November 27, 2007

பூவொன்று புயலானது!!!

அலுவலகத்திற்கு செல்ல தயராகிக் கொண்டிருந்த மாலதியிடம், அவள் அம்மா " மாலதி, நாளைக்கு ஆஃபீஸிற்கு லீவு சொல்லிட மறந்திடாதேம்மா" என்றாள் தயக்கத்துடன்.

" எதுக்குமா இப்போ...........எனக்கு.......கல்யாணம்....." என்ற மாலதியை இடைமறித்தாள் அவள் அம்மா, " இப்படியே எந்தனை நாள் தான் சொல்லிட்டுருப்ப, அப்பா இல்லாத நம்ம குடும்பத்தை தாங்க நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும். இவ்வளவு பெரிய இடத்துல இருந்து, அவங்களே விரும்பி உன்னை பெண் கேட்டு வந்திருக்காங்க, நாளைக்கு உன்னை பார்க்க மாப்பிள்ளையோட வீட்டுக்கு வராங்க,தயவு செய்து மறுப்பேதும் சொல்லாதே மாலதி".
"நேத்து ராத்திரி முழுவதும் உன்கிட்ட போராடி உன்னை சம்மதிக்க வைக்கிரதுக்குள்ள எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு, எவ்வளவு நாள் தான் உன்னை கண்ணிப் பெண்ணா வீட்டுல வைச்சிட்டு இருக்கிறது , எனக்கும் உன்னை கட்டிகொடுக்கிற கடமை இருக்குதும்மா" என்று கண் கலங்கிய அம்மாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாதவளாய், அம்மாவின் ' அந்த' வார்த்தை அவள் மனதை பிசைய, வேகமாக பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தாள் மாலதி......
---------------------------------- *-------------------------------------------------

அலுவலகத்தில் இருந்தபோது தான் மாலதிக்கு திடீரென , நாளைக்கு தனனை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையின் விசிட்டிங் கார்டை அம்மா தன்னிடம் தந்த போது , அதனை தன் கைப்பைக்குள் வைத்தது நினைவுக்கு வந்தது.

Ranjith M.B.A
Managing Director
Baargavi Textile Mills
Avinashi
Coimbatore

ஒரு மில் அதிபரின் குடும்பம் தான் மாலதியை விரும்பி பெண் கேட்டு வந்திருப்பதாக அம்மா சொன்னதை நினைவு படுத்திக் கொண்டாள். கார்ட்டில் இருந்த ஃபோன் நம்பருக்கு டயல் செய்தாள்.

ரிஷப்னிஸ்ட், MD யின் உதவியாளர், என்று பலரையும் கடந்து ரஞ்சித் லைனில் வந்தான். அவனிடம் தனியாக இன்றே தான் பேச விரும்புவதாக மாலதி கூறியதும், அதற்காகவே காத்திருந்ததுபோல் உடனே ஒப்புக்கொண்டான்.

டி.பி ரோட் 'ரிச்சி ரிச்' ஐஸ்கிரீம் பார்லரில் சந்திப்பதாக கூறினாள் மாலதி.

காந்திபுரத்திலிருந்து 7ஆம் எண் பேருந்தில் ஆர்.ஸ்.புரம் டி.பி ரோட்டிற்கு சென்று கொண்டிருந்த மாலதிக்கு, அந்த கோர சம்பவம் கண் முன் தோன்றியது...

-------------------------------------*-----------------------------------------

மாலதி வேலை செய்யும் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் , அன்றொரு நாள் மனேஜர் அலுவலகத்திற்கு வராதக் காரணத்தால், கோவையின் புற நகர் பகுதியிலுள்ள தேயிலை குடோனுக்கு மாலதி செல்ல வேண்டிய வேலை வந்தது. அங்கு வேலைகளை முடிப்பதற்க்கு இரவு 8 மணி ஆனது. வேக வேகமாக பஸ்ஸடாண்ட் நோக்கி நடந்த மாலதி தன் பின்னால் மெதுவாக ஊர்ந்து வரும் காரை கவனிக்கவில்லை.




அப்பகுதியிலிருந்து மாலதியின் வீட்டுக்குச் செல்லும் பேருந்து வருவதற்கு காலதாமதமானது. திடீரென நல்ல மழை, பஸ்ஸடாண்டில் நின்றிருந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்திலும், சிலர் ஆட்டோவிலும் சென்று விட, மாலதி தன் பேருந்திற்காக தனியாக காத்திருந்தாள்.


அவள் எதிர்பார்த்திராத தருணத்தில், ரேயின் கோர்ட்டினால் தனனை முழுவதும் மறைத்திருந்த ஒரு உருவம் அவள் பின்னாலிருந்து அவள் வாய் பொத்தி, இழுத்து சென்று, அருகில் கட்டிட வேலை நடந்துக் கொண்டிருந்த ஒரு காலியான கட்டிடத்தில் தன் காம பசியை தீர்த்துக் கொண்டது.



அதை இப்போது நினைக்கையிலும் , மாலதியின் உடல் கூசியது, நடுங்கியது. இந்த கருப்பு சம்பவம் நடந்து 2 வாரம் ஆன நிலையில், இப்போது அவள் அம்மா 'பெரிய இடத்து சம்பந்தம்' என்று இவள் திருமண பேச்சை ஆரம்பித்தது , அவளை மேலும் வேதனையடைய செய்தது.

---------------------------------------------------- *-------------------------------

மாலதி 'ரிச்சி ரிச்' ஐஸ்கிரீம் பார்லருக்குள் சென்றாள், ரஞ்சித் யார் என்று எப்படி கண்டு பிடிப்பது, அவன் இந்நேரம் இங்கு வந்து சேர்ந்திருப்பானா?? என்று இவள் யோசனையோடு தன் பார்வையை சுழல விட.......


" ஹாய் மாலதி, ஐ அம் ரஞ்சித்" என்று அழகிய ஒரு இளைஞன் , வசீகரமான புன்னைகையுடன் அவளிடம் தன்னை அறிமுகம் செய்தான்.
இரண்டு பேருக்கும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துவிட்டு " என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்க, என்னன்னு சொல்லுங்க மாலதி" என்று இருவருக்கும் நடுவில் இருந்த மெளனத்தை கலைத்தான் ரஞ்சித்.

மிடுக்கான தோற்றம், பணக்கார தோரனை, பெண்களின் கணவை கெடுக்கும் அத்தனை அம்சங்களும் நிறைந்தவனாக இருந்த ரஞ்சித்தை ஒரு கணம் தலை நிமிர்ந்து பார்த்தாள் மாலதி.இவ்வளவு இருந்தும் என்னை விரும்பி பெண் கேட்டு வந்திருக்கிறானா?? என்று யோசனையில் மூழ்கினாள்.
" என்ன யோசனை மாலதி.........ஃபீல் ஃபிரீ அண்ட் கம்ஃபர்டபிள்" என்று அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர எத்தனித்தான் ரஞ்சித்.


மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில் கண்ணீர் துளிகள் ததும்பின, செவ்விதழ் துடித்தது, தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளிவர தடுமாறியது.............
" அது வந்து....நான் .....உங்ககிட்ட........கொஞ்சம் பேசனும்....." என்று தயங்கி, தினறி, நாத்தழுதழுக்க, இடையில் விம்மல், அழுகையுடன் தனக்கு நடந்த அந்த கொடுரத்தை அவனிடம் சொல்லி முடித்தாள்.

சிறிய மெளனம் நிலவியது, ஒரு பெருமூச்சிற்கு பின்......

"மாலதி, உங்களுக்கு நடந்தது ஜஸ்ட் அன் அக்ஸிடண்ட், அதை நீங்க இப்போவே மறந்திடுங்க. நாம நடந்து போறப்போ நம்ம கால்ல அசிங்கம் ஒட்டினா, கழுவிட்டு போறதில்லையா, அது மாதிரி நினைச்சுக்கோ, நாம இதைபத்தி இனிமே பேசவேண்டாம், புது வாழ்ககையை என்னோடு ஆரம்பி மாலதி,திருமணத்திற்கு முன்னமே இதை நீ என்கிட்ட மறைக்காம சொன்னதை நான் பாராட்டுறேன். உன்னை மாதிரி அழகும், குணமும் நிறைந்த ஒரு பெண் எனக்கு மனைவியா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்" என்று உரிமையுடன் மேஜையின் மீதிருந்த மாலதியின் கரங்களை பற்றினான் ரஞ்சித்.


தன்னை ஒருமையில் உரிமையுடன் அழைத்து, தனக்கு நடந்த அந்த சம்பவத்தையும், தன் மனநிலையையும் எளிதாக புரிந்துக்கொண்ட அவன் உள்ளம் அவளுக்கு வியப்பாகயிருந்தது. அவன் கரங்களின் ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் பூரித்து போனாள் மாலதி.

நன்றியுணர்வு மேலோங்க பணிவுடன் தலை நிமிர்ந்த போதுதான், தன் கரங்களை பிடித்திருந்த அவன் இடது கையில் அணிந்திருந்த ' கை செயினை' [ப்ரேஸலட்] கவனித்தாள்.

ஒரு நிமிடம் அதிர்ந்த மாலதி, சுதாரித்துக் கொண்டு, " உங்க கையில்..........இந்த .............ப்ரேஸிலட், அது ......உங்களோடதா??" என்று கேட்டாள் அவனிடம்.

" ஆமாம் , என்னோடதுதான், ஏன் கேட்கிற மாலதி " என்றான்

" இல்ல புதுசு மாதிரி இருந்தது........அதான்" என்றாள் மாலதி யோசனையுடன்.

" ஆமாம் மாலதி, புதுசு தான், இது என்னோட ராசியான ப்ரேஸ்லட், என்னோட இன்ஷியல் இருக்குது பாரு" என்று அவளிடம் "RS" என்று தன் கைச்செயினில் தொங்கும் இன்ஷியலை காட்டிக்கொண்டே" எங்கேயோ என் ப்ரேஸ்லட் தொலஞ்சுப்போச்சு, இது என்னோட ராசியான ப்ரேஸ்லட், அதான் உடனே புதுசு செய்துட்டேன்" என்று விளக்கம் தந்தான்.

மாலதிக்கு தலை சுற்றியது, தன் நிலைக்கு வந்தவளுக்கு எல்லாம் இப்போது வெட்ட வெளிச்சமாக விளங்கியது. தன் கற்பை சூரையாடிய கயவனிடம் அவள் போராடியபோது அவள் கைபற்றியது அவனது கைச்செயின் மட்டுமே, அறுந்துப் போன அந்த கைச்செயினை தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்தாள் மாலதி.

" தொலைந்து போன உங்க ப்ரேஸ்லட் இதுதானா" என்று அந்த கைச்செயினை அவன் முன் ஆட்டினாள் மாலதி.

அதிர்ச்சியில் உரைந்துப் போனான் ரஞ்சித். பேச நாவரண்ட நிலையில் அவன் தடுமாற, தொடர்ந்தாள் மாலதி,


" ஏன் சார், நீங்க செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடுறீங்களா??? இருட்டில் நீங்க செய்த தப்புக்கு வெளிச்சத்தில் கணக்கு தீர்க்கபார்க்கிறீங்களா??"

"மாலதி.............அன்னிக்கு.........ஏதோ உணர்ச்சிவசப்பட்டு..........ஸாரி, நான் பண்ணினது பெரிய தப்பு, ...........அதான் உன்னை பெண் கேட்டு என் அப்பா........அம்மா......." என்று ரஞ்சித் முடிக்கும் முன் ,


" போதும் சார், நிறுத்துங்க, உண்மையிலேயே நீங்க உங்க தப்பை உணர்ந்து, எனக்கு வாழ்க்கை தரனும்னு நினைச்சிருந்தா, என் கிட்ட உண்மையை சொல்லி என்னை திருமணம் பண்ணியிருக்கனும். ஆனா நீங்க அப்படி பண்ணலியே, ஏதோ பெரிய தியாகம் பண்ற மாதிரி என்னை கட்டிக்க பெண் கெட்டு வருவீங்க, கல்யாணத்திற்கு முன்னமே எனக்கு நடந்த இழப்பை எல்லாம் நான் சொல்லும்போது பெருந்தன்மையா மன்னிப்பீங்க, நானும் நீங்க எனக்கு வாழ்க்கை தந்த தெய்வம்னு வாழ்க்கை முழுவதும் உங்க அடிமையா, உங்க உயர்ந்த உள்ளத்தை நினைச்சு உங்களை மதிக்கனும்,ஆனா என் மனசுகுள்ள குற்றவுணர்வுல கூனி குறிகி வாழனும், இல்லையா??"

"மா....ல........தி" என்று ரஞ்சித் பேச முயல,

"வேண்டாம், நீங்க போடுற இந்த பிச்சை வாழ்க்கை எனக்கு வேண்டாம், களங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, உங்களை மாதிரி வேஷம் போடுற கயவனோட நிச்சயம் வாழ மாட்டேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் நிமிர்ந்த நடையுடன் வெளியேறினாள் மாலதி.

November 14, 2007

தொ(ல்)லைபேசி கச்சேரி - பகுதி 2

பகுதி - 1

ஃபோனை எடுத்த நவீன், யாரென்றே சொல்லாமால் வம்பிழுத்த சுகனிடமும், வந்தனாவிடமும் கடலை வறுத்தான். நவீனுடன் ஃபோனில் பேசுமாறு சைகை காட்டி வற்புறுத்தினாள் சுகன், தன் கோபப் பார்வையிலேயே ரேகா தன் மறுப்பை தெரிவித்தாள்.

இப்படியாக அவ்வப்போது விஜியின் வீட்டிலிருந்தும், சுகனின் வீட்டிலிருந்தும் இந்த ஃபோன் கச்சேரி தொடர்ந்தது.
"நவீன் ஃபோன்ல எவ்வளவு நல்லா பேசுறான் தெரியுமா? அவன் கிட்ட பேசினா நேரம் போறதே தெரில, சச் அ ஸ்வீட் பேர்ஸன் ஹீ இஸ்" என்று அங்கலாய்த்தாள் வந்தனா.


"ஓய் அந்த ஃபோன் கடலை மன்னன் பத்தி என்கிட்ட பேசாதே, நீங்க யாருன்னே தெரியாம இப்படி மணிகணக்கா பேசுறான், அவனுக்கு நீங்க யாராயிருந்த என்ன, ஒரு பொண்ணு கிட்ட பேசினா போதும்னு அல்பத்தனமா இருக்கிறான்" என்று நவீனை மட்டம் தட்டிய ரேகாவை சுகனும், வந்தனாவும் எதிர்த்து தர்கித்து அவளை ஒரு வழி பண்ணிவிட்டனர்.

ஸடடி ஹாலிடேஸ் முடிந்து செமஸ்டர் எக்ஸாம் வந்துவிட்டதால் இந்த ஃபோன் கச்சேரி தற்காலிகமாக குறைந்தது. எக்ஸாம் முடிந்ததும் ரேகா தன் குடும்பத்துடன் திருநெல்வேலிக்கு தன் உறவினர் திருமணத்திற்கு சென்றாள். சென்னையிலிருந்து நெல்லைக்கு புறப்படும் அன்று ரேகா விஜியிடம் லைப்ரரி புக்ஸ் கொடுக்க வந்தாள் அவள் வீட்டிற்கு, விஜியின் அப்பார்ட்மெண்ட் ப்ளாக்கிற்கு எதிரில் விளையாடிக்கொண்டிருந்த சிறுவன் ஒருவன் திடீரென ரேகாவின் ஸ்கூட்டியின் முன் ஓடிவர, ரேகா சடன் ப்ரேக் போடும்போது நிலைதடுமாறி கீழே சாய்ந்தாள் . கை முட்டியில் சிராய்ப்பு ஏற்பட்டு இரத்தம் கசிந்தது.
காய்காரனிடம் காய் வாங்கிக் கொண்டிருந்த நவீனின் அம்மா, விரைந்து வந்து, அவளுக்கு 'பேண்ட் ஏய்ட்' போட்டு உதவினார்." பார்த்து போம்மா" என்று பாசம் காட்டினார்.

ரேகா நெல்லைக்கு சென்றிருந்த ஒரு வாரத்தில் ஃபோன் கச்சேரி மீண்டும் கலை கட்டியது, விஜியும் அந்த கலாட்டாவில் கலந்துவிட்டிருந்தாள்.

சென்னைக்கு திரும்பிய ரேகா, தன் ஃபரண்ட்ஸ்காக வாங்கி வந்த 'திருநெல்வேலி அல்வா' கொடுப்பதற்காக விஜியின் வீட்டிற்கு சென்றாள். மாடி படியில் ஏற எத்தனிக்கும் போது தான் நவீனின் அம்மாவை ஏதேச்சையாக சந்தித்தாள். தன் கையிலிருந்த அல்வா பார்சலில் ஒன்றை நவீன் அம்மாவிடம் கொடுத்தாள் புன்னகையுடன். நவீனின் அம்மாவும் ரேகாவின் கையில் அடிப்பட்டது சரியாகிவிட்டதா என்று நலன் விசாரித்தாள்.
நவீன் அம்மாவிற்கு 'அல்வா' கொடுத்ததை தன் ஃபரண்ட்ஸிடம் சொன்னால் தன்னை ஓட்டி எடுத்துவிடுவார்கள், அதனால் அவர்களிடம் சொல்ல கூடாது எனற தீர்மானித்துடன் விஜியின் அபார்ட்மெண்டுக்கு சென்றாள்.

திருநெல்வேலி அல்வா அடிபிடியில் காலியானது. ரேகா ஊரில்லாத ஒரு வாரத்தில் தங்கள் ஃபோன் கச்சேரி எப்படி கலைகட்டியது என விவரித்தனர் மூவரும்.
இன்று ஃபோனில் நீ தான் பேசவேண்டும் என்றும் வற்புறுத்தினர் ரேகாவை,
நவீனிடம் பேச உனக்கு பயம் சும்மா இண்ரெஸ்ட் இல்லாத மாதிரி நடிக்கிற, என்று ரேகாவை வெறுப்பேத்தி, சவால் விட வைத்து ஃபோனை டயலும் செய்து ரேகாவிடம் ரீசிவரை கொடுத்தாள் சுகன்.
'சரி நாம பேசிடலாம், அவனுக்கு தான் நாம யாருன்னே தெரியாதே, எந்த பொண்ணு குரல் கேட்டாலும் பையன் பேசுவான், ஒரு 2 நிமிஷம் பேசிட்டா இவங்க அலம்பல்ல இருந்து தப்பிச்சுக்கலாம்' என்று நினைத்தவளாய்..



"ஹலோ" என்றாள் ரேகா ஃபோனில்.

நவீன்: ஹலோ!

ரேகா: மே ஐ ஸ்பீக் டூ நவீன்....?

நவீன்:ஸ்பீக்கிங்

ரேகா: எப் ப டி............இருக்கிறீங்க?

நவீன்: நான் நல்லா இருக்கிறேன், நீ எப்படி இருக்கிற, கைல அடிப்பட்டது சரியா போச்சா?



ரேகா: நா....ன் யாரு.....ன்னு உங்க....ளுக்கு.........


நவீன்:ஹே! உங்க ஊரு அல்வா சூப்பர்! செம டேஸ்டாயிருக்கு, நீ கொடுத்த அல்வா சாப்பிடுக்கிட்டே தான் உன் கிட்ட பேசுறேன்.

ரேகா:........................[அதிர்ச்சியில் உரைந்து போனாள்]

நவீன்: என்ன சவுண்டே காணோம்.........
ஏன் நீ என்கிட்ட இவ்வளவு நாள் பேசல......உன் ஃபரண்ட்ஸ் எல்லாம் பேசினாங்க, இப்போதான் என்கிட்ட பேசனும்னு தோனிச்சா? [ கொஞ்சலாக கேட்டான்!]


ரேகா: நான்...........நாங்க.......யாருன்னு தெரியுமா??


நவீன்:ஓ! நல்லாத்தெரியுமே!

ரேகா: எப்.......ப.........டி??


நவீன்:எங்க வீட்டுல 'காலர் ஐடி' இருக்கு ஃபோன்ல, ஸோ விஜி வீட்டு நம்பர் பார்த்து கண்டுபிடிச்சேன்.

ரேகா: அப்போ ஏன் தெரிஞ்ச மாதிரி இவ்வளவு நாள் காட்டிக்கல.......

நவீன்: எதேச்சையாக என்னை அபார்ட்மெண்ட் வெளியில பார்த்தா , கொஞ்சம் கூட உங்க ஃபோன் கச்சேரிய வெளிக்காட்டிக்காம ஆக்ட் விட்டாங்க உன் ஃபரெண்ட்ஸ், ஸோ நானும் அப்படியே மெயின்டேன் பண்ணிட்டேன்!!


ரேகா:இப்போ மட்டும் ஏன் காமிச்சுக்கிட்டீங்க தெரிஞ்ச மாதிரி........அதுவும் என் குரல் எப்படி கண்டு பிடிச்சீங்க?

நவீன்: மனசுக்கு பிடிச்சவங்க குரல் எப்படி தெரியாம போகும்?? அதுவும் நீ எப்போ கச்சேரியில கலந்துக்குவன்னு வெயிட் பண்ணிட்டு இருந்தேன்!!!!

ரேகா: ஹலோ இது ரொம்ப ஓவர்...............


இப்படியாக ரேகா, நவீன் ஃபோன் உரையாடல் நீண்டது, வளர்ந்தது. இருவருக்கும் ஒருவரை ஒருவர் பிடித்திருந்தாலும், மனம் விரும்பினாலும், அதை வெளிப்படுத்த இருவருமே தயங்கினர்...

நவீன் US க்கு திரும்பும் நாளும் வந்தது. அவன் புறப்படும் இரண்டு நாட்களுக்கு முன் ஃபோனில்,


ரேகா: ஹோய் என்ன மூட்டை முடிச்செல்லாம் பேக் பண்ணியாச்சா?

நவீன்: ஆமா ரேகா,ஒரளவுக்கு பேக்கிங் முடிஞ்சது.

ரேகா: அங்க போய்ட்டு, அம்மா அழுதாங்க ! ஆத்தா அழுதாங்கன்னு உடனே இந்தியாக்கு ஓடி வந்துடாதீங்க.

நவீன்: சரி

ரேகா: US போய் சேர்ந்ததும் எனக்கு ஒழுங்கு மரியாதையா இ-மெயில் பண்ணுங்க.

நவீன்:ஹும் சரி.

ரேகா: இனிமே என்னோட ஃபோன் தொல்லை இல்லாம ஜாலியா இருக்கலாம்னு மட்டும் கணவு காணாதீங்க..........ISD கால் போட்டும் கச்சேரி வைப்போம்ல நாங்க!


நவீன்: ஹும்

ரேகா: என்ன ஹும்........இ-மெயில்ல உங்க ஃபோன் நம்பர் எழுதலீனா நான் நேரா உங்க அம்மாகிட்டவே கேட்டிடுவேன் உங்க நம்பரை, ஜாக்கிரதை.


நவீன்: நான் கண்டிப்பா நம்பர் அனுப்புறேன்.




ரேகா: நவீன்.......

நவீன்: ஹும்


ரேகா: நவீன்.......


நவீன்: என்ன சொல்லு.....


ரேகா:எப்போ.........திரும்ப........இந்தியாவுக்கு வருவீங்க?



நவீன்: இந்தியாக்கு திரும்ப வந்திடாதேன்னு சொன்ன, அப்புறம் என்ன இப்போ எப்ப வருவீங்கன்னு கேள்வி?



ரேகா: இப்போ நான் சீரியஸா கேட்குறேன் நவீன், எப்போ திரும்பி வருவீங்க


நவீன்: கல்யாணத்துக்கு


ரேகா: எப்....போ கல்யாணம்?


நவீன்: அது நீ தான் சொல்லனும்


ரேகா:............


நவீன்: என்ன ஸலைண்ட் ஆகிட்ட.......எப்ப வைச்சுக்கலாம் நம்ம கல்யாணத்தை?


ரேகா:நி...ஜம்......மாவா சொல்றீங்க?


நவீன்:அதுல என்ன டவுட் உனக்கு, இந்த ஃபைனல் செமஸ்டர் படிச்சு முடி, நான் இன்னும் 6 மாசத்துல திரும்பி வரேன்...........அப்போ வைச்சுக்கலாம் நம்ம கல்யாண கச்சேரி.


ரேகா:ச.........ரி...........


வெட்கத்தில் முகம் சிவக்க, பூரிப்பில் நா தழு தழுக்க, தன் சம்மதத்தை தெரிவித்தாள் ரேகா!

ஃபோன் கச்சேரி....
நட்பாக வளர்ந்து,
காதலாக மலர்ந்து
கல்யாணத்தில் கனிந்தது!!



[முற்றும்]

November 12, 2007

தொ(ல்)லைபேசிக் கச்சேரி - பகுதி 1




" அம்மா இன்னைக்கு விஜி [ விஜயா] வீட்டுல கம்பைண்ட் ஸடடிமா, நான் போய்ட்டு சாயந்திரம் தான் வருவேன்" என்று தன் அம்மாவிடம் கூறிக் கொண்டே 'Digital Design - by Morris Mano' புக்கை தேடிக்கொண்டிருந்தாள் ரேகா.


" மதியம் சாப்பாடும் அங்கே தானாடி, விஜி அம்மாவை தொந்தரவு பண்ணாம ஒழுங்கா படிங்க, வேற யாரெல்லாம் வராங்க ரேகா?" என்று சமையலறையிலிருந்தபடியே மகளிடம் கேட்டார் ரேகாவின் அம்மா.
"சுகன்யாவும், வந்தனாவும் விஜி வீட்டுக்கு வராங்க, எப்பவும் போல நாங்க நாலு பேரு மட்டும் தான்மா" என்று பதிலளித்துக் கொண்டே தன் ஸ்கூட்டியை நோக்கி சென்றாள் ரேகா.



ரேகா, விஜியின் வீட்டை சென்றடையும் முன்னே சுகன்[ சுகன்யா], வந்தனா இருவரும் அங்கு ஆஜராகியிருந்தனர். ஒழுங்கு சிகாமனிகளாக நால்வரும் குரூப் ஸ்டடி செய்தனர். விஜியின் அம்மா , நாலு பேருக்கும் தக்காளி சாதமும், முட்டை குருமாவும் செய்து வைத்துவிட்டு பக்கதிலுள்ள கோயில் விசேஷத்திற்கு சென்றிருந்தார்.



மதிய உணவிற்கு பின், நான்கு பேருக்குமே படிக்க மூட் இல்லை, டிவி பார்க்கவும் போர் அடிக்கவே, பால்கணிக்கு வந்தனர். விஜியின் அபார்ட்மெண்ட் மூன்றாவது தளத்திலிருந்தது.



" விஜி , உங்க அப்பர்ட்மெண்ட் ப்ளாக் ரொம்ப காஞ்சுப்போய் கிடக்குதடி, பார்க்கிற மாதிரி ஒருத்தன் கூட இல்லை" என்று சலித்துக் கொண்டாள் சுகன்.
"ஹே சைட் அடிக்கிறேண்டா பேர்விழியின்னு என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கபா ப்ளீஸ், எங்க அபார்ட்மெண்ட் காம்பளெஸில் எனக்கு கொஞ்சம் நல்ல பொண்ணுன்னு பேரு இருக்கு, அதை பஞ்சர் பண்ணிடாதீங்க" என்று விஜி எச்சரிக்கை விட்ட அதே நேரத்தில், எதிரிலிருந்த பார்க்கிங்கில் இண்டிகா காரை பார்க் பண்ணிட்டு அதிலிருந்து ஒரு அழகிய இளைஞன் இறங்கி, விஜியின் அபார்ட்மெண்ட் ப்ளாக் நோக்கி நடந்து வந்தான்.




"ஹே விஜி, யாருடி இது, ஸ்மார்ட்டா ஒரு பையன், அதுவும் உங்க ப்ளாக்குள்ள வரான்............ஃபர்ஸ்ட் ஃபோளோர் அபார்ட்மெண்டுக்கு தான் போறான், யாருடி அது......" என்று வந்தனா கூச்சலிட,
நான்கு பேரும் பால்கணியிலிருந்து கீழே பார்த்தனர்.



"ரேகா, உன்னோட ஃபேவரைட் காம்பினேஷன் - 'டெனிம் ப்ளு ஜீன், ப்ளக் டீசர்ட்' போட்டிருக்கான்" என சுகன் ரேகாவின் கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள்.
"அதுக்கென்ன இப்போ" என்று அசட்டையுடன் வீட்டிற்குள் சென்றாள் ரேகா.
" அவ கிடக்கிறா விடு, விஜியை கார்னர் பண்ணு சுகன், அவன் யாருன்னு டியிடேல்ஸ் சொல்லாம பதுங்குறா பாரு" என வந்தனா விஜியின் பக்கம் போனாள்.



" நிஜம்மா அவன் யாருன்னு தெரியலையா உங்களுக்கு, அவன் தாண்டி அந்த SBOA ஸ்கூல் 'படிப்ஸ் நவீன்', கோயம்பத்தூர்ல இன்ஜினியரிங் பண்ணினானே அவன் தான் அது, அடையாளம் தெரிலியா ?" என்று விளக்கம் தந்தாள் விஜி.



"ஹே அந்த ஒல்லிப்பிச்சான் நவீனா இது...........கண்ணாடி போட்டுட்டு, வலிச்சி தலை வாரிட்டு பேக்காட்டும் இருப்பானே அவனாடி இப்படி படு ஸ்டைலா மாறிட்டான்???" என்று ஆச்சரியத்தில் வாய் பொழந்தாள் சுகன்.
" அவன் UG க்கு அப்புறம் எங்கயோ ஃபாரின் ல ஹையர் ஸ்டடீஸ் பண்றான்னு நீ எப்பவோ சொன்ன ஞாபகமிருக்கு விஜி" என்று வந்தனா தன் ஞாபக சக்த்தியை நிரூபிக்க முற்பட்டாள்.




"யா, யா! US ல MS படிக்க போனான், முடிச்சுட்டு அங்கயே வோர்க் பண்ணிட்டுயிருந்தான், அவன் அம்மா அவனை பார்க்காம இருக்க முடியலடா கண்ணான்னு ரொம்ப ஃபீலீங்க்ஸ் விட்டதும், பையன் ஒரு 6 மாசம் ப்ரோஜக்டுக்காக இங்கே வந்திருக்கான், வந்து 1 வாரம் ஆச்சு" என்று தன் தரப்பு தகவல்களை அள்ளித் தெளித்தாள் விஜி.



"எப்படிடி இவன் இப்படி மாறினான், 'சீஸ் பர்கரா' சாப்பிட்டு நல்லா வெயிட் போட்டு மஸ்தானாட்டம் ஆகிட்டான்", என்று தன் கண்டுபிடிப்பை பெருமையுடன் சொன்னாள் சுகன்.
" சே, சே! பையன் நல்லா பீர் குடிச்சிறுப்பான், அதான் குப்புனு வெயிட் ஏறிக்கிச்சு" என்று ரேகா தன் திருவாயை அப்போதுதான் திறந்தாள்.




"ஹே ரேகா, அவன் அப்படி பட்ட பையன் இல்லை, ரொம்ப நல்ல பையனாக்கும்" என்று சர்டிஃபிகெட் கொடுத்தாள் விஜி.
"ஐயே நீ அடங்கு , உனக்கு ஆல்ரெடி ஆள் இருக்கு, ஸோ நீ இப்படி சர்டிஃபிகெட் கொடுத்து ரூட் போடாதே" என்று விஜியை வாரினாள் வந்தனா.




" விஜி, விஜி!!! செம போரா இருக்குது, அந்த நவீன் வீட்டு ஃபோன் நம்பர் கொடு, சும்மா பேசி கலாட்டா பண்ணலாம்" என்று கெஞ்சலும் கொஞசலுமாக கேட்டாள் சுகன்.
" அடப்பாவிங்களா, சைட் அடிச்சோமா, கிண்டல் பண்ணினோமான்னு இருந்துக்க, இந்த ஃபோன் எல்லாம் பண்ணி, என்னை வம்புல மாட்டி விட்டுடாதீங்கபா" என்று எஸ்கேப் ஆகப் பார்த்தாள் விஜி.
" ஏய் சுகன், சொன்னா கேளு, இந்த வேண்டாத வேலையெல்லாம் உனக்கெதுக்கு, போர் அடிச்சா படுத்து தூங்கு, நைட்டாச்சும் கூட கொஞ்ச நேரம் முழிச்சிருந்து படிக்கலாம்" என்று அறிவுரை நாயகி ரேகா தன் பங்குக்கு சுகனைத் தடுத்தாள்.




ஆனால், அடம்பிடித்து, நச்சரித்து விஜியை தாஜா பண்ணி ஃபோன் நம்பரை வாங்கி நவீன் வீட்டிற்கு டயல் செய்தாள் சுகன்.





நவீன் வீட்டிலும் யாரும் இல்லை போலும், அவனே ஃபோன் எடுத்து...

"ஹலோ" என்றான் மறுமுனையில்.
.
"ஹலோ, கேன் ஐ டாக் டூ நவீன் ப்ளிஸ்..........." என்று பேச்சை ஆரம்பித்தாள் சுகன்.

[ நவீன் என்ன பேசினான்????.............அடுத்த பகுதியில்]

கச்சேரி தொடரும்.....

பகுதி 2

November 05, 2007

நன்றி சொல்ல உனக்கு ! வார்த்தை இல்லை எனக்கு!!





தமிழில் வலைப்பதிவிட ஆரம்பித்து ஒராண்டு ஆகிவிட்டது, இடையில் சில மாதங்கள் பதிவிட முடியாமல் போனாலும், வலைப்பதிவிட ஆரம்பித்து ஒரு வருஷம் ஆன இந்நாளில் , நான் வலைப்பதிவிட காரணமாயிருந்த , உதவி புரிந்த நண்பர்களுக்கு நன்றி சொல்லவே இந்த பதிவு!!



முதலில் வலையுலகின் மூலம் அநேக நண்பர்களின் அறிமுகமும், நட்பும் பெற்றுத்தந்த இறைவனுக்கு நன்றி!!!



தமிழில் எப்படி இணையதளத்தில் வலைப்பதிவிடுறாங்கன்னு நான் ஆச்சரியப்பட்ட நேரத்தில், தமிழில் தட்டச்சு செய்ய கற்றுத்தந்த என் குரு 'ஜொள்ளு பாண்டி' க்கு நான் பெரிதும் கடமைப்பட்டிருக்கிறேன். தமிழில் தட்டச்சு சொல்லிக்கொடுத்து , வலைப்பதிவு எழுதும் நிலைக்கு என்னை கொண்டு சென்றது அவரது ஊக்கம்.


வலைப்பதிவில் எப்படி பதிவிட வேண்டும், தமிழ்மணத்தில் எப்படி இணைய வேண்டும், பின்னூட்டங்களுக்கு எவ்வாறு பதில் அளிக்க வேண்டும், என்று இன்னும் பல நுணுக்கங்களை சொல்லிக்கொடுத்த அண்ணன் 'வெட்டி' க்கு கோடி நன்றி!!!


கதைகள் எழுதும் எண்ணத்தை என்னுள் உருவாக்கிய 'தேவ்' அண்ணாவுக்கு நன்றி. என் எழுத்துநடையை வெளிப்படையாக விமர்சித்து , ஊக்குவிப்பது என் தேவ் அண்ணா!!

என் எழுத்துகளில் பிழைத்திருத்தம் , இலக்கண திருத்தம் செய்து எனக்கு தமிழ் கற்றுக் கொடுத்த
நண்பர் ' சந்தோஷ்' க்கு நன்றி!!


என் வலைப்பதிவின் தோற்றம், பதிவுகளின் தொகுப்பு இவற்றை அமைத்திட பெரிதும் உதவிய 'சிபி' க்கு மிக்க நன்றி!


என் பதிவுகளுக்கு பின்னூட்டமிட்டு உற்ச்சாகப்படுத்திய அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனமார்ந்த நன்றி.


குறிப்பாக ஆர்வமுடன் என் பதிவுகளுக்கு பின்னூட்டமிடும் நாட்டாமை 'ஷ்யாம்' க்கு நன்றி.
பின்னூட்டத்தில் பாராட்டு மழை பொழியும்
ப்ரியமான தோழி 'ப்ரியா' வுக்கு நன்றி.


எதிர்பாராத சில நிகழ்வுகளால் தொடர்ந்து வலைப்பதிவிட முடியாமல், எழுதுவதை கைவிட்ட என்னை மீண்டும் தொடர்ந்து எழுத வைத்தது பாலாஜி அண்ணாவின் அன்புக் கட்டளையும், வேண்டுக்கோளும்.


மீண்டும் பதிவிட தடுமாறி தயங்கிய என்னை உற்ச்சாகமூட்டிய என் ரசிகர்கள் 'ராம்' , 'ஜி' என்னால் மறக்க முடியாது!!

எனக்குள்ளும் சில திறமைகள் இருப்பதாகக் கூறி , அதனை வெளிப்படுத்த ஊக்குவிக்கும் உக்தி தெரிந்த
கவிஞர் 'நவீன்' க்கு என் மனமார்ந்த நன்றி!!