" எதுக்குமா இப்போ...........எனக்கு.......கல்யாணம்....." என்ற மாலதியை இடைமறித்தாள் அவள் அம்மா, " இப்படியே எந்தனை நாள் தான் சொல்லிட்டுருப்ப, அப்பா இல்லாத நம்ம குடும்பத்தை தாங்க நீ பட்ட கஷ்டமெல்லாம் போதும். இவ்வளவு பெரிய இடத்துல இருந்து, அவங்களே விரும்பி உன்னை பெண் கேட்டு வந்திருக்காங்க, நாளைக்கு உன்னை பார்க்க மாப்பிள்ளையோட வீட்டுக்கு வராங்க,தயவு செய்து மறுப்பேதும் சொல்லாதே மாலதி".
"நேத்து ராத்திரி முழுவதும் உன்கிட்ட போராடி உன்னை சம்மதிக்க வைக்கிரதுக்குள்ள எனக்கு நெஞ்சு வலியே வந்துடுச்சு, எவ்வளவு நாள் தான் உன்னை கண்ணிப் பெண்ணா வீட்டுல வைச்சிட்டு இருக்கிறது , எனக்கும் உன்னை கட்டிகொடுக்கிற கடமை இருக்குதும்மா" என்று கண் கலங்கிய அம்மாவின் முகத்தை ஏறெடுத்துப் பார்க்க முடியாதவளாய், அம்மாவின் ' அந்த' வார்த்தை அவள் மனதை பிசைய, வேகமாக பஸ் ஸ்டாண்ட் நோக்கி நடந்தாள் மாலதி......
---------------------------------- *-------------------------------------------------
அலுவலகத்தில் இருந்தபோது தான் மாலதிக்கு திடீரென , நாளைக்கு தனனை பெண் பார்க்க வரும் மாப்பிள்ளையின் விசிட்டிங் கார்டை அம்மா தன்னிடம் தந்த போது , அதனை தன் கைப்பைக்குள் வைத்தது நினைவுக்கு வந்தது.
Ranjith M.B.A
Managing Director
Baargavi Textile Mills
Avinashi
Coimbatore
ஒரு மில் அதிபரின் குடும்பம் தான் மாலதியை விரும்பி பெண் கேட்டு வந்திருப்பதாக அம்மா சொன்னதை நினைவு படுத்திக் கொண்டாள். கார்ட்டில் இருந்த ஃபோன் நம்பருக்கு டயல் செய்தாள்.
ரிஷப்னிஸ்ட், MD யின் உதவியாளர், என்று பலரையும் கடந்து ரஞ்சித் லைனில் வந்தான். அவனிடம் தனியாக இன்றே தான் பேச விரும்புவதாக மாலதி கூறியதும், அதற்காகவே காத்திருந்ததுபோல் உடனே ஒப்புக்கொண்டான்.
டி.பி ரோட் 'ரிச்சி ரிச்' ஐஸ்கிரீம் பார்லரில் சந்திப்பதாக கூறினாள் மாலதி.
காந்திபுரத்திலிருந்து 7ஆம் எண் பேருந்தில் ஆர்.ஸ்.புரம் டி.பி ரோட்டிற்கு சென்று கொண்டிருந்த மாலதிக்கு, அந்த கோர சம்பவம் கண் முன் தோன்றியது...
-------------------------------------*-----------------------------------------
மாலதி வேலை செய்யும் தேயிலை ஏற்றுமதி நிறுவனத்தில் , அன்றொரு நாள் மனேஜர் அலுவலகத்திற்கு வராதக் காரணத்தால், கோவையின் புற நகர் பகுதியிலுள்ள தேயிலை குடோனுக்கு மாலதி செல்ல வேண்டிய வேலை வந்தது. அங்கு வேலைகளை முடிப்பதற்க்கு இரவு 8 மணி ஆனது. வேக வேகமாக பஸ்ஸடாண்ட் நோக்கி நடந்த மாலதி தன் பின்னால் மெதுவாக ஊர்ந்து வரும் காரை கவனிக்கவில்லை.

அப்பகுதியிலிருந்து மாலதியின் வீட்டுக்குச் செல்லும் பேருந்து வருவதற்கு காலதாமதமானது. திடீரென நல்ல மழை, பஸ்ஸடாண்டில் நின்றிருந்தவர்கள் தாங்கள் செல்ல வேண்டிய பேருந்திலும், சிலர் ஆட்டோவிலும் சென்று விட, மாலதி தன் பேருந்திற்காக தனியாக காத்திருந்தாள்.

அவள் எதிர்பார்த்திராத தருணத்தில், ரேயின் கோர்ட்டினால் தனனை முழுவதும் மறைத்திருந்த ஒரு உருவம் அவள் பின்னாலிருந்து அவள் வாய் பொத்தி, இழுத்து சென்று, அருகில் கட்டிட வேலை நடந்துக் கொண்டிருந்த ஒரு காலியான கட்டிடத்தில் தன் காம பசியை தீர்த்துக் கொண்டது.
அதை இப்போது நினைக்கையிலும் , மாலதியின் உடல் கூசியது, நடுங்கியது. இந்த கருப்பு சம்பவம் நடந்து 2 வாரம் ஆன நிலையில், இப்போது அவள் அம்மா 'பெரிய இடத்து சம்பந்தம்' என்று இவள் திருமண பேச்சை ஆரம்பித்தது , அவளை மேலும் வேதனையடைய செய்தது.
---------------------------------------------------- *-------------------------------
மாலதி 'ரிச்சி ரிச்' ஐஸ்கிரீம் பார்லருக்குள் சென்றாள், ரஞ்சித் யார் என்று எப்படி கண்டு பிடிப்பது, அவன் இந்நேரம் இங்கு வந்து சேர்ந்திருப்பானா?? என்று இவள் யோசனையோடு தன் பார்வையை சுழல விட.......
" ஹாய் மாலதி, ஐ அம் ரஞ்சித்" என்று அழகிய ஒரு இளைஞன் , வசீகரமான புன்னைகையுடன் அவளிடம் தன்னை அறிமுகம் செய்தான்.
இரண்டு பேருக்கும் ஐஸ்கிரீம் ஆர்டர் செய்துவிட்டு " என்கிட்ட ஏதோ பேசனும்னு சொன்னீங்க, என்னன்னு சொல்லுங்க மாலதி" என்று இருவருக்கும் நடுவில் இருந்த மெளனத்தை கலைத்தான் ரஞ்சித்.
மிடுக்கான தோற்றம், பணக்கார தோரனை, பெண்களின் கணவை கெடுக்கும் அத்தனை அம்சங்களும் நிறைந்தவனாக இருந்த ரஞ்சித்தை ஒரு கணம் தலை நிமிர்ந்து பார்த்தாள் மாலதி.இவ்வளவு இருந்தும் என்னை விரும்பி பெண் கேட்டு வந்திருக்கிறானா?? என்று யோசனையில் மூழ்கினாள்.
" என்ன யோசனை மாலதி.........ஃபீல் ஃபிரீ அண்ட் கம்ஃபர்டபிள்" என்று அவளை சகஜ நிலைக்கு கொண்டு வர எத்தனித்தான் ரஞ்சித்.

மாலதியின் மஞ்சள் முகம் சிவந்தது, அழகிய விழிகளில் கண்ணீர் துளிகள் ததும்பின, செவ்விதழ் துடித்தது, தொண்டையில் சிக்கிய வார்த்தைகள் வெளிவர தடுமாறியது.............
" அது வந்து....நான் .....உங்ககிட்ட........கொஞ்சம் பேசனும்....." என்று தயங்கி, தினறி, நாத்தழுதழுக்க, இடையில் விம்மல், அழுகையுடன் தனக்கு நடந்த அந்த கொடுரத்தை அவனிடம் சொல்லி முடித்தாள்.
சிறிய மெளனம் நிலவியது, ஒரு பெருமூச்சிற்கு பின்......
"மாலதி, உங்களுக்கு நடந்தது ஜஸ்ட் அன் அக்ஸிடண்ட், அதை நீங்க இப்போவே மறந்திடுங்க. நாம நடந்து போறப்போ நம்ம கால்ல அசிங்கம் ஒட்டினா, கழுவிட்டு போறதில்லையா, அது மாதிரி நினைச்சுக்கோ, நாம இதைபத்தி இனிமே பேசவேண்டாம், புது வாழ்ககையை என்னோடு ஆரம்பி மாலதி,திருமணத்திற்கு முன்னமே இதை நீ என்கிட்ட மறைக்காம சொன்னதை நான் பாராட்டுறேன். உன்னை மாதிரி அழகும், குணமும் நிறைந்த ஒரு பெண் எனக்கு மனைவியா கிடைக்க நான் கொடுத்து வச்சிருக்கனும்" என்று உரிமையுடன் மேஜையின் மீதிருந்த மாலதியின் கரங்களை பற்றினான் ரஞ்சித்.

தன்னை ஒருமையில் உரிமையுடன் அழைத்து, தனக்கு நடந்த அந்த சம்பவத்தையும், தன் மனநிலையையும் எளிதாக புரிந்துக்கொண்ட அவன் உள்ளம் அவளுக்கு வியப்பாகயிருந்தது. அவன் கரங்களின் ஸ்பரிசத்தில் ஒரு நிமிடம் பூரித்து போனாள் மாலதி.
நன்றியுணர்வு மேலோங்க பணிவுடன் தலை நிமிர்ந்த போதுதான், தன் கரங்களை பிடித்திருந்த அவன் இடது கையில் அணிந்திருந்த ' கை செயினை' [ப்ரேஸலட்] கவனித்தாள்.
ஒரு நிமிடம் அதிர்ந்த மாலதி, சுதாரித்துக் கொண்டு, " உங்க கையில்..........இந்த .............ப்ரேஸிலட், அது ......உங்களோடதா??" என்று கேட்டாள் அவனிடம்.
" ஆமாம் , என்னோடதுதான், ஏன் கேட்கிற மாலதி " என்றான்
" இல்ல புதுசு மாதிரி இருந்தது........அதான்" என்றாள் மாலதி யோசனையுடன்.
" ஆமாம் மாலதி, புதுசு தான், இது என்னோட ராசியான ப்ரேஸ்லட், என்னோட இன்ஷியல் இருக்குது பாரு" என்று அவளிடம் "RS" என்று தன் கைச்செயினில் தொங்கும் இன்ஷியலை காட்டிக்கொண்டே" எங்கேயோ என் ப்ரேஸ்லட் தொலஞ்சுப்போச்சு, இது என்னோட ராசியான ப்ரேஸ்லட், அதான் உடனே புதுசு செய்துட்டேன்" என்று விளக்கம் தந்தான்.
மாலதிக்கு தலை சுற்றியது, தன் நிலைக்கு வந்தவளுக்கு எல்லாம் இப்போது வெட்ட வெளிச்சமாக விளங்கியது. தன் கற்பை சூரையாடிய கயவனிடம் அவள் போராடியபோது அவள் கைபற்றியது அவனது கைச்செயின் மட்டுமே, அறுந்துப் போன அந்த கைச்செயினை தன் கைப்பையில் பத்திரமாக வைத்திருந்தாள் மாலதி.
" தொலைந்து போன உங்க ப்ரேஸ்லட் இதுதானா" என்று அந்த கைச்செயினை அவன் முன் ஆட்டினாள் மாலதி.
அதிர்ச்சியில் உரைந்துப் போனான் ரஞ்சித். பேச நாவரண்ட நிலையில் அவன் தடுமாற, தொடர்ந்தாள் மாலதி,
" ஏன் சார், நீங்க செய்த பாவத்துக்கு பிராயச்சித்தம் தேடுறீங்களா??? இருட்டில் நீங்க செய்த தப்புக்கு வெளிச்சத்தில் கணக்கு தீர்க்கபார்க்கிறீங்களா??"
"மாலதி.............அன்னிக்கு.........ஏதோ உணர்ச்சிவசப்பட்டு..........ஸாரி, நான் பண்ணினது பெரிய தப்பு, ...........அதான் உன்னை பெண் கேட்டு என் அப்பா........அம்மா......." என்று ரஞ்சித் முடிக்கும் முன் ,
" போதும் சார், நிறுத்துங்க, உண்மையிலேயே நீங்க உங்க தப்பை உணர்ந்து, எனக்கு வாழ்க்கை தரனும்னு நினைச்சிருந்தா, என் கிட்ட உண்மையை சொல்லி என்னை திருமணம் பண்ணியிருக்கனும். ஆனா நீங்க அப்படி பண்ணலியே, ஏதோ பெரிய தியாகம் பண்ற மாதிரி என்னை கட்டிக்க பெண் கெட்டு வருவீங்க, கல்யாணத்திற்கு முன்னமே எனக்கு நடந்த இழப்பை எல்லாம் நான் சொல்லும்போது பெருந்தன்மையா மன்னிப்பீங்க, நானும் நீங்க எனக்கு வாழ்க்கை தந்த தெய்வம்னு வாழ்க்கை முழுவதும் உங்க அடிமையா, உங்க உயர்ந்த உள்ளத்தை நினைச்சு உங்களை மதிக்கனும்,ஆனா என் மனசுகுள்ள குற்றவுணர்வுல கூனி குறிகி வாழனும், இல்லையா??"
"மா....ல........தி" என்று ரஞ்சித் பேச முயல,
"வேண்டாம், நீங்க போடுற இந்த பிச்சை வாழ்க்கை எனக்கு வேண்டாம், களங்கத்தோட வாழ்ந்தாலும் வாழ்வேனே தவிர, உங்களை மாதிரி வேஷம் போடுற கயவனோட நிச்சயம் வாழ மாட்டேன்" என்று அவன் பதிலுக்கு காத்திராமல் நிமிர்ந்த நடையுடன் வெளியேறினாள் மாலதி.