December 19, 2008

காதலில் விழாமல் தப்பிப்பது எப்படி???




காதல் எப்படி?..... எங்கே?..... ஏன்?? வருதுன்னு யாராலயும் சொல்ல முடியாது. வரவேண்டிய நேரத்துல கண்டிப்பா வரும்னு சொல்ல முடியாது.


கண்டதும் காதல் வரலாம்.
கண்டதைப் பார்த்தும் காதல் வரலாம்.
கண்ணடிச்சா காதல் வரலாம்.
கன்னத்துல அடிச்சா கூட காதல் வரலாம்.
இப்படி தொறந்த வீட்டுல..ஸாரி.............., தொறந்த நெஞ்சுக்குள்ள காதல் படார்னு நுழைஞ்சு டூ மினிட்ஸ் நூடுல்ஸ் மாதிரி வேகமாக வெந்து நிக்கும்.


பசிக்கும், ஆனா சாப்பிட்டா ஏப்பம் வராது.
தூக்கம் வரும், ஆனா கொட்டாவி வராது.
நாய் கடிச்சாக் கூட கொசு கடிக்கிற மாதிரிதான் இருக்கும்.
ஆனா கொசு கடிச்சா நாய் கடிச்ச மாதிரி வலிக்கும்.
அழுக்கைப் பார்த்தாலும் அழகாத் தெரியும்.
எருமை கத்துனாக் கூட ஏ.ஆர்.ரஹ்மான் மியூசிக்கா கேட்கும்.
கூட்டத்துல இருக்கறப்ப மனசு தனியா இருக்குற மாதிரி மாஞ்சா தடவி பட்டம் விட்டுக்கிட்டிருக்கும்.
தனியா இருக்கிறப்ப சட்டசபையில இருக்கற மாதிரி மனசு கத்தும்.



*காய்ஞ்சு கருவாடாப் போன ரோசாப்பூ,
*எப்பவோ எச்சில் பண்ணுன எட்டணா மிட்டாயைச் சுத்தியிருந்த பேப்பர்,
*கிழிஞ்சு போன பஸ் டிக்கெட்,
*லேசா செம்பட்டையான ஒரு முடி,
*குறைப் பிரசவத்தில் பிறந்த நிலா மாதிரி இருக்கிற நகத்துண்டுகள்,
*காது போன குட்டிக் கரடி பொம்மை,
*ரெண்டு சென்டிமீட்டர் துண்டு பேப்பர்ல எழுதுன மூணு வரிக் கவிதை - இப்படித் தேடித் தேடிச் சேர்த்து வைச்சிருக்கிற பொக்கிஷங்களைப் பல்லை இளிச்சுப் பார்த்துட்டே இருந்தா பரலோகத்துல இருக்குற ஃபீலிங் கிடைக்கும்.


இப்படி மருந்தே கண்டுபிடிக்க முடியாத உயிர்க்கொல்லி நோயான காதல்ல "ஸ்ஸரக்'குன்னு வழுக்கி விழுற இடங்கள் எதுன்னு ஒரு ஜொள்ளு+லொள்ளு ஆராய்ச்சிதான் இது.


* 23சி பஸ்ஸுக்காக 24 நிமிஷங்களாகக் காத்திருப்பீங்க. 25 வயசுள்ள ஒரு பையன் பஸ் வரலையேன்னு டென்ஷனோட 26 வது தடவையா நகத்தைக் கடிப்பான். 27 வது நிமிஷம் பஸ் வர, 28 பேர் முந்தி அடிச்சு ஏறுவோம். நீங்க முன்வாசல். அவன் பின்வாசல். நீங்க கொடுக்குற ரெண்டு ரூபா, 29 பேரைக் கடந்து முப்பதாவது ஆளா அவன் கைக்குப் போகும். அப்புறம் அவன் டிக்கெட் எடுத்துக் கொடுக்குறது தினமும் நடக்கும். அதுக்கு தாங்க்ஸ் சொல்லி ஒரு பார்வையால நன்றி சொல்லுவீங்க. அந்த டொக்கு விழுந்த லுக்கே அவனுக்கு ரொமாண்டிக் லுக்கா தெரியலாம். டிக்கெட்ல "டிக்' ஆகி காதல் விக்கெட் விழலாம். பி கேர் ஃபுல்!




* தொலைச்ச எதையோ தேடிக்கிட்டு வர்ற மாதிரியே ரெண்டு பேரும் எதிர் எதிர்த்தாப்ல வருவீங்க. ஒரு முட்டல், மோதல் நடக்கும். அடுத்த செகண்ட்ல நாலு உதடுகளும் துடிதுடிச்சு "ஸாரி'ன்னு சொல்லும். விலகி நடக்கறப்போ உசிரை எடுத்து வெளியே போட்டுட்டு நடக்குற மாதிரி தோணும். போறப்பவே ரெண்டு பேரும் ஒரே நேரத்துல திரும்பிப் பார்ப்பீங்க. வெட்கமெல்லாம் வேற வர்ற மாதிரி சிரிப்பு ஒண்ணு சிரிப்பீங்க.

அடுத்த நாள், "இந்தாங்க, இது உங்க முடி. நேத்து என் சட்டைப் பொத்தான்ல சிக்கிடுச்சு'ன்னு அவன் கொடுக்க, "பரவாயில்ல, அதை நீங்களே வைச்சுக்கோங்க'ன்னு ஏதோ சொத்து எழுதிக் கொடுக்குற மாதிரி நீங்க சொல்லிட்டுப் போக, அதுக்கு மேல என்ன நடக்குமுன்னு நான் வேற சொல்லணுமாக்கும்.



* நீங்க கோயிலுக்குப் போறப்ப எல்லாம் பட்டை அடிச்சிட்டு, பக்தி மாம்பழமா ஒருத்தன் உங்க பின்னாலேயே வருவான். சந்நிதி முன்னால நின்னுட்டு , கண்களை மூடி வேகவேகமாக ஏதோ சொல்லுவான். ஸ்லோகம்னு நினைக்கக் கூடாது. காதைக் கூர்மையா வைச்சுக் கேட்டாத்தான் தெரியும். அது ஸ்லோகமில்ல, ஏதோ சினிமாப் பாட்டுன்னு!

திடீர்னு ஒரு நாள் யாரோ உடைச்ச தேங்காயைப் பொறுக்கிக்கிட்டு வந்து,"உன்னோட பூனைக் குட்டிக்கு இன்னிக்கு நட்சத்திரப்படி பிறந்தநாள். அதான் அர்ச்சனை பண்ணுனேன். ஆமா உன் பேரு என்ன?"ன்னு கேட்பான். இப்படி ஒரு வாசகமா ஆரம்பிக்கிறது திருவாசகமாப் பெருகி காதல் வெள்ளத்துல அடிச்சுட்டுப் போக அம்புட்டு சான்ஸ் இருக்கு. ஜாக்கிரதை!!



* "எனக்கு கணக்குப் பாடத்துல ஒரு டவுட்".
"அசோகர் எத்தனை மரங்களை நட்டாரு?' அப்படின்னு சின்னப்புள்ளத்தனமா டவுட் கேட்க ஆரம்பிப்பாங்க.
"எனக்கு நேத்து சுண்டுவிரல் சுளுக்கிட்டதால கிளாஸ்ல நோட்ஸ எழுத முடியலடா. உன் நோட்ஸ் தாடா. ப்ளீஸ்டா'ன்னு உரிமை ஊஞ்சலாட கேப்பாங்க. நோட்ஸ் திரும்ப வர்றப்போ, ஏகப்பட்ட பின்குறிப்புகளோட லவ்வையும் அட்டாச்மெண்ட்டா அனுப்புவாங்க.


கால்குலேட்டரைக் கடனாக் கேப்பாங்க. திருப்பித் தர்றப்போ"143' ன்னு அதுல நம்பர் சிரிக்கும்.
அடிஸ்கேலை அன்பா வாங்கிட்டுப் போவாங்க. திருப்பித் தர்றப்போ, ஸ்கேலோட அடிப்பாகத்துல ஹார்ட்ல அம்பு விட்டுத் தருவாங்க. ஸ்கூலுக்கு ஸ்கூல் மன்மதன்ஸ், ரதிஸ் காதல் மார்க்கோட அலைஞ்சுக்கிட்டே இருக்காங்க. எச்சரிக்கை!!



* "ஹலோ சுசீலா இருக்காங்களா? இல்லையா...ராங் நம்பரா..நீங்க யாரு? ஓ.. நீங்க சுப்புலட்சுமியா! பரவாயில்லை நீங்களே பேசுங்க. நீங்களும் நல்லாத்தான் பேசுறீங்க! ஸ்வீட் வாய்ஸ்!'ன்னு சில ராங் நம்பர்ஸ் கடலையைப் போட ஆரம்பிக்கும்."

ஆக்சுவலி, யு.எஸ்.போறதுதான் என் கனவு'ன்னு எஸ்.எம்.எஸ்.ல கடலை காவடி தூக்கும். போகப் போக காதல் கரகாட்டம் ஆடும். மெஸேஜ் அனுப்பி அனுப்பியே கட்டை விரல் கரைஞ்சு போயிடும்.



* "மூணு சுழி "ண' க்கு எத்தனை சுழி வரும்.' "ம்' - முக்கு புள்ளி வைக்கணுமா' இந்த ரேஞ்சுல தமிழ் தெரிஞ்ச பசங்க ,லவ்வை ஜிவ்வுன்னு சொல்லுறாப்ல. நாலு வார்த்தைகளைக் கவ்வி, கிரீட்டிங் கார்டுல தெளிச்சு ,"உன்னப் பத்தி ஒரு கவித எழுதுனேன். பாரு'ன்னு நீட்டுவாங்க .

"பூக்கலுக்கு பல்கள் உண்டா?

உன் - ஐப் பாத்ததும்

டெட்டானது காட்று!'


- இந்த ரேஞ்சுல கவிதப் போக்குவரத்து டிராபிக் ஜாம் - ஆகி கிடக்கும்.


ரெண்டே வரியில் நச்சுன்னு காதல் கவிதை எழுதுறவுகளும் கவிதை அம்புகளை அனுப்புவாக, அதை படிச்சுப்புட்டு,
"நம்ம பேரு என்ன இவ்வளவு கவித்துவமாவா இருக்கு??"
"நாம என்ன அவ்வளவு அழகாவா இருக்கோம்'னு வார்த்தைகளில் வழுக்கி விழுந்தோட்டோம்னா அவ்ளோதான். எழுந்திரிக்கவே முடியாது. ஜாக்கிரதை!!!



* "இன்னிக்கு என் ஆளு கூட மூவி போறேன்டினு' பந்தாவா ஒருத்தி முள்ளைத் தூவிட்டுப் போவா.
"இந்த சுடி என் லவ்வர் வாங்கித் தந்தான்டி. அவனுக்கு பஞ்சு முட்டாய்க் கலர்தான் பிடிக்கும். எப்படி இருக்குடி?'ன்னு தோழி ஒருத்தி தோரணம் கட்டி தூபம் போட்டுட்டுப் போவா.
"அரியர்ஸ் பார்ட்டியே லவ் பண்ணுறா. நமக்கென்ன குறைச்சல்'ன்னு தோணும்.
"அவளை விட பேரழகி நான். லவ் பண்ணுனா என்ன'ன்னு கொஸ்டின் வந்து மூளையைக் குடையும். இந்தக் கேள்விக்குறிகளை ஆச்சரியக்குறிகள் ஆக்கணும்னு கங்கணம் கட்டிட்டு காதலிக்க ஆரம்பிக்கலாமேன்னு சபலம் வரலாம். ஜாக்கிரதை!!!




* அடுத்த டேஞ்சரான நாள் பிப்ரவரி மாசம் வந்து பல்லைக் காட்டும். காதலர்களுக்கிடையில கீரிட்டிங் கார்ட்ஸ் கிரிக்கெட் ஆடும். காந்தி ஜெயந்தி என்னிக்குன்னு தெரியாதவங்ககூட காதலர் தினத்தை கடமையுணர்வோட கொண்டாடுவாங்க. "அட, எல்லாரும் கையில ஹார்ட்டைத் தூக்கிட்டு அலையறாங்களே, ஏன் நமக்குன்னு ஒரு லவ் இல்ல'ன்னு ஏக்கம் சுனாமியா வந்து நம்மள மூழ்கடிக்கும். வேணாம் ராசாத்தி வேணாம்.


பட்டாசு வெடிச்சாத்தான் தீவாளி,
கேக்குத் தின்னாத்தான் கிறிஸ்மஸ்,
ப்ரியாணி சாப்பிட்டாத்தான் ரம்ஜான்,
அதே மாதிரி காதலிச்சாத்தான் காதலர் தினம் கொண்டாட முடியும்னு தப்புத் தப்பா தத்துவம் பேசி எக்குத் தப்பா லவ்வுல சிக்கிச் சீரழிஞ்சிறாதீங்க!

(பின் குறிப்பு: ஈ-மெயிலில் வந்த கட்டுரையை, சில மாற்றங்களுடன் இப்பதிவில் பதிவிட்டிருக்கிறேன்!!!இந்தக் கட்டுரை 100 %ஜாலி கற்பனையே.)

December 10, 2008

உயிரே!....உறவாகவா??? - 4



உயிரே!....உறவாகவா??? - 1

உயிரே!....உறவாகவா??? - 2

உயிரே!....உறவாகவா??? - 3



பானுவின் பிறந்தநாளான அன்று மட்டுமாவது இளமாறனிடம் பேசும்படி ரமேஷும் , பெற்றொரும் வற்புறுத்தவே பானுவும் சம்மதித்தாள்.

அவளது வீட்டினரின் சம்மதத்துடன் பானுவை வெளியில் அழைத்துச் சென்றான் இளமாறன்.

நீண்ட நாட்களுக்குப் பின் பானுவும் , இளாவும் அவனது காரில் சென்றனர்.

சாரல் மழையும்...
மெல்லத் தீண்டும் தென்றலும்...
மேனியை வருடிச் செல்ல…
அதுவே அன்றைய பொழுதில் ஒரு இனிய சுகத்தைக் கொடுத்தது.

அந்த சுகத்தை அனுபவித்தவாறு…
இருவரும் ...பயணத்தைத் தொடர்ந்தார்கள்.


நீண்ட நாட்களுக்கு பின்......அன்றைய கால நிலையும், சூழ்நிலையும் சேர்ந்து...
இளாவின் மனதுக்குள் புது வித ராகம் பாட…

அவளுடன் பயணிக்கும் ஒவ்வொரு கண நேரத்திலும்...
அவன் முகத்திலும், அகத்திலும்...
ஆயிரமாயிரம் உணர்ச்சி வெள்ளம்...
இன்பமாக பொங்கி எழத் தொடங்கின.


மழை சாரல்!
மாலை நேரம்!
அருகில் தேவதையாய் அவள்!

அந்தத் தேவதைக்குப் பக்கத்தில் இருந்ததால்…
இதுவரை அவனுள் புதைந்திருந்த காதல் தீ...
பட்டெனப் பற்றிக் கொண்டு...
சுவாலை விட்டு எரியத் தொடங்கியது.

சாரலாகவோ
நிரம்பவோ
எப்பொழுதும் நான்
ரசிக்கும் மழை நீ...
எப்போது மீண்டும்
திரண்டு வந்து
மழையாய்
பொழிவாய் உன்
காதலை....
நனையக் காத்திருக்கிறேனடி...!!!


எதிர்புறம் இருந்து வருகின்ற வாகனங்கள் அடித்த வெளிச்சத்திலும்…
தாண்டிச் செல்லும் மின் கம்பங்களில் இருந்து ஒளித்த...
மின் குமிழ்களின் வெளிச்சத்திலும்...

அவள் முகம் மறைந்து மறைந்து...
மீண்டும் தெரிந்தது,
மேகங்களுக்குள் ஒளிந்து ஒளிந்து விளையாடும் நிலவைப் போல!!


அந்த இருட்டான வாகனத்தில் வெளிச்சம் வந்து போகும் போது...
அவனுக்கு அவனது தேவதை தெரிந்தாள்.

அவனது இதயத்தின் அறைகளில் எல்லாம்...
மெல்லிய பூவாசம் அடித்தால் போல்...
சுகந்தமாய் வாசம் வீசத் தொடங்கியது!!

அமைதியாக யோசனையில் மூழ்கிய படி காரின் முன் இருக்கையில் அமர்ந்திருக்கும் பானுவை பார்க்கையில்........இளாவிற்கு அவர்கள் இருவரும் காதலிக்க தொடங்கிய காலக்கட்டத்தில் இளாவின் பிறந்தநாளை இருவரும் சேர்ந்து கொண்டாடியது நினைவிற்கு வந்தது......!!



இளாவின் பிறந்தநாள் அன்று அவனது விருப்பப்படி, அவனுக்கு மிகவும் பிடித்த கலரில் புடவை உடுத்தி வந்தாள் பானு.
இருவரும் கோவிலுக்கு சென்றுவிட்டு, காரில் வந்தமர்ந்ததும்......,

பானு அவனுக்கு அன்பளிப்புடன் ஒரு வாழ்த்து அட்டையும் கொடுத்தாள்.
வாழ்த்து அட்டையை பிரித்த இளா.......அதனுள் பானு எழுதியிருந்த கவிதையை படித்து அதிசயத்துப் போனான்.

"செல்லம்.......நீ கவிதை கூட எழுதுவியா?? சொல்லவே இல்ல....சூப்பரா இருக்குடி குட்டிமா"

"நன்றி.......நன்றி........"

"ஒவ்வொரு வரியும் செம கியூட்டா இருக்கு.......உன்ன மாதிரியே"

"போதும் போதும்.......ஜொள்ளு வலியுது,தொடச்சுக்கோங்க"

"ஹே.......நிஜம்மா தாண்டா சொல்றேன்.....ரொம்ப பிடிச்சிருக்கு உன்னையும், உன் கவிதையையும்"

"ஹும்........"

"என்ன.........ஹும் னு சலிச்சுக்கிறே"

"ம்ம்.......வெறும் விமர்சனம் மட்டும்தானா என் கவிதைக்கு??"

"ச்ச.....ச்ச........இவ்வளவு அழகா கவிதை எழுதின என் செல்லத்துக்கு பரிசு கொடுக்காம இருப்பேனா"

கண்சிமிட்டலுடன்.......அவளது கரங்களை எடுத்து, உள்ளங்கையில் அழுத்தமான முத்தமிட்டான் இளா!

"கவிதை எழுதிய கைகளுக்கு பரிசாக முத்தம்......போதுமாடி செல்லம்??"


"அட.....இந்த பரிசு கிடைக்கும்னு தெரிஞ்சிருந்தா........கவிதைக்கு பதில் 'பாட்டு' பாடியிருப்பேனே" என்று குறும்பு புன்னைகையுடன் பானு கண்சிமிட்ட,

ஒரு நிமிடம் அவள் என்ன கூற வருகிறாள் என்று புரியாத இளா........சற்று யோசித்து விட்டு, பின்....

"என் குறும்புகார வெல்லக்கட்டி........நீ பாட்டு பாடாமலே அந்த பரிசு தர நான் ரெடி..............நீ???" என்று கேட்டபடி அவள் முகத்தின் அருகில் செல்ல, பானுவின் முகம் நாணத்தால் சிவந்தது!!!

"ச்சீ........போடா"

"என்னது......போ 'டா' வா????????"


கோபப்படுவதுபோல் முகபாவத்தை மாற்றியபடி இளா இன்னும் அவளை நெருங்கி, அவள் காதில்.......


உன் வெட்கங்களை
என் இதழ்களால்
களவாடிவிட்டு
போ'டா' என்ற
இதழ்களுக்கு தண்டனையாக
என் இதழ்களுக்குள்
சிறைபிடிக்கப் போகிறேன் பார்......!!!


பழைய நினைவுகளை சுவைத்தபடி,
அவர்கள் வழக்கமாக செல்லும் பீச்சிற்கே காரைச் செலுத்தினான் இளா.
அவர்கள் பீச்சை சென்றடையும் போது மழை நின்றிருந்தது.

இருவருமே எதுவும் பேசிக்கொள்ளாமல் ஒர் இடத்தில் அமர்ந்தனர்.
அவன் பக்கம் திரும்பாமல் தூரத்தில் தெரிந்த அலைகளில் பார்வையை பதித்திருந்தாள் பானு.

"பாவி.. பக்கத்தில் உனது பார்வைக்கு ஏங்கும் ஜீவனை விட்டுட்டு.. அலைகளை பார்த்து கொண்டிருக்கிறாயே..?" என்று மனதுக்குள் செல்லமாய் பானுவை திட்டியவன்,கொஞ்சம் அசைந்தால் அவளை ஸ்பரிசிக்கலாம் என்ற அளவுக்கு இடைவெளி விட்டு அவளது அருகே அமர்ந்தான்.

பானு அவனை திரும்பி பார்த்தாள்.
பானுவின் முகத்தில் முன்பிருந்த பளபளப்பு இல்லை, இளமை இல்லை.
அவனது கண்களைக் கண்டதும் அவள் தன்னைக் கட்டுபடுத்திக் கொள்ள இயலாமல் ஓசைப்படுத்தாமல் அழுதாள்.

அவன் எதுவுமே சொல்லாமல் அவள் கைகளைத் தன் கைக்குள் வைத்துக் கொண்டு வெகு நேரம் உட்கார்ந்திருந்தான்.

மனசில் பொங்கிய உணர்ச்சிகளை வெளியே காட்டாமல் ரொம்ப கஷ்டப்பட்டு அடக்கிக் கொண்டிருக்கிறான் என்று சிவந்து போன அவன் முகத்திலிருந்து தெரிந்தது.
குனிந்திருந்த இளம் முகத்தைப் பார்க்க அவனுக்கு மிகவும் வேதனையாக இருந்தது.


பால் போலக் கபடமற்ற முகம்.
தாமரை மலர் போல அழகான அமைப்பு.
இப்போது வேதனையால் மொட்டுப் போலக் கூம்பி விட்டதைக் காண அவனுக்கு சகிக்கவில்லை.
மெதுவாக அவளது இடது கை விரல்களை தடவியபடியே பேச்சை அரம்பித்தான்.

"பானு...."

"ம்ம்.."

"பானு.......மதிமாறன் மறுபடியும் கதை எழுதனும்"

வியப்புடன் விழிகள் விரிய அவனைப் பார்த்தாள் பானு.

"ஆமாம் பானு.........நீ தொடர்ந்து எழுதனும்........நிறைய எழுதனும், உனக்குள்ள இவ்வளவு பெரிய எழுத்து திறமை வைச்சுட்டு நீ இப்படி இடிஞ்சு போய்ட கூடாதுமா செல்லம்"

" இளா.......நீங்க என்ன சொல்றீங்கன்னு புரிஞ்சு தான் சொல்றீங்களா.........எனக்கு தான்.........வலது கை......."

தனது வலது கரத்தை அவள் முன் நீட்டினான் இளா......

"இந்த கை எழுதும்.........பானு எழுத நினைக்கிற எண்ணங்களை மதிமாறனின் எழுத்துக்களாக்கும் இளமாறனின் இந்த வலதுகை"

"........"

பேச வார்த்தைகளின்றி.....விளித்தாள் பானு!!!

எனக்கு தெரியும் நீ
ஒரு ரோஷக்காரி என...
கை இல்லாவிட்டால்
என்னடி..
உன் தாயாக மட்டுமல்ல
உன் கையாகவும் இருப்பேன்
நான்...
நம்பிக்கை கொள்ளடி..
என் செல்லமே..


".........."

"என்னமா நம்ப மாட்டியா என்னை......."

"இல்ல...............எனக்கு.....என்ன சொல்றதுன்னு......"

"என்னடா இது இதுக்கெல்லாம் கண்கலங்கிக்கிட்டு.......கண் துடைச்சுக்கோ , "

"......."

"நான் ரசிச்சு பிரமிச்சுப்போன எழுத்துக்களுக்கு சொந்தகாரி நீன்னு தெரிஞ்சுப்போ.........சந்தோஷத்துல திக்கு முக்காடிட்டேன்டா பானு"

".........."

" என் செல்லதுக்குள்ளே இப்படி ஒரு எழுத்து திறமையான்னு மலைச்சுப்போய்ட்டேன் தெரியுமா??.........ஆனா கள்ளிடா நீ, வேணும்னே மதிமாறனோட எழுத்தை எவ்வளவு மட்டம் தட்டிருக்க என்கிட்ட"

செல்லமாய் அவள் கன்னங்களில் கிள்ளினான் இளமாறன்.

முன்பெல்லாம் இப்படி செல்லமாய் கிள்ளினால் கூட, உடனே பானு
செல்ல கோபத்தில்.. அழகாய் விழிகள் விரிய, அவளது உணர்ச்சிகளின் வெளிப்பாடாய், அவனது மார்பிலும்.. வயிற்றிலும்.. சரமாரியாய் அடிகளை குத்துகளை வாரிவழங்கி.. ஓய்ந்துபோய்.. கண்கள் கலங்க.. அவனது மார்பில் பானு சாய்ந்து கொள்வாள்…

இளா அவளை தனக்குள்ளே புதைத்து கொள்ளும் வேகத்தில்.. இறுக்கி அணைத்து.. அப்புறம்.. அப்புறம்.. முத்த மழை பொழிவான்!!!

ஆனால் இன்றோ வெறுமையான ஒரு புன்னகையுடன் அவனைப் பார்த்துக்கொண்டிருந்தாள் பானு.

"என்னமா பானு........ஏன் ஒரு மாதிரி இருக்கிறே?"

"உங்கள் கைகள் மதிமாறனோட கதைகள் மட்டும் எழுதினா போதும்"

" நீ என்ன சொல்ல வர்ரேன்னு புரியல......"

" கை ஒடைஞ்சு போன உங்க ஆத்மார்த்த எழுத்தாளராய் மட்டும் என்னை பாருங்கன்னு சொல்றேன்"

"பானு........பானுமா........."

விருட்டென்று எழுந்தவள் தன் கண்ணீரை மறைக்க முடியாதவளாய், சிறிது தூரம் நடந்துச் சென்று கடல் அலைகளில் கால் நினைத்தபடி நின்றாள் பானு.


சிறிது நேரம் அவளையே பார்த்துக்கொண்டிருந்த இளா........அவள் தன்னைவிட்டு விலகி விலகி செல்வதும் அவள் தன் மீது வைத்திருக்கும் 'காதலால்' தான் என்பதை உணர்ந்தவனாய், அவளுக்கு தன் மீதுள்ள காதலை எண்ணி பிரமித்தான்!!

இப்போதிற்க்கு அவளது அருகாமையே போதும்..........அவளது எழுத்தாற்றல் மறைந்து போக கூடாது, என் பானுவிற்காக பொறுமையாக காத்திருப்பேன் என்ற தீர்மானத்துடன் அவளுக்கு அருகில் நின்று அலைகளில் கால் பதித்தான்.

"பானுமா........நீ இப்போ ரொம்ப குழம்பி போய் இருக்கிற......இப்போ எந்த முடிவிற்கும் வரவேண்டாம்.....இப்போதிற்க்கு கதைகள் எழுதுவதில் கவனம் செலுத்து, நீ எழுத நினைக்கிறதை என்கிட்ட சொல்லு........நான் எழுதுறேன்......மத்ததெல்லாம் அப்புறம் பார்த்துக்கலாம் , சரியா???"

"ஹும்........"

" பெரிய எழுத்தாளர் மதிமாறனின் எண்ணங்களுக்கு வடிவம் கொடுக்க என் கைகள் கொடுத்து வைச்சிருக்கனும் "என்று கண் சிமிட்டினான்,


அவள் கட்டாயமாக புன்னகையை வரவழைக்க முயற்சித்தாள்.
அம்முயற்சி கூட அவன் கண்களுக்கு அழகாகவே தெரிந்தது.

சீறி வந்த அலை அவளது இடுப்பு வரையில் நனைத்து விட்டு ஓட....ஒரு கணம் தடுமாறி விழப்போனவளை கெட்டியாய் பிடித்துக்கொண்டான் இளமாறன்..
இதைச் சற்றும் எதிர்பாராத பானு, தன்னை உதறிக்கொள்ள முயற்சிக்க..அடுத்த அலையினால் தாக்கப் பட்டவளாய் மீண்டும் அவன் மீதே சாய்ந்தாள்.

நிமிர்ந்து விழிகளை விரித்து அவனைப் பார்த்தாள். அவ்வளவுதான் .....அந்தக்கண்களில் ஏதோ ஒரு காந்தவிசையீர்ப்பு அவள் இதயத்துள் ஏதேதோ பேசியது...

உன் நினைவுகள் மட்டும்
போதும் என்று
தள்ளி தள்ளிதான்
போனேன்...
அவை என்னவோ
என்னை தள்ளிக்
கொண்டுவந்து
என்னை நீ
அள்ளிக்கொள்ள
வைக்கின்றன...
உன்னையும்
உன் நினைவுகளையும்
என்ன செய்யவேன்..??
நானும்
அள்ளிக்கொள்வதைத்தவிர..!!!



அந்தப்பார்வை அவளுக்குள் ஓர் மின்னலை ஏற்படுத்தியதும் ........மறுகணம் அவனது வலிய கரங்களின் அணைப்பில் அவள் சங்கமம் ஆகியிருந்தாள்.


அதிகமான துயரமும், அதிகமான மகிழ்ச்சியும் மனிதர்களைத் தன்னிலையிலிருந்து பிறழவைத்து விடுகின்றன என்பது உண்மைதான்.

முற்றும்.