March 20, 2010

கீதாஞ்சலி!!

ஆகாஷ்.........என் வாழ்வில் வந்த வேளை... ஒர் அழகிய கனாக்காலம்.

அப்போ நான் பன்னிராண்டாம் வகுப்பு படிச்சிட்டிருந்தேன், எங்கள் எதிர் வீட்டை சொந்தமாக வாங்கி குடியேறினார்கள் ஆகாஷின் குடும்பம். ஆகாஷின் அப்பா ஒரு ரிட்டையர்ட் ஹெட்மாஸ்டர், அம்மா இல்லத்தரசி, அக்கா.....எங்கள் காலனியில் உள்ள மெட்ரிகுலேஷன் ஸ்கூலில் டீச்சர்.

கணக்கு ஏறாத மரமண்டை எனக்கு , என் அப்பாவின் கோரிக்கையினால் ஆகாஷின் அப்பா கணக்கு டியூஷன் மாஸ்டர் ஆனார்.

ஆகாஷிற்கும் அவரது அப்பாவிற்கும் ஏழாம் பொருத்தம், எப்போதும் அப்பாவுக்கு மகனுக்கும் வாய் தகராரு தான். பின்ன........தமிழ்நாட்டுல உள்ள எந்த இஞ்சினியரிங் காலேஜிலும் இடம் கிடைக்காம இருந்த தன் ஒரே மகனுக்கு, தன் தகுதிக்கும் மீறி நிறைய பணம் கட்டி பெங்களூர்ல இஞ்சினியரிங் படிக்க வைச்சா, பையன் நாலு வருஷம் ஜாலியா காலேஜ் & ஹாஸ்டல் லைஃப் எஞ்சாய் பண்ணிட்டு, 10 அரியர்ஸோட வீட்ல வந்து செட்டில் ஆனா, எந்த அப்பாக்கு தான் கோபம் வராது.


அவங்க வீட்ல டியுஷனுக்கு போற நேரத்தில, அப்படி அப்பா -மகன் சண்டை நடந்தா, செம கொண்டாட்டமா இருக்கும் எனக்கு, ரசிச்சு வேடிக்கை பார்ப்பேன்.

ஒருநாள் டியூஷன் போயிருந்தபோ, என்னோட நோட் தீர்ந்துபோச்சுதுன்னு, அங்கே டேபிள் மேல இருந்த நோட்டை எடுத்துக்கொடுத்தார் டியுஷன் மாஸ்டர். டியூஷன் முடிஞ்சதும், வீட்டுக்கு வந்து, அந்த நோட்டில் நான் எழுதியிருந்த கணக்குகளை என் நோட்டில் காபி செய்ய எடுத்த போதுதான் கவனித்தேன், அந்த நோட்டில் முதல் சில பக்கங்களில் ஆகாஷ் கவிதைகள் எழுதியிருந்ததை.

அப்பாகிட்ட தினமும்........மக்கு, மரமண்டைன்னு டோஸ் வாங்கிற பையனுக்குள்ள இப்படி ஒரு திறமை ஓளிஞ்சிட்டிருக்கா???
நோட்டிலிருந்த கவிதை எல்லாம் படிச்சு முடிச்சுட்டு, என்னால..........ஆகாஷை பாராட்டாமா இருக்க முடியல.
இதுவரை ஒருநாள் கூட என்கிட்ட ஆகாஷ் பேசினதில்ல..........ஏன் நிமிர்ந்து கூட பார்த்ததில்லை .
அப்பா மேல உள்ள பயமா இருக்கலாம், இல்ல........கண்கொத்தி பாம்பாட்டும் நான் டியூஷனுக்கு போனாலே தன் தம்பியையும் என்னையும் கவனிக்கும் அக்கா மேல உள்ள எச்சரிக்கை உணர்வா கூட இருக்கலாம்.

எப்படியும் பாராட்டியே தீரவேண்டும்னு முடிவோட, என்னையும் மீறி என் கால்கள் எதிர் வீட்டில் போய் நின்றது. நல்லவேளை நான் சென்ற நேரம் ஆகாஷின் அக்கா வீட்டில் இல்லை, அம்மாவிடம் ஆகாஷ் எங்கே என விசாரித்து, அவரது அனுமதியுடன்......மொட்டை மாடியில் உலாத்தி கொண்டிருந்த ஆகாஷை சந்திக்க சென்றேன்.

என்னை கண்டதும் கையிலிருந்த சிகரெட்டை அவசரமாக அணைத்துவிட்டு,

"அப்பா.............கீழே இருப்பார்........." என்றார்.

"நான் உங்களைத்தான் பார்க்க வந்தேன்......."

".............."


என் கையிலிருந்த நோட் புக்கை காட்டினேன்.ஆச்சரியம் கலந்த கோபப்பார்வை இப்போது ஆகாஷின் கண்களில்.


"இதெல்லாம் நீங்க எழுதின கவிதையா? படிச்சுப் பார்த்துட்டு பிரமிச்சு போய்ட்டேன், நான் பொதுவா சிறுகதை, நாவல், கவிதை எல்லாம் ஆர்வமாப் படிக்க மாட்டேன், ......உங்க கவிதைகள் என்னை ரொம்ப பாதிச்சது, தீவரவாதிகளால் அநியாயமாய் கொலை செய்யபட்ட தன் கணவனை நினைச்சு ஒரு மனைவி எழுதுற மாதிரி எழுதியிருக்கிறீங்களே ஒரு கவிதை...........அந்த கவிதையின் பாதிப்பு இப்போ கூட என் மனசுல அப்படியே இருக்கு"

பற்ற வைத்த ஐயாயிரம் வாலா பட்டாசு சரமாக நான் நிறுத்தாமல் பேசிக்கொண்டே சென்றதை கண் கொட்டாமல் பார்த்துக்கொண்டிருந்தார் ஆகாஷ்.

"நிறைய கவிதைகள் எழுதுவீங்களா??"

"எப்பவாவது என் மனசை அழுத்தமா பாதிக்கிற மாதிரி விஷயங்கள் நடந்தா கவிதை எழுதுவேன்"

"பத்திரிக்கைகளுக்கு எல்லாம் உங்க கவிதையை அனுப்பிருக்கிறீங்களா?..........உங்க கவிதை வெளி வந்திருக்கா?"

"இல்ல........அனுப்பினதில்ல"

"ஏன் அனுப்பக் கூடாது......?"

"எனக்கு பிரபலாமாகனும்னு ஆசை எல்லாம் இல்ல........என் திருப்திக்காக தான் கவிதை எழுதுறேன்"

"சரி......சரி.........நீங்க பிரபலமாக வேணாம்.......ஆனா உங்க கவிதை நிறைய பேரைப் போய்ச் சேர சான்ஸ் இருக்குதே.......என்னை பாதிச்ச மாதிரி எத்தனையோ பேரை இந்த கவிதை பாதிக்கலாமில்லையா?"

"இப்படி சீரியஸான கவிதை எல்லாம் அனுப்பிச்சாலும்.........பப்ளிஷ் பண்ண மாட்டாங்க, காதல் கவிதை, காதல் தோல்வி, பெண்ணை வர்ணிச்சு எழுதின கவிதை, இப்படி பட்ட துக்கடா கவிதை கவிதைகளைத்தான் போடுவாங்க"

"காதல் கவிதையும் கவிதைதானே ..........அது ஒருவித அழகு, இது இன்னொரு விதம், அதுக்காக காதல் கவிதைகளை எல்லாம் இப்படி துக்கடா கவிதைன்னு சொல்ல கூடாது"

"இப்போ என் கவிதையை பாராட்ட வந்தியா.........இல்ல காதல் கவிதைக்கு சப்போர்ட் பண்ணி ஆர்கியூ பண்ண வந்தியா?"

டக்கென்று ஆகாஷ்க்கு கோபம் வந்தது, என் முகம் சுருங்கி போச்சி..........அப்படியே திரும்பி வீட்டுக்கு வந்துட்டேன்.

இரண்டு வாரம் கழித்து, ஒரு நாள் காலங்காத்தால எங்க வீட்டுக்கு வந்தார் ஆகாஷ், அதுவே முதல் முறையாக அவர் எங்கள் வீட்டிற்கு வருவது.

ஹாலில் பேப்பர் படித்துக்கொண்டிருந்த அப்பா அவரை வரவேற்றார்...

"வாங்க..........வாங்க தம்பி, நல்லா இருக்கிறீங்களா? உங்க கவிதை பத்திரிக்கைல வெளி வந்திருக்குன்னு இப்பத்தான் பாப்பா காண்பிச்சா.........ரொம்ப நல்லா இருக்கு தம்பி கவிதை, தொடர்ந்து கவிதை எழுதுங்க"

".............."

"வாங்க.........உட்காருங்க.........காஃபி எடுத்துட்டு வரேன்" - இது என் அம்மா.

"உங்க பொண்ண கொஞ்சம் கூப்பிடுறீங்களா?" ஆகாஷ் கோபமான குரலுடன் இப்படி சொன்னதும், அம்மாவும் அப்பாவும் விழித்தனர்.

அப்பா என்னை கூப்பிடும் முன், நானே மெதுவாக ஹாலுக்கு சென்றேன்.........அம்மாவின் பின்னால் நின்றபடி, ஆகாஷை பார்த்து சிரிப்பதா வேண்டாம என்று நான் நிற்க,ஆகாஷ் என்னருகில் நேராக வந்தார்.......

"எதுக்கு இந்த திருட்டுத்தனம்........என்னோட அனுமதி இல்லாம எதுக்கு என் கவிதைய பத்திரிக்கைக்கு அனுப்பின"

"அது வந்து.......கவிதை ரொம்ப நல்லாயிருந்துச்சு.....அதான்...."

"அதனால நீயே என் பேரை போட்டு கவிதைய பத்திரிக்கைக்கு அனுப்பிருவியா......"

என் அப்பாக்கு அப்போதுதான் உண்மை புரிந்தது, என்னை பார்த்து முறைத்தவர், ஆகாஷிடம்.....

"ஸாரி தம்பி.......ஏதோ விளையாட்டு தனத்துல அப்படி பண்ணிட்டா.......இனிமே அப்படி பண்ணமாட்டா"

என் அப்பா அம்மாவிற்கு முன்பாகவே என்னை திட்டியும்விட்டு.....ஒரு முறைப்பும் முறைச்சுட்டு போனார்.

அவர் போனதும் செம டோஸ் என் அம்மா அப்பாவிடமிருந்து, நான் எதையும் சட்டை பண்ணவில்லை........நேராக என் அறைக்கு சென்றேன்,

'உன் கவிதையை தான உன் பேரு போட்டு அனுப்ப கூடாதுன்னு சொன்ன.....இனிமேல் பார், நானே கவிதை எழுதி, உன் பேர் போட்டு பத்திரிக்கைக்கு அனுப்புவேன், உன்னோட பேர்ல கவிதை எழுதுறது யார்ன்னு தெரியாம நீ திண்டாடனும்.....'

கோபத்தில்.........வானம், நட்சத்திரம், மலர்கள் ன்னு பல தலைப்புல கவிதை எழுத ஆரம்பிச்சேன், ஆகாஷின் கவிதைகளை படித்ததின் பாதிப்பா, இல்லை எனக்குள்ளும் ஒரு கவிதிறமை இருந்ததா என்று தெரியவில்லை......நான் எழுதி அனுப்பிய கவிதை அனைத்துமே, பத்திரிக்கை வாசகர்களிடம் ஆகாஷிற்கு பேர் வாங்கி கொடுத்தது.

நான் தான் அவர் பேரில் கவிதை எழுதி அனுப்புகிறேன் என தெரிந்தும், வெளிக்காட்டிக்கொள்ளாமல் நடித்துக்கொண்டிருந்தார் ஆகாஷ், ஆனால் அவர் பார்வையில் முன்பிருந்த கோபம் குறைந்திருந்தது.
மெது மெதுவாக எங்கள் கண்கள் கவி பேசிக்கொள்ள ஆரம்பித்தன, மெளனமாக இருவரும் அதனை அனுமதித்தோம்.

என்னைக் கண்டதும் ஆகாஷின் கண்களில் ஒரு மின்னல் தோன்றி மறைந்ததை நான் கவனிக்க தவறவில்லை.

பன்னிரண்டாம் வகுப்பு படிக்கும் பெண்ணிடம் காதலை கூறுவதா என்ற தயக்கம் அவருக்கு இருந்திருக்கலாம்,அல்லது.....
படித்து முடித்தும் இன்னும் வேலையில்லாமல் வீட்டிலிருக்கிறோமே என்ற சுயவிரக்கம் கூட காரணமாக இருந்திருக்கலாம்.
இருவருமே தத்தம் எல்லைக் கோடுகளை விட்டு வெளியே வந்து உள் மனக் காதலை வெளிப்படுத்த தயாராய் இல்லை.
ஏதோ ஒன்று எங்களை கட்டி போட்டிருந்தது.

மெது மெதுவாக என் கவிதைகளில் காதல் வாசம் வீச ஆரம்பித்தது, வழமைபோல் வாசகர்களிடம் அபார வரவேற்பு அக்கவிதைகளுக்கு.

ஒருநாள் பத்திரிக்கையில் நான் அனுப்பியிராத ஒரு காதல் கவிதை, அதுவும் ஒரு பெண்ணிடம் உருக்கமாக காதலை வெளிப்படுத்தும் ஒரு கவிதை ஆகாஷின் பெயரில் வெளிவந்திருந்தது.
கவிதையை பார்த்து அதிர்ந்து போனேன்........இந்த கவிதை நான் அனுப்பவில்லை என்றால் , அனுப்பியது யார்???

இப்போ, பத்திரிக்கையை எடுத்துக்கொண்டு ஆகாஷின் வீட்டிற்கு செல்கிறேன்......

----------*--------------*----------

டைரியை படித்துக்கொண்டிருந்த ஆகாஷின் நினைவலைகள் பத்து வருடங்களுக்கு பின்னாக சென்றது.....


கையில் பத்திரிக்கையுடன் விழிகள் படபடக்க கீதாஞ்சலி என் வீட்டு மாடியை நோக்கி வந்துக்கொண்டிருந்தாள்,
மனதிற்குள் அதனை ரசித்தபடியே ஒன்றும் தெரியாதது போல் முகத்தை வைத்துக்கொண்டேன்...


"இது.....இந்த கவிதை........நீங்க.....எழுதினதா??" என்றாள். அவளுடைய உச்சரிப்பில் இருந்த அழகு, அவள் முன்னுச்சியில் வந்து படிந்த முடியை நகம் வளர்த்த ஒற்றை விரலால் ஒதுக்கி விட்டுக்கொண்ட தன்மை, ஐயோ..ஐயோ...எப்படி சில பெண்களுக்கு மட்டும் இந்த நளினம் வந்து சேருது???, கண் இமைக்காமல் அவளையே பார்த்துக்கொண்டிருந்தேன்


"ஹலோ ....உங்களைத்தான் கேட்கிறேன்?" என்றாள்

"கவிதைக்கு கீழே என்ன பேரு போட்டிருக்கு......."

"ஆ.........ஆகாஷ்னு போட்டிருக்கு....."

"அப்போ ஆகாஷ் எழுதினதுதானே??........அப்புறம் என்ன டவுட் உனக்கு?"

என் கண்களை கூர்ந்து நோக்கினாள், அதில் தெரிந்த குறும்பினை கண்டு பிடித்துவிட்டாள் ....கள்ளி!

வெட்கத்தில் அவள் முகம் குங்குமமென சிவந்தது,

உதடுகள் வார்த்தைகளோடு போராடி பேச இயலாமல் துடித்தது!


"கவிதைக்கு பதில்......வருமா?" அடிக்குரலில் நான் கேட்டதும்.......


இன்னும் அதிகம் சிவப்பு பூசிக்கொண்டது அவள் முகம்,

மாடி படிகளுகருகில் சென்றவள், நின்று திரும்பி....


"அடுத்த வாரம் பத்திரிக்கையில் பதில் வரும்....." என்று மெதுவாக சொல்லிவிட்டு,


கடகடவென மாடி படிகளில் இறங்க தொடங்க, அடுத்த நொடி அவள் பாவாடையில் கால் தடுக்கி, படிகளில் உருண்டு சென்றாள்,

"கீது........." என்று அலறியபடி நானும் வேகமாக படிகளில் தாவி தாவி இறங்க, நான் அவளை பிடிப்பதற்குள், மாடி படியின் முடிவில் இருந்த கூர்மையான கைப்பிடி அவள் நெற்றையை பதம் பார்த்து ரத்தம் ஆறாக ஓடியது.


அடுத்த இரண்டு தினங்கள், கீதாஞ்சலி சுயநினைவில்லாமல் ஆஸ்பத்திரியில் உயிருக்கு போராடிக்கொண்டிருந்தாள்,
இந்த இரண்டு நாள் போராட்டத்தில், என் அழுகையும் கதறலும் எங்கள் காதலை எங்கள் இரு குடும்பத்திற்கும் வெளிச்சம் போட்டு காட்டியிருந்தது.

மூண்றாம் நாள் சுயநினைவு வந்ததும், அவள் என்னை காண விரும்புவதாக கூற, அவள் இருந்த ICU க்குள் சென்றேன்.

அவள் உதடுகள் உலர்ந்திருந்தன,அவளால் பேச இயலவில்லை,மெளனமாக புன்னகைத்தாள்.....என் கண்ணீரை கண்டதும், அழாதே என்பது போல் கண்ணசைத்தாள்,

அவளருகில் சென்று அவள் கரத்தை என் உள்ளங்கைக்குள் வைத்து அழுத்தினேன்......

என் முதல் ஸ்பரிசமா.....
இல்லை அவள் உடல்நிலை காரணமா ,
எதுவென்று தெரியவில்லை, அவள் உடல் சிலிர்த்தது......


சன்னமான குரலில் பேச தொடங்கினாள்......

"அம்மாகிட்ட என் டைரி கேட்டேன்......டேபிள்ல இருக்கு....எடுங்க ஆகாஷ்"

அவள் கூறிய டைரியை எடுத்தேன்,

"இது.....இது உங்களுக்கு......."


"ஹும்...."


"இனிமேலும் உங்க கவிதையில நான் இருக்கனும்.....ஆகாஷ்"

"உனக்கொன்னும் ஆகாதுடி செல்லம்.....நீ எப்பவும் என்கூட தான் இருப்ப"

மெல்ல புன்னகைத்தாள் கீதா........அதுவே அவளது அஞ்சலிக்கான கடைசி புன்னகை!

உலகமே இருண்டு போனது எனக்கு,
என்னிலையை மறந்து பலநாள் என் அறைக்குள் முடங்கி கிடந்தேன்.



சூராவெளியாய் என் வாழ்க்கையில் வந்தவள்,
என் கவிதையின் முதல் ரசிகை,
என்னை பிரபலமாக்கிய முதல் வாசகி,
என் கவிதைக்குள் வந்துவிட்டு
என் வாழக்கையை விட்டு மட்டும் ஏன் சென்றாள்????

விடைகாணா கேள்வியுடன் ஆகாஷின் வாழ்க்கை தொடர்ந்தது.


ஆகாஷ், கடந்த பத்து வருடமாக தினமும் குறைந்தது மூன்று முறையாவது இந்த டைரியை படிப்பதும், பின் கண்ணீருடன் பழைய நினைவுகளில் மூழ்குவதும் வழக்கம்.

மனைவி வரும் அரவம் கேட்டு , கண்களை துடைத்துக்கொண்டான் ஆகாஷ்.

"என்னங்க.....உங்க கவிதை புக் பப்ளிஷ் பண்ணின பப்ளீஷரும் மேனேஜரும் உங்களுக்கு அவங்க பாராட்டு விழா ஏற்பாடு பண்ணியிருக்கிறது விஷயமா பேச வந்திருக்காங்க"

"ஹும்........இதோ வரேன் கீதா"

டைரியை வைத்துவிட்டு, முகத்தினை சுத்தம் செய்து விட்டு, ஹாலுக்கு சென்றான் ஆகாஷ்.

வந்திருப்பவர்களுக்கு வணக்கம் கூறிவிட்டு அவன் சோஃபாவில் அமர்ந்ததும், அவனது ஐந்து வயது மகள் ,

"அப்பா........" என்று கத்திக்கொண்டே அவன் மடியில் வந்தமர்ந்தாள்.

"அஞ்சலி உள்ளே போய் விளையாடுமா.....அப்பா இவங்க கிட்ட பேசிட்டு இப்ப வந்துடுறேன்"

குழந்தை உள்ளே சென்றதும், பப்ளீஷர் ஆகாஷிடம்.....

"சார் உங்க மனைவி கீதாவின் பேரையும், உங்க பொண்ணு அஞ்சலி பேரையும் சேர்த்து வைச்சு 'கீதாஞ்சலி'ன்ற புனை பெயர்ல நீங்க கவிதை எழுதுறது இந்த பாராட்டு விழால தான் சார் நிறைய பேருக்கு தெரியப்போகுது, கீதாஙஞ்சலி ன்றது ஒரு பொண்ணுன்னே நிறைய பேர் நினைச்சுட்டு இருக்கிறாங்க சார்" சொல்லிவிட்டு சிரித்தார் பப்ளீஷர்.

மனதிற்குள் எழுந்த சோகம் நெஞ்சை பிசைய, கண்களில் தெறிக்க இருந்த துளிகளை ஆகாஷின் கண்ணீர் கடல் வழக்கம்போல் உள்வாங்கி கொண்டது.