போதும்'னு சொல்லி இஞ்சினியரிங் சேர்ந்தா, சரி அவ இஷ்டம்னு விட்டோம். இப்ப பாரு எத்தனை வரன் விரும்பி வராங்க, எனக்கு இப்போ கல்யாணம் வேண்டாம்னு, அதே சொல்லிட்டு இருக்கா" இது என் அண்ணன் பிராபகர்.........ஸாரி டாக்டர் பிராபகர்.

" யாரையும் காதலிக்கிறியா , அதான் கல்யாணம் வேணாம்னு அடம்பிடிக்கிறியான்னு கேட்டா, அதுவும் இல்லன்றா. இவ போடுற அந்த ஒரு கண்டிஷனை கேட்டா மாப்பிளளை வீட்டுக்காரங்க எல்லாம் நம்மல ஒரு மாதிரி பாக்குறாங்க, கல்யாணம் வேணாம்னு வம்புக்குன்னு இவ இந்த கண்டிஷன் போடுறான்னு நினக்க்கிறேன், இதுக்கு மேலயும் என்னால இவகிட்ட கெஞ்சிக்கிட்டு இருக்க முடியாது, நீங்களாச்சு உங்க தங்கச்சியாச்சு" என்று சலிப்புடன் அண்ணி சமயலைறைக்குள் செல்ல, அப்பா க்ளினிக்கிலிருந்து வீட்டிற்க்கு வந்தார்.

தன் ஒரே செல்லக்குட்டி யமனாவிற்கு நன்றாக அர்ச்சனை நடந்திருக்கிறது என்று என் முகத்தைப் பார்த்து தெரிந்துக் கொண்டார்.

என்னிடம் சீறிக்கொண்டிருந்த அண்ணன் இப்போது என் அப்பாவிடம் திருமணத்திற்கு என்னை சம்மதிக்க சொல்லுமாறு வற்புறுத்த ஆரம்பித்தான்.

அப்பா எதுவும் பேசாமல், கெஞ்சும் பார்வையுடன் பரிதாபமாக முகத்தை வைத்துக் கொண்டிருந்த என்னைக். கணிவுடன் பார்த்தார். பிடிவாததிற்கு மறுபெயரான தன் மகளின் மனம் விரும்பும்படி மணமகன்........மருமகன் கிடைப்பானா என்ற ஏக்கம் அவர் கண்களில்.

அப்படி என்னதான் என்னோட கண்டிஷன், எதிர்பார்ப்பு என்னை கட்டிகிறவனிடம்? சொல்கிறேன் கேளுங்கள்.......


என்னை வாழ்க்கை துணையாக ஏற்றுக்கொள்கிறவன்[ர்] நான் ஒரு அநாதைப் பெண் குழந்தையை தத்தெடுக்க அனுமதிக்க வேண்டும். அம்மாவின் அரவணைப்பு இல்லாமல் வளரும் ஒரு பெண்ணின் மனவேதனையை தினமும் அனுபவித்தவள் நான். தாய் இல்லாத ஒரு பெண் குழந்தைக்கு தாயாக எனக்கு அனுமதி வேண்டும். கல்யாணம் பண்ணினா தான் ஒரு குழந்தையை தத்தெடுக்க முடியும் என குழந்தைகள் காப்பகத்தில் விசாரித்தபோது சொல்லிவிட்டார்கள். அதனால் என்னுடைய இந்த ஆசைக்கு சம்மதம் சொல்கிற ஒரு ஆண் கிடைப்பான்னு பார்த்தா, இந்த கண்டிஷன் கேட்டதும் வந்த வரன் எல்லாம் வந்த ஸ்பீடிலேயே போய் விடுகிறது.

அப்பா மட்டும் என் மனதை புரிந்துக் கொண்டார் [ வேறு வழியில்லை அப்பாவிற்கு!] என் மீது பாசம் அதிகம் அப்பாவிற்கு, அதனால் என் எதிர்பார்ப்பிற்கு மதிப்பு கொடுத்தார்.

-------------------------- *------------------------------------------

சர்வீஸிற்கு விட்டிருந்த என் கார் வருவதற்கு தாமதமானதால் , என் அண்ணியின் கார் எனக்குத் தேவைப்பட்டது. க்ளினிக்கிலிருந்த அண்ணியிடம் ஃபோனில் கேட்க, அவரும் க்ளினிற்க்கிற்கு வந்து கார் சாவி வாங்கிக் கொள்ளும்படி சொன்னார். என் திருமண விஷயத்தில் மட்டும் தான் எனக்கும் என் அண்ணிக்கும் மோதலே தவிர, மற்றபடி அவர் எனக்கு ஒரு நல்ல தோழி!

என் அப்பாவின் க்ளினிக்கில் தான் என் அண்ணா Cardiologist ஆகவும், என் அண்ணி குழந்தை நல மருத்துவராகவும் [pediatrician] பணி புரிகின்றனர். அண்ணி அவரது கன்ஸல்டேஷன் ரூமில் பேஷண்டை பார்த்துக்கொண்டிருந்ததால், நர்ஸிடம் என் வரவை குறித்து சொல்லியனுப்பி விட்டு வெயிட்டிங் ரூமில் அமர்ந்தேன்.


அப்போதுதான் ஏதேச்சையாக கவனித்தேன், அழுகையும் சிணுங்கலுமாக இருந்த சிறு குழந்தையை தோழில் போட்டபடி ஒருவர் அங்கும் இங்கும் நடந்துக் கொண்டு, குழந்தையின் அழுகையை நிறுத்த[ குறைக்க] முயன்றுக் கொண்டிருந்தார்.


இது............இவர்.................தினேஷ்!! என் கல்லூரி சீனியர் தினேஷ்! ஆம் அவரேதான்..............


கல்லூரியில் நான் முதலாம் ஆண்டில் படித்தப்போது நான்காம் ஆண்டில் படித்தவர் தினேஷ். அப்பொது மீசையில்லை, இப்போது மீசையுடன் சிறிது தாடியும்.


வேகமாக தினேஷின் அருகில் சென்றேன்.


"தினேஷ்"


புருவம் உயர்த்தி ஆச்சரிய பார்வையுடன் என்னை பார்த்த தினேஷ்,


"நீங்க......நீ.......யமுனா தானே?"


" ஆமாம் தினேஷ், நானே தான், பரவாயில்லையே 5 வருஷம் கழிச்சுப் பார்த்தும் ஞாபகமிருக்கிதே!"


" நல்லா ஞாபகமிருக்கு யமுனா"


"குழந்தைக்கு உடம்பு சரியில்லையா? என்ன செய்து உடம்புக்கு உங்க குழந்தைதானே, எப்போ கல்யாணம் ஆச்சு, எனக்கெல்லாம் இன்விடேஷன் இல்லியா உங்க வெட்டிங்கிற்கு? சரி உங்க வொய்ஃப் எங்கே?" என்று படபடவென கேள்விகளை நான் அடுக்கி கொண்டே போக,


தினேஷ் தன் குழந்தையை டாக்டரிடம்[ என் அண்ணி] காட்டும் முறை வந்து, அவரது டோக்கன் எண்ணை நர்ஸ் அழைத்தார்.


"நீங்க குழந்தையை காட்டிட்டு வாங்க, நான் வெயிட் பண்றேன் தினேஷ்"


"சரி யமுனா"


தினேஷ் குழந்தையுடன் செல்வதைப் பார்த்துக்கொண்டிருந்த எனக்கு, 5 வருடத்திற்கு முன் கல்லூரியில் பார்த்த தினேஷ் ஞாபகத்திற்கு வந்தார்.
கல்லூரியில் மிகவும் பிரிசித்தம் ஆன மாணவர்களில் முக்கியமானவன் தினேஷ்.


விளையட்டு, கல்வி, கலை என எல்லாத்துறையிலும் ஜொலிக்கும் நட்ச்சத்திரம் தினேஷ்.


கலகலப்பான பேச்சும், காந்தப்பார்வையும், வசீகரமான புன்னகையும் மாணவிகளை அவன் வசம் திருப்பும் தோற்றமும் கொண்டவன் தினேஷ்.
இத்தனை திறமைகளும், ஆண்/பெண் என பெரிய நண்பர்கள் வட்டம் அவனை சுற்றியிருந்தாலும், எல்லாரிடமும் பண்போடும் நடந்துக் கொள்வான்.
எனக்கு தினேஷின் அறிமுகம் கிடைத்தது, எங்கள் டிபார்ட்மெண்ட் ராக்கிங்கில்.


"யமுனை ஆற்றிலே, ஈரக் காற்றிலே" என்று என்னை பாட சொல்லி கலாட்டா செய்ததில் நான் மிரண்டு போய்[?] அழ ஆரம்பித்துவிட, அதன் பின் என்னை கல்லூரியில் எங்கு பார்த்தாலும் " ஹேய் அழுமூஞ்சி, எப்படி இருக்கிற" என்று விசாரிப்பதுமாக எனக்கு தினேஷ் என்ற சீனியரைத் தெரியும்.


தினேஷ் கல்லூரி படிப்பை முடித்து போனபின் அவரை பற்றி எந்த தகவலும் எனக்கு தெரியவில்லை. இன்று அவரை குழந்தையுடன் பார்த்ததும் மனதில் எல்லையில்லா சந்தோஷம். ஆனால் ஏனொ தினேஷின் முகத்தில் முன்பு நான் பார்த்த அந்த கலையும், புன்சிரிப்பும் இல்லை. கண்களில் ஏதோ ஒரு பயம், ஏக்கம், துக்கம் என பலவற்றை என்னால் உணர முடிந்தது.



அழ்ந்த சிந்தனையில் மூழ்கியிருந்த என்னை,
"யமுனா" என்று தினேஷின் குரல் சிந்தனை கலைத்தது.




ஊசிப் போட்டிருப்பார்கள் போலிருக்கிறது குழந்தைக்கு, குழந்தை தேம்பி தேம்பி மூச்சு விடாமல் அழுதுக் கொண்டிருந்தாள்.


குழந்தையை தினேஷிடமிருந்து வாங்கி, என் தோளில் சாய்த்து முதுகில் வருடிக் கொடுத்தேன். அழுகையை நிறுத்தி விட்டு, சிறிது விம்மலுடன் என் முகத்தை பார்த்தாள் குழந்தை, உதட்டோரத்தில் ஒரு செல்ல புன்னகையை சிந்திவிட்டு மீண்டும் என் தோளில் சாய்ந்து, என்னை இறுக பிடித்துக் கொண்டது குழந்தை.



என் அடிவயிற்றில் ஏதோ ஒரு புதுமையான உணர்வு. இனம் புரியாத அந்த உணர்வினில் ஒரு கணம் என்னையே மறந்தேன்.



தன் குழந்தை என்னிடம் ஒட்டிக்கொண்டதை அதிசயத்துடன் பார்த்துக் கொண்டிருந்த தினேஷிடம்,



"குழந்தையின் பேரு என்ன?" என்றேன்.


"ஸ்வேதா"


"வாவ், அழகான பெயர்"


"யமுனா, நீ எங்கே இங்க.........க்ளினிக்கில்?"


நான் விபரம் கூற, மீண்டும் குழந்தை சிணுங்கியதால், நாங்கள் எங்கள் செல் ஃபோன் நம்பரை பரிமாறிக்கொண்டு விடை பெற்றொம்.


மறுநாள் தினேஷின் செல்ஃபோனுக்கு அழைத்து ஸ்வேதாவின் உடல் நிலையை விசாரித்தேன். அலுவலகத்திலிருந்ததால் இருவராலும் அதற்கு மேல் விரிவாக பேச முடியவில்லை. சாயந்திரம் வீட்டிற்கு வந்து ஸ்வேதாவை பார்க்கலாமா என்று தினேஷிடம் கேட்டு, அவரது முகவரியை பெற்றுக்கொண்டேன்.



குழந்தை ஸ்வேதாவிற்காக அழகிய டெடிபியர், 6 மாத குழந்தைக்கான ஒரு பின்க் டிரஸ், தினெஷின் மனைவிக்கு மல்லிகை பூ , ஸ்வீட்ஸ் என்று வாங்கிக்கொண்டு சாயந்திரம் தினேஷின் வீட்டு அழைப்பு மணியை அழுத்தினேன்.


ஒரு வயதான அம்மா கதவை திறந்தார்கள். தினேஷின் சாயல் அந்த அம்மாவிடம் இருந்ததால் அவர் தினேஷின் அம்மா என்று என்னால் எளிதாக யுகிக்க முடிந்தது. என் பெயரை சொன்னதும் அன்பான ஒரு புன்னகையுடன் உள்ளே அழைத்துச் சென்றார்.


தினேஷ் ஆஃபிசிலிருந்து வந்து 5 நிமிடம் தான் ஆவதாகவும், உடைமாற்றிக் கொண்டு வருவார் எனவும், குழந்தை உள்ளே உறங்குவதாகவும் என்னிடம் தெரிவித்து விட்டு, முன் அறையில் என்னை அமரச் சொல்லி உபசரித்தார் தினேஷின் அம்மா.


சிறிது நேரத்தில் தினேஷ் வந்துவிட, அவரது அம்மா எங்களுக்கு காஃபி எடுத்துவர உள்ளே சென்றார்.



பரஸ்பரம் எங்கு வேலைப் பார்க்கிறோம் என்று பேசிக்கொண்ட பின்,
"எங்கே உங்க வொய்ஃப் தினேஷ், கண்ணுல காட்ட மாடென்றீங்க?"


"யமுனா......"


"என்ன தினேஷ், உங்க வொய்ஃப் உள்ளே ஸ்வேதாவ தூங்க வைச்சுட்டு இருக்காங்களா?"


"யமுனா.......அவ கலையாத தூக்கம் தூங்கியே போய்ட்டா" குரல் உடைந்து வார்த்தைகள் வெளி வந்தன தினேஷிடமிருந்து.


"வாட்.........தினேஷ் என்ன சொல்றீங்க" அதிர்ச்சியும் துக்கமும் கலந்து என் குரல் கம்ம,


தினேஷ் தன் கல்லூரி வாழககை முடிந்ததும் புனேயில் வேலைப்பார்ர்கும் போது உடன் பணிபுரிந்த பெங்காளிபெண் டானியாவை காதலித்து, இரு வீட்டின் எதிர்ப்புக்கும் நடுவில் திருமணம் புரிந்ததாகவும,. பிரசவத்தில் ஏற்பட்ட சிக்கலில் தன் காதல் மனைவி தன்னைவிட்டு மறைந்துப் போனதையும் தழுத்தழுத்தக் குரலில் சொல்லி முடித்தான்.



புனே வாழ்க்கை மனைவியின் நினைவுகளை அதிக படுத்துவதால், குழந்தையின் நலனுக்காகவும் துக்கத்தில் இருந்து வெளிவரவும் சென்னைக்கு மாறுதலாகி வந்து, தினெஷ் தன் குழந்தையுடன் தன்னுடனே வாழ்வதாகவும் அவர் அம்மா கூறினார்.



துக்கம் தொண்டையை அடைக்க, கண்களில் நீர் என் கன்னங்களில் வழிந்தோடியது. ஆசையுடன் நான் வாங்கி வந்த மல்லிகை பூவை தேவதையாக காட்சிதந்த தினெஷின் மனைவி டானியாவின் புகைப்படத்தில் சூடினேன்.


குழந்தை ஸ்வேதா தூக்கத்திலிருந்து விழித்தாள். என்னை பார்த்ததும் அதே மழலை சிரிப்புடன் தினேஷிடிமிருந்து என்னிடம் தாவி வந்தாள்.



என் கழுத்தை இறுக கட்டிகொண்ட அந்த பிஞ்சு கரங்களின் ஸ்பரிசம் மீண்டும் எனக்குள் ஒரு இனம் புரியா கிளர்ச்சியையும், சிலிர்ப்பையும் உருவாக்கியது!



இது தான் தாய்மையின் உணர்வோ?





என் கருவரையில் நீ உதிக்கவுமில்லை
பத்து மாதங்கள் நான் சுமக்கவுமில்லை
என் உதிரத்தை பாலாக்கி பருக கொடுக்கவுமில்லை- ஆனால்
மார்போடு உன்னை சேர்த்தனைத்தப் போது
உணர்ந்தேன் தாய்மையை!
என் மடியில் மலராத மகள் நீ !!

December 03, 2007

தாயா? தாரமா??




பெற்றெடுத்த தாயையும், நம்பி வந்த தாரத்தையும் சமநிலையில் நேசித்து , இருவருக்கும் நடுநிலையில் அன்பை பகிர்ந்தளிக்க தடுமாறும் ஆண்களுக்கு பயன் படக்கூடிய சில டிப்ஸ்.....

அம்மாவிடம்......
-------------------
1.உங்கள் தாயின் சமையல் தான் சிறந்தது என்று உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் முன் உயர்த்தி பேசாதிருங்கள். உங்கள் தாயின் மனதை அதை குளிர்விக்கும் அதே நேரத்தில், உங்கள் மனைவியின் மேல் ஒரு இளக்காரமான எண்ணம் உங்கள் தாயின் மனதில் உருவாக்கும்.

2. தனிமையில் உங்கள் அம்மாவிடம் பேசும்போது, " அம்மா எனக்கு நல்ல பெண்ணைப் பார்த்து மணமுடித்திருக்கிறீர்கள்" என்று உங்கள் தாயின் தேடுதலில் கிடைத்த உங்கள் மனைவியின் நல்ல குணங்களையும் , பண்புகளையும் கோடிட்டு காட்டுங்கள். உங்கள் மனைவியை எவ்விதத்தில் உங்கள் அன்னைக்கு நீங்கள் வெளிக்காட்டுகிறீர்களோ அவ்விதத்தில்தான் அவளை அவர் உணர்வார், மதிப்பார்.

[ அதற்கென்று மனைவியை 'ஆஹோ, ஓஹோ' என்று புகழ்ந்து தள்ளி சொதப்பிவிடாதிருங்கள். ஓவரா புகழ்ந்தா உங்கள் அம்மாவிற்கு உங்கள் ம்னைவியின் மீது பொறாமை கலந்த எரிச்சலும் வரலாம்]

3.நீங்கள் காதலித்து திருமணம் முடித்தவராகயிருந்தால், உங்கள் மனைவியை பற்றி இன்னும் அதிகமாக நல்லவிதமாக வெளிப்படுத்தி அவரை உங்கள் அன்னையுடன் இணைக்க முயலுங்கள். அப்போதுதான் தன் மகனுக்கு தானே துணை தேடி தரும் தருணத்தை தடுத்து விட்டாளே இவள் என்ற மனக்கசப்பை உங்கள் மனைவியின் மீதிருந்து அகற்ற அது உதவும்.

4. நீங்கள் உங்கள் அம்மாவிற்கு பரிசளிக்கும் பொருளோ, புடவையோ அதை உங்கள் மனைவி ஆசையுடன் தேர்ந்தெடுத்தது என்று கூறி கொடுங்கள். உங்கள் மனைவியின் மீது மதிப்பையும், நேசத்தையும் அது ஏற்படுத்தும்.

மனைவியிடம்....
------------------
உங்கள் தாய் , உடன் பிறந்தோர் இவர்களைப் பற்றி புகார் மனுவை உங்கள் மனைவி தனிமையில் உங்களிடம் தொடுக்கும் நேரத்தில், நிதானத்துடன் அவர் கூறுவதை கேட்டுக்கொள்ளுங்கள். எதிர்த்து தர்க்கிக்கவோ, " நீ அட்ஜஸ்ட் பண்ணிட்டுப்போ " என்று அதிகாரம் செலுத்தவோ அதுவல்ல தருணம்.
அப்படி நீங்கள் எதிர்மறைக் கருத்துக்களையும், உங்கள் கோபத்தையும் வெளிப்படுத்தினால் அது உங்கள் மனைவியின் உள்ளக் குமறலை அதிகரிக்கும். உங்கள் மனைவியின் மீது தவறு இருந்தாலும், பொறுமையுடன் பிறிதொரு சந்தர்ப்பத்தில் நாசூக்காக சுட்டிக்காட்டுங்கள்.

" மற்றவர்கள் உன்னை மதிக்காவிட்டால் என்ன? நான் இருக்கிறேன் உனக்கு" என்று நீங்கள் கூறும் வார்த்தை ஒன்றே உங்கள் மனதை ஆற்றும், நிச்சயம் நீங்கள் கூறும் கருத்துக்களை அப்போது கூறினால் புரிந்துக் கொள்வார் உங்கள் மனைவி.

2.மற்றவர்களின் முன், முக்கியமாக உங்கள் தாயின் முன் உங்கள் மனைவியை குறை கூறுவதோ, கோபப்படுவதோ கூடவே கூடாது. இவ்விதமான உங்கள் நடக்கை உங்கள் மனைவியின் உணர்வுகளை நொறுக்குவதோடு, அதன் விளைவாக தன் ஆற்றாமையை உங்கள் தாயிடம் கோபமாக, மரியாதை குறைவாக வெளிப்படுத்த வைக்கும்.

3. மனைவியின் பெற்றோர், உறவினர்களை அவமதிப்புடன் நடத்தாதிருங்கள். இதுவும் உங்கள் மனைவியை பழிவாங்கும் உணர்வுடன் உங்கள் தாய் மற்றும் உங்கள் உடன் பிறந்தோரை அவமதிக்க செய்யும்.

4.உங்கள் மனைவியிடம் உங்கள் தாயின் விருப்பு, வெறுப்புகளையும், உங்கள் திருமணத்திற்காக அவர் எடுத்துக் கொண்ட ஆர்வத்தையும், சிரத்தையையும், பொறுப்புகளையும் எடுத்துக் கூறி உணர வையுங்கள்.

5.சிறு வயதில் நீங்கள் செய்த குறும்புகளுக்காகவும், தவறுகளுக்காகவும் உங்களை கண்டிக்கும் வகையில் உங்கள் அம்மா திட்டியது, அடித்தது எல்லாம் உளறிக்கொட்டி உங்கள் மனைவிக்கு உங்கள் தாயின் மீது வெறுப்புணர்வை ஏற்படுத்திவிடாதிருங்கள்.

November 27, 2007

பூவொன்று புயலானது!!!

அலுவலகத்திற்கு செல்ல தயராகிக் கொண்டிருந்த மாலதியிடம், அவள் அம்மா " மாலதி, நாளைக்கு ஆஃபீஸிற்கு லீவு சொல்லிட மறந்திடாதேம்மா" என்றாள் தயக்கத்துடன்.

" எதுக்குமா இப்போ...........எனக்கு.......கல்யாணம்....." என்ற மாலதியை இடைமறித்தாள் அவள் அம்மா, " இப்படியே எந்தனை நாள் தான் சொல்லிட்டுருப்ப, அப்பா இல்லாத நம்ம குடும்பத்தை தாங்க நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும். இவ்வளவு பெரிய இடத்துல இருந்து, அவங்களே விரும்பி உன்னை பெண் கேட்டு வந்திருக்காங்க, நாளைக்கு உன்னை பார்க்க மாப்பிள்ளையோட வீட்டுக்கு வராங்க,தயவு செய்து மறுப்பேதும் சொல்லாதே மாலதி".
"நேத்து ராத்திரி முழுவதும் உன்கிட்ட போராடி உன்னை சம்மதிக்க வைக்கிரதுக்குள்ள எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு, எவ்வளவு நாள் தான் உன்னை கண்ணிப் பெண்ணா வீட்டுல வைச்சிட்டு இருக்கிறது , எனக்கும் உன்னை கட்டிகொடுக்கிற கடமை இருக்குதும்மா" என்று கண் கலங்கிய அம்மாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாதவளாய், அம்மாவின் ' அந்த' வார்த்தை அவள் மனதை பிசைய, வேகமாக பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தாள் மாலதி......
---------------------------------- *-------------------------------------------------

அலுவலகத்தில் இருந்தபோது தான் மாலதிக்கு திடீரென , நாளைக்கு தனனை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையின் விசிட்டிங் கார்டை அம்மா தன்னிடம் தந்த போது , அதனை தன் கைப்பைக்குள் வைத்தது நினைவுக்கு வந்தது.

Ranjith M.B.A
Managing Director
Baargavi Textile Mills
Avinashi
Coimbatore

ஒரு மில் அதிபரின் குடும்பம் தான் மாலதியை விரும்பி பெண் கேட்டு வந்திருப்பதாக அம்மா சொன்னதை நினைவு படுத்திக் கொண்டாள். கார்ட்டில் இருந்த ஃபோன் நம்பருக்கு டயல் செய்தாள்.

ரிஷப்னிஸ்ட், MD யின் உதவியாளர், என்று பலரையும் கடந்து ரஞ்சித் லைனில் வந்தான். அவனிடம் தனியாக இன்றே தான் பேச விரும்புவதாக மாலதி கூறியதும், அதற்காகவே காத்திருந்ததுபோல் உடனே ஒப்புக்கொண்டான்.

டி.பி ரோட் 'ரிச்சி ரிச்' ஐஸ்கிரீம் பார்லரில் சந்திப்பதாக கூறினாள் மாலதி.

காந்திபுரத்திலிருந்து 7ஆம் எண் பேருந்தில் ஆர்.ஸ்.புரம் டி.பி ரோட்டிற்கு சென்று கொண்டிருந்த மாலதிக்கு, அந்த கோர சம்பவம் கண் முன் தோன்றியது...

-------------------------------------*-----------------------------------------

மாலதி வேலை செய்யும் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் , அன்றொரு நாள் மனேஜர் அலுவலகத்திற்கு வராதக் காரணத்தால், கோவையின் புற நகர் பகுதியிலுள்ள தேயிலை குடோனுக்கு மாலதி செல்ல வேண்டிய வேலை வந்தது. அங்கு வேலைகளை முடிப்பதற்க்கு இரவு 8 மணி ஆனது. வேக வேகமாக பஸ்ஸடாண்ட் நோக்கி நடந்த மாலதி தன் பின்னால் மெதுவாக ஊர்ந்து வரும் காரை கவனிக்கவில்லை.




அப்பகுதியிலிருந்து மாலதியின் வீட்டுக்குச் செல்லும் பேருந்து வருவதற்கு காலதாமதமானது. திடீரென நல்ல மழை, பஸ்ஸடாண்டில் நின்றிருந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்திலும், சிலர் ஆட்டோவிலும் சென்று விட, மாலதி தன் பேருந்திற்காக தனியாக காத்திருந்தாள்.


அவள் எதிர்பார்த்திராத தருணத்தில், ரேயின் கோர்ட்டினால் தனனை முழுவதும் மறைத்திருந்த ஒரு உருவம் அவள் பின்னாலிருந்து அவள் வாய் பொத்தி, இழுத்து சென்று, அருகில் கட்டிட வேலை நடந்துக் கொண்டிருந்த ஒரு காலியான கட்டிடத்தில் தன் காம பசியை தீர்த்துக் கொண்டது.



அதை இப்போது நினைக்கையிலும் , மாலதியின் உடல் கூசியது, நடுங்கியது. இந்த கருப்பு சம்பவம் நடந்து 2 வாரம் ஆன நிலையில், இப்போது அவள் அம்மா 'பெரிய இடத்து சம்பந்தம்' என்று இவள் திருமண பேச்சை ஆரம்பித்தது , அவளை மேலும் வேதனையடைய செய்தது.

---------------------------------------------------- *-------------------------------

மாலதி 'ரிச்சி ரிச்' ஐஸ்கிரீம் பார்லருக்குள் சென்றாள், ரஞ்சித் யார் என்று எப்படி கண்டு பிடிப்பது, அவன் இந்நேரம் இங்கு வந்து சேர்ந்திருப்பானா?? என்று இவள் யோசனையோடு தன் பார்வையை சுழல விட.......


" ஹாய் மாலதி, ஐ அம் ரஞ்சித்" என்று அழகிய ஒரு இளைஞன் , வசீகரமான புன்னைகையுடன் அவளிடம் தன்னை அறிமுகம் செய்தான்.
இரண்டு பேருக்கும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துவிட்டு " என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்க, என்னன்னு சொல்லுங்க மாலதி" என்று இருவருக்கும் நடுவில் இருந்த மெளனத்தை கலைத்தான் ரஞ்சித்.

மிடுக்கான தோற்றம், பணக்கார தோரனை, பெண்களின் கணவை கெடுக்கும் அத்தனை அம்சங்களும் நிறைந்தவனாக இருந்த ரஞ்சித்தை ஒரு கணம் தலை நிமிர்ந்து பார்த்தாள் மாலதி.இவ்வளவு இருந்தும் என்னை விரும்பி பெண் கேட்டு வந்திருக்கிறானா?? என்று யோசனையில் மூழ்கினாள்.
" என்ன யோசனை மாலதி.........ஃபீல் ஃபிரீ அண்ட் கம்ஃபர்டபிள்" என்று அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர எத்தனித்தான் ரஞ்சித்.


மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில் கண்ணீர் துளிகள் ததும்பின, செவ்விதழ் துடித்தது, தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளிவர தடுமாறியது.............
" அது வந்து....நான் .....உங்ககிட்ட........கொஞ்சம் பேசனும்....." என்று தயங்கி, தினறி, நாத்தழுதழுக்க, இடையில் விம்மல், அழுகையுடன் தனக்கு நடந்த அந்த கொடுரத்தை அவனிடம் சொல்லி முடித்தாள்.

சிறிய மெளனம் நிலவியது, ஒரு பெருமூச்சிற்கு பின்......

"மாலதி, உங்களுக்கு நடந்தது ஜஸ்ட் அன் அக்ஸிடண்ட், அதை நீங்க இப்போவே மறந்திடுங்க. நாம நடந்து போறப்போ நம்ம கால்ல அசிங்கம் ஒட்டினா, கழுவிட்டு போறதில்லையா, அது மாதிரி நினைச்சுக்கோ, நாம இதைபத்தி இனிமே பேசவேண்டாம், புது வாழ்ககையை என்னோடு ஆரம்பி மாலதி,திருமணத்திற்கு முன்னமே இதை நீ என்கிட்ட மறைக்காம சொன்னதை நான் பாராட்டுறேன். உன்னை மாதிரி அழகும், குணமும் நிறைந்த ஒரு பெண் எனக்கு மனைவியா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்" என்று உரிமையுடன் மேஜையின் மீதிருந்த மாலதியின் கரங்களை பற்றினான் ரஞ்சித்.


தன்னை ஒருமையில் உரிமையுடன் அழைத்து, தனக்கு நடந்த அந்த சம்பவத்தையும், தன் மனநிலையையும் எளிதாக புரிந்துக்கொண்ட அவன் உள்ளம் அவளுக்கு வியப்பாகயிருந்தது. அவன் கரங்களின் ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் பூரித்து போனாள் மாலதி.

நன்றியுணர்வு மேலோங்க பணிவுடன் தலை நிமிர்ந்த போதுதான், தன் கரங்களை பிடித்திருந்த அவன் இடது கையில் அணிந்திருந்த ' கை செயினை' [ப்ரேஸலட்] கவனித்தாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்த மாலதி, சுதாரித்துக் கொண்டு, " உங்க கையில்..........இந்த .............ப்ரேஸிலட், அது ......உங்களோடதா??" என்று கேட்டாள் அவனிடம்.

" ஆமாம் , என்னோடதுதான், ஏன் கேட்கிற மாலதி " என்றான்

" இல்ல புதுசு மாதிரி இருந்தது........அதான்" என்றாள் மாலதி யோசனையுடன்.

" ஆமாம் மாலதி, புதுசு தான், இது என்னோட ராசியான ப்ரேஸ்லட், என்னோட இன்ஷியல் இருக்குது பாரு" என்று அவளிடம் "RS" என்று தன் கைச்செயினில் தொங்கும் இன்ஷியலை காட்டிக்கொண்டே" எங்கேயோ என் ப்ரேஸ்லட் தொலஞ்சுப்போச்சு, இது என்னோட ராசியான ப்ரேஸ்லட், அதான் உடனே புதுசு செய்துட்டேன்" என்று விளக்கம் தந்தான்.

மாலதிக்கு தலை சுற்றியது, தன் நிலைக்கு வந்தவளுக்கு எல்லாம் இப்போது வெட்ட வெளிச்சமாக விளங்கியது. தன் கற்பை சூரையாடிய கயவனிடம் அவள் போராடியபோது அவள் கைபற்றியது அவனது கைச்செயின் மட்டுமே, அறுந்துப் போன அந்த கைச்செயினை தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்தாள் மாலதி.

" தொலைந்து போன உங்க ப்ரேஸ்லட் இதுதானா" என்று அந்த கைச்செயினை அவன் முன் ஆட்டினாள் மாலதி.

அதிர்ச்சியில் உரைந்துப் போனான் ரஞ்சித். பேச நாவரண்ட நிலையில் அவன் தடுமாற, தொடர்ந்தாள் மாலதி,


" ஏன் சார், நீங்க செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடுறீங்களா??? இருட்டில் நீங்க செய்த தப்புக்கு வெளிச்சத்தில் கணக்கு தீர்க்கபார்க்கிறீங்களா??"

"மாலதி.............அன்னிக்கு.........ஏதோ உணர்ச்சிவசப்பட்டு..........ஸாரி, நான் பண்ணினது பெரிய தப்பு, ...........அதான் உன்னை பெண் கேட்டு என் அப்பா........அம்மா......." என்று ரஞ்சித் முடிக்கும் முன் ,


" போதும் சார், நிறுத்துங்க, உண்மையிலேயே நீங்க உங்க தப்பை உணர்ந்து, எனக்கு வாழ்க்கை தரனும்னு நினைச்சிருந்தா, என் கிட்ட உண்மையை சொல்லி என்னை திருமணம் பண்ணியிருக்கனும். ஆனா நீங்க அப்படி பண்ணலியே, ஏதோ பெரிய தியாகம் பண்ற மாதிரி என்னை கட்டிக்க பெண் கெட்டு வருவீங்க, கல்யாணத்திற்கு முன்னமே எனக்கு நடந்த இழப்பை எல்லாம் நான் சொல்லும்போது பெருந்தன்மையா மன்னிப்பீங்க, நானும் நீங்க எனக்கு வாழ்க்கை தந்த தெய்வம்னு வாழ்க்கை முழுவதும் உங்க அடிமையா, உங்க உயர்ந்த உள்ளத்தை நினைச்சு உங்களை மதிக்கனும்,ஆனா என் மனசுகுள்ள குற்றவுணர்வுல கூனி குறிகி வாழனும், இல்லையா??"

"மா....ல........தி" என்று ரஞ்சித் பேச முயல,

"வேண்டாம், நீங்க போடுற இந்த பிச்சை வாழ்க்கை எனக்கு வேண்டாம், களங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, உங்களை மாதிரி வேஷம் போடுற கயவனோட நிச்சயம் வாழ மாட்டேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் நிமிர்ந்த நடையுடன் வெளியேறினாள் மாலதி.

November 14, 2007

தொ(ல்)லைபேசி கச்சேரி - பகுதி 2

பகுதி - 1

ஃபோனை எடுத்த நவீன், யாரென்றே சொல்லாமால் வம்பிழுத்த சுகனிடமும், வந்தனாவிடமும் கடலை வறுத்தான். நவீனுடன் ஃபோனில் பேசுமாறு சைகை காட்டி வற்புறுத்தினாள் சுகன், தன் கோபப் பார்வையிலேயே ரேகா தன் மறுப்பை தெரிவித்தாள்.

இப்படியாக அவ்வப்போது விஜியின் வீட்டிலிருந்தும், சுகனின் வீட்டிலிருந்தும் இந்த ஃபோன் கச்சேரி தொடர்ந்தது.
"நவீன் ஃபோன்ல எவ்வளவு நல்லா பேசுறான் தெரியுமா? அவன் கிட்ட பேசினா நேரம் போறதே தெரில, சச் அ ஸ்வீட் பேர்ஸன் ஹீ இஸ்" என்று அங்கலாய்த்தாள் வந்தனா.


"ஓய் அந்த ஃபோன் கடலை மன்னன் பத்தி என்கிட்ட பேசாதே, நீங்க யாருன்னே தெரியாம இப்படி மணிகணக்கா பேசுறான், அவனுக்கு நீங்க யாராயிருந்த என்ன, ஒரு பொண்ணு கிட்ட பேசினா போதும்னு அல்பத்தனமா இருக்கிறான்" என்று நவீனை மட்டம் தட்டிய ரேகாவை சுகனும், வந்தனாவும் எதிர்த்து தர்கித்து அவளை ஒரு வழி பண்ணிவிட்டனர்.

ஸடடி ஹாலிடேஸ் முடிந்து செமஸ்டர் எக்ஸாம் வந்துவிட்டதால் இந்த ஃபோன் கச்சேரி தற்காலிகமாக குறைந்தது. எக்ஸாம் முடிந்ததும் ரேகா தன் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு தன் உறவினர் திருமணத்திற்கு சென்றாள். சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்படும் அன்று ரேகா விஜியிடம் லைப்ரரி புக்ஸ் கொடுக்க வந்தாள் அவள் வீட்டிற்கு, விஜியின் அப்பார்ட்மெண்ட் ப்ளாக்கிற்கு எதிரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென ரேகாவின் ஸ்கூட்டியின் முன் ஓடிவர, ரேகா சடன் ப்ரேக் போடும்போது நிலைதடுமாறி கீழே சாய்ந்தாள் . கை முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
காய்காரனிடம் காய் வாங்கிக் கொண்டிருந்த நவீனின் அம்மா, விரைந்து வந்து, அவளுக்கு 'பேண்ட் ஏய்ட்' போட்டு உதவினார்." பார்த்து போம்மா" என்று பாசம் காட்டினார்.

ரேகா நெல்லைக்கு சென்றிருந்த ஒரு வாரத்தில் ஃபோன் கச்சேரி மீண்டும் கலை கட்டியது, விஜியும் அந்த கலாட்டாவில் கலந்துவிட்டிருந்தாள்.

சென்னைக்கு திரும்பிய ரேகா, தன் ஃபரண்ட்ஸ்காக வாங்கி வந்த 'திருநெல்வேலி அல்வா' கொடுப்பதற்காக விஜியின் வீட்டிற்கு சென்றாள். மாடி படியில் ஏற எத்தனிக்கும் போது தான் நவீனின் அம்மாவை ஏதேச்சையாக சந்தித்தாள். தன் கையிலிருந்த அல்வா பார்சலில் ஒன்றை நவீன் அம்மாவிடம் கொடுத்தாள் புன்னகையுடன். நவீனின் அம்மாவும் ரேகாவின் கையில் அடிப்பட்டது சரியாகிவிட்டதா என்று நலன் விசாரித்தாள்.
நவீன் அம்மாவிற்கு 'அல்வா' கொடுத்ததை தன் ஃபரண்ட்ஸிடம் சொன்னால் தன்னை ஓட்டி எடுத்துவிடுவார்கள், அதனால் அவர்களிடம் சொல்ல கூடாது எனற தீர்மானித்துடன் விஜியின் அபார்ட்மெண்டுக்கு சென்றாள்.

திருநெல்வேலி அல்வா அடிபிடியில் காலியானது. ரேகா ஊரில்லாத ஒரு வாரத்தில் தங்கள் ஃபோன் கச்சேரி எப்படி கலைகட்டியது என விவரித்தனர் மூவரும்.
இன்று ஃபோனில் நீ தான் பேசவேண்டும் என்றும் வற்புறுத்தினர் ரேகாவை,
நவீனிடம் பேச உனக்கு பயம் சும்மா இண்ரெஸ்ட் இல்லாத மாதிரி நடிக்கிற, என்று ரேகாவை வெறுப்பேத்தி, சவால் விட வைத்து ஃபோனை டயலும் செய்து ரேகாவிடம் ரீசிவரை கொடுத்தாள் சுகன்.
'சரி நாம பேசிடலாம், அவனுக்கு தான் நாம யாருன்னே தெரியாதே, எந்த பொண்ணு குரல் கேட்டாலும் பையன் பேசுவான், ஒரு 2 நிமிஷம் பேசிட்டா இவங்க அலம்பல்ல இருந்து தப்பிச்சுக்கலாம்' என்று நினைத்தவளாய்..



"ஹலோ" என்றாள் ரேகா ஃபோனில்.

நவீன்: ஹலோ!

ரேகா: மே ஐ ஸ்பீக் டூ நவீன்....?

நவீன்:ஸ்பீக்கிங்

ரேகா: எப் ப டி............இருக்கிறீங்க?

நவீன்: நான் நல்லா இருக்கிறேன், நீ எப்படி இருக்கிற, கைல அடிப்பட்டது சரியா போச்சா?



ரேகா: நா....ன் யாரு.....ன்னு உங்க....ளுக்கு.........


நவீன்:ஹே! உங்க ஊரு அல்வா சூப்பர்! செம டேஸ்டாயிருக்கு, நீ கொடுத்த அல்வா சாப்பிடுக்கிட்டே தான் உன் கிட்ட பேசுறேன்.

ரேகா:........................[அதிர்ச்சியில் உரைந்து போனாள்]

நவீன்: என்ன சவுண்டே காணோம்.........
ஏன் நீ என்கிட்ட இவ்வளவு நாள் பேசல......உன் ஃபரண்ட்ஸ் எல்லாம் பேசினாங்க, இப்போதான் என்கிட்ட பேசனும்னு தோனிச்சா? [ கொஞ்சலாக கேட்டான்!]


ரேகா: நான்...........நாங்க.......யாருன்னு தெரியுமா??


நவீன்:ஓ! நல்லாத்தெரியுமே!

ரேகா: எப்.......ப.........டி??


நவீன்:எங்க வீட்டுல 'காலர் ஐடி' இருக்கு ஃபோன்ல, ஸோ விஜி வீட்டு நம்பர் பார்த்து கண்டுபிடிச்சேன்.

ரேகா: அப்போ ஏன் தெரிஞ்ச மாதிரி இவ்வளவு நாள் காட்டிக்கல.......

நவீன்: எதேச்சையாக என்னை அபார்ட்மெண்ட் வெளியில பார்த்தா , கொஞ்சம் கூட உங்க ஃபோன் கச்சேரிய வெளிக்காட்டிக்காம ஆக்ட் விட்டாங்க உன் ஃபரெண்ட்ஸ், ஸோ நானும் அப்படியே மெயின்டேன் பண்ணிட்டேன்!!


ரேகா:இப்போ மட்டும் ஏன் காமிச்சுக்கிட்டீங்க தெரிஞ்ச மாதிரி........அதுவும் என் குரல் எப்படி கண்டு பிடிச்சீங்க?

நவீன்: மனசுக்கு பிடிச்சவங்க குரல் எப்படி தெரியாம போகும்?? அதுவும் நீ எப்போ கச்சேரியில கலந்துக்குவன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!!!!

ரேகா: ஹலோ இது ரொம்ப ஓவர்...............


இப்படியாக ரேகா, நவீன் ஃபோன் உரையாடல் நீண்டது, வளர்ந்தது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தாலும், மனம் விரும்பினாலும், அதை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர்...

நவீன் US க்கு திரும்பும் நாளும் வந்தது. அவன் புறப்படும் இரண்டு நாட்களுக்கு முன் ஃபோனில்,


ரேகா: ஹோய் என்ன மூட்டை முடிச்செல்லாம் பேக் பண்ணியாச்சா?

நவீன்: ஆமா ரேகா,ஒரளவுக்கு பேக்கிங் முடிஞ்சது.

ரேகா: அங்க போய்ட்டு, அம்மா அழுதாங்க ! ஆத்தா அழுதாங்கன்னு உடனே இந்தியாக்கு ஓடி வந்துடாதீங்க.

நவீன்: சரி

ரேகா: US போய் சேர்ந்ததும் எனக்கு ஒழுங்கு மரியாதையா இ-மெயில் பண்ணுங்க.

நவீன்:ஹும் சரி.

ரேகா: இனிமே என்னோட ஃபோன் தொல்லை இல்லாம ஜாலியா இருக்கலாம்னு மட்டும் கணவு காணாதீங்க..........ISD கால் போட்டும் கச்சேரி வைப்போம்ல நாங்க!


நவீன்: ஹும்

ரேகா: என்ன ஹும்........இ-மெயில்ல உங்க ஃபோன் நம்பர் எழுதலீனா நான் நேரா உங்க அம்மாகிட்டவே கேட்டிடுவேன் உங்க நம்பரை, ஜாக்கிரதை.


நவீன்: நான் கண்டிப்பா நம்பர் அனுப்புறேன்.




ரேகா: நவீன்.......

நவீன்: ஹும்


ரேகா: நவீன்.......


நவீன்: என்ன சொல்லு.....


ரேகா:எப்போ.........திரும்ப........இந்தியாவுக்கு வருவீங்க?



நவீன்: இந்தியாக்கு திரும்ப வந்திடாதேன்னு சொன்ன, அப்புறம் என்ன இப்போ எப்ப வருவீங்கன்னு கேள்வி?



ரேகா: இப்போ நான் சீரியஸா கேட்குறேன் நவீன், எப்போ திரும்பி வருவீங்க


நவீன்: கல்யாணத்துக்கு


ரேகா: எப்....போ கல்யாணம்?


நவீன்: அது நீ தான் சொல்லனும்


ரேகா:............


நவீன்: என்ன ஸலைண்ட் ஆகிட்ட.......எப்ப வைச்சுக்கலாம் நம்ம கல்யாணத்தை?


ரேகா:நி...ஜம்......மாவா சொல்றீங்க?


நவீன்:அதுல என்ன டவுட் உனக்கு, இந்த ஃபைனல் செமஸ்டர் படிச்சு முடி, நான் இன்னும் 6 மாசத்துல திரும்பி வரேன்...........அப்போ வைச்சுக்கலாம் நம்ம கல்யாண கச்சேரி.


ரேகா:ச.........ரி...........


வெட்கத்தில் முகம் சிவக்க, பூரிப்பில் நா தழு தழுக்க, தன் சம்மதத்தை தெரிவித்தாள் ரேகா!

ஃபோன் கச்சேரி....
நட்பாக வளர்ந்து,
காதலாக மலர்ந்து
கல்யாணத்தில் கனிந்தது!!



[முற்றும்]

November 12, 2007

தொ(ல்)லைபேசிக் கச்சேரி - பகுதி 1




" அம்மா இன்னைக்கு விஜி [ விஜயா] வீட்டுல கம்பைண்ட் ஸடடிமா, நான் போய்ட்டு சாயந்திரம் தான் வருவேன்" என்று தன் அம்மாவிடம் கூறிக் கொண்டே 'Digital Design - by Morris Mano' புக்கை தேடிக்கொண்டிருந்தாள் ரேகா.


" மதியம் சாப்பாடும் அங்கே தானாடி, விஜி அம்மாவை தொந்தரவு பண்ணாம ஒழுங்கா படிங்க, வேற யாரெல்லாம் வராங்க ரேகா?" என்று சமையலறையிலிருந்தபடியே மகளிடம் கேட்டார் ரேகாவின் அம்மா.
"சுகன்யாவும், வந்தனாவும் விஜி வீட்டுக்கு வராங்க, எப்பவும் போல நாங்க நாலு பேரு மட்டும் தான்மா" என்று பதிலளித்துக் கொண்டே தன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் ரேகா.



ரேகா, விஜியின் வீட்டை சென்றடையும் முன்னே சுகன்[ சுகன்யா], வந்தனா இருவரும் அங்கு ஆஜராகியிருந்தனர். ஒழுங்கு சிகாமனிகளாக நால்வரும் குரூப் ஸ்டடி செய்தனர். விஜியின் அம்மா , நாலு பேருக்கும் தக்காளி சாதமும், முட்டை குருமாவும் செய்து வைத்துவிட்டு பக்கதிலுள்ள கோயில் விசேஷத்திற்கு சென்றிருந்தார்.



மதிய உணவிற்கு பின், நான்கு பேருக்குமே படிக்க மூட் இல்லை, டிவி பார்க்கவும் போர் அடிக்கவே, பால்கணிக்கு வந்தனர். விஜியின் அபார்ட்மெண்ட் மூன்றாவது தளத்திலிருந்தது.



" விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை" என்று சலித்துக் கொண்டாள் சுகன்.
"ஹே சைட் அடிக்கிறேண்டா பேர்விழியின்னு என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கபா ப்ளீஸ், எங்க அபார்ட்மெண்ட் காம்பளெஸில் எனக்கு கொஞ்சம் நல்ல பொண்ணுன்னு பேரு இருக்கு, அதை பஞ்சர் பண்ணிடாதீங்க" என்று விஜி எச்சரிக்கை விட்ட அதே நேரத்தில், எதிரிலிருந்த பார்க்கிங்கில் இண்டிகா காரை பார்க் பண்ணிட்டு அதிலிருந்து ஒரு அழகிய இளைஞன் இறங்கி, விஜியின் அபார்ட்மெண்ட் ப்ளாக் நோக்கி நடந்து வந்தான்.




"ஹே விஜி, யாருடி இது, ஸ்மார்ட்டா ஒரு பையன், அதுவும் உங்க ப்ளாக்குள்ள வரான்............ஃபர்ஸ்ட் ஃபோளோர் அபார்ட்மெண்டுக்கு தான் போறான், யாருடி அது......" என்று வந்தனா கூச்சலிட,
நான்கு பேரும் பால்கணியிலிருந்து கீழே பார்த்தனர்.



"ரேகா, உன்னோட ஃபேவரைட் காம்பினேஷன் - 'டெனிம் ப்ளு ஜீன், ப்ளக் டீசர்ட்' போட்டிருக்கான்" என சுகன் ரேகாவின் கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள்.
"அதுக்கென்ன இப்போ" என்று அசட்டையுடன் வீட்டிற்குள் சென்றாள் ரேகா.
" அவ கிடக்கிறா விடு, விஜியை கார்னர் பண்ணு சுகன், அவன் யாருன்னு டியிடேல்ஸ் சொல்லாம பதுங்குறா பாரு" என வந்தனா விஜியின் பக்கம் போனாள்.



" நிஜம்மா அவன் யாருன்னு தெரியலையா உங்களுக்கு, அவன் தாண்டி அந்த SBOA ஸ்கூல் 'படிப்ஸ் நவீன்', கோயம்பத்தூர்ல இன்ஜினியரிங் பண்ணினானே அவன் தான் அது, அடையாளம் தெரிலியா ?" என்று விளக்கம் தந்தாள் விஜி.



"ஹே அந்த ஒல்லிப்பிச்சான் நவீனா இது...........கண்ணாடி போட்டுட்டு, வலிச்சி தலை வாரிட்டு பேக்காட்டும் இருப்பானே அவனாடி இப்படி படு ஸ்டைலா மாறிட்டான்???" என்று ஆச்சரியத்தில் வாய் பொழந்தாள் சுகன்.
" அவன் UG க்கு அப்புறம் எங்கயோ ஃபாரின் ல ஹையர் ஸ்டடீஸ் பண்றான்னு நீ எப்பவோ சொன்ன ஞாபகமிருக்கு விஜி" என்று வந்தனா தன் ஞாபக சக்த்தியை நிரூபிக்க முற்பட்டாள்.




"யா, யா! US ல MS படிக்க போனான், முடிச்சுட்டு அங்கயே வோர்க் பண்ணிட்டுயிருந்தான், அவன் அம்மா அவனை பார்க்காம இருக்க முடியலடா கண்ணான்னு ரொம்ப ஃபீலீங்க்ஸ் விட்டதும், பையன் ஒரு 6 மாசம் ப்ரோஜக்டுக்காக இங்கே வந்திருக்கான், வந்து 1 வாரம் ஆச்சு" என்று தன் தரப்பு தகவல்களை அள்ளித் தெளித்தாள் விஜி.



"எப்படிடி இவன் இப்படி மாறினான், 'சீஸ் பர்கரா' சாப்பிட்டு நல்லா வெயிட் போட்டு மஸ்தானாட்டம் ஆகிட்டான்", என்று தன் கண்டுபிடிப்பை பெருமையுடன் சொன்னாள் சுகன்.
" சே, சே! பையன் நல்லா பீர் குடிச்சிறுப்பான், அதான் குப்புனு வெயிட் ஏறிக்கிச்சு" என்று ரேகா தன் திருவாயை அப்போதுதான் திறந்தாள்.




"ஹே ரேகா, அவன் அப்படி பட்ட பையன் இல்லை, ரொம்ப நல்ல பையனாக்கும்" என்று சர்டிஃபிகெட் கொடுத்தாள் விஜி.
"ஐயே நீ அடங்கு , உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு, ஸோ நீ இப்படி சர்டிஃபிகெட் கொடுத்து ரூட் போடாதே" என்று விஜியை வாரினாள் வந்தனா.




" விஜி, விஜி!!! செம போரா இருக்குது, அந்த நவீன் வீட்டு ஃபோன் நம்பர் கொடு, சும்மா பேசி கலாட்டா பண்ணலாம்" என்று கெஞ்சலும் கொஞசலுமாக கேட்டாள் சுகன்.
" அடப்பாவிங்களா, சைட் அடிச்சோமா, கிண்டல் பண்ணினோமான்னு இருந்துக்க, இந்த ஃபோன் எல்லாம் பண்ணி, என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கபா" என்று எஸ்கேப் ஆகப் பார்த்தாள் விஜி.
" ஏய் சுகன், சொன்னா கேளு, இந்த வேண்டாத வேலையெல்லாம் உனக்கெதுக்கு, போர் அடிச்சா படுத்து தூங்கு, நைட்டாச்சும் கூட கொஞ்ச நேரம் முழிச்சிருந்து படிக்கலாம்" என்று அறிவுரை நாயகி ரேகா தன் பங்குக்கு சுகனைத் தடுத்தாள்.




ஆனால், அடம்பிடித்து, நச்சரித்து விஜியை தாஜா பண்ணி ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.





நவீன் வீட்டிலும் யாரும் இல்லை போலும், அவனே ஃபோன் எடுத்து...

"ஹலோ" என்றான் மறுமுனையில்.
.
"ஹலோ, கேன் ஐ டாக் டூ நவீன் ப்ளிஸ்..........." என்று பேச்சை ஆரம்பித்தாள் சுகன்.

[ நவீன் என்ன பேசினான்????.............அடுத்த பகுதியில்]

கச்சேரி தொடரும்.....

பகுதி 2

November 05, 2007

நன்றி சொல்ல உனக்கு ! வார்த்தை இல்லை எனக்கு!!





தமிழில் வலைப்பதிவிட ஆரம்பித்து ஒராண்டு ஆகிவிட்டது, இடையில் சில மாதங்கள் பதிவிட முடியாமல் போனாலும், வலைப்பதிவிட ஆரம்பித்து ஒரு வருஷம் ஆன இந்நாளில் , நான் வலைப்பதிவிட காரணமாயிருந்த , உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு!!



முதலில் வலையுலகின் மூலம் அநேக நண்பர்களின் அறிமுகமும், நட்பும் பெற்றுத்தந்த இறைவனுக்கு நன்றி!!!



தமிழில் எப்படி இணையதளத்தில் வலைப்பதிவிடுறாங்கன்னு நான் ஆச்சரியப்பட்ட நேரத்தில், தமிழில் தட்டச்சு செய்ய கற்றுத்தந்த என் குரு 'ஜொள்ளு பாண்டி' க்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழில் தட்டச்சு சொல்லிக்கொடுத்து , வலைப்பதிவு எழுதும் நிலைக்கு என்னை கொண்டு சென்றது அவரது ஊக்கம்.


வலைப்பதிவில் எப்படி பதிவிட வேண்டும், தமிழ்மணத்தில் எப்படி இணைய வேண்டும், பின்னூட்டங்களுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், என்று இன்னும் பல நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த அண்ணன் 'வெட்டி' க்கு கோடி நன்றி!!!


கதைகள் எழுதும் எண்ணத்தை என்னுள் உருவாக்கிய 'தேவ்' அண்ணாவுக்கு நன்றி. என் எழுத்துநடையை வெளிப்படையாக விமர்சித்து , ஊக்குவிப்பது என் தேவ் அண்ணா!!

என் எழுத்துகளில் பிழைத்திருத்தம் , இலக்கண திருத்தம் செய்து எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த
நண்பர் ' சந்தோஷ்' க்கு நன்றி!!


என் வலைப்பதிவின் தோற்றம், பதிவுகளின் தொகுப்பு இவற்றை அமைத்திட பெரிதும் உதவிய 'சிபி' க்கு மிக்க நன்றி!


என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உற்ச்சாகப்படுத்திய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.


குறிப்பாக ஆர்வமுடன் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நாட்டாமை 'ஷ்யாம்' க்கு நன்றி.
பின்னூட்டத்தில் பாராட்டு மழை பொழியும்
ப்ரியமான தோழி 'ப்ரியா' வுக்கு நன்றி.


எதிர்பாராத சில நிகழ்வுகளால் தொடர்ந்து வலைப்பதிவிட முடியாமல், எழுதுவதை கைவிட்ட என்னை மீண்டும் தொடர்ந்து எழுத வைத்தது பாலாஜி அண்ணாவின் அன்புக் கட்டளையும், வேண்டுக்கோளும்.


மீண்டும் பதிவிட தடுமாறி தயங்கிய என்னை உற்ச்சாகமூட்டிய என் ரசிகர்கள் 'ராம்' , 'ஜி' என்னால் மறக்க முடியாது!!

எனக்குள்ளும் சில திறமைகள் இருப்பதாகக் கூறி , அதனை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் உக்தி தெரிந்த
கவிஞர் 'நவீன்' க்கு என் மனமார்ந்த நன்றி!!

October 30, 2007

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 2










குமார்: எப்படி பேச்சை முதலில் ஆரம்பிப்பது என்று சொல்லு திவ்யா.


திவ்யா:முதல் எடுத்தவுடனே " என்னை உங்களுக்கு பிடிச்சிருக்கா?" அப்படின்னு அசட்டுத்தனமான கேள்வியெல்லாம் கேட்க கூடாது.
அப்படி நீ கேட்டு அதுக்கு அந்த பொண்ணு " ஆமாம்" என்று பதில் சொன்னா,

' வெளித்தோற்றம்' 'பெற்றோரின் வலியுறுத்தல்' காரணமா இருக்கலாம்.
"இல்லை" ன்னு பதில் சொன்னா,.............


குமார்: சரி , சரி.......போதும், இந்த கேள்வி நான் ஃபர்ஸ்ட் கேட்க மாட்டேன். வேற என்ன பேசுறதுன்னு சொல்லு.


திவ்யா: "உங்க 'saree' ரொம்ப அழகா , உங்களுக்கு பொறுத்தமா இருக்கு, உங்க செலக்க்ஷனா?"அப்படின்னு கேளு,
" ஆமாம்" ன்னு அவ பதில் சொன்னா, பொண்ணு சுயமா சிந்திக்கிறான்னு அர்த்தம்.
" இல்லை, என் அம்மா வாங்கித்தந்தாங்க"ன்னு சொன்னா, அம்மா பேச்சுக்கு 'உம்' கொட்டுற பொண்ணுன்னு புரிஞ்சுக்கலாம்.


குமார்: சரி அவ சுயசிந்தனை திறன் தெரிஞ்சாச்சு, அடுத்து.......


திவ்யா: அப்புறம் அவளோட ஆம்பிஷன்[ வாழ்க்கையில் லட்சியம், குறிக்கோள்] ஏதாவது இருக்கான்னு கேளு.
" ஆமாம்" ன்னு ஏதாவது ஒரு லட்ச்சியம் சொன்னா, அவளுக்கு வாழ்க்கையில் ஒரு பிடிப்பு இருக்குன்னு புரிஞ்சுக்கோ.
" அப்படி ஏதும் குறிப்பா குறிக்கோள் இல்லீங்க" ன்னு பதில் சொன்னா, ஏதோ பிறந்தோம், வளர்ந்தோம், வீட்டுல மாப்பிள்ளை பார்ட்த்துக் கட்டி வைக்கிறாங்கன்னு வாழ்க்கையை அதன் வழியில் ஏத்துக்கிற டைப்புன்னு அர்த்தம்.


குமார்: அடுத்து என்ன கேட்கலாம்?


திவ்யா: இது என்ன கேள்வி பதில் நேரமா? நீ மட்டும் தான் கேட்டுக்கிட்டேயிருப்பியா? அவளுக்கும் பேச சான்ஸ் கொடு, " உங்களுக்கு என் கிட்ட ஏதும் கேட்கனுமா?" ன்னு கேட்டுப் பாரு.


குமார்: அந்த பொண்ணு ஏதுவுமே பேசாம தலை குனிஞ்சுட்டேயிருந்துட்டான்னா??


திவ்யா:அப்படி அவ இருந்துட்டா, உன்னை பார்க்க கூட பிடிக்கலீன்னு அர்த்தம்.


குமார்: கிண்டல் அடிக்காம சொல்லு திவ்யா.


திவ்யா: அவ பேசலைன்னா, ஒன்னு ரொம்ப அடக்க ஒடுக்கமா நடிக்கிறான்னு அர்த்தம்,
இல்லீனா உண்மையிலேயே ரொம்ப வெட்கபடுகிற, ஆண்கள் கிட்ட பேச கூச்சப்படுகிற சுபாவமாயிருக்கலாம்.
அது நீ தான் கண்டுப்பிடிக்கனும்.


குமார்: அட இது வேற இருக்கா. சரி பதிலுக்கு அந்த பொண்ணு என்னை கேள்வி கேட்க ஆரம்பிச்சா?


திவ்யா: வெல் அண்ட் குட்! அவ பேசினா இன்னும் அதிகம் அவளை பற்றி தெரிஞ்சுக்கலாம் சுலபமா.
நீ கேட்ட அதே கேள்விகளை அவ திருப்பிக் கேட்டா, ஏதோ கேள்வி கேட்கனுமேன்னு கேட்கிறா.
அவளே ஏதாவது கேட்டா, உன்னை பற்றி தெரிஞ்சுக்க நினைக்கிறான்னு அர்த்தம்.


குமார்: அப்படி என்ன தான் பொண்ணுங்க கேட்பாங்க?


திவ்யா: அது பெண்ணுக்கு பெண் வேறுபடும், ஆனால், அந்த பொண்ணு " நீங்க எந்த ஊர்ல வேலை பார்க்குறீங்க, எந்த ஸ்கூல்ல படிச்சீங்க?" என்று ஒப்புக்கு கேள்வி கேட்டா, உன்னை பற்றி எதுவுமே தன் பெற்றோரிடம் கேட்டு தெரிந்துக் கொள்ளாமல், அவர்கள் விருப்பத்திற்காக இந்த பெண் பார்க்கும் சம்பவத்தில் பங்கு வகிக்கிறாள் , இல்லையென்றால் இந்த திருமண விஷயத்தில் அவளுக்கு ஈடுபாடு இல்லாததும் காரணமாக இருக்கலாம்.


குமார்: சரி , சமைக்க தெரியுமா ன்னு கேட்டுடலாமா?


திவ்யா: நீ உன் காரியத்திலேயே கண்ணாயிரு.
அப்படி டைரக்ட்டா கேட்காதே.


அவளொட ஃபேவரைட் ஃபுட் என்னன்னு கேளு, அவ ஏதாச்சும் ஒரு ஃபுட் பேரு சொல்லும் போது அவ முகத்தில் ஒரு பூரிப்பு இருந்தா, சமைக்க தெரியவில்லைன கூட , சுவையுணர்வு இருக்கிறதால சமைக்க கற்றுக் கொள்ளும் ஆர்வம் இருக்கலாம்.
வீட்டு சாப்பாடு பிடிக்குமா, இல்லை வெளில சாப்பிட பிடிக்குமா ன்னு வேணா இன்னொரு கேள்வி கேட்டு, அவ சமையல் திறனை புரிஞ்சுக்கோ.


குமார்: இவ்வளவு கேள்வி கேட்டாவே ஒரளவுக்கு அந்த பொண்ணை புரிஞ்சுக்க முடியுமா?


திவ்யா: ஹும், புரிஞ்சுக்கிறது உன் திறமை. வேணா இன்னும் ஒரே ஒரு டிப்ஸ் தரேன்,


" உங்க வீடு ரொம்ப அழகா , நீட் அண்ட் ப்ரைட்டா இருக்கு, நீங்க தான் இப்படி மெயிண்டேன் பண்றதா? நல்ல ரசனை உங்களுக்கு" அப்படின்னு சும்மா போட்டுப் பாரு,


அவ கொஞ்சம் அதிர்ச்சி ஆகி, 'பே பே' ன்னு முழிச்சா..........பெண் பார்க்க வர்ரதால தான் அவ வீட்டில் உள்ளவங்க வீட்டை இவ்வளவு நீட்டாக்கிருக்காங்க, மத்தப்படி அவளுக்கும் இதுக்கும் சம்பதேமே இல்லைன்னு அர்த்தம்.


" ரொம்ப தாங்க்ஸ்ங்க உங்க காம்பிளிமெண்ட்ஸ்க்கு, இந்த பெயிண்டிங் வொர்க் , ஆர்ட் வொர்க் எல்லாம் நானே பண்ணினது " அப்படின்னு ஆர்வமா அவ தன் கைத்திறனை காட்டினா.......
ரொம்ப பொறுப்புள்ள, கலை ரசனையுள்ள , வீட்டை சுத்தமாக பராமரிக்கும் திறனுள்ள பொண்ணுன்னு புரிஞ்சுக்கலாம்.
வீட்டை அழகா, நேர்த்தியா வைக்க பிரியப்படுகிற பெண்கள் நிறைய பேருக்கு சமைக்கவும் ஒரளவுக்கு தெரிந்திருக்கும்,
அப்படி அவர்கள் கற்றுக்கொள்ள திருமணத்திற்கு முன் சந்தர்ப்பம் கிடைக்கலீனாலும், திருமணத்திற்கு பின் ஆர்வத்துடன் கற்றுக்கொள்வார்கள்.
அதனால, "பொண்ணுக்கு சமைக்க தெரியுமா? சமைக்க தெரியுமா? "ன்னு அது பற்றி மட்டுமே யோசிச்சுட்டு இருக்காம, சகஜமா பேசி , அந்த பெண்ணை பற்றி தெரிஞ்சுக்க ட்ரை பண்ணு.


ஆல் தி பெஸ்ட் குமார்!!


குமார்: ஹே ரொம்ப தேங்க்ஸ் திவ்யா, இன்னும் டிப்ஸ் வேணும்னா அப்புறமா கேட்டுக்கிறேன்.



[முற்றும்.]

October 23, 2007

பெண் பார்க்க போலாமா??? - பகுதி 1


என் கல்லூரி சீனியர், என் நண்பர் குமாரின் தங்கையின் திருமணத்திற்கு சென்றிருந்தேன், அங்கும் இங்கும் ஓடியாடி கலயாணவேலைகளைக் கவனித்துக் கொண்டிருந்தான் குமார். 'பரவாயில்லையே! தன் வீட்டுக் கலயாண வேலை எல்லாம் இழுத்துப் போட்டுக்கொண்டு செய்கிறானே என்று பாராட்டினேன், அதற்கு அவன் சொன்ன பதில், அதன் பின்னான எங்கள் உரையாடல்..........
குமார்: நீவேற திவ்ஸு, நானாவது வேலை எல்லாம் செய்றதாவது. என் தங்கைக்கு கல்யாணம் ஆனா என் 'லைன் க்ளியர்' ஆச்சு இல்ல, அடுத்து எனக்குத்தான் கல்யாணம், ஸோ இப்படி அங்கயும் இங்கயுமா ஓடியாடி வேலை செய்தா நாலு பேர் கண்ணுல படுவேன், அதுக்கு தான் இந்த ஸீன்.......
நான்: அடப்பாவி! சரி அப்படி நாலு பேர் கண்ணுல நீ ஏன் படனும்??
குமார்: இதுக்கூடவா புரில, அப்போதான் பொண்ணு வைச்சிருக்கவங்க நாலு பேர் கண்ணுல படுவேன், என்னை மாப்பிள்ளை கேட்டு வருவாங்க.
நான்: அடச்சீ வெட்கமா இல்ல, தங்கை கல்யாணதுக்கு நல்லா வேலை செய்றியேன்னு பார்த்தா, நீ இப்படி என்னத்துல அலையுறியா??
குமார்: ஓய் இதுல வெட்க்கப்பட என்ன இருக்கு, எவ்வளவு நாள் தான் நான் McD லயும்[ Mc Donalds], BK லேயும் [Burger King] சாப்பிடுட்டு இருக்கிறது.
தங்கச்சிக்கு கல்யாணம் முடிந்ததும் உனக்கு பொண்ணு பார்த்திடலாம்டா ன்னு அம்மா சொன்னாங்க.
ஆனா பாரு, நான் மூன்று வருஷம் தொடர்ந்து அமெரிக்கா ல ஆணி புடுங்கிட்டு இருந்துட்டேனா, இங்க இருக்கிற சொந்த பந்தத்துக்கெல்லாம் என்னை ஞாபகம் இருக்காது, அதான் ஒரு விளம்பரத்திற்க்காக இங்க ஆக்ட் விட்டுட்டு இருக்கிறேன், இது பொறுக்காதே உனக்கு???
நான்: ஹேய் குமார், நீ சொல்றது பார்த்தா, சமையலுக்கு ஆள் தேடுறாப்ல இருக்கு?
குமார்: இங்க பாரு திவ்ஸு, உண்மை கொஞ்சம் கசக்கதான் செய்யும், ஆனாலும் கேட்டுக்கோ, கல்யாணம் பண்ணிக்க நினைக்கிற முக்கால்வாசி பேச்சுலர் பசங்க ஆசைபடுற முக்கிய தேவைகளில் இந்த சமையல் தான் ஃபர்ஸ்ட்.
நான்: ஓஹோ அப்படியா! சரி, நானும் ஒரு உண்மை சொல்றேன் நீ கேட்டுக்கோ. இந்த காலத்து பொண்ணுங்க முக்கால்வாசி பேருக்கு சமைக்கவே தெரியாது.
'சமைக்க தெரியாது' ன்னு சொல்றது ஒரு ஸ்டையில் + ஃபேஷன், தெரியுமா உனக்கு????
குமார்: அடிப்பாவிங்களா, ஹே திவ்ஸு நிஜம்மாதான் சொல்றியா??
நான்: இதுல ஏன் நான் பொய் சொல்றேன், நீ வேனா பாரு, உன கல்யாணத்துக்கு அப்புறமும் நீ McD லேயும், BK லேயும் இரண்டு பார்சல் [togo] வாங்கிட்டு போய் உன் சம்சாரியோடு வீட்டுல சேர்ந்து சாப்பிட போற.
குமார்: என்ன நீ இப்படி பயமுறுத்துற,
ஏதோ ஒரு வரன் வந்திருக்கு, இன்னும் இரண்டு நாள்ல போய் பெண் பார்க்கனும்னு அம்மா சொன்னாங்க.
திவ்ஸு, நான் பெண் பார்க்க போறப்போ, அந்த பொண்ணு கிட்ட என்ன பேசலாம், எப்படி அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம் ன்னு கொஞ்சம் சொல்லிக் கொடேன்.
நான்: நீ சமையலுக்கு தான ஆள் தேட போற, ஸோ நேரா பொண்ணுக்கிட்ட " இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் நீ செய்ததா?" ன்னு கேளு,
அதுக்கு அவ " இல்ல தெருமுனையில இருக்கிற பலகார கடையில வாங்கினதுங்க" அப்படின்னு பதில் சொன்னா, உன் அம்மா கிட்ட அடுத்த வரன் பார்க்க சொல்லு,
" நானே தான் இந்த பஜ்ஜி , சொஜ்ஜி எல்லாம் செய்தேன்" னு அவ சொன்னா, "இவளே என் சமையல் காரி.............ஊப்ஸ் ஸாரி, இவ தான் என் சம்சாரி " அப்ப்டின்னு முடிவு பண்ணிடு.
குமார்: என்ன கிண்டலாயிருக்கா என்ன பார்த்தா? வெறுப்பேத்தாம ஏதாவது ஐடியா கொடு திவ்யா.
நான்: உன்ன பார்த்தா பாவமாதான் இருக்கு, திவ்யா னு மரியாதையா வேற கேட்குற, ஸோ ஐடியா தரேன், ஆனா.........
பத்து வருஷம் காதலிச்சு கல்யாணம் கட்டிக்கிட்டவனுக்கே தன் மனைவியின் மனதை புரிஞ்சுக்க முடில, நீ 10 நிமிஷம் அந்த பொண்ணு கிட்ட பேசி அவளை பத்தி எப்படி தெரிஞ்சுப்பே?
சரி உனக்கு என்னவெல்லாம் அந்த பொண்ணு பத்தி தெரிஞ்சுக்கனும்னு சொல்லு,
நீ என்ன கேள்விகள் கேட்டா? அதற்கு அவ எப்படி பதில் சொன்னா அவளை பத்தி தெரிஞ்சுக்கலாம்னு நான் சொல்லித் தரேன்..........


[தொடரும்....]

October 14, 2007

மணமகளே! மருமகளே!! வா வா....!!!



திருமணம் நிச்சயக்கப்பட்டிருக்கும் பெண்ணா நீங்கள், இந்த போஸ்ட் உங்களுக்கே உங்களுக்கு தான்......

மணவாழ்ககையில் புதிதாக அடியெடுத்து வைத்திருக்கும் பெண்ணா நீங்கள், அப்போ இந்த போஸ்ட நீங்க மணப்பாடம் செய்துக்கோங்க......

திருமணம் ஆகி பல வருடம் ஆயாச்சு, மாமியோரோடு தினமும் 'குஸ்தி'யும் போட்டாச்சுன்னு யோசிக்கிறீங்களா.......கவலையே வேண்டாம், இந்த டிப்ஸ் எல்லாம் கடைபிடிக்க கத்துக்கோங்க, ஜமாய்ச்சுடலாம்!!!!

சிறந்த மருமகள் என்று பெயர் எடுக்க இதோ சில முக்கியமான டிப்ஸ்..........

1. உங்கள் மாமியாரை உங்கள் தாயை போல நேசித்து, " அம்மா" என்று அன்போடு அழையுங்கள், 'அம்மா' என்ற மூன்றெழுத்தின் ஆழமும், ஆற்றலும் அதிகம். பாசமான ஒரு நெருக்கத்தை உங்கள் மாமியாரோடு இணைக்கும் இந்த அழகு வார்த்தை.

2.உங்கள் மாமியார் அள்ளித்தரும் அறியுரைகளை அமைதியுடன் கவனியுங்கள், எதிர்மறை கருத்துக்கள் இருக்குமாயின் அவர் அறியுரை வழங்கும் நேரத்தில் அதனை எடுத்துரைத்து தர்க்கிக்காமல், பிறகொரு சந்தர்ப்பத்தில் பணிவோடு தெரிவியுங்கள்.

3.உங்கள் கணவருக்கு பிடித்தவை எவை, பிடிக்காதவை எவை என உங்களுக்குத் தெரிந்திருந்தாலும், மாமியாரிடம் கேட்டு, அவரிடிமிருந்தும் தெரிந்துக் கொள்ளுங்கள்.
தன் ஆசை மகனின் விருப்பு, வெறுப்புகளை பட்டியலிடுவதில் தாய்மார்களுக்கு ஒரு அலாதி பிரியம்.

4.உங்கள் கணவரின் சிறு வயது குறும்புகள், சாதனைகள், மறக்க முடியாத சுவாரிஸியமான சம்பவங்கள் போன்றவற்றை, மாமியாரிடம் கேளுங்கள்.
சுவைக்க சுவைக்க 'மலரும் நினைவுகளை' பகிர்ந்துக் கொள்வார்கள். மாமியாரோடு உறவாட இது உதவிப் புரியும்.

5.குடும்பமாக வெளியில் செல்லும்போது, மாமியோரோடு சேர்ந்து நடக்கலாம். இது அவருக்கு உற்ச்சாகத்தையும், உங்கள் மீது நல்லெண்ணத்தையும் உருவாக்கும்.

6.குடும்ப விஷயங்களை விவாதிக்கும் போது, அவர் கருத்துக்களை கவனித்துக் கேளுங்கள். அவருக்கு நீங்கள் தரும் முக்கியத்துவம் உங்களை அவர் மனதில் சிங்காசனம் போட்டு உட்கார வைக்கும்.

7.மாமியாருக்கு பிடித்த உணவினை அவருக்கு அவ்வப்போது சமைத்துக் கொடுக்க மறவாதிருங்கள். அவர் சமைத்தால், சமயலை மனதார புகழுங்கள், சமயல் டிப்ஸ் கேட்டு தெரிந்துக் கொள்ள முயற்ச்சித்தால் உங்கள் மாமியார் உங்கள் அன்பில் திக்கு முக்காடி போவார்.

8.எல்லா அம்மாக்களுக்கும் தன் பையன் தனக்கு மட்டுமே சொந்தம் [ possesivness] என்ற உணர்வு அதிகம் இருக்கும், அதுவும் அவனின் வாழ்க்கையை பகிர்ந்துக் கொள்ள இன்னொரு பெண் இருக்கிறாள் என்ற எண்ணம், அந்த உணர்வை அதிகப்படுத்தும்.
இதனை மனதில் கொள்வது ஒரு மருமகளுக்கு மிக மிக முக்கியம். மாமியாரின் இந்த இயற்கையான உணர்வை மதித்து, புரிந்து நடந்துக் கொண்டால் நீங்கள் தான் மாமியார் மெச்சும் மருமகள்.

என் தோழிகள் பலர் மணவாழ்க்கையில் அடியெடுத்து வைக்க போவதாலும், சிலர் அடியெடுத்து வைத்துவிட்டு மாமியாரை எப்படி வசியப்படுத்துவது என தெரியாமல் 'பேந்த பேந்த' விழிப்பதாலும், மாமியாரான சில அம்மாக்களிடம் அவர்கள் கருத்துக்களை அறிந்து , அராய்ந்து தெரிந்துக் கொண்ட சில டிப்ஸ் தான் மேற் சொன்னவை,
இன்னும் குறிப்புகளை உங்கள் அனுபவத்தில் அறிந்திருந்தால், பின்னூட்டத்தில் பகிர்ந்துக் கொள்ளவும்.
[திருமணம் ஆன ஆண்கள், தங்கள் மனைவிக்கு இந்த டிப்ஸை சொல்லிக் கொடுத்து, உங்கள் அன்னைக்கும்-தங்கமணிக்கும் நடுவில் உங்கள் தலை உருளுவதை தவிர்க்கலாம்]