பகுதி - 1பகுதி - 2
சோஃபாவில் அமர்ந்தான் ரவி,
"என்ன சாப்பிடுறீங்க, காஃபி, டீ, ஜூஸ்"
"இல்ல.... எதுவும் வேணாம்"
"ரொம்ப பிகு பண்ணிக்காதீங்க, ஜில்லுனு ஜூஸ் குடிங்க"
பதிலுக்கு காத்திராமல் ஜூஸ் கொண்டு வந்து கொடுத்தாள்.
அவன் ஜூஸ் குடித்து முடிக்கும்வரை அவனையே பார்த்துக் கொண்டிருந்தாள்.

"எப்படி இருக்கா உங்க பெங்களூர் பைங்கிளி??"
"என்ன.........என்னது?'
"ஹலோ, Oscar Nominee ன்னு நினைப்பா?....எங்களுக்கு எல்லாம் தெரியும்"
"என்ன.....தெரியும்"
" நீங்க பெங்களுர்ல ஒரு பொண்ணை லவ்ஸ் பண்ற மேட்டர் தெரியும்னு சொன்னேன்"
"அது......அது ...வந்து"
"லவ் மேட்டரை எப்படி வீட்ல சொல்றதுன்னு கூட தெரியாதா? இப்படியா டக்குனு போட்டு உடைப்பாங்க மேட்டரை, உங்களால மாமா இப்படி ஆகிட்டாரு"
"ஏய்..என்ன...அதுக்கும் இதுக்கும் எந்த சம்பந்தமுமில்லை"
"என்ன புண்ணாக்கு சம்பந்தமில்லை, லவ் மேட்டருதான் பக்குவமா சொல்ல தெரில, நீங்க 'அலைபாயுதே ' ஸ்டைல்ல ரிஜிஸ்டர் மேரேஜ் பண்ணிக்கிட்ட கதையாச்சும் ஒழுங்க சொல்லிடுங்க இப்போவே, அதிர்ச்சியோட அதிர்ச்சியா போகட்டும்"
"ஹே......என்ன ஓவரா பேசுறே"
"மாமா வை இந்த நிலைமைக்கு ஆளாக்கினது நீங்க, இப்ப எதுக்கு என்கிட்ட கத்துறீங்க"
"எதுக்கு வீட்டுக்குள்ள கூப்பிட்டு வம்பிழுக்கிற நீ"
"உங்க கிட்ட வம்பிழுக்க இங்க யாருக்கும் ஆசையில்ல"
"சே...நீ மாறவே இல்ல, ருக்குவை கூப்பிடு, நான் கிளம்பனும்"
"அக்கா அப்போவே ஆட்டோல ஹாஸ்பிடலுக்கு போயாச்சு, அஞ்சலி பாப்பா தூங்குறா, அம்மா கோயிலுக்கு போயிருக்காங்க, நீங்க வந்ததும் சாப்பாடு கூடை கொடுத்தனுப்ப சொன்னாங்க"
"பின்ன எதுக்குடி வேணும்னே பொய் சொல்லி வீட்டுக்குள்ள வரவைச்சே"
"எங்க வீட்டுக்குள்ளே வரவேமாட்டேன்னு 2 வருஷத்துக்கு முன்னாடி சவால் விட்டீங்க இல்ல, அதை தோக்கடிக்கதான் உள்ளே கூப்பிட்டேன்..........வெவ்வே, வெவ்வே!!"
கிண்டலுடன், முகபாவம் மாற்றி வேடிக்கை காட்ட, ரவிக்கு அவளை 'பளாரென' அறைய வேண்டும்போல் இருந்தது. அப்படி அரைஞ்சாலும் திருந்தாத ஜென்மம் என்று மனதுக்குள் திட்டிக்கொண்டே சாப்பாடு பையை மட்டும் அவளிடம் வாங்கி கொண்டு ஹாஸ்பிடலுக்கு தன் பைக்கை ஓட்டினான்.
ஹாஸ்பிடலில் ரவியின் அப்பா இருந்த ரூமிற்கு அருகில் ரவி வந்ததும், திறந்திருந்த கதவின் வழியாக அறையினுள் அவனது அம்மாவும், அக்காவும் பேசிக்கொள்வது நன்றாக கேட்டது ரவிக்கு...
"ஏன்டி ருக்கு, இந்த புள்ள ராஜி நம்ம அஞ்சலி பாப்பாவை நல்லா பாத்துகிறா, நேரத்துக்கு நல்ல சமைச்சு கொடுத்து விடுறா, நல்ல புள்ளையாத்தாண்டி இருக்கிறா"
"ஆமாம்மா, என்னையும் அத்தை வீட்ல அவளும் அத்தையும் நல்லா கவனிச்சுக்கிறாங்கமா"

" ஆனா கொஞ்சம் வாய் கொழுப்புதாண்டி அவளுக்கு ஜாஸ்தி"
"யாரு தான்மா வாயாடல, நான் என் கல்யாணத்துக்கு முன்னாடி நம்ம வீட்ல எவ்வளவு வாயாடுவேன், அப்போ எல்லாம் நீ ரசிக்கதானேமா செய்த, இப்போ பாரு, கல்யணமாகி ஒரு புள்ள பிறந்ததும் எப்படி பக்குவமாகிட்டேன். அது அது அந்தந்த வயசுல பொண்ணுங்க கொஞ்சம் லொட லொட, துறு துறு வாயாடித்தனம் பண்ணத்தான் செய்வாங்க, அதெல்லாமா தப்பா நினைப்பாங்க?"
"ஆமாம்டி ருக்கு, நான் தான் அவ மேல கொஞ்சம் வெறுப்பா இருந்துட்டேன், நல்ல பொண்ணுதாண்டி இந்த ராஜி"
"என்னம்மா பண்றது, நம்ம ரவிதான் வேற பொண்ணை லவ் பண்றானே, யாருக்கு யாருன்னு அந்த கடவுள் தான்மா முடிவு பண்ணனும்"
'அடப்பாவமே! என் அம்மாவையே மாத்தி மயக்கிட்டாளா இந்த பாதகத்தி!! இவ போடுற வெளிவேஷம் எல்லாம் புரியாம அக்காவும் அம்மாவும் அவளுக்கு ஜால்ரா அடிக்கிறாங்களே. எனக்கு இருந்த ஒரே சப்போர்ட் என் அம்மா......அவங்களே 'அந்தர் பல்டி' அடிச்சுட்டாங்களே!!
நல்ல வேளை Bangalore ல ஒருத்திய லவ் பண்றேன்னு சொல்லி வைச்சேன், இல்லினா என் அம்மாவே இவள என் தலைல கட்டிவிட்டிருவாங்க போலிருக்கு, ' என யோசனையுடன் நின்றுகொண்டிருந்த ரவியின் முகத்துக்கு முன் அழகிய விரல் சொடுக்கு போட்டு அவன் சிந்தனையை கலைக்க,

தன் நிலைக்கு வந்தவனாய் திரும்பிப் பார்த்தான் ரவி, அங்கு அஞ்சலி பாப்பாவுடன் ராஜி,
"அஞ்சலி தூங்கி எழுந்ததும் அவ அம்மாக்கிட்ட போகனும்னு அழுதா, அதான் என் வண்டியில கூட்டிட்டு வந்தேன். எப்போவே சாப்பாடு கூடை வாங்கிட்டு வந்தீங்க, இன்னும் ரூம் வாசல்ல நின்னு ' பெங்களுர்ல' டூயட் பாடிட்டு இருக்கிறீங்களா?? , மாமாவுக்கு கரெக்ட் டைம்க்கு சாப்பாடு கொடுக்கனும்னு டாக்டர் சொல்லியிருக்கார்ல, இப்படி பகல் கணவு கண்டுக்கிட்டு நின்னா என்ன அர்த்தம், சாப்பாடு கூடைய இப்படி என்கிட்ட கொடுங்க, நான் ரூம்குள்ள போய் சாப்பாடு கொடுக்கிறேன் எல்லாருக்கும், நீங்க அஞ்சலியை பார்த்துக்கோங்க"
ராஜி பேசிக்கொண்டே போனாள்,
'இவ்வளவு நேரம் இவளை 'பளார்'ன்னு இரண்டு அறைவிடனும்னு துடிச்சுட்டு இருந்தேன், இப்ப 'படபட'ன்னு பொரிஞ்சுத்தள்ளுரா, நானும் எல்லாத்துக்கும் தலையாட்டிட்டு இருக்கிறேன்,
எப்போ சாப்பாடு கூடை அவ கைல போச்சு??
அஞ்சலி பாப்பா என் கைல எப்போ வந்தா???'
குழப்பத்துடன் ரவி நிற்க, சிறிது நேரத்தில் அவனது அம்மாவும், அக்காவும் அஞ்சலி பாப்பாவிற்கு பிஸ்கட் வாங்கி கொடுக்க கடைக்கு அவளை அழைத்துச் செல்ல, ரவியை ரூமுக்குள் போய் லஞ்ச் சாப்பிட சொன்னார்கள்.
ரவி அப்பாவின் ரூமிற்குள் செல்ல, அங்கு......ராஜி கணேசன் மாமாவிற்கு கஞ்சி ஊட்டிக்கொண்டிருந்தாள்.
' உங்க மகனை கட்டிக்கிட்டு உங்க வீட்டு மருமகளா நான் ஆனா, உங்களுக்கு கஞ்சி தான் ஊட்டுவேன்' என்று தான் மாமாவிடம் சொன்னது ஞாபகம் வந்தது ராஜிக்கு,
மாமாவுக்கும் அது ஞாபகம் வரவே, இருவரும் புன்னகைத்துக் கொண்டனர்.
தன் அப்பாவுக்கு ராஜி கஞ்சி ஊட்டி விடுவதும், வாயிலிருந்து வழியும் கஞ்சியை பக்குவமாக துடைத்து விடுவதும், இருவரும் அர்த்த புன்னகை புரிந்துக் கொள்வதும் கண்ட ரவியின் மனதில், எரிந்து கொண்டிருந்த 'எரிமலை' ......'பனிமலையாக' உருமாறியதை உணர்ந்தான் ரவி.

'கண்டதும் காதல்' ஒருவகை என்றால்,
'இந்த பெண் என்னோடு மட்டுமல்லாமல் என் குடும்பத்தோடும் அன்பில் ஒன்றிப்போனால் வாழ்க்கை எப்படி இனிக்கும்' என்ற உணர்வு ஏற்படுத்தும் உணர்வு மற்றொரு வகை.
மகன் ரவி தங்களையே பார்த்துக்கொண்டிருந்ததை கவனித்த கணேசன், கை அசைத்து சைகையினால் அவனை அருகில் அழைத்தார்.
ராஜியையும் ரவியையும் மாறி மாறி பார்த்த கணேசன் மெதுவாக பேச ஆரம்பித்தார்.
strain பண்ணிக்க வேண்டாம் என்று ராஜி கூறியும் கேட்காமல் பேசினார் கணேசன்,
"ரவி............ராஜி........மன்னிச்சிடுங்க என்னை, நான் தான் உறவு விட்டு போககூடாதுன்னு உங்க கல்யாணத்துக்கு ரொம்ப வற்புறுத்திட்டேன். வாழ போறவங்க நீங்க, இந்த காலத்து புள்ளைங்க நீங்க...உங்களுக்குன்னு தனிப்பட்ட விருப்பம் எதிர்ப்பார்ப்பு இருக்கும், சொந்தம்ன்ற ஒரே காரணத்துக்காக கட்டி வைக்க நினைக்கிறது தப்புன்னு புரிஞ்சுக்கிட்டேன்.
ரவி, நீ அந்த பெங்களுர் பொண்ணு விபரம் கொடுப்பா, எனக்கு உடம்பு சரியானதும், நானே பேசி முடிக்கிறேன்,
ராஜிம்மா.....உன்னைத்தான் மாமா ரொம்ப கஷ்டபடுத்திட்டேன், உனக்கு மாமாதான்டா மாப்பிள்ளை பார்ப்பேன், எப்படி பையன் வேணும்னு மட்டும் சொல்லு, மாமா அப்படி ஒரு பையனை உன் முன்னால கொண்டுவந்து நிறுத்துறேன்"
அப்பா பேச பேச ரவியின் ' பனி மலை' உருகியது....
'ஐய்யோ, யாரு எப்போ கட்சி மாறுவாங்கன்னெ தெரிலியே?
சரி இந்த கள்ளி மூஞ்சில என்ன 'ரேகை' தெரியுதுன்னு பார்க்கலாம்,' என்று ரவி அவளை ஓரக்கண்ணால் பார்த்தால்.....
'உனக்கு மாப்பிள்ளை பார்க்குறேன்' என்று தன் மாமா சொன்ன போது சிவந்த முகம் வெட்கத்தோடு இன்னும் ஜொலித்துக்கொண்டிருந்தது ராஜியிடம்!!
இது வேலைக்கு ஆகாது, சொன்ன பொய்யை காப்பாத்த பெங்களுர் போனதும் 'பைங்கிளி' வேட்டை ஆரம்பித்து விட வேண்டியதுதான் என முடிவெடுத்தான் ரவி.

முடிவுடன் ரவி தன் அப்பாவை பார்க்க, அவ்வளவு நேரம் நன்றாக பேசிக்கொண்டிருந்தவர் திடீரென நெஞ்சைப் பிடித்துக்கொண்டு பெருமூச்சு விட ஆரம்பித்தார்,
"மாமா........மாமா...........என்னாச்சு மாமா"
"அப்பா......அப்பா........."
"சீக்கிரம் டாக்டர கூப்பிடுங்க ரவி......."
[தொடரும்]
பகுதி - 4