உயிரே!....உறவாக வா??? - 2
கண்ணீர் மல்க ஆம்புலன்ஸில் பானுமதியின் படுக்கைக்கு அருகில் அமர்ந்தபடி சென்ற இளமாறன், பானு கண் விழித்ததும் அருகில் அமர்ந்திருந்த நர்ஸிடம் சொல்வத்ற்குள் பானு மீண்டும் மயக்கமானாள்.
விரைந்து சென்று ஆஸ்பத்திரியை சேர்ந்தபோது அங்கு டாக்டரின் முடிவு அதிர்ச்சியளித்தது.
ஆழமாக வெட்டப்பட்டிருந்த பானுவின் வலது கரம் முழங்கைக்கு கீழாக முழுவதுமாக அறுவை சிகிச்சை செய்து நீக்கப்பட வேண்டும் என மருத்துவர்கள் கூறியதுடன், உடனடியாக பானு ஆபிரேஷன் தியேட்டருக்குள் கொண்டு செல்லப்பட்டாள்.
சொந்த ஊருக்கு சென்றிருந்த தன் பெற்றோருக்கு ஃபோன் மூலம் தகவல் கூறினான் ரமேஷ்.
ஆபிரேஷன் தியேட்டருக்கு வெளியில் கனமான மனதுடன் நண்பர்கள் இருவரும் நிற்கையில் , இளா ரமேஷிடம்....
" ரமேஷ்........நானும்.....பானுவும்....."
எனக்கு எல்லாம் புரிந்தது என்பதுபோல் கண்களால் பதிலளித்து விட்டு, இளாவின் தோளில் தோழமையுடன் தட்டிக் கொடுத்தான் ரமேஷ்.
மயக்கம் தெளிந்து கண் விழித்த பானுவிற்கு , தன் தாயாரின் விசும்பல் மிக அருகில் கேட்டது.
"பொம்பள புள்ள இப்படி கதை எழுதாட்டி என்ன......இப்ப கையை ஒடைச்சுட்டு போய்ட்டானே படுபாவி.......இனிமே இவளை வைச்சுட்டு......."
அம்மாவின் புலம்பல் கேட்டதும் தன் வலது கரத்தை தேடினாள் பானு..........அழுகை பீறிக்கொண்டு வந்தது அவளுக்கு.
தன் வலது கரம் துண்டிக்கப்பட்டிருப்பதை காண பொறுக்காமல் தன் கண்களை அழுந்த மூடிக்கொண்டவளின் தலையை ஆதரவாக ஒரு கரம் தடவியது.
கண்திறந்து பார்த்தாள் பானு.......ஊமையாய் தனக்குள்ளே அழுதபடி பாசமுள்ள அப்பா!!!

"அ....ப்......பா" என்ற பானுவின் குரல் உடைந்து போயிருந்தது.
அந்தக் குரலைக் கேட்டதும்...
அத்தனை கண்களும் ஆச்சரியத்தில்....
சட்டென்று அவள் கைகளைப்பற்றிக் கொண்டு
கண்களில் நீர் நிறைந்து வழிந்தோட..
வார்த்தைகள் தட்டுத்தடுமாறிட...
தாய்மையின் கனிவோடு தழுவி
அணைத்துக்கொண்டது அந்தத் தந்தை உள்ளம்!
பானுவை தான் கவனித்துக்கொள்வதாக உறுதியளித்து தன் பெற்றோரை வற்புறுத்தி ஹாஸ்பிட்டல் கேன்டினிற்கு உணவருந்த அனுப்பி வைத்தான் ரமேஷ்.
அவர்கள் அறையிலிருந்து வெளியேறியதும், ரமேஷ் பானுவின் அருகில் குனிந்து.......

"இளா வெளியில வெயிட் பண்றான்........உள்ளே அனுப்புறேன்" என்றான் குறும்பு புன்னகையுடன்
"அண்ணா.........!"
"எனக்கு எல்லாம் தெரியும்மா......." கண் சிமிட்டினான் ரமேஷ்.
அவன் வெளியேற கதவின் அருகில் செல்ல, பானு.....
"அண்ணா......"
"என்னமா?.......?"
"அவரை......நான் பார்க்க விரும்பலண்ணா"
"என்ன.......என்னடா சொல்ற?????"
"ஆமாம்ணா.......அவரை இனிமே என்னை பார்க்க வர வேண்டாம்னு சொல்லிடு"
"உணர்ச்சிவசப்படாதே பானுமா........அவன் உன்மேல...."
"தெரியும்ணா.......அதுனாலத்தான் சொல்றேன்.....ஒரு கை இல்லாத இந்த பானு அவருக்கு வேணாம்ணா.....போகச்சொல்லிடுண்ணா......"
விசும்பலுடன் வார்த்தைகள் வெளிவந்தன பானுவிடமிருந்து.
ரமேஷ் தன் கைகளினால் அறையின் கதவை சிறிது திறந்தபடி பானுவிடம் பேசிக்கொண்டிருந்ததால் , அறையின் வெளியில் இருந்த இளா, பானு தன் அண்ணனிடம் கூறியது அனைத்தையும் கேட்டான்.
விழியோரம் துளிர்த்த கண்ணீரை தன் விரலால் சுண்டி விட்டபடி அவ்விடம் விட்டு அவன் நகர......ரமேஷ் அவனை நிறுத்தினான்.

"மனதளவில் உடைந்து, குழம்பி போயிருக்கிற இந்நேரத்தில் பானுவிடம் எது பேசினாலும் அவள் தன் பிடிவாதத்தை தளர்த்த போறதில்லை, மாறாக அவளது இறுக்கம் தான் அதிகரிக்கும்.........சுயபட்சாதபத்தில் இருந்து அவள் வெளிவற சிலகாலம் ஆகும் இப்போ அவளுக்கு தேவை மன அமைதி , எவ்வளவு நாள் ஆனாலும் அவளுக்காக நான் காத்திட்டிருப்பேன் ரமேஷ்." நா தழுதழுத்தது இளாவிற்கு.
நீ என்னை வேண்டாம் வேண்டாம்
என்று சொல்லும் ஒவ்வொரு முறையும்
இறந்து இறந்து பிழைக்கிறேன்!
எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
உன்பக்கமிருந்து உன்னை
வேதனை படுத்துவதை விட
உன்னை பிரிந்து நான் வேதனையடைந்தாலும்
பரவாயில்லை என்று உன்னை
சிறிது பிரிகிறேன் கண்ணே…
என் செல்லமே..
கொஞ்ச நாள் பொறுத்துக்
கொள்கிறேன்..
உன்னைக்
கொஞ்சும் நாள் தூரத்தில்
இல்லையென்ற
நம்பிக்கையுடன்...
போகுமுன் எந்தன்
காதல் இதயத்தை உந்தன்
காலடியில் விட்டு செல்கிறேன்…
ஏனெனில் உன் அருகாமை நீங்கினால்
தனது துடிப்பை நிறுத்திவிடும் என்பதால்!
பானுவின் உடல்நிலை தேறியதும் அவளை வீட்டிற்கு அழைத்து வந்தனர்.
பாணுமதி ....கெட்டிகாரப் பெண், கோபமும் அன்பும் சற்றென்று வரும்.
'அவளது பெயருக்கு தகுந்தபடி.........
பாணு என்றால் சூரியன், சூரியனைப் போலக் கோபச் சூடு;
மதி என்றால் நிலவு, நிலவைப்போல குளிர்ச்சியான அன்பு;
ஆனால் இன்றோ......யாரிடமும் பேசாமல் மெளனம் காத்தாள்.
கண்களில் எப்போதும் ஒருவித மிரட்சி.

இளாவின் நினைவுகள் மனதில் நெருஞ்சி முள்ளாக குத்தியது.....
இளாவை சந்தித்த நாட்களும், காதலை வெளிப்படுத்திய வேளையும் பானுவிற்கு கண்முன் காட்சியாய் விரிந்தது.......!!!
பானு தஞ்சாவூரில் கல்லூரி படிப்பை முடித்துவிட்டு, சென்னையில் வேலை கிடைத்து அண்ணாவுடனே தனியாக வீடு எடுத்து தங்க ஆரம்பித்து சில மாதங்களுக்கு பின் அவளது பெற்றோரும் சென்னைக்கே குடிபெயர்ந்தனர்.
தன் அண்ணாவின் நண்பனாக இளா பானுமதிக்கு அறிமுகம் ஆனான். அரசியல், சினிமா, விளையாட்டு, இலக்கியம், கவிதை என்று எந்த தலைப்பில் பேசினாலும், ஈடு கொடுத்து சுவாரஸ்யமாக பேசும் பானுவின் பேச்சு, அவள் முகத்துல் இருந்த ஒரு விதமானக் குழந்தைத்தனம்...என அனைத்தும் இளாவை கொள்ளையிட்டது.
ஒரு நாள் மாலையில், இளாவும் பானுவும் பேசிக்கொண்டிருக்கையில், இளா பானுவிடம்......

"உன்னை பர்ஸ்ட்டு எங்கே பார்த்தேன்னு ஞாபகம் இருக்கா?"
"இருக்கு......ஆட்டோல நான் வீட்டுக்கு வந்து இறங்கினப்போ, ஆட்டோக்காரருக்கு கொடுக்க சில்லறை இல்லாம தேடிட்டு இருந்தேன் , அப்போ என் அண்ணாவை பார்க்க வீட்டுக்கு வந்த நீங்க சில்லறை கொடுத்தீங்க............... அதை நான் இன்னும் திருப்பிக் கொடுக்கவே இல்லை.......ஹி ஹி ஹி"
"ஹும். ....!"
"ம்ம்... விளையாட்டா ஆறுமாசம் ஓடிட்டுச்ச இல்ல??"
"உனக்கு விஜய் பிடிக்குமா? அஜித் பிடிக்குமா?"
"ஏன் சம்பந்தா சம்பந்தமில்லாம பேசிக்கிட்டிருக்கீங்க?"
"ம்ம்ம்.. கொஞ்சம் கன்ஃப்யூஷன்லே இருக்கேன்!"
"என்ன கன்ஃப்யூஷன்"
"எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"
"யாருகிட்டே எதை எப்படி சொல்லுறதுன்னு கன்ஃப்யூஷன்?"
"உன்கிட்டே தான்"
"என்கிட்டவா??........சரி சொல்லுங்க"
"சொன்னா நீ என்னை தப்பா நினைச்சுக்க மாட்டியா?"
"பரவாயில்லை. சொல்லுங்க.........நான், தப்பா நெனைச்சிக்க மாட்டேன்"
"ப்ராமிஸ்........."
"காட் ப்ராமிஸ்"
"என்னை கல்யாணம் பண்ணிக்கிறீயா?"
" ............................."
"உனக்கு இஷ்டம் இல்லியா பானு?"
" கம்னு இருந்தா இஷ்டம் இல்லேன்னு அர்த்தமா?......"

"அம்மா தாயே.....வாய் திறந்து பேசினாலே.....பொண்ணோட மனசை புரிஞ்சுக்க முடியாது......இதுல நீ இப்படி அமைதியா இருந்தா.....நான் என்னன்னு நினைக்கிறது??? நம்மளையும் ஒருத்தன் கல்யாணம் கட்டிக்கிறியான்னு கேட்குறானேன்னு .....நீ சந்தோஷப்படுவேன்னு பார்த்தா, இப்படி உம்னு உக்காந்துட்டு பந்தா காட்டுறே??"
தனது பேச்சு.... அவளுக்கு கோபத்தை வரவழைக்கிறது என்பதை அவளது முகசிவப்பும்.. மூக்கு விடைப்பும்.. இதழின் நடுக்கமும், வேக மூச்சில் ஏறி இறங்கிய நெஞ்சும் உணர்த்தியதும்,
"என்னடா செல்லகுட்டி.......கோபமா??"
" ஹலோ உடனே 'செல்ல்குட்டி'ன்னு கொஞ்சினா......கூல் ஆகிடுவேன்னு நினைப்பா??"
"அப்போ என்ன பண்ணினா.......கூல் ஆவா என் பானு??"என்றபடி........

கோபத்தில் இருப்பவளின் பின்னால் சென்று...செவிமடலை இதழால் மென்மையாய் உரசி... அதில் சிலிர்த்து அவள் எழுவதற்குள்...அப்படியே அணைத்து....நெற்றியில் இதழ் பதித்தான்!!
அந்த முதல் முத்தத்தை இப்போது நினைக்கையிலும் உடல் சிலிர்த்தது பானுவிற்கு!
என்னவனே!
உன்னை காதலிக்க ஆரம்பித்த
நிமிடம் முதல் - என்னை சுற்றி
சகலமும் நீயாக இருக்கவேண்டும்
என்று எண்ணினேன்.. எந்தன்
உயிராகவும் கூடத்தான்..!
அந்த உயிர் பிரியும் வலியை விட
நீ என்னை விட்டு பிரியவேண்டும்
என்ற நினைவே கொடுமையாக உள்ளதடா!
மரணத்தை கூட தைரியமாக எதிர்கொள்ளும்
எந்தன் இதயம்.. உந்தன் பிரிவை
தாங்கமாட்டாமல் தவிக்கிறது!
துணிச்சலுடன் திகில் தொடர் எழுதிய 'மதிமாறன்' அவளிடமிருந்து கொஞ்சம் கொஞ்சமாக மறைந்துக் கொண்டிருந்தார்.
இரண்டு மாதங்களில் பானுவிற்கு செயற்கை கை பொறுத்தப்பட்டது. இளமாறன் தான் இதற்கான முழு பொறுப்பையும் எடுத்துக்கொண்டான் என்பதை பின்னொரு நாளில் அவளது அம்மா சொல்ல அறிந்துக்கொண்டாள் பானு.
நாட்களும் உருண்டோடின.......பானுவின் பிறந்தநாள் வந்தது..........அன்று பானு........
[தொடரும்]
உயிரே!......உறவாக வா??? - 4